SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அது என்ன கங்கா காவடி?

2017-08-24@ 10:20:29

ஆவணி மாதத்தில் பல லட்சம் பக்தர்கள் கங்கை நீர்க்காவடியைச் சுமந்துகொண்டு நீண்டதூரம் நடைப்பயணமாக யாத்திரை போகிறார்கள். ஆன்மிக பூமியான பாரத நாடு முழுவதும் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்கள் ஏராளமாக உள்ளன. தென்பாரதத்தில் திவ்ய தேசங்கள் அதிகம் உள்ளன. இருந்தபோதிலும் தென் இந்திய மக்கள் வடஇந்திய திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவதை பாரம்பரிய பெருமையாகவும் மிகுந்த புண்ணியத்தை தருவதாகவும் கருதுகின்றனர். ஏனெனில் தென்னிந்தியாவைவிட வடஇந்தியாவில் அதிகமான புராண இதிகாசங்களில் இடம் பெற்றுள்ள திருத்தலங்களும், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொன்மையான நினைவுச் சின்னங்களும் உள்ளன. மேலும் புகழ் வாய்ந்த 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் 11, வடஇந்தியாவில் உள்ளன. உலகப் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு வடஇந்தியாவில் அதிக அளவில் கோயில்கள் காணப்படுகின்றன. இந்த ஒவ்வொரு தலமும் புராண, இதிகாசங்களில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களுக்கும் சாட்சிகளாக நிலவுகின்றன.

இறைவன் ஒளிமயமானவன். அவ்வாறு ஒளியாய் விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது, பூஜை செய்வது, வணங்குவது என்பது பண்டைய நாட்களில் மனிதர்களுக்குக் கடினமாய்த் தென்பட்டது. ஆகவே அந்த ஒளியை எளிதாய் வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல இடங்களிலும் பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர். அந்த சிவலிங்க உருவம் தொன்றுதொட்டு பாரதத்தின் 12 முக்கியத் திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது. இவை ஜோதிர்லிங்கங்கள் எனப்பட்டன. ஜோதிர்லிங்க வழிபாடானது துவாரபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதன் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. சோமநாதம், மல்லிகார்ஜ்ஜுனம், மகாகாளம், ஓங்காரம், வைத்தியநாதம், பீமசங்கரம், ராமேஸ்வரம், நாகேசம், விஸ்வேசம், திரியம்பகம், கேதாரம், குஸ்மேசம் என பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன.

அவற்றுள் ஒன்று வைத்தியநாத க்ஷேத்திரம். சிவபுராணத்தில் ‘வைதாத்யநாம் சிகாபூமௌ’ எனக்கூறப்படுகிறது. இந்தப் புண்ணிய சிகாபூமி கயைக்குக் கிழக்கே உள்ள வைத்தியநாதம் ஆகும். இந்த வைத்தியநாதர் கோயில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இது சிவபெருமானுக்கான ஜோதிர்லிங்கத் தலம் மட்டுமல்ல, மகாசக்தி பீடமுமாக இத்தலம் திகழ்கிறது. இவ்வகையில் மொத்தம் மூன்றே மூன்று தலங்கள் மட்டுமே நம் நாட்டில் உள்ளன. அவற்றில் ஒன்று வைத்தியநாத க்ஷேத்திரம். தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதர் பக்தர்களின் உடற்பிணிகளை அறவே நீக்கி அருள்பாலிப்பவர். ஆனால், தேவ்கர் வைத்தியநாதரோ தன்னை வழிபடும் அன்பர்களின் பிறவிப்பிணியையே போக்கி விடுகிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அங்கு உண்டு. இந்த தேவ்கர் வைத்தியநாத ஆலயத்தை அடைய பல வழிகள் உள்ளன.

சென்னை - ஹௌரா - டெல்லி மார்க்கமாகவோ, சென்னை - பாட்னா - ஹௌரா மார்க்கமாகவோ ரயிலில் பயணம் செய்து, ஜஸீடீஹ் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்கரை அடையலாம். இங்கு வாகன வசதிகள் நிறையவே உண்டு. அன்றொரு சமயம் சசிதேவி, தட்சனின் யாகத்தீயில் விழுந்து கருகியதைக் கண்ட சிவன் அவளைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் புரிந்ததைக் கண்டு அஞ்சிய திருமால் தனது சக்கரப்படையை ஏவி அடித்தபோது அம்பாளின் உடல் சிதறி 51 துண்டுகளாகப் பாரதம் எங்கும் விழுந்தது. இங்கு அவளது இதயம் விழுந்ததால் இது ஒரு சக்தி பீடமாக விளங்குகிறது. எனவே இந்தத் தலத்தை ஹர்தபீடம் என்று தேவிபாகவதம் கூறுகிறது. அதன் பின்னர்தான் இவ்விடம் வைத்தியநாத க்ஷேத்திரமாயிற்று. இந்த ஹர்த பீடத்திலேதான் அன்னையின் சிதைந்த உடலுக்கு திருமால் உதவியுடன் சிதை அடுக்கி சிவபெருமானே தகனம் செய்தார்.

பராசக்தியின் பிரிவால் சோர்வடைந்த சிவபெருமான் அந்த சுடுகாட்டிலேயே தனது பூதகணங்களோடு தங்கிவிட்டதால் அவ்விடம் ருத்ரபூமி என்று பெயர்கொள்ள, அடுத்து ஏனைய சுடுகாடுகளும் ருத்ரபூமி என்ற பெயரைப் பெற்றுவிட்டன. தேவ்கர் வைத்தியநாதர் ஆலயம் ஓர் உயர்ந்த மேட்டில் இருப்பதால் நான்கு பட்டைகள் கொண்ட உயர்ந்த கோபுரத்தின் மீதுள்ள சொர்ணக்கலசம் வெகு தொலைவிலிருந்தே தெரிகிறது. கிழக்குப் பார்த்த இக்கோயிலுக்கு வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் உட்புக வாயில்கள் உண்டு. கிழக்கு வாயில் பிரதானமாகவும் முகமன் கூறும்வகையில் இரண்டு சிம்மங்கள் இருபுறத்தில் இருப்பதாலும் இதை ‘சிம்ம வாயில்’ என்று சொல்கிறார்கள். இதன் உள்ளே நுழைந்து சென்றால் இடப்புறம் தென்படும் ஆழ்ந்த அகன்ற கிணற்றை ‘சந்திர கூப்’ என்று அழைக்கிறார்கள். பத்ம புராணம் விவரிப்பதுபோல இந்தக் கிணற்றுநீரை பக்தர்கள் பகவானுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

சசிதேவியின் இருதயம் வீழ்ந்த இடமான ‘ஹர்தபீடம்’ இந்தக் கோயின் பிராகாரத்தில் உள்ளது. இறைவன் இருக்கும் கருவறைக்கு மேலே உள்ள கோபுரக் கலசத்தின் அடியிலிருந்து இறைவியின் கருவறைக்கு மேலே உள்ள கோபுரக்கலசத்தின் அடியோடு சிவப்பு வண்ண நாடாக்கள் கட்டப்பட்டுள்ளன. சிவசக்தியின் இணைப்பை இந்த நாடாக்கள் தெரிவிக்கின்றன என்கிறார்கள். இதய பீடமாகக் கருதப்படும் அம்மன் கோயில் ஓர் உயர்ந்த சதுர மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் சிவன் சந்நதிக்கு நேர் கிழக்கில் உள்ளது. மேற்குப் பார்த்த இந்த அம்மன் கோயிலின் கோபுரம் செவ்வண்ணமாகக் காட்சியளிக்கிறது. இங்குள்ள கருவறையில் பிரதான தெய்வமாக ஜெயதுர்க்கா, கற்சிலை வடிவில் அழகிய திருக்கோலம் கொண்டு அருங்காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்குத் துணையாக இருப்பதுபோல் அந்தக் கருவறையிலேயே பார்வதி அம்மனும் கற்சிலை வடிவில் காட்சி அளிக்கிறாள். இந்தப் பெருங்கோயிலின் அகண்ட பிராகாரத்தில் 21 சந்நதிகள் அமைந்துள்ளன.

அவை: விநாயகர், ஜகத்ஜனனி, பகவதி பார்வதி, பிரம்மா, சந்தியாதேவி, காலபைரவர், அனுமன், மனசாதேவி, சரஸ்வதி, சூரியன்-பஹலாதேவி, ராம-லட்சுமண-ஜானகி, கங்கா ஜான்வி, ஆனந்தபைரவர், கெளரிசங்கர், நாமதேஸ்வரர், வரமகாதேவ், தாராதேவி, பகவதி காளி, அன்னபூரணி, லட்சுமி நாராயணர் மற்றும் நீலகண்டர். இறைவனின் கருவறையில் ஆவுடையார் தரைமட்டத்திலேயே ஜோதிர்லிங்கமாகக் காட்சி தருகிறார். இந்த வைத்தியநாதரின் உயரம் வெறும் பதினொரு அங்குலம்தான். மூர்த்தி சிறிதே ஆயினும் அதன் கீர்த்தி பாரதமெங்கும் பரவிக் கிடக்கிறது. இந்தத் திருத்தலத்தைப் பின்னணியாகக் கொண்டு பல புராண வரலாறுகள் உள்ளன. சிவபெருமானைக் காண கயிலை மலையில் பலகாலம் அர்ச்சித்தும் தவமிருந்தும் பயன்பெறாத ராவணன் இமாலயத்தின் தென்புறத்தில் பெரிய குண்டம் உண்டாக்கி, தன் தலைகளை ஒவ்வொன்றாகக் கொய்து ஹோமம் செய்யலானான்.

பத்தாவது தலையை வெட்டி எடுக்கும்போது சிவபெருமான் அவன் முன்தோன்றி, சத்ருவுக்கு  இளைக்காத வன்மையையும் அறுபட்ட சிரங்களை மீண்டும் வளரும்படியும் அருளினார். இத்தகைய சிறப்புப் பெற்ற தலமே இந்தத் தேவ்கர் வைத்தியநாதமாகும். மற்றொரு சமயம், இறைவனும் இறைவியும் இருக்கும் கயிலாய மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டுபோய் இலங்கையில் வைத்துவிட்டால் தினமும் சிவவழிபாடு புரிய சௌகரியமாக இருக்கும் என்று எண்ணிய ராவணன் திருக்கயிலாயம் வந்து, தன் பலம் முழுவதையும் கொண்டு மலையைத் தூக்க முயன்றான். முடியாமல் முடிவில் தோல்வி கண்டான். ராவணனின் பக்தியை அறிந்த சிவபெருமான், அவனது விருப்பப்படி, ஆத்மலிங்கத்தை அவனுக்கு அளித்தார். அதை அவன் தூக்கிச்செல்ல முற்பட்டபோது அது அவன் சிரசில் தாங்கிச்செல்ல முடியாதபடி மிகப்பெரியதாகவும் கனமாகவும் இருந்தது. மீண்டும் சிவனைத் துதித்து அந்த லிங்கத்தைச் சுமந்து செல்ல தனக்கு உதவ வேண்டினான். கருணாமூர்த்தியான கைலாசபதி அந்த லிங்கத்தை இரண்டு கூறாகச் செய்து ‘காவடி’யில் வைத்துத் தூக்கிச்செல்லும்படி கட்டளையிட்டார்.

ஆத்மலிங்கத்தைப் பெற்ற ராவணன் அதைக் காவடியில் சுமந்த வண்ணம் இலங்கையை நோக்கி பயபக்தியுடன் நடந்தே செல்ல ஆரம்பித்தான். ஆத்மலிங்கம் எக்காரணம் கொண்டும் இலங்கைக்குச் செல்லக்கூடாது. அதைத்தடுத்து நிறுத்த வேண்டும் என்று தேவர்கள் கவலை கொண்டு திருமாலிடம் சென்று வேண்டினர். ஆத்மலிங்கத்தைக் காவடியில் சுமந்துசென்றபோது மாலை நேரமாகிவிட்டதால் மாலைக் கடமைகளைச் செய்ய வேண்டி இராவணன் முயற்சித்தபோது, சிறுவனாக வேடம் தாங்கிவந்த விஷ்ணுவிடம் லிங்கத்தைக் கொடுத்துவிட்டு தன் கடமையைச்  செய்யச்சென்றான். திருமால் அந்த ஆத்மலிங்கத்தை, திட்டமிட்டபடியே அங்கேயே வைத்துவிட அந்த லிங்கம் நிலைபெற்ற இடம் ‘சிகாபூமென’ எனும் ஹர்த பீடமான சக்திதலம். தக்க தருணத்தில் தகுந்த தலமும் கிடைக்கவே திருமால் அந்த லிங்கத்தை உடனே நிலத்தில் வைத்துவிட்டு மறைந்தார். அந்த லிங்கம் ஜோதிர்லிங்கமாதலால் அதன் அடிப்பாகம் பாதாளம்வரை சென்றது. திரும்பி வந்த ராவணன் இதைக் கண்டு திகைத்தான்.

ஆத்மலிங்கம் அங்கேயே நிலைகொண்டு விட்டதை அறிந்தான். இருந்தும் சோர்வடையாமல் தன் முழு பலம் கொண்டு அந்த லிங்கத்தைப் பெயர்க்க முயன்றான். அப்போது ‘‘ராவணா, இது ஜோதிர்லிங்கம். இதை உன்னால் பெயர்க்க முடியாது. அப்படி நீ முயன்றால் நீயும் உன்குலமும் உடனே நாசமடைவீர்!’’ என்று ஒரு அசரீரி அவனை எச்சரித்தது. மனம் உடைந்த ராவணன் தன் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு இலங்கை சென்றானபல ஆண்டுகள் சென்றபின் இந்த லிங்கத்தைத் தரிசிக்க மீண்டும் ராவணன் வந்தான். சுற்று வட்டாரங்கள் பாழடைந்து அடர்ந்த காடுகளால்் சூழப்பட்டிருந்த இத்திருத்தலத்தை மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தான். அப்போது அபிஷேகம், வில்வம், பூ இவைகளால் அலங்காரம் செய்து, தூப தீபம் காட்டி, நைவேத்தியம் செய்து, ஒரு வேதியர்போல் சிரத்தையுடன் அந்த ஆத்மலிங்கத்தை வழிபட்டு வந்த ஒரு வேடனைக் கண்டு அவன் ஆச்சர்யமடைந்தான்.

இறைவனுக்கு அபிஷேகத்திற்காக ஒரு நீர்நிலையை அவ்வேடன் ராவணனிடம் வேண்ட அவனும் பெருங்கிணறு ஒன்றைத் தோற்றுவித்தான். இக்கிணற்றுக்கு ‘சந்திரகூப்’ என்று பெயர். இன்றும் இக்கிணற்றைக் காணலாம். மேலும் அந்த ஜோதிர்லிங்கதிற்கு ஒரு பெரும்கோயிலை எழுப்பி அதற்கு ‘பைஜுநாத்’ என்று நாமகரணம் செய்வித்தான். ‘பைஜு’ என்ற பெயர் கொண்ட அவ்வேடனால் பல ஆண்டுகள் அந்த லிங்கம் ஆராதிக்கப்பட்டதால் தலமும் பைஜுநாத் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் வைத்தியநாத் என்று மருவி விட்டதாகக் கூறுகிறார்கள். பிற்காலத்தில் இப்பிரதேசத்தை ஆட்சிபுரிந்த மெளரியர்களும், குப்த மன்னர்களும் இத்திருக்கோயிலை மிக உன்னத நிலையில் வைத்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சிவபுராணம், பத்மபுராணம், பிரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணம், காளிக புராணம், தேவி பாகவதம் போன்ற புராணங்களும் மேரு தந்திரம், ஆதிசங்கரரின் துவாதசலிங்க ஸ்தோத்திரம் போன்ற நூல்களிலும் இந்த ஜார்க்கண்ட் மாநிலத்து வைத்தியநாத க்ஷேத்திரம் பற்றியும், இறைவனைப் பற்றியும், மகாசக்தி ஹர்த பீடநாயகி, ஜெயதுர்க்காவைப் பற்றியும் போற்றித்துதிக்கின்றன.

பாற்கடலைக் கடைய மேருவை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கி, பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைய முதன்முதலில் கொடிய ஆலகால நஞ்சு தோன்றியது. சிவபெருமான் தானே அக்கொடிய நஞ்சினை எடுத்து உண்டு உலகத்தைக் காத்தார். அப்படி அவர் கொடிய விஷத்தை உண்டது சிராவண மாதம் எனப்படும் ஆவணி மாதத்தில்தான். ஆகவே சிராவண மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் தேவ்கர் வைத்தியநாதத் திருத்தலத்தில் கட்டுக்கு அடங்காமல் குவியும். சிராவண மாதத்தில் அதாவது, ஆவணி மாதத்தில்தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டதாகவும், அதனால் அவரது திருமேனி விஷத்தின் தாக்கத்தால் தகிப்பதாகவும், அந்தத் தகிப்பை தணிக்கவே குளிர்ந்த கங்கை நீர் அபிஷேகம் செய்து வில்வத் தளிர்களை சுவாமியின் திருமேனியில் நாள்தோறும் சாத்தி வணங்குகிறார்கள். இத்தலத்தில் முக்கிய வழிபாடே கங்கா நீர் அபிஷேகம்தான்.

ராமேஸ்வரம் ராமலிங்கம் சுவாமிக்கு செய்வதுபோல் இந்த தேவ்கர் வைத்தியநாதருக்கும் அனுதினமும் சுத்த கங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு நூறுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள கங்கா நதியிலிருந்து அபிஷேக நீர் கொண்டுவரப்படுகிறது. கங்கை நதிக்கரையில் உள்ள ‘சுல்தான் கஞ்ச்’ என்னுமிடத்திலிருந்து கங்கையின் புனித நீரை காவடிக் குடங்களில் நிரப்பி நடைப்பயணமாக அந்தக் காவடிகளைச் சுமந்துவரும் பக்தர்களை வருடம் முழுவதும் காணலாம். கயிலைநாதனிடமிருந்து பெற்ற ஆத்ம லிங்கத்தைக் காவடியில் தூக்கிக்கொண்டு ராவணன் வரும்போது, சிவலிங்கம் இந்த தேவ்கர் திருத்தலத்தில் நிலை கொண்டுவிட்டதல்லவா? அதனையொட்டியே சிவபெருமானுக்கு கங்கைநீரைக் காவடிகளில் சுமந்துகொண்டு வந்து சுவாமிக்கு ‘கங்காபிஷேகம்’ செய்கிறார்கள். ஆண்டு முழுவதும் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித கங்கை நீரை காவடிக் குடங்களில் சுமந்துகொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனைக் கழிக்கிறார்கள்.

எவ்வளவு தொலைவிலிருந்து இந்த கங்கை நீர்க்காவடிகளை பக்தர்கள் சுமந்து வருகிறார்கள் தெரியுமா? சுமார் நூறு  கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தூரம்! ஒருவர், இருவர் என்றில்லை லட்சோப லட்சம் மக்கள் கங்கை நீர்க் காவடியைச் சுமந்து வருகிறார்கள். அதுவும் காலணி இல்லாமல், பாதம் நோக நடந்து வருகிறார்கள். 2004-ம் ஆண்டு ஆவணி மாதத்தில் மட்டும் சுமார் 45 லட்சம் பக்தர்கள் கங்கா காவடிகள் சுமந்து வந்தனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. முக்கியமாக ஆவணி மாதத்தில் ஒவ்வொரு நாளும், நள்ளிரவுக்குப்பின் முகூர்த்த நேரத்தின்போது பல லட்சக்கணக்கான மக்கள் கங்கை நதிக்கு வந்து சேருகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லோரும் நீராடுகிறார்கள். நீராடும்போது அவர்கள் எழுப்பும் ‘கங்கா மாதாகீ ஜே’ என்ற கோஷம் கங்கைக்கரையெங்கும் ஒலிக்கிறது. நீராடியபின் பக்தர்கள் கங்கை நீரை குடங்களிலும், செம்பிலும், பல்வேறு வகையான பாத்திரங்களிலும் எடுத்துக்கொண்டு, நீண்ட மூங்கில் கம்புகளில் இருபுறமும் உரிகளைத் தொங்கவிட்டு அதில் குடங்களை வைத்துக்கொண்டு காவடியாக எடுத்துச்செல்கிறார்கள்.

லட்சோப லட்சம் பேர் இப்படிக் காவடிகள் எடுத்த வண்ணம் உள்ளனர். எறும்புக்கூட்டம்போல் வரிசை வரிசையாக கங்கைக்கரையிலிருந்து புறப்பட்டு நூறுகிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவ்கர் வைத்தியநாதர் கோயிலுக்குப் புறப்படுகிறார்கள். முருக பக்தர்கள் விதவிதமான காவடிகளைத் தூக்கிக்கொண்டு ‘முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா...’ என்று கோஷமிடுவதுபோலவும், ஐயப்ப பக்தர்கள், ‘சுவாமியே, சரணம் ஐயப்பா’ என்று அடிவயிற்றிலிருந்து கோஷம் எழுப்புவதுபோன்றும், அந்த பக்திக் குரல்கள் பக்தர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் வலிமை ஊட்டி, அவர்களை எப்படி உற்சாகப்படுத்துகிறதோ அதே மாதிரி இந்த லட்சக்கணக்கான கங்கா நீர்க்காவடி சுமந்து வரும் பக்தர்களும், யாத்ரீகர்களும் முழங்கும் ஒரு புனித கோஷம் உண்டு. முக்கியமாக சிராவண மாதம் முழுவதும் அந்த 100 கி.மீ. தூரத்துச் சாலையில் இதுவரை நாம் கேட்டிராத அக்கோஷம் காவடிக்காரர்களின் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வந்து வானை முட்டுகிறது. கேட்போர் பக்தி உணர்வை மேலும் கூட்டுகிறது.

அவர்களின் இக்கோஷம் உடலுக்குத் தெம்பையும் உள்ளத்திற்கு உற்சாகத்தையும் அவர்களுக்கு அள்ளித்தருவதுபோல், அவர்கள் செல்லும் பாதையெல்லாம் ஓர் அதிர்வு அலையை உண்டாக்கி அந்த நெடுஞ்சாலை முழுவதும் தெய்வீக சாந்த்தியம் பெறுகிறது. கேட்போரையும் பரவசப்படுத்துகிறது. கயிலைநாதன் மேல்கொண்ட பக்தியினால் காதலாகி கண்களில் கண்ணீர் பெருகி ஆனந்தத்தால்  அருவிபோல் சொரிகின்றன. பஞ்சாட்சரம்போல் பெரும் சக்தி வாய்ந்த அந்த கோஷம் என்ன தெரியுமா? ‘‘பம் பம்... போலா... பம்பம்... போலோ’’ என்றும் ‘‘பம்பம் போலோ... ஓம் நமசிவாய’’ என்றும் பக்தர்களின் கோஷம் எங்கெங்கும் எதிரொலிக்கிறது. எங்கும் நிற்காமல், தங்காமல் 100 கி.மீ. தொலைவு நடந்து வருகிறார்கள். சிலர் இந்த தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்துவிடுகிறார்கள். நாடெங்கும் இருந்து வரும் பக்தர்கள் கங்காநீர்க்காவடிகளைச் சுமந்து வரும்போது இவர்களை ‘தாக்பாம்’ என்று அழைக்கிறார்கள்.

பெரும்பாலோர்  விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் வைத்தியநாதர் கோயிலுக்கு கங்கா காவடி நீர் எடுத்து வரும் யாத்திரை பிரசித்தி பெற்ற ஓர் ஆன்மிகப் பயணமாகக் கருதப்படுகிறது. புனிதமான கங்கை நீரைக் காவடிகளில் சுமந்துசென்று இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தபின்னர், பிரசாதமாக கங்கை நீரைப் பெற்றுக்கொண்டு திரும்புகிறார்கள். பக்தர்கள் அனைவரும் ஆலயத்தை மும்முறை வலம் வந்து மும்முறை வடக்கு நோக்கி அவன் சந்நதிமுன் பூமியில் விழுந்து வணங்குகிறார்கள். இதனால் ஜென்மம் சாபல்யமடையும். மோட்சம் கிட்டும். இறுதியில் இவ்வைத்திய நாதனின் அருட்பார்வை நம் பிறவிப் பிணியையே போக்கிவிடும் என்று இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

-டி.எம்.ரத்தினவேல்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்