SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்டியவருக்கு அடைக்கலம் தரும் அக்கா தங்கை கோயில்

2017-08-26@ 10:45:07

நம்ம ஊரு சாமிகள் - மேலாங்கோடு, தக்கலை, குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மேலாங்கோடு கிராமத்தில் வீற்றிருக்கும் அக்கா, தங்கையான செண்பகவல்லி, இசக்கியம்மன், தன்னை நாடி வந்து முறையிடும்    பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்து அருள்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம்  நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில்   அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் தனது மகள்களை படை தளபதி பத்மநாபன் விரும்பியதை கேட்டு, அரண்மனைக்கு கோட்டைச்சுவர் கிழக்கு மேற்கு பக்கம் உள்ள   கிணற்றில் மகள்களை தள்ளி கொன்று விடுகிறார். தனது தந்தையால் மரணம் எய்திய அக்கா செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி  கோட்டையை  சுற்றி ஆதாளி போட்டு, வருவோரை, போவோரை அடித்து பலி வாங்கினர். பத்மநாபனை, நீலா கொன்று குடலை உருவி மாலையாக போட்டு  ஆரவாரம் செய்தாள்.  பத்மநாபனை சார்ந்தவர்களும் கோட்டையை சுற்றியிருந்த குடிமக்களும் நோய்வாய்ப்பட்டனர்.

சிலர் அகால மரணம் அடைந்தனர். இதையறிந்த மகாராஜா மலையாள நம்பூதரிகளை வரவழைத்து சோளி போட்டு பார்க்கையில் இவற்றுக்கெல்லாம் காரணம்   அக்கா, தங்கை தான் என தெரிய வருகிறது. அவர்களை சாந்தப்படுத்து. நல்ல மந்திரவாதியை வைத்து பலி கொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை   சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார். நம்பூதரிகள் சொன்னபடி மலையாள மாந்திரீகர்கள் மூன்று பேரை வரவழைத்த மகாராஜா, கோட்டைக்கு கிழக்கு பக்கம்   மண்ணால் இரண்டு பெண்கள் உருவம் பிடித்து வைத்து, ஆடு, கோழி பலியிட்டு, ஒரு கோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாய் படைத்து செவ்வாய்க்கிழமை   நள்ளிரவு பூஜை செய்தனர். அதன் பிறகே செண்பகமும், நீலாவும் சாந்தமாகினர்.

பூஜை நடைபெற்ற இடத்திலேயே கோயில் அமைக்கப்பட்டது. மேலாங்கோடு ஊரில் அமைந்துள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்பாள் இருவரும் அக்கா,   தங்கையாக இருந்தாலும் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர். அக்கா செண்பகம் கோயிலில் பலிகள் கிடையாது. சைவ படைப்பு. தங்கை நீலாதேவி கோயிலில்   பலிகள் உண்டு. முதல் பூஜை அக்காவுக்கு, இரண்டாவது பூஜை தங்கைக்கு. ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அக்கா கோயிலான   செண்பகவல்லியம்மன் கோயிலில் கொடைவிழா நடைபெறுகிறது. தங்கை கோயிலான நீலாதேவி என்ற இசக்கியம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி   செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறுகிறது. ஒரு முறை கொடைவிழாவை காணவந்த திருவிதாங்கூர் மகாராணி, என்ன இது இப்படியெல்லாம் உயிர்பலி   கொடுக்கறீங்க. அடுத்த விழாவுக்கு ஆடு, கோழி பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டார். அன்றிரவு முதல் மகாராணிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டது. உடனே   மகாராஜா மன்னிப்பு கேட்க, மறு கனமே அது நின்றது. நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் தோன்றினாள்.

(அந்த காலக்கட்டத்தில் நீலி மற்றும் நீலியின் இன்னொரு அவதாரமான இசக்கி வழிபாடு, சேரநாடு, ஆய்நாடு, நாஞ்சில்நாடு, பாண்டிய நாட்டு தென் எல்லை   பகுதிகளில் பரவலாக இருந்தது) மறுநாளே மகாராணி உயிர்பலிக்கான தடையை நீக்கினாள். கனவில் விரிசடை முடியோடு, வீரப்பல்லோடு அம்மன்   காட்சியளித்ததால், மகாராணி நான் கனவில் கண்டது இசக்கியை. அதனால் இந்த அம்மனை இசக்கியம்மன் என அழையுங்கள் என கூற, அன்றிலிருந்து   நீலாதேவி இசக்கியம்மனாக அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. (சுடலை மாடனோடு இருப்பது மாஇசக்கி. தனித்து இருப்பது ஆங்கார இசக்கி. சுடலைக்கு   மூலஸ்தானம் சீவலப்பேரி. இசக்கிக்கு மூலஸ்தானம் முப்பந்தல். அங்கிருந்து பிடிமண் மூலம், கால் நடை மூலமும் பல இடங்களில் சுடலை, இசக்கிக்கு   கோயில் உருவானது.)

தனது குல தெய்வமான பத்மநாபனையும், குருவாயூரப்பனையும் வணங்கி வந்த மகாராஜா, மனைவிக்கு ஏற்பட்ட உதிரப்போக்கு மாறியதால் காவல் தெய்வமான   அக்கா, தங்கை கோயிலுக்கு காணிக்கை செலுத்த வந்தார். மகாராஜா அக்கா, தங்கை இருவரது சிலைக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்தார்.   அன்றிரவு அவரது கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன், எனக்கு மோதிரம் வேணும் என்று கேட்க, மகாராஜா அம்மனுக்கு மறுநாள் மாலையில் மோதிரம்   அணிவித்தார். அன்றிரவு அரண்மனையில் இசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு நிகழ்ச்சி முடிந்து மகாராஜாவிடம் பரிசுத் தொகையை பெற்றுவிட்டு பாடகர்   வில்லுவண்டியில் தனது சொந்த ஊரான குமரி அருகேயுள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டார். வண்டி கோட்டை கிழக்குபக்கமாக வரும் போது, அங்கிருந்த   சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள்போல் கொண்டையிட்டு, ஆடைகளும் அதுபோல் அணிந்து இரண்டு பெண்கள் இருந்தனர்.

வண்டியை நிறுத்தினாள் நீலா, வண்டி நின்றதும் பாடகரைப் பார்த்து ‘‘அரண்மனையில் தான் பாடுவீரா. இங்கும் பாடும்’’ என்று கூறினாள் நீலாதேவி. அவர்   மௌனம் காக்க, மறுகணமே ‘‘ம்…என்றபடி கத்தினாள்’’ தேவி. அவர் பயந்து நடுங்கினார். அப்போது செண்பகவல்லி, ‘‘நீலா இங்கே வா’’ என்று   அழைத்து விட்டு, பாடகரிடம் ‘‘அவளை நான் பார்த்துக்கிறேன். நீங்க பாடுங்க’’ என்று கூற, அவரும் அவர்களை போற்றிப் பாடினார். பாட்டு முடிந்ததும்   செண்பகவல்லி அம்மன் தனது விரலில் கிடந்த மோதிரத்தை கழற்றி அவரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலை கோயிலுக்கு வந்த பூசாரி அம்மன்   விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று கூற, மன்னன் நான் போட்ட மோதிரத்தை களவு செய்தவனை பிடித்து என் முன் கொண்டு வாருங்கள். அவனுக்கு   மாறு கை, மாறு கால் வாங்க வேண்டும் என்று உத்தரவு இடுகிறார். இது முரசு கொட்டி ஆங்காங்கே நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்ததை கூற, மன்னன் எனது காவல் தெய்வம் உன் முன் வந்தாளா, நீ உண்மையிலே பாக்கியவான் என்று   கூறி பாடகனுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். மேலாங்கோடு அக்கா தங்கை கோயிலின் பக்தர்கள் பலர் பல துறைகளில் அங்கம் வைக்கின்றனர். குழந்தை வரம்   வேண்டி மரத்தாலான தொட்டில் பிள்ளை வாங்கி, இக்கோயிலில் கட்டினால் மறுவருடமே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. எனது வாழ்வு   உயர்வானால் உருவம் இடுகிறேன் என்று அம்மனிடம் வேண்டுதல் செய்து பலன் பெற்றவர்கள் மண்ணால் செய்யப்பட்ட உருவத்தை வாங்கி கோயிலில்   வைக்கின்றனர். உண்மையில் தன்னை நம்பும் பக்தர்களை மேன்மையாக்கி வைக்கிறாள் மேலாங்கோட்டாள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம்   செல்லும் சாலையில் தக்கலைக்கு முன்னதாக உள்ள மேலாங்கோட்டில் அமைந்துள்ளது. குமாரகோயில் செல்லும் பாதையில் கோயில் உள்ளது.

சு. இளம் கலைமாறன், படங்கள்: தக்கலை பி.பூமணி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்