SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஷ்டமெல்லாம் போக்கும் அஷ்ட கணபதி தலம்!

2017-08-23@ 14:43:26

மோர்கான்

மகாராஷ்டிர மாநிலம், புனேயிலிருந்து நாற்பது மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமம் மோர்கான். இம்மாநில மக்களின் பிரதான கடவுளான விநாயகப்  பெருமானின் தலம் இது. அஷ்ட கணபதி என புகழப்படும் எட்டு கணபதி தலங்களில் முதன்மையானது. இந்த மோர்கானில் உள்ள கணபதி ‘மகா கணபதி’  என்றும், ‘மயூரேஸ்வர்’ என்றும், ‘மோரேசுர கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மகாராஷ்டிர அஷ்ட விநாயகர்களில் மிகமுக்கியமானவராக  வழிபடப்படுகிறார். விநாயகப் பெருமானை மராட்டிய பக்தர்கள் ‘கணேஷ்’ என்று பிரியமாக அழைக்கின்றனர். மங்கள மூர்த்தியான விநாயகரின் திருவுருவப்  படத்தை ஒவ்வொரு இல்லத்தின் வாயிலிலும் காணலாம். கணபதி கோயில்கள் இல்லாத கிராமமே மகாராஷ்டிரத்தில் இல்லை. இம்மாநிலத்தில் பிரசித்தி பெற்ற  விநாயகர் ஆலயங்கள் இருபத்தொன்பது உள்ளன. அவற்றில் மிக முக்கிய எட்டு விநாயகர்களை ஒருங்கிணைத்து ‘அஷ்ட கணபதிகள்’ என்பார்கள்.

அந்த எட்டு விநாயகர்களும் மோர்கான் என்ற ஒரே இடத்தில் கோயில்கொண்டுள்ளனர். வழிபாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகவும், தலைமைப் பீடமாகவும் இருப்பது  மோர்கான் மகா கணபதி கோயிலாகும். ஏனெனில், எங்கெங்கோ இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அந்த ஏழு கணபதிகளும், ஒரே இடத்தில் மோர்கான்  கணபதி திருத்தலத்தில் ஒருங்கேயிருந்து அருளாட்சி புரிகின்றார்கள். இதனால் இத்திருக்கோயில் ‘மோர்கான் மகாகணபதி மந்திர்’ என்று பெரும்புகழ் பெற்ற  ஆலயமாகத் திகழ்கிறது.

‘அஷ்ட கணபதிகள்’ என்னும் எட்டு
விநாயகப் பெருமாள்கள் வீற்றிருக்கும்
திருத்தலங்கள் வருமாறு:

* பீமா நதிக்கரையில் உள்ள ‘சித்தாடெக்’ தலத்தின் ‘சித்தி விநாயகர்.’
* கோலாபா மாவட்டத்தில் உள்ள ‘பாலி’ தலத்தின் ‘பல்லால விநாயகர்.’
* பாலிக்கு அருகேயுள்ள ‘மாஹத்’ தலத்தின் ‘வரத விநாயகர்.’
* ஜுன்னார் தாலுகாவில் உள்ள ‘ஓஸார்’ தலத்தின் ‘விக்னேஸ்வரர்.’
* ஜுன்னாரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள லென் பாத்திரி தலத்தின் ‘கிரிஜாத் மகர்.’
* புனே அருகே உள்ள ‘ஏன்ஜன்கோ’ தலத்தின் ‘கணபதி.’
* மூலா முட்டா நதிக்கரையில் உள்ள தேயூர் தலத்தின் சிந்தாமணி விநாயகர்.
* புனேயிலிருந்து 64 கி.மீ. தொலையில் உள்ள மோர்கான் தலத்தில், மேற்குறித்த ஏழு கணபதிகளுடன் எட்டாவதாக வீற்றிருக்கும் மோரேசுர கணபதி.

இந்த மோர்கான் மூலஸ்தானத்தில் உள்ள மோரேசுர கணபதியோடு, ஏழு இடங்களிலும் உள்ள கணபதிகளும் இங்கு சுற்றுப்பிராகாரத்தில் தனித்தனி சந்நதியில்  கொலுவிருந்து அருள்பாலிக்கிறார்கள். மோர்கான் மயூரேஸ்வர் ஆலயம் மிக எளிமையாக, கலைநயத்துடன், பதினைந்தடி உயர பீட அமைப்பின்மேல்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானின் கருவறை முன்பு, வாயிற்படி அருகே பெரிய மூஞ்சூறு வாகனம் உள்ளது. வேறெங்குமே காண இயலாத  மிகப்பெரிய வடிவம் இது - நாலடி உயரம், ஆறடி நீளம், மூன்றடி அகலம். கோயிலின் உள்ளே திறந்த வெளியின் நடுவே கர்ப்பகிரகம் அமைந்துள்ளது. கோயில்  வாசலின் இருபுறங்களிலும் துவார பாலகர்கள் உள்ளனர். கோயிலின் தெற்குப்பகுதியில் உள்ள கர்ப்ப கிரகத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள கணபதி, நான்கு  கைகளுடனும், மூன்று கண்களுடனும் அருள்பாலிக்கிறார்.

மேலிரு கரங்களில் அங்குசமும், பாசமும் உள்ளன. ஒரு கையை கால்மேல் ஊன்றியபடி மற்றொரு கையில் கொழுக்கட்டையுடன் காட்சியளிக்கிறார். இடப்புறம்  சித்தி, வலப்புறம் புத்தி என இரு தேவியருடன் விளங்குகிறார். மயூரேஸ்வரரின் கரங்கள் வைரங்களால் ஆனவை. கல்லினாலான விக்ரகமானாலும், தொடர்ந்து  குங்கும அர்ச்சனை செய்யப்படுவதால் கணபதி சிந்தூர வண்ணத்தில் மிகவும் ரம்மியமாகக் காட்சியளிக்கிறார். ‘ஸ்வாநந்தேசர்’ என்ற மற்றொரு பெயருடன்  விளங்கும் மயூரேஸ்வரரை கிருஷ்ணரும், வியாச முனிவரும், பாண்டவர்களும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். கணபதியின் கருவறைக்கு அருகே  மற்றொரு அறையில் நந்தி வாகனம் பெரிய அளவில் அமைந்துள்ளது. கணபதி கோயிலில் நந்தி வாகனமா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? நந்தி  வாகனம் இங்கு வந்ததே ஒரு சுவையான வரலாறு. இந்த மோர்கான் தலத்துக்கு அருகே பத்து மைல் தூரத்தில் பூலேஷ்வர் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று  உள்ளது.

அதற்காக சிவபெருமானின் வாகனமான நந்தியை செதுக்கி வடித்து கட்டைவண்டியில் ஏற்றி வந்துகொண்டிருந்தார்கள். மோர்கானில் மயூரேஸ்வர் ஆலயம் அருகே  வந்துகொண்டிருந்தபோது, வண்டியின் அச்சு முறிந்து நந்தி வாகனம் கீழிறங்கியது. அதன் பிறகு, அதை நகர்த்த முடியாமல் போய்விட்டது. அன்றிரவு மயூரேஸ்வர்  ஆலய குருக்களின் கனவில் நந்தி பகவான் தோன்றி, தான் மயூரேஸ்வர் அருகிலேயே இருக்க விரும்புவதாக கூறியதால், இங்கு நந்தி பகவானுக்குத் தனிச்சந்நதி  அமைந்தது. கணபதி கோயிலும், கோபுரமும் அழகாகவும் எழில்மிகு சிற்பங்களுடனும் கம்பீரமாக, கலையழகோடும், முன்மண்டபத்தில் ஏராளமான அழகிய சித்திர  வேலைப்பாடுகளுடனும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் காணப்படுகின்றன. கணபதி கர்ப்பகிரகத்தின் முன் நீள்சதுர வடிவில் சபா மண்டபம் ஒன்று  மராட்டிய கலையம்சத்தோடு, அழகிய வளைவுகளுடனும், தூண்களுடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நீண்ட மண்டபத்தில் அமர்ந்து பக்தர்கள் விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும் அழகைக் கண் குளிர தரிசிக்கிறார்கள். சுற்றிலும்  அமர்ந்து பஜனைப் பாடல்கள் பாடுகிறார்கள். இறைவனை திருப்தியுடன் தரிசித்த உற்சாக மிகுதியால் ‘கணபதி மகராஜ்கீ ஜெய்’ என்று கோஷமிடுகிறார்கள்.  இதனருகே சதுர வடிவில் உள்ள சயன அறை ‘சேஜ்கர்’ என்ற பெயருடன் விளங்குகிறது. இதற்குக் கிழக்குப்புறத்தில் மரத்தினாலான ஒரு மண்டபத்தில்  ‘நாக்னா பைரவ்’ என்ற பைரவரின் சந்நதி உள்ளது. இந்த தெய்வம்தான் கோயிலைக் காக்கும் தெய்வமாக விளங்குகிறது. தீயசக்திகளை அழித்து, கோயிலின்  புனிதத்தைக் காக்க விநாயகர் தம் மாயையினால் சிருஷ்டித்த தெய்வம்தான் இந்த ‘நாக்னா பைரவ்’ என்று சொல்லப்படுகிறது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள  பிராகாரத்தில் மற்ற ஏழு கணபதிகளையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

மேலும் சுற்றுப்பிராகாரத்தில் மயூரேஸ்வரலிங்கம், கிருஷ்ணர், பலராமர், பஞ்ச பாண்டவர்கள், ரதி-மன்மதன், மகிவராஜா, லட்சுமிநாராயணன், பிரம்மா ஆகிய  கடவுளர் மூர்த்தங்களும் அமைந்துள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள சுவரில் யானைகள், தேவர்கள், மயில்களின் சுதைவடிவங்களைக் காணலாம். ஆலயத்தின்முன்  பெரிய தீப்மாலா உள்ளது. இவ்வாலயத்திற்கு அருகில் கபில தீர்த்தம், காரை கங்கா தீர்த்தம், கணேச தீர்த்தம் ஆகிய புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்கு  நடைபெறும் பல விழாக்களில் நான்கு, மிக விசேஷமானவை - விஜயதசமி, பத்ரபாட் மாதத்தில் வரும் சதுர்த்தி, மக மாதத்தில் வரும் சதுர்த்தி, சோமவார  அமாவாசை. பத்ரபாட் சதுர்த்தியை ‘கணேச சதுர்த்தி’ என மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று சிஞ்சா வாட் என்ற கிராமத்தில் உள்ள கோயிலின்  கணேச விக்ரகம் ஊர்வலமாக இங்கு அழைத்துவரப்படுகிறது. அன்று பஜனைகள், கீர்த்தனைகள், பிரசங்கங்கள் ஆகியவை விழாவின் முக்கிய அம்சங்களாகும்.

இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்கிறார்கள். மோர்கானில் குடிகொண்டிருக்கும் அஷ்ட விநாயகர்களுக்கு திருத்தல வரலாறும் உள்ளது.  மிகவும் பழமையானதும், புராண காலத் தொடர்புடையது மான எட்டுக் கோயில்களின் தலவரலாற்றைச் சுருக்கமாக அறிந்துகொள்வோமா? முதலாவதாக, சித்தாடெக்  சித்தி விநாயகர். மகாவிஷ்ணுவின் காதிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். மிகவும் பராக்கிரமசாலிகளான இவர்கள் தேவலோகத்தையே  நடுங்கச் செய்தார்கள். யாராலும் அசுரர்களை வெல்ல முடியவில்லை. இறுதியில் அவர்களை அழிக்க மகாவிஷ்ணுவே புறப்பட்டார். கடுமையான போர்  நடைபெற்றது. மகாவிஷ்ணுவால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் திகைத்து நின்றிருந்தபோது சிவபெருமான் அவரை நாடி வந்து விநாயகப்  பெருமானைத் துதிக்காமல் போருக்குப் போனதை நினைவுறுத்தினார். உடனே மகாவிஷ்ணு விநாயகரைத் துதித்து, அவரது ஆசியுடன் அசுரர்களை வெற்றி  கொண்டார். அதன் பிறகு அவ்விடத்தில் தாமே விநாயகருக்கு ஓர் ஆலயம் அமைத்தார்.

அதுவே ‘சித்தாடெக் சித்த விநாயகர்’ கோயில் ஆயிற்று. இரண்டாவதாக பாலியில் உள்ள ‘பல்லாள விநாயகர். விநாயகர் பக்தனான பல்லாள் என்பவன்  சிறுவர்களுடன் சேர்ந்து பொம்மைக் கோயில் கட்டி வழிபட்டு வந்தான். கல்யாண் என்ற ஒரு நாத்திகன், தன் மகனை பல்லாள் கெடுக்கிறான் என்று கருதி  அவனை அடித்துத் துன்புறுத்தி அவனது பொம்மைக் கோயிலையும் அழித்தான். பல்லாள் விநாயகரிடம் முறையிட்டுக் கதறினான் அப்போது கணபதி அவன்  முன்தோன்றி அனுக்ரகம் செய்து பல்லாள் பூஜித்த கல்லிலேயே ஆவாகனமாகி அருள்பாலித்தார். அவரே ‘பல்லாள விநாயகர்’ எனப்பட்டார். மூன்றாவதாக,  மாஹகத்தில் உள்ள வரத விநாயகர். கொண்டியன்புரத்தின் இளவரசன் ருக்மாங்கதன், காட்டுக்கு வேட்டையாடப் போனபோது, முகுந்தா என்ற ரிஷிபத்தினி  அவன்மீது மையல் கொண்டாள். அது அடாதசெயல் என்று அவன் மறுத்தபோது, அவனை குரூபியாக மாறும்படி சபித்தாள் முகுந்தா.

இவளுடைய பலவீனத்தைத் தெரிந்துகொண்ட இந்திரன், ருக்மாங்கதன்போல உருமாறி அவளுடன் சேர்ந்தான். தன்னிடம் மீண்டும் வந்ததாலேயே  ருக்மாங்கதனுக்குத் தன் சாபம் நீங்கப்பெற்றது என்று நினைத்தாள் முகுந்தா. இவளுக்குப் பிறந்த கிருத்சமதா, தன் தாய் ஏமாற்றப்பட்டதாகவும், தான் ரிஷிமகன்  இல்லை என்பதையும் அறிந்து காட்டுக்குப் போய்விட்டான். அங்கே ஒரு ரிஷி கற்றுத்தந்த மந்திரத்தை வருடக்கணக்காக ஜபிக்க, அவன்முன் விநாயகப் பெருமான்  தோன்றினார். அவரை அங்கேயே கோயில் கொள்ளுமாறு கிரத்சமதா ேவண்டிக்கொள்ள, விநாயகரும் அப்படியே அவன் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். அவரே  ‘மாஹத் விநாயகர்’ என்றும் ‘வரத விநாயகர்’ என்றும் அழைக்கப்பட்டார். நான்காவதாக ஒஸார் தலத்தில் உள்ள விக்னேஷ்வரர்.

வடதேசத்தின் ஒரு பகுதியை அரவிந்தன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் ஒரு மகா யாகம் செய்தான். இதையறிந்த இந்திரன், யாகம் பூர்த்தியானால் தன்  இந்திர பதவிக்கு ஆபத்து என்று பயந்து, அதைத் தடுக்க காலதேவனை வேண்டினான். ஆனால், அவனோ, அந்த யாகத்தை மட்டுமல்லாமல், எல்லா  யாகங்களையும் அழித்து விக்னம் உண்டாக்கினான். அதனாலேயே விக்னசுரன் எனப்பெயர் பெற்றான். யாராலும் அழிக்க முடியாத விக்னசுரனை கடைசியாக  விநாயகப் பெருமான் அழித்தார். அப்போது அவன், அவர் பெயரோடு தன் பெயரையும் இணைத்துத் தன் பெயருக்குப் பெருமை சேர்க்கும்படி வேண்டினான். இதனால்  இவ்விநாயகப் பெருமான் ‘விக்னேஷ்வரர்’ எனப்பட்டார். எட்டு விநாயகர் கோயில்களில் இங்கு மட்டுமே தங்கத்தினாலான கூரையும், தங்கக்கலசமும் உள்ளன.

ஐந்தாவதாக, லென் யாத்திரியில் உள்ள கிரிஜாத் மகர். லென்யாத்திரி குகை, புராணப் பெருமை பெற்றது. விநாயகரை மகனாகப் பெற பார்வதி 12 வருடங்கள் இந்த  குகையில் தவமிருந்தாராம். அவருக்குப் பிறந்த கணபதி 15 வருடங்கள் இந்த குகையில்தான் வாழ்ந்ததாகவும், அவருடைய ஆறாவது வயதில் தேவலோக சிற்பி  பாசம், பரசு, அங்குசம், தாமரை ஆகியவற்றைத் தந்தார் என்றும், ஏழாவது வயதில் அவருக்கு கௌதம ரிஷி உபநயனம் செய்வித்தார் என்றும் சொல்லப்படுகிறது.  கிரிஜா என்றால் பார்வதி, அத்மகர் என்றால் மகன் என்பதால் இவர் ‘கிரிஜாத் மகர்’ என்றழைக்கப்படுகிறார். ஆறாவதாக, ரஞ்சன் கோதலத்தில் உள்ள கணபதி.  கிருத்சமதா என்பவனுக்கு விநாயகர் அருளால் திரிபுராசுரன் என்ற மகன் பிறந்தான். இவன் மும்மூர்த்திகள் உட்பட தேவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்தான்.  பிறகு நாரதர் யோசனைப்படி, சங்கடநாசன கணபதி மந்திரம் சொல்லியபடி எதிர்நின்றார் சிவன். கணேச ஸஹஸ்ரநாமத்தை ஜபித்தபடி சிவன் அம்பைவிட, அசுரன்  வீழ்ந்தான். அவன் ஆத்ம ஜோதியாகி சிவனுடன் ஐக்கியமானான்.

இப்படி அசுரனை அழிக்க உதவிய கணபதிக்கு கோயில் எழுப்பினார்கள். அவரே ‘ரஞ்சன்கோ கணபதி’ எனப்பட்டார். ஏழாவதாக தேயூர் திருத்தலத்தில் உள்ள  சிந்தாமணி விநாயகர். கபில முனிவரிடம் அபூர்வமான சிந்தாமணிக்கல் ஒன்று இருந்தது. அது கேட்டதையெல்லாம் கொடுக்கும் சக்தி வாய்ந்தது.  முனிவரிடமிருந்த அந்தக்கல்லை கணராஜாசுரன் என்ற அசுரன் பலவந்தமாகக் கவர்ந்து போய்விட்டான். கபில முனிவர் கணபதியை மனமுருக வேண்டினார்.  கணபதியானவர் தேயூர் என்ற இடத்தில் அந்த அசுரனை வீழ்த்தினார். முனிவர் வேண்டியபடியே தேயூர் என்ற அந்த இடத்தில் ‘தேயூர் சிந்தாமணி விநாயகர்’  என்ற பெயரில் கோயில் கொண்டார். எட்டாவதாக, மோர்கான் திருத்தலத்தில் உள்ள மயூரேஸ்வரர். இங்கு மூலஸ்தானத்தில் இருந்து தலைமைப் பீடாதிபதியாக  விளங்கும் விநாயகர் மகாகணபதி என்றும், மோரேசுர கணபதி என்றும் மயூரேஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிந்து என்ற அசுரன், சூரியனின் அருளால் பிறந்தவன். அவன் தாய் உக்ரா, ஆதவனின் வெம்மை தாங்காமல் கடலில் இறங்க, அப்போது பிறந்தவன் என்பதால்  அவனுக்கு இறப்பே வரக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுடைய வயிற்றுக்குள் அமுதத்தை வைத்தான் கடலரசன். தனக்கு இறப்பு இல்லை என்ற இறுமாப்பில்  சிந்து எல்லோரையும் துன்புறுத்தி அடிமை கொண்டான். அடுத்து கைலாயத்தை நோக்கி அவன் படையெடுத்தபோது கணேசர் அவனை எதிர்கொண்டார்.  கடுமையான யுத்தம். சிந்துவின் உயிர்நிலையை தெரிந்துகொண்டு மயில் வாகனத்தில் வந்த கணேசர், அம்பால் அவன் வயிற்றில் அடித்துக்கொன்றார். பிறகு  கணேசர் அங்கேயே கோயில் கொண்டார். அங்குதான் மயில் வாகனத்தைத்தன் தம்பி முருகனுக்கு விநாயகர் அளித்தார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அஷ்ட  விநாயகர்களில் பிரதானமான மயூரேஸ்வர் க்ஷேத்திரம், கணேச சம்பிரதாயத்தின் தலைநகராக விளங்குகிறது. அனைத்து க்ஷேத்திரங்களின் அரசனாக,  கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்ட ஸ்வாநந்த பூமி, ‘மோர்கான்.’

- முத்து. இரத்தினம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்