SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகரிடம் வரம் கேட்ட வேதநாயகன்

2017-08-23@ 14:38:40

அயோத்தி நாட்டு அரசனான தசரதன் மக்கட் செல்வம் இல்லாமல் மனம் நொந்து கவலையோடு இருந்தான். குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி புத்திர காமேஷ்டி  யாகமும், அஸ்வமேத யாகமும் செய்தான். யாகத்தின் பலனாக மூத்த மனைவி, கொள்கையின் குணக்குன்று கோசலையின் மணி வயிற்றில் அவதார புருஷன்  அண்ணல் ராமன் பிறந்தான். நாடக மயில் கைகேயியின் வயிற்றில் ஆயிரம் ராமர்களுக்கு இணையான பண்புடைய பரதன் பிறந்தான். இளையவளும்,  இனியவளும் புதியவளுமான மூன்றாவது மனைவி சுமித்திரைக்கு ராமனின் நிழலான இலக்குவனும், பரதனின் நிழலான சத்ருக்கனனும் இரட்டைக்  குழந்தைகளாகப் பிறந்தார்கள். இதனால் மாமன்னன் தசரதன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். காலங்கள் உருண்டோடின. கோலங்கள் மாறின. குழந்தைகள்  நால்வரும், நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து பாலபருவத்தை அடைந்தனர்.

கல்வி கேள்விகளில், சிறந்து விளங்குவதற்காக, குலகுரு வசிஷ்டரே கல்வியோடு வில் வித்தை, வாள் வீச்சு போன்ற போர்க்களப் பயிற்சிகளையும் கற்பித்தார்.  இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த தசரத சக்கரவர்த்தியின் வாழ்வில் திடீரென்று புயல் வீச ஆரம்பித்தது. ஒருநாள் மேனகையின் மித்திரனான, விசுவாமித்ர  முனிவர் அயோத்தியின் அரசவைக்கு வந்தார். மன்னன் தசரதன், முனிவரை வரவேற்று உபசரித்து ஆசனத்தில் அமரச் செய்தான். பின்பு முனிவர் எழுந்து  அரசனைப் பார்த்து ஒரு வேண்டுகோள் விடுத்தார். தான் செய்யும் வேள்விகளைக் காப்பதற்கும், அதை நடத்துவதற்குத் தடையாக இருக்கும் தாடகை, சுபாகு  போன்ற அரக்கர்களை அழிப்பதற்கும், கரிய செம்மலான ராமனைத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று ஒரு கோரிக்கையைப் பேரிடியாக தசரதன் முன்வைத்தார்.

நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி என உயிர் இரக்கும்
கொடுங்கூற்றின் உளையச் சொன்னான்.
(பால காண்டம் - 325)

உயிரைக் கேட்கும் எமனைப் போல விசுவாமித்திரர், நான்கு புதல்வர்களில் மூத்த மகன் ராமனை மட்டும் தன்னுடன் அனுப்புக எனக் கூறியதைக் கேட்டு இடி  கேட்ட நாகம் போல் மன்னன் மனம் பதறிப் போனான். பல ஆண்டுகள் கழித்துப் பெற்ற குழந்தையைக் காட்டிற்கு அனுப்புவதற்கு மன்னன் மனம் இடம்  தரவில்லை என்பதை அறிந்து, விசுவாமித்திர முனிவர் அரசவையை விட்டு கோபத்துடன் வெளியேற எண்ணினார். அப்போது குலகுரு வசிஷ்டர்,  சக்கரவர்த்தியைச் சமாதானம் செய்து முனிவரோடு ராமனையும், அவனுக்குத் துணையாகத் தம்பி இலக்குவனையும் அன்போடு அனுப்பி வைக்குமாறு  செய்தார்.மனம் நொந்து போன தசரத மாமன்னனை, மகனான மாயவன் ராமன், தனது அன்பு மொழியால் ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்தான். ‘தந்தையே  தாங்கள் கலங்க வேண்டாம். மனம் தளர வேண்டிய அவசியமும் இல்லை. வினை தீர்க்கும், விநாயகரின் அருளாலும், விசுவாமித்திர முனிவரின் தவ  வலிமையாலும், அசுரர்களின் மாயங்கள் எல்லாவற்றையும் பொடிப்பொடியாக்கி, உங்களிடம் வெற்றித் திருமகனாகத் திரும்பி வருவேன்’ எனக் கூறினான். பின்பு  குலகுரு வசிஷ்டரின் அறிவுரைப்படி,

அரிதரு மருகா! அறுமுகன் துணைவா!
கரிமுக வாரணக் கணபதி சரணம்!
குருவே சரணம்! குணமே சரணம்!
பெருவயிற்றோனே! பொற்றாள் சரணம்!
கண்ணே! மணியே! கதியே! சரணம்!

- எனக்கூறி கணநாதனான கணபதியைக் காகுந்தன் வழிபட்டான். அப்போது வல்லப கணபதி வில்லாளன் ராமன் முன் தோன்றி,‘ உனக்கு என்ன வரம்  வேண்டும்?’ எனக் கேட்டார். கரிய செம்மலும் கணேசனிடம், அரக்கர்களால் ஏற்படக்கூடிய மாயைகளை எல்லாம் வென்று, அவர்களைக் கொன்று ஒழிக்க  வேண்டும் என்று முதலில் ஒரு வரம் கேட்டான். விசுவாமித்திர முனிவரின் வேள்விக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அது இனிதே நிறைவேற வேண்டும்  என்று இரண்டாவது வரத்தை வேழ முகத்தவனிடம் வேதநாயகன் கேட்டான். அதனைக் கேட்ட ஐந்து கரத்தானும் அவதார புருஷன் அண்ணல் ராமனிடம்  ‘என்னை பக்தி சிரத்தையோடு வணங்கி வழிபட்டதால் நீ கேட்ட வரங்களைத் தந்தேன்,’ என்றார். மேலும் உன்னைக் கண்களால் பார்த்தவர்கள், எல்லோரும்  காரியசித்தி அடையப் பெறுவார்கள் என்றும், உனது புனித உடலின் ஸ்பரிசம் பட்ட மாத்திரத்திலேயே அவர்கள் செய்திருக்கும் சகல தீவினைகளில் இருந்தும்  விடுபட்டு நன்மை அடைவார்கள்’ எனக் கூறி விட்டுப் பிள்ளையாரும் மறைந்து போனார்.

விசுவாமித்திர முனிவருடன் செல்லும்போது ராமனும், லட்சுமணனும் ஒரு சோலையைக் கண்டார்கள். இது என்ன சோலை என்று ராமன் முனிவரிடம் கேட்டார்.  பரமசிவன், மன்மதனைக் கோபம் கொண்டு எரித்த நாளில், மன்மதனின் உடல் சாம்பலாகி இந்த இடத்தில் சிந்தியது. அதனால் இந்த இடம் எல்லாம் அங்கநாடு  என்று அழைக்கப்பட்டது. அந்த காரணப் பெயரை உடைய காமாஸ்ரமம்தான் இந்த இடமாகும் என்று விசுவாமித்திரர் பதில் கூறினார். மேலும் தொடர்ந்து, தாடகை  என்னும் அரக்கி பல உயிர்களைக் கொல்வதையே தனது தொழிலாகக் கொண்டவள். எமனைப் போன்று கொடுமையான தோற்றம் கொண்டவள். ஆயிரம் மத  யானைகளின் வலிமையையும் பெற்றவள் என்றும் விசுவாமித்திர முனிவர் கூடுதலாகத் தகவல் கூறினார். இறுதியாக ‘தாடகை, இலங்கேசுவரன் ராவணனின்  பணியை ஏற்றுக் கொண்டு மலைகளின் வலிமையோடு எனது வேள்விக்குப் பெருந்தடையாக இருக்கிறாள்.

அவளை அழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் இருவரையும் அழைத்து வந்துள்ளேன்’ என்று முனிவர் கூறினார். பிரம்மனால் படைக்கப்பட்ட பலை,  அதிபலை என்னும் இரண்டு மந்திரங்களையும் இருவருக்கும் உபதேசித்தார். அப்போது அவர்கள் எதிரில் தாடகை தோன்றி ஆர்ப்பாட்டம் செய்தாள். ராமன்  அவளைப் பார்த்ததும், பெண் ஆயிற்றே என்று தன் வில்லை எடுக்கவில்லை. உடனே மறை முதல்வனின் மனதை அறிந்த முனிவர், ‘இக் கொடியாளையும் மாது  எண்ணுவதோ மணிப் பூணினாய்?’ என்று கேட்டார். இவள் பெண் அல்ல இந்த கொடியவளைப் பெண் என்று எண்ணுவது சரியல்ல, எனவே உடனே இவளை  மாய்த்து விடு என்று ராமனுக்குக் கட்டளையிட்டார். காகுந்தனின் மனசஞ்சலம் புரிந்த முனிவர் பெண்களைக் கொல்லுதல் பாவமல்ல என்று எடுத்துக் கூறினார்.  பிருகு முனிவரின் மனைவி கியாதி தனது கயல்விழியால் அசுரர்களை மயக்கி அவர்களுடன் உறவு கொண்டாள் என்பதற்காக பாற்கடல் வண்ணன் பரந்தாமன்  தனது சக்கராயுதத்தால் கியாதியைக் கொன்றார்.

விண்ணிலும், மண்ணிலும் உள்ள உயிர்கள் எல்லாம் தனக்கான உணவு எனக் கருதும் சிற்றறிவு பெற்றவளான குமுதி என்ற பெண்ணை தேவேந்திரன் தனது  வஜ்ஜிராயுதத்தால் கொன்றான். எனவே தாடகையைப் பெண் என்று பார்க்காமல் உடனே அழித்து விடு என்று ராமனுக்கு விசுவாமித்திரர் கூறினார். விநாயகரிடம்  இரு வரங்களைப் பெற்ற வேதநாயகன் ஐங்கரனை வணங்கித் தன் வில்லால் தாடகையுடன் போர் புரிந்தார். அப்போது பரம்பொருள் பரந்தாமனான ராமன் அம்பைக்  கையால் தொட்டதையும், வில்லை வளைத்ததையும் யாரும் காணவில்லை. ஆனால், கொடிய அரக்கி தாடகை வீசிய சூலாயுதம் இரு துண்டுகளாக விழுந்ததை  மட்டுமே பார்த்தனர்.

பொன் நெடுங் குன்றம் அன்னான்
புகர் முகப் பழகி என்னும்
மன்நெடுங் காலவன் காற்று
அடித்தலும் இடித்து வானில்
கல்நெடு மாரி பெய்யக் கடையுகத்து
எழுந்த மேகம்
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே
போல வீழ்ந்தாள்.
(பால காண்டம் - 394)

அண்ணல் ராமனின் அம்பு பட்ட தாடகை, ஊழிக் காலத்துப் புயல் காற்றைப் போல இடி இடித்துக் கொண்டு, மேலெழுந்த மேகம் மின்னலோடும் இடியோசையும்  பூமியில் விழுந்ததைப் போல இறந்து தரையில் வீழ்ந்தாள். வரங்களை வாரி வழங்குபவரும், சாப விமோசனங்களைத் தீர்ப்பவருமான வேதநாயகனே  வேழமுகத்தவனிடம் வரங்கள் பெற்று, ராம அவதாரம் எடுத்ததின் முதல் கட்டமாக ராவணனின் அரக்கர் குலத்தைச் சேர்ந்த தாடகை, சுபாகு ஆகிய இரு  அரக்கர்களையும் கொன்று விசுவாமித்திர முனிவரின் வேள்வியைச் சிறப்புடன் நடத்திக் கொடுத்தார்.

- டாக்டர். திருச்சி.ஜெகபாரதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்