SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலாதார கணபதி

2017-08-23@ 14:59:50

ஸர்வ விக்ன விவர்ஜிதம் மூலாதாரம் லம்போதரம்
ஸர்வ ஸித்திப் பிரதாதாரம் வந்தேஹம் கணநாயகம்.

மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் முன் கல்வியில் தேர்ச்சி பெற தினமும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுச் செல்வார்கள். எந்த நற்காரியங்களும்  பிள்ளையார் பூஜை செய்தவுடனேயே ஆரம்பிக்கும். அதுபோல யோக, ஞான, பக்தி, முக்திகளுக்கு ஜீவர்களின் முதுகெலும்பின் நுனியிலுள்ள சுழுமுனை  வாசியைத் திறக்க மஞ்சள் நிற நான்கிதழ்த் தாமரையில் அமர்ந்துள்ள மூலாதார கணபதியை உபாசிப்பார்கள். பிருதிவியாம் தத்துவத்தின் லம் எனும் பூமி  தத்துவத்தை தன் உதிரத்தில் கொண்டதால் லம்போதரன் என்றும், அஞ்ஞானத் தடைகளை நீக்கி சுழுமுனை வாசியைத் திறந்து ஞான சாதகர்களுக்கு வழி  ஏற்படுத்துவதால் மூலாதார கணபதியை விக்னேஸ்வரராக வழிபடுகிறோம்.

இறை தத்துவத்தை உணர்த்தி ஞான வழியைக் காட்டவே வேதங்களும் புராணங்களும் உள்ளன. பெரியோர்கள் பல படிகளாக இறை தத்துவங்களை காவியம்,  ஓவியம், சிற்பம், சங்கீதம் போன்றவைகள் மூலம் உணர்த்தி மக்கள் வாழ்வை மேன்மையடையச் செய்கிறார்கள். இந்த மூலாதார கணபதியும் இறை தத்துவத்தை  உணர்த்தும் வண்ணம்  அருள்கிறார். மாயையால் ஜீவ சக்தி சுருண்டு பாம்பு போல் தூலமான ப்ருத்வி ரூபமாயுள்ள மூலாதார வாயிலில் படுத்திருக்கிறது. அதைத்  தட்டி எழுப்பினால் அது குண்டலினி சக்தியாகி முதுகெலும்பின் நடுபாதையான சுழி முனையின் வழியாக மேலேறும். மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டான நீர்  தத்துவத்தை அடைந்து பின் மணிபூரக அக்கினியில் நுழைந்து பின் அநாஹத வாயுவிலும், பின் அதி சூட்சுமமான விசுத்தியாம் ஆகாயத்திலும் கலந்து, அதனினும்  சூட்சுமமான ஆக்ஞா சக்கரத்தில் கலந்து முடிவில் ஸர்வாதாரமான பிரம்மரந்தத்தை அடைந்து ஜீவப் பிரம்ம ஐக்கியம் ஏற்படுகிறது.

இதையே முக்தி என்பர். உயிர் சக்தி மேல்நோக்கி ஒவ்வொரு ஆதாரத்தையும் கடந்து முடிவில் சதாசிவத்துடன் ஒன்றாகி சிவசக்தியாவதை குண்டலினி யோகம்  விவரிக்கிறது. ஜீவனுக்கு சம்சாரபந்தமயமான சர்வ துக்கங்களும் நிவர்த்தியாகி, சர்வ சுதந்திரமான பரம்ப்ராப்தி ஏற்படுவதை முக்தி அல்லது மோக்ஷம் என்பர். இறை தத்துவத்தையறிந்த இறை நிலை அடையத் தகுதியுடைய ஞானிகளுக்கும், பக்குவமடைந்த பக்தர்களுக்கும், யோகிகளுக்கும், ஆத்ம சாதகர்களுக்கும், சித்த  புருஷர்களுக்கும், தபஸ்விகளுக்கும் மூலாதாரக் கனல் கதவை திறக்கச் செய்து சூட்சுமமான ஆறாதாரங்களையும், அதன் சந்திகளையும் அறியச் செய்து ஜீவப்ரம்ம  ஐக்கியத்திற்கு வழிவிட மூலாதார கணபதி அருள்கிறார்.

அதி சூட்சுமத்திலிருந்து படிப்படியாகக் கீழிறங்கி தூல மயமான தேகத்தை அடைந்து அதையே தானென்று உணர்ந்து அல்லல்படும் ஜீவன் தூலத்திலிருந்து  படிப்படியாக தன்னுள் தானே இறையருளால் பிரவேசித்துத் தன்னைத் தானே உள்ளபடி அறிவதே ஆத்ம சாக்ஷாத்காரம் என்பர். மஞ்சள் நிற நான்கிதழ்த்  தாமரையில் மூலாதார கணபதி வீற்றிருக்கிறார். மஞ்சள் நிறம் அறிவையும், மங்கலத்தையும், பிருத்வி தத்துவத்தையும் விளக்குவதால் நான்கு வேத இதழ்களில்  பேரறிவுத் திருவுருவமாக நிலைத்துள்ளார். விநாயகப் பெருமானின் தந்தங்களின் நடுவே பாம்பு படுத்துக் கொண்டுள்ள சிறு வட்டமே மூலாதாரக் கதவாயும்,  கணபதியின் மகுடத்தின் மேல் ஐந்து ஆதாரங்களும், ஸஹஸ்ரநாமமும் காட்டப்பட்டுள்ளன.

இடுப்புப் பட்டை எலும்புகள் விநாயகரின் பெரிய காதுகளாகக் காட்டப்பட்டுள்ளது. பட்டை எலும்புகள் பக்கபலமாக இருப்பது போல் நல்ல விஷயங்களை நிறையக்  கேட்பதே ஞானத்திற்குக் காரணமான பக்கபலமாகிறது. ஞானத்திற்கு காரணம் சிரவணம் எனும் சத்விஷயங்களை நிறையக் கேட்பது அல்லவா? வலது புற  பிருஷ்படபாக வளைந்த எலும்பு சுருண்டு படுத்துள்ள ஜீவ சக்தியான சர்ப்பமாகவும், அதன் தலை மூலாதார வாசலை நோக்கியிருப்பதையும் காணலாம்.  ஜீவப்பிரம்ம ஐக்கியத்தை நினைவுபடுத்த சின்முத்திரையை விநாயகர் தன் வலக்கையால் காட்டியும், பாம்பின் வாலைத் தொட்டு ஜீவ சக்தியைத்  தூண்டுவதாகவும் உள்ளது.

இடது பக்க வளைந்த எலும்பு தந்தமாகவும், அதனருகே கணபதியின் சுருட்டிய துதிக்கை காம்ய கர்மங்களைக் களைந்து  கருவிகள் ஒடுங்கும் கருத்தினை  அறிவிக்கும் இறை த்யானம் செய்ய அறிவுணர்த்தும் வகையிலும் உள்ளது. விநாயகப் பெருமானின் இடக்கரத்திலுள்ள ஞானகமலம் ஞானயோக சாதனையைத்  தெரிவிக்கிறது. மேலுள்ள இடக்கரத்திலுள்ள பாசக்கயிறு ஜீவர்களை அவர்களின் கர்மங்களுக்கேற்ப கட்டவும் ஜீவர்கள் பக்குவமானதும் பந்தக் கட்டிலிருந்து  விடுவிக்கவும் உள்ளது. யோகப்பற்றான விக்னத்தை உண்டு பண்ணுகிறவரும் இவரே. பற்றை விட விக்னங்களை விலக்குபவரும் இவரே. நாலிதழ் மஞ்சள் நிற  பத்மத்தின் கீழே நடுவில் ‘லம்’ என்ற வடமொழி எழுத்து பிரணவத்திற்கு ஓம் என்பது போல பூமி தத்துவ மந்திரம் ‘லம்’ எனப்படும்.

இந்த மூலாதார கணபதியின் எல்லா வளைவுகளும் லம் என்ற வடிவிலும் பக்கவாட்டில் பார்த்தால் ஓம் என்றும் காணப்படுகிறது. விநாயகருக்கு லம்போதரன்  எனும் பெயரும் உண்டு.  நடு முதுகுத் தண்டிலிருந்து தொடை எலும்புகள் வரை ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. அதனையே மூலாதார கணபதி வடிவிலும்  குண்டலினி தத்துவத்தை விளக்கக் காட்டப்பட்டுள்ளது. உடலில் ஆதாரமானதும், பலமானதும் எலும்புகள். அது போல மூலாதார கணபதி எங்கும் எதிலும்  ஸர்வாதாரமாய் உள்ள இறைவடிவமே என்று விவரிக்கவே எலும்பின் வடிவத்திலும் கணபதி சித்தரிக்கப்பட்டுள்ளார். மேல் வலக்கரத்திலுள்ள அங்குசத்தை  அகங்கார மமாகாராதிகளை அடக்கி அறநெறிப் பாதையில் இவர்களை அழைத்துச் செல்லவே கணபதி கையில் ஏந்தியுள்ளார்.

நம் முதுகெலும்பின் இரு புறங்களிலுள்ள சூரிய, சந்திர நாடிகள் அல்லது இடை, பிங்கலை நாடிகள் மூலமாகத்தான் தேகமெங்கும் சரீர, மனோ இயக்கங்கள்  வெளி விவகாரங்களுக்காக நடைபெறுகின்றன. ஆனால் தன்னையறியவும், இறைவனையடையவும் தெய்வீக சக்திகளைப் பெற்று லோக க்ஷேமத்தை  ஏற்படுத்தவும் முதுகெலும்பின் நடுவே சுழிமுனை நாடி நன்கு வேலை செய்ய வேண்டும். அந்நாடியில் பிராணசக்தி நுழைந்து விட்டால் இறைநிலை அடைவது  உறுதிப்படும். அச்சுழிமுனை வாசியை பக்குவமடைந்தோருக்குத் திறந்து விடுபவரே இந்த மூலாதார கணபதி மூர்த்தி. ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்  எனும் மகத்தான யோக சாத்திரங்களை உள்ளடக்கிய துதியில் உள்ள அமைப்பில் மூலாதார கணபதி சித்திரவடிவில் தரிசமளிக்கிறார்.

மாயப் பிறவி மயக்கம் அறுத்து
சொற்பதங் கடந்த துரிய ஞானம் காட்டி
கருவிகளொடுக்கும் கருத்தினை அறிவித்து
இரு வினை அறுத்திருள் கடிந்து
ஆறாதாரத் தங்குச நிலையும், பேரா நிறுத்திப்
பெரும் பகை அழித்து மூலாதாரத் தெழு மூண்டெழு கனலைகாலால் எழுப்பும் கருத்தினை அறிவிக்கும்
வித்தக விநாயகன் பாதங்களைச் சரணடைவோம்

படம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • crowd_thiruchendhuru11

  சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

 • 14-11-2018

  14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kumbamelawork

  அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

 • karwasaathhus

  கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

 • statuevisitors

  உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்