SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒளிமயமான எதிர்காலம்!

2017-08-23@ 12:24:38

34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. சின்னத்திரையில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த எனக்கு பெரிய திரையில் பணிபுரிய வாய்ப்பு கிட்டவில்லை. காலசர்ப்ப தோஷம் உள்ளதாக ஜோதிடர் சொல்கிறார். என் வாழ்க்கையில் விளக்கேற்றி ஆசிர்வதியுங்கள். ஜெகமுருகன், அம்பத்தூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது 19.07.2017 முதல் சுக்கிர தசை துவங்கியுள்ளது. உங்கள் லக்னத்திற்கு அதிபதியான சுக்கிரன் தொழிலைக் குறிக்கும் 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது உங்களது அயராத உழைப்பினைச் சொல்கிறது. மேலும், ஜென்ம லக்னத்தில் சனி உச்சம் பெற்றுள்ளதும் பலமான அம்சமே. உங்களுக்கான நேரம் என்பது தற்போதுதான் துவங்கியுள்ளது என்ற எண்ணத்தோடு கடுமையாக முயற்சி செய்யுங்கள். சின்னத்திரையானாலும், பெரியதிரை ஆனாலும் உங்கள் பணி என்பது நிரந்தரமாகிவிடும்.

நீங்கள் சார்ந்த துறையில் உங்கள் பெயர் புகழ் பெறத் துவங்கும். இந்த வருடம் முதலேபல புதிய வாய்ப்புகளை அடைவீர்கள். கிடைக்காத வாய்ப்பிற்காக ஏங்குவதைவிட கிடைத்த வாய்ப்பினில் உங்கள் முழு உழைப்பையும் வெளிப்படுத்துங்கள். நல்ல நேரம் என்பது துவங்கி விட்டதால் இனி உங்கள் வாழ்வில் ஏறுமுகமே. 2018ம் ஆண்டின் இறுதியில் உங்கள் திருமணம் நடைபெறும். நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று காவிரியில் ஸ்நானம் செய்து ரங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்யுங்கள். ஒளிமயமான எதிர்காலம் துவங்கி விட்டது.

எனக்கு 30 வயது ஆகியும் இன்னும் சரியான வேலை கிடைக்கவில்லை. வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன். வாய்ப்பு கிடைக்குமா? உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். முத்து கிருஷ்ணன், சேரன்மகாதேவி.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் உச்சம் பெற்ற சூரியனும், புதனும் இணைந்திருப்பது உங்களுக்கு பலம் சேர்க்கிறது. ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் வாக்கு ஸ்தானம் ஆகிய இரண்டாம் இடத்தில் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே. “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்பதே உங்களுக்கான தாரக மந்திரம். வாய்ஜாலத்தில்தான் பிழைப்பினை நடத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தொழிலைச் சொல்லும் ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரகதியில் எட்டாம் பாவத்தில் அமர்ந்திருப்பதால் ஸ்திரமான தொழில் அமைவதற்கு சற்று சிரமப்படுவீர்கள்.

வெளிநாடு செல்லும் ஆசையை விட்டு விடுங்கள். உங்கள் ஊருக்கு மேற்கு திசையில் மலைப்பாங்கான பகுதியில் உங்களுக்கான எதிர்காலம் காத்திருக்கிறது. சிறிய அளவு முதலீட்டுடன் பெட்டிக்கடை போன்ற சுயதொழிலில் இறங்குங்கள். பழைய இரும்பு சாமான்கள் வியாபாரம், காலி பாட்டில் வியாபாரம் போன்றவையும் கைகொடுக்கும். ஏதேனும், ஒரு புதன்கிழமை நாளில் குற்றாலம் சென்று அருவியில் ஸ்நானம் செய்தபின் குற்றாலநாதர் ஆலயத்திற்குச் சென்று அங்கு சித்திரசபையில் திரிபுர தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமானை தரிசித்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்குவதும் நல்லது.

“க்ருபா ஸமுத்ரம் ஸூமுகம் த்ரிநேத்ரம் ஜடாதரம் பார்வதி வாமபாகம்
ஸதாசிவம் ருத்ரம் அனந்த மூர்த்திம் சிதம்பரேசம் ஹ்ருதி பாவயாமி.”


என் மகன் படித்து முடித்தவுடன் சுற்றுலாத் துறையில் வேலைகிடைத்து பொறுப்பாக இருந்தான்.தற்போது ஒரு வருடமாக வேலையை விட்டுவிட்டு போட்டோகிராபராக இருக்கிறான். பால் வியாபாரம் செய்கிறான். விவசாயம் செய்யப் போகிறேன் என்கிறான். நிலையான தொழில் இல்லை. எங்கள் மனக்குழப்பம் தீர வழி சொல்லுங்கள். கீதா, ஊரப்பாக்கம்.


புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் தொழிலைக் குறிக்கும் பத்தாம் வீட்டில் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரஹங்கள் இணைந்திருக்கின்றன. மேலும் தொழில் ஸ்தானாதிபதிசந்திரன், புதன் மற்றும் கேதுவுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் பலதரப்பட்ட தொழில்களை இவருக்கு உண்டாக்கித் தரும்.உங்கள் பிள்ளை சரியானவழியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அவரைத் தடை செய்யாதீர்கள். 30 வயது வரை சனிதசை நடப்பதாலும், ஜாதகத்தில் சனி வக்ரகதியில் அமர்ந்திருப்பதாலும் சனிதசை முடியும் வரை வளர்ச்சி என்பது சற்று மந்தமாகவே இருக்கும். 30வது வயது முதல் துவங்கவுள்ள புதன் தசை உங்கள் பிள்ளையின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும். அவரது விருப்பத்தின் படியே அவருக்கான வாழ்க்கைத் துணைவி அமைவார். அவருக்கு அமையவுள்ள மனைவியும் அவருடைய தொழிலுக்கு உதவியாக செயல்படுவார். உங்கள் மகனை செவ்வாய்க் கிழமையன்று திருப்போரூர் சென்று கந்தசுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். அவரைப்பற்றிய கவலையை கைவிடுங்கள்.

1995 முதல் நகராட்சியில் பணிபுரிந்து வரும் நான் இதுநாள் வரை பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்து வருகிறேன். பொய்யான வழக்கில் சிறைவாசம் அனுபவித்து நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறேன். இந்த வழக்கில் இருந்து எப்போது எனக்கு விடுதலை கிடைக்கும்? பரிகாரம் என்ன செய்ய வேண்டும். நந்தகுமார், திருப்பத்தூர்.

“சோதனைகள் எல்லாம் வேதனைகள் அல்ல, சாதனைகள் படைக்க உதவும் போதனைகள்அவை” என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ஏழரைச் சனியின் பிடியில் இருப்பதால் சோதனைகள் தொடர்வது இயற்கையே. உங்கள் ஜென்ம லக்னத்தில் இணைந்துள்ள சூரியனும், புதனும் பிரச்னைகளை எதிர்த்துப் போராடும் தகுதியினை உங்களுக்குத் தருவார்கள். மேலும், தொழில் ஸ்தானாதிபதி புதன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் பலமான நிலையே.

உத்யோகத்தைப் பற்றிய கவலையை விடுங்கள். உங்கள் வழக்கு பிரச்னை வெகுவிரைவில் முடிவிற்கு வரும். சிறுநீரகத்தில் உண்டாகி உள்ள கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சித்த மருத்துவ முறை சிகிச்சையிலேயே கட்டியைக் கரைக்க இயலும். சனிக்கிழமை தோறும் உங்கள் ஊரில் அமைந்துள்ள கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபடுவதால் வழக்கில் இருந்து விடுபடுவதோடு ஆரோக்யமும் சிறக்கும். கவலை வேண்டாம்.

“க்ரூர க்ரஹை: பீடிதாநாம் பக்தாநாம்
அபயப்ரதம்
ஸ்ரீமஹாவிஷ்ணும் மஹாவீரம் நமாமி
ருணமுக்தயே.”


27 வயதாகும் என் மகளுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. அவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏதும் உள்ளதா? விரைவில் திருமணம் கூட உரிய பரிகாரம் கூறுங்கள். செல்வராஜ், விழுப்புரம்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது குருதசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனிபகவான் வக்ரகதியில் அமர்ந்திருப்பதால் தடை கண்டு வருகிறீர்கள். மேலும், குரு, சூரியன் இருவரும் எட்டாம் பாவத்தில் கேதுவுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் உங்கள் முயற்சிக்கு இடையூறு செய்கிறது. எனினும் தற்போது கல்யாண யோகம் துவங்கியுள்ளதால் விரைவில் தடைநீங்கி விடும். வருகின்ற 11.04.2018ற்குள் மணவாழ்விற்குள் அடியெடுத்து வைத்து விடுவார். உறவு முறையில் நடக்கும் சுபநிகழ்ச்சி ஒன்றில் உங்கள் பெண்ணுக்கான மாப்பிள்ளையைக் காண்பீர்கள்.

உங்கள் மகளிடம் தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் உங்கள் ஊரில் உள்ள வைகுண்டவாசப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வரச் சொல்லுங்கள். வெள்ளிக்கிழமை நாளில் ஜனகவல்லித்தாயார் சந்நதியிலும், சனிக்கிழமை நாளில் வைகுண்டவாசப்பெருமாள் சந்நதியிலும் நெய் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். திருமணம் முடிந்ததும் தம்பதியராக இணைந்து வந்து பெருமாளையும், தாயாரையும் வழிபடுவதாக பிரார்த்தனை அமையட்டும். உங்கள் மகளுக்கு திருமணம் கூடி வரும் நேரத்தில் உங்கள் மகன் வழியில் வம்ச விருத்தியையும் காண்பீர்கள். கவலை வேண்டாம்.

என் மகன் பி.ஈ., முடித்து மேலே படிக்காமல் சினிமாவில் டைரக்டர் ஆவேன் என்று சொல்லித் திரிகிறான். நிறைய குறும்படங்கள் எடுத்து இருக்கிறான். ஒரேமகன் என்பதால் அவனது எதிர்காலம் குறித்து மிகவும் கவலையாக உள்ளது. கிறித்துவ மதத்தைச் சார்ந்த எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும். ஆரோக்கியமேரி, கும்பகோணம்.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிகலக்னத்தில் பிறந்துள்ள உங்கள்மகனின் ஜாதகத்தில் தற்போது குருதசையில் புதன் புக்தி துவங்கி உள்ளது. உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் ஜென்மலக்னத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு என ஐந்து கிரஹங்கள்ஒன்றாகஇணைந்துள்ளன. தொழிலைக் குறிக்கும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் இவர் அடுத்தவர்களிடம் சென்று கைகட்டி வேலை செய்ய மாட்டார். இவரிடம் பத்து பேர் கைகட்டி வேலை செய்யும் அம்சமே நிறைந்துள்ளது. சுயதொழில் செய்வதே இவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. குறும்படங்கள் எடுப்பது இவருடைய மனதிற்கு மகிழ்ச்சியைத் தருமே அன்றி திரைப்படத் துறையில் தொழிலை அமைத்துக் கொள்வது நல்லதல்ல.

நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் கைகொடுக்கும். தற்போதைய சூழலில் அவரது இஷ்டப்படி செயல்பட அனுமதியுங்கள். உங்கள் பிள்ளைக்கு எவருடைய அறிவுரையும் எடுபடாது. நடைமுறை வாழ்வினைப் புரிந்து கொண்டு அவராகவே தன்னை மாற்றிக் கொள்வார். ஒரே மகனைப் பற்றிய கவலையை விடுங்கள். ஞாயிற்றுக்கிழமைநாளில் வேளாங்கண்ணி திருத்தலத்திற்குச் சென்று உங்கள் மகன் கையால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதுடன் வந்திருக்கும் பக்தர்களுக்கு அவரது கையால் இயன்ற அன்னதானத்தினைச் செய்யச் சொல்லுங்கள். வாழ்க்கைப் பாதைக்கான வழி பிறக்கும்.

33 வயதாகும் என் மகளுக்கு படிப்பிற்குத் தகுந்த வேலையும் கிடைக்கவில்லை, திருமணமும் நடக்கவில்லை. வயதான காலத்தில் நாங்கள் இருந்து இந்தப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்போமா என்று சந்தேகமாக உள்ளது. பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக் கூட இயலாத நிலையில் பிரம்மன் ஏன் படைத்தான் என்ற வருத்தம் வாட்டி வதைக்கிறது. உரியபரிகாரம் சொல்லி என் மகளின் வாழ்விற்கு வழிகாட்டுங்கள். பரிமளா ஆனந்தன், ஈரோடு.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை என்றாலும் அதை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகளுக்கு அமைய உள்ள மணமகன் பற்றி உங்கள் மனதில் எழுகின்ற சந்தேகங்களின் தாக்கமே அவருக்கு திருமணத் தடையை உண்டாக்குகிறது.

படிப்பிற்குத் தகுந்த வசதி வாய்ப்புள்ள இடம், டாக்டர், இன்ஜினியர் என்று கனவு காணாமல் உங்கள் மகளின் மனதிற்கு பிடித்திருக்கிறதா என்பதையும், மணமகனின் நல்ல குணத்தினையும் மட்டும் பாருங்கள். உங்கள் மனதில் குடிகொண்டிருக்கும் பயத்தினை தூர எறியுங்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாய் உச்சபலம் பெற்று அமர்ந்திருப்பதால் முருகப் பெருமானின் அருள் அவரிடம் நிறைந்திருக்கிறது. உங்கள் மகளிடம் செவ்வாய்க்கிழமை நாளில் சென்னிமலை முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து “நீ எதைச் செய்தாலும் அது என் நன்மைக்கே” என்ற எண்ணத்தோடு மனமுருகி பிரார்த்தனை செய்து வழிபடச் சொல்லுங்கள். மணமாலை சூடும் நாள் அவரை நாடி வந்து சேரும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • HarrY_MeghanMarkel

  கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

 • Yelagirisummerceremony

  ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

 • kodai_flower

  கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

 • subwaymodi

  சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

 • 20-05-2018

  20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்