SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகா கணபதிகள்!

2017-08-23@ 14:41:18

கர்நாடகா மாநிலத்திலும் கணபதி அருளாட்சி புரிகிறார். குறிப்பாக காசர் கோட் - கோகர்ணா இடையே அமைந்துள்ள ஆறு பிரபலமான விநாயகர் கோயில்களைச்  சொல்லலாம்.

1. ஸ்ரீசித்தி விநாயகர் - ஹட்டங்கடி
2. சரவு மகாகணபதி - மங்களூர்
3. மகா கணபதி - மதூர்
4. மகா கணபதி - கோகர்ணா
5. மகா கணபதி - இடகுஞ்சி
6. ஆனேகுட்டே விநாயகர் - கும்பாசி

1. ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் - ஹட்டங்கடி

மலைத்தொடர்மற்றும் வராகி நதிக்கு இடையே இந்த கோயில் அமைந்துள்ளது. அலுபா மன்னர்களின் தலைநகரம் ஹட்டங்காடி. இதனை கோஷ்டியூர் எனவும்  அழைப்பர். இதன் பொருள் விவாதங்கள் நடைபெறும் இடம் என்பதாகும். இங்கு ஸ்ரீ கோவிந்தவர்மா யதிவராயா என்ற முனிவர் தவம் செய்துள்ளார். கர்ப்ப கிரகம்  கறுப்பு சலவைக் கல்லால் ஆனது. மூலவர் விநாயகர் இரண்டரை அடி உயர சாளகிராமத்தால் ஆனவர். இவர் தலையில் ரோமம் பறப்பது போன்று வெகு  நுணுக்கமாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாகத் திரும்பியுள்ளது.

இவரிடம் வேண்டியது அனைத்தும் நடந்து விடும் என்பதால் இவரை சித்தி விநாயகர் என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள். முன் வாசல் மண்டபத்தின் மேலே  இருபுறமும் வெள்ளை அன்னங்களை காணலாம். மேலே நடுவில் சிறு மாடத்தில் இடம்புரி விநாயகரையும் தரிசிக்கலாம். காலை 6 முதல் மாலை 6 மணிவரை  கோயில் திறந்திருக்கும். மூலவரின் மற்றொரு விசேஷம், இவர் பாதி அளவு மண்ணில் புதைந்துள்ளதுதான். மங்களூரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது  ஹட்டங்கடி.

2. சரவு மகாகணபதி கோயில் - மங்களூர்

மங்களூரின் மையத்தில், கசர்கோட் செல்லும் பாதையில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான கோயில். வேட்டையாடச் சென்ற வீரபாகு என்ற மன்னன்  புலியைக் கொல்வதற்கு பதில் தவறுதலாக ஒரு பசுவைக் கொன்றுவிட்டான். இதற்கு பிராயச்சித்தமாக ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ‘சரபேஷ்வரர்’  என பெயரிட்டு கோயில் கட்டினான்.

இந்த கோயிலின் மதிற்சுவரில் ஒரு விநாயகர் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். இவர் தசபுஜ கணபதி என அழைக்கப்பட்டார். பிறகு சிவனைவிட இந்த  கணபதி பிரபலமாகி, சரபு மகாகணபதி என்ற சிறப்பு பெயரை பெற்றுவிட்டார்! கோயில் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். மங்களூரிலிருந்து  கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

3) மகாகணபதி கோயில் - மதூர்

மதுவாகினி நதிக்கரையில் உள்ள ஒரு சிறு நகரம் மதூர். கசர்கோட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கேரள பாணியில் கணபதி கோயில் அமைந்துள்ளது.  யானையின் பின்புறம் போன்ற அமைப்பு கொண்ட மூன்றடுக்கு கர்ப்பகிரகத்தைக் கொண்டது. இதற்கு ‘ஆனந்தபதஸ்வரா சித்தி விநாயகர் கோயில்’ என்ற  பெயரும் உண்டு. இங்குள்ள விநாயகர் சுயம்புவாகத் தோன்றியவர். இங்குள்ள கிணற்று நீர் மருத்துவ குணங்கள் நிரம்பியது. இதனை குடித்தால், உடலில் உள்ள  வியாதிகள் மறையும் என்பது நம்பிக்கை. இந்த கணபதிக்கு குண்டு கணபதி என்ற செல்லப் பெயரும் உண்டு.

இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்ட பின், பெரியதாக மாற ஆரம்பித்ததன் காரணப் பெயர்! திப்புசுல்தான் இந்தக் கோயிலையும் சூறையாட விரும்பினான். அதற்குமுன்  கிணற்று நீரை குடித்தான். உடனே ஏனோ மனம் மாறினான்! கோயிலை சூறையாடும் எண்ணத்தைக் கைவிட்டான். ஆனாலும், தான் வந்ததற்கு அடையாளமாக  தன் கத்தியால் கிணற்றின் மேலே ஒரு வெட்டு வெட்டிவிட்டுப் போனான். அந்த வெட்டை இன்றும் காணலாம்! இந்த கணபதிக்கு அப்பம் பிரசாதம். ஆயிரம் அப்பம்  நிவேதிக்கும் பிரார்த்தனை இங்கே மிகவும் விசேஷம். கோயில் காலை 5 முதல் 1.30 மணிவரையிலும் மாலை 5.30 முதல் 8 மணிவரையிலும் திறந்திருக்கும்.  கேரள எல்லையை ஒட்டியுள்ள கோயில் இது.

4) மகாகணபதி கோயில் - கோகர்ணா

இது மகாபலேஸ்வரர் கோயில் அருகேயுள்ளது. மகாபலேஸ்வரரை தரிசிக்கும் முன் இந்த மகாகணபதியை வழிபடவேண்டும் என்பது இந்த பகுதியில் ஒரு மரபு.  ராவணன் ஆத்மலிங்கத்தை எடுத்து வந்தபோது, தன் மாலைநேர நியமங்களை நிறைவேற்ற, சிறுவனாக எதிரில் வந்த பிள்ளையாரிடம் அதைக் கொடுத்தான்.  ஆனால் பிள்ளையாரோ ஆத்மலிங்கத்தை கீழே வைத்துவிட, அது அங்கேயே பிரதிஷ்டையாகிவிட்டது. அதுதான் மகாபலேஸ்வரர் கோயில். தன்னை ஏமாற்றிய  சிறுவனை, பிள்ளையார் என்பதை உணராமல் அவன் தலையில் குட்டினான் ராவணன். அந்தப் பள்ளத்தை இன்றும் இங்குள்ள பிள்ளையாரின தலையில்  காணலாம்! இவர் மகாகணபதி என அழைக்கப்படுகிறார். காலை 5 முதல் 12 மணிவரை, மாலை 4 முதல் இரவு 9 மணிவரை கோயில் திறந்திருக்கும்.  மங்களூரிலிருந்து 232 கி.மீ. தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

5) மகாகணபதி கோயில் - இடகுஞ்சி


ஹோன்னவாரா என்ற பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். இது 1500 ஆண்டுகள் பழமையானது எனக்கூறப்படுகிறது. கிருஷ்ணன் தன் அவதாரப்  பணிகளை நிறைவு செய்துவிட்டு வைகுந்தத்திற்கு ஏகிய பிறகு, கலியுகம் துவங்கியது. கலிபுருஷனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கிருஷ்ணன் ஏற்கெனவே  உணர்த்தியிருந்ததால், மக்கள் பெரிதும் கலவரமடைந்தனர். நல்லன நிலைக்கவும், தீயன தீயவும் ரிஷிகள் தவம் இயற்றினர். அவர்களுடைய தவத்துக்கு  அரக்கர்கள் இடையூறு செய்தனர். ரிஷிகள், தேவர்களை உதவி நாடிப் போக, அவர்கள் இடகுஞ்சி மகாகணபதியை வணங்குமாறும், அவர் உங்கள் கஷ்டங்களைக்  களைவார் என்றும் யோசனை கூறினர். அப்படி தொன்றுதொட்டு வழங்கப்படுபவர்தான் இந்த மஹாகணபதி.

இவருக்கு இரு கரங்கள். ஒன்றில் தாமரையும், மற்றொன்றில் கொழுக்கட்டையும் வைத்துள்ளார். இங்கு விநியோகிக்கப்படும் பஞ்சகத்யா பிரசாதம் மிகவும்  பிரபலம். தினமும் காலை 11 மணிக்கு மகாகணபதிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. 12.30 மணியளவில் பூஜை முடிந்ததும், வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும்  அன்னதானம் செய்யப்படுகிறது. காலை 6 மணி பிற்பகல் 1 மணிரையிலும், மாலை 3 முதல் 8 மணிவரையிலும் கோயில் திறந்திருக்கும். மங்களூரிலிருந்து 175  கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது.

6) ஆனேகுட்டே விநாயகர் கோயில் - கும்பாசி

குந்தபுராவிலிருந்து 9 கி.மீ. தொலைவில் ஆனேகுட்டே ஸ்ரீவிநாயகர் கோயில் கொண்டுள்ளார். இந்த பகுதியில் ஒருசமயம் கும்பாசுரன் என்ற அரக்கன்  மக்களையும், தவமுனிவர்களையும் பாடாய்ப் படுத்திவந்தான். இந்தபக்கம் பீமன் வந்தபோது, அனைவரும் அவனைச் சரணடைந்து உதவி கேட்டனர். பீமன்  இப்பகுதியிலிருந்த விநாயகரை வணங்கிவிட்டு அவர் ஆசியுடனும், அருளுடனும் கும்பாசுரனை வதம் செய்தான். அத்தகைய பெருமைமிக்கவர் இந்த ஆனேகுட்டே  விநாயகர். உயர்ந்த ஒரு பாறை மீது அமர்ந்திருக்கிறார் இந்த விநாயகர். இவருக்கு நான்கு கரங்கள். முன் இரு கைகளும் ஆசி வழங்குகின்றன. வருடா வருடம்  டிசம்பர் மாதம் நடக்கும் இந்தக் கோயிலின் ரத உற்சவம் வெகுபிரபலம். ஒரே கல்லில் 12 அடி உயரத்தில்  செதுக்கப்பட்ட கம்பீரமான விநாயகர் இவர். காலை 6  முதல் இரவு 8 மணிவரை கோயில் திறந்திருக்கும்.  உடுப்பியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.

- ராஜிராதா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்