SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றித்தலைமகன்

2017-08-23@ 15:01:46

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி, தான் விற்பனை செய்யும் இனிப்பைப் போலவே இனிமையான மனிதர். பிள்ளையாரின் திருவடிவங்களை  சேகரித்துக்கொண்டு வருவதை மிகவும் பாக்கியமாகக் கருதும் அவர் தான் பிள்ளையார் சேர்க்க ஆரம்பித்ததையும் பிள்ளையாரின் பெருமைகளையும் நம்மிடம்  பகிர்ந்து கொள்கிறார். ‘‘1990ம் வருடம் ஒரு கைவினைக் கண்காட்சிக்குப் போனேன். அங்கே ஹாயாக ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த கல் பிள்ளையாரை  முதன் முதலில் வாங்கினேன். கல்லில் மட்டுமா விநாயகர்! மற்ற உலோகங்களிலும் இருக்கிறாரே என நினைத்து ஒவ்வொரு உலோகங்களிலும் உருவாக்கப்பட்ட  பிள்ளையார்களை சேர்க்க ஆரம்பித்து இன்று 3000த்திற்கும் மேற்பட்ட விநாயகர்களை சேகரித்து வைத்து வருகின்றேன்.

கரியில செய்ய முடியற விஷயங்களை தங்கத்திலயும், தங்கத்தில செய்ய முடியற விஷயங்களை கரியிலயும் செய்ய முடியாது. ஆனா ஒவ்வொரு  உலோகங்களில் ஒவ்வொரு மாதிரி பிள்ளையார் அனுகிரகம் செய்தாலும் அனைத்து பிள்ளையாருக்கும் உள்ள ஒரே குணம் அன்பு. முருகர் மாம்பழத்திற்காக  உலகை சுத்தினபோது இவர் அன்பே சிவம் அருளே சக்தின்னு அப்பா,அம்மாவை சுத்தி வந்து தாய், தந்தையர்களின் மதிப்பை உலகறியச் செய்தவர். உலகில்  உள்ள அன்பை எல்லாம் சேர்த்து ஒரு மொத்த உருவமாக்கினா அந்த உருவத்தின் பெயர் பிள்ளையார்ங்கறது என் தீர்மானமான உறுதியான எண்ணம். அன்பின்  உச்சம் பக்தி. பக்தியின் உச்சம் சரணாகதி. சரணாகதியின் உச்சம் நம்பிக்கை. ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று.

பிள்ளையாருக்கு ஆகமவிதிகள் எதுவுமே கிடையாது. அரசமரத்தடியானாலும், ஆலமரமானாலும், ராஜகோபுத்தோடு கூடிய தனிக்கோயிலில் அமர்ந்தாலும்  பக்தர்களுக்கு அருள் புரியறதுலே அவர் ஒரே மாதிரிதான். விநாயகரும் மனோதத்துவ டாக்டரும் ஒன்று. மனோதத்துவ டாக்டர் நோயாளிகளிடம் பேசவே பேசாது  அவர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு கடைசியில் மருந்தை எழுதித் தந்துடுவார். அதே போல பிள்ளையாரும் பக்தர்கள் குறைகளையெல்லாம் காதில  வாங்கிக் கொண்டு சிதறு காய் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து அந்த பிரச்னைகளை தீர்த்தருளிவிடுவார். பக்தர்களின் பிரச்னைகள் எல்லாம் அந்த சிதறுகாய்  போல் தூள் தூளாகிவிடும். ஒவ்வொரு பிள்ளையார்கிட்டயும் ஒரு நல்ல விஷயத்தை கத்துக்கலாம். கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யும் பிள்ளையாரின் உருவைப்  பார்த்தால் கம்ப்யூட்டரை சரியான விதத்தில் பயன்படுத்தினா அற்புதமான வேலைகளை செய்து, நல்ல அறிவை வளர்த்துக்கலாம் அப்படிங்கற எண்ணம் வரும்.  கச்சேரி செய்யும் பிள்ளையாரின் உருவைப் பார்த்தால் நம் மனசுல ஒரு இனம் புரியாத நிம்மதி வரும்.

சங்கீதத்தை அனுபவித்துப் பாடுபவர்கள் தாம் பெறும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தருவது போல சங்கீத விநாயகர் சிலையைப்பார்த்தால் வரும் அனுபவம்  இருக்கும். தொழில் செய்வோர்க்கு பொறுமை மிகவும் தேவை. பொறுமைக்கு பிள்ளையாரை மிஞ்ச ஒரு தெய்வம் கிடையாது. அதே போல் நம்பிக்கை தேவை.  யானையின் நடையைப் பார்த்தாலே ஒரு கம்பீரம் தோன்றும். யானை நடை யானை நடைதான். மூன்றாவதாக ஞாபக சக்தி யானைக்கு மிகவும் அதிகம். ஒரு  வியாபாரிக்கும் ஞாபகசக்தி மிகவும் அவசியம். எனக்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்புன்னு சொன்னா நான் அவருக்குள்ளேயும், அவர் எனக்குள்ளேயும்  இருக்கிறோம் என்பதுதான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தெய்வம் அவர்.  எல்லா சமயங்களிலும் தேவையான நேரத்தில் தேவையான வேலைகளை  முடித்துத் தந்து விடுவார்.

ஔவையார் அருளிய விநாயகர் அகவலில் இல்லாத யோகங்களே இல்லை’’ எனும் முரளி அவர்கள் சேகரிப்பில் ஹமாம் சோப், லைஃப்பாய் சோப்பால்  செதுக்கப்பட்ட விநாயகர், யோகா செய்யும் விநாயகர்கள், பால்கார வேஷத்தில் பசு மேய்க்கும் விநாயகர், கேரம் போர்ட் விளையாடும் பிள்ளையார்கள், ஸ்ரீவித்யா  கணபதி, சமையல் செய்யும் கணபதி, மரக்கட்டிலில் ஹாயாக படுத்திருக்கும் பிள்ளையார், கண்ணாடியாலான விதம்விதமான கணபதி, 2 எலிகள் குடைபிடிக்க  கம்பீரமாக நடக்கும் கணபதி, தாய்லாண்ட் கணபதி, சிவனைப்போல் புலித்தோல் அமர்ந்து தியானம் செய்யும் கணபதி, சிராசனம் செய்யும் கணபதி என  பிள்ளையார்களைக் காணக் கண் கோடி வேண்டும்.குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இங்கே தெய்வமே குழந்தையைப் போல்  கொண்டாடப் படுகிறது. அங்கு அன்புக்கும் அருளுக்கும் பஞ்சமேது?

ந.பரணிகுமார்

 படங்கள்: அஷ்வின்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2018

  19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்