SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேன்மை தருவாள் மேலாங்கோட்டு அம்மன்

2017-08-19@ 10:02:55

நம்ம ஊரு சாமிகள் - தக்கலை, குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மேலாங்கோடு கிராமத்தில் வீற்றிருக்கும் அக்கா, தங்கையான செண்பகவல்லி, இசக்கியம்மன் பக்தர்களுக்கு மேன்மை தந்து காத்து அருள்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த நாஞ்சில் நாடு என்ற அடைமொழியுடன் கூடிய சமூகத்தை சார்ந்த ஒரு பெண்ணை விரும்பி மணமுடித்துக் கொண்டார். மணமுடித்த மறுவருடமே அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அர்ச்சகர் தான் அனுதினமும் பூஜை செய்து வரும் சுவாமியின் உடனுறை நாயகியான சக்தியின் நாமங்களில் ஒன்றான ஆனந்தவல்லி என்ற செண்பகவல்லி என்கிற பெயரை குழந்தைக்கு சூட்டினார்.

அடுத்து பிறக்கும் ஆண்குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை சூட்ட வேண்டும் என்று எண்ணினார். ஆனால், அடுத்த வருடமே மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. இரண்டாவதாக பிறந்த மகளுக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழ வேண்டும் என்றுணர்ந்த அர்ச்சகர் மகளை நீலாதேவி என்றும் பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தைகள் இருவரும் அறிவுடனும், அழகுடனும் திகழ்ந்தனர். மூத்தவள் செண்பகம் தந்தையைப்போல் சிறிது பருமனான உடல் வாகும் சராசரி உயரமும் நல்ல செந்நிறமும் கொண்டிருந்தாள். தங்கை நீலா தாயைப்போல் மாநிறமும் பருமன் குறைந்து ஒல்லியான உடல்வாகும் அக்காவை விட சற்று உயரம் கூடுதலாகவும் சுட்டித்தனமும், பிடிவாத குணமும் கொண்டிருந்தாள்.

மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பிய வகையில் உடையும், நகையும் வாங்கிக் கொடுத்து வந்தார் அர்ச்சகர். கோயிலுக்குச் செல்வதும், வீட்டுக்கு செல்வதும் தாய் அல்லது தந்தையின் துணையுடன். அந்த அளவு கட்டுக்கோப்புடன் மகள்களை அர்ச்சகர் வளர்த்து வந்தார். ‘‘மகள்களின் அழகுக்கு மாப்பிள்ளை தேடி வருவான். என் குலத்தில் என் கோத்திரத்தில்தான் என் மகள்களுக்கு வரன் பார்க்கணும்’’. என்ற அர்ச்சகரிடம், ‘‘தாராளமாக பாருங்க, உங்க மகள்களாச்சு, நீங்களாச்சு’’ என்று பதில் கூறினாள் அவரது மனைவி. இவ்வாறு இருக்கையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக திகழ்ந்தது பத்மநாபபுரம். இங்குள்ள கோட்டைக்கு அருகே மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாகவும், சுருள் வாள் வீசுவதில் வல்லவரும், சிறந்த வீரருமான பத்மநாபன் வசித்து வந்தார்.

இவர் சமஸ்தான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியினை செய்து வந்தார். அகன்ற மார்புடன் திடகாத்திரமான உடல் வாகுவைக் கொண்ட பத்மநாபன் ஒருநாள் காலையில் குதிரையில் புலியூர்குறிச்சியிலிருந்து பத்மநாபபுரம் அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்க, எதிரே கோயிலுக்குச் சென்றுவிட்டு அக்கா தங்கையுமான செண்பகமும், நீலாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பத்மநாபன், செண்பகத்தையும் நீலாவையும் கண்டான். ஆகா, என்ன அழகு என்று ஏங்கியவாறு திரும்பித் திரும்பி பார்த்தபடி சென்றான். சிறிதுதூரம் சென்ற பத்மநாபன் மனச் சலனப்பட்டு மங்கையர்களை பின் தொடர்ந்தான். பின்விளைவை யோசிக்காமல், பின் வருபவனை நேசிக்காமல் இருப்பினும் அவனை பற்றியே வாதம் செய்து பேசிக்கொண்டு சென்றனர்.

‘‘நீலா அந்த ஆளு ஏன் இப்படி பார்த்திட்டு போறாரு’’ என்று கேட்ட செண்பகத்திடம் ‘‘ஒரு வேளை எனக்கு அவரு அத்தானா வரப்போறாரா அல்லது உனக்கு கொழுந்தனாக போகிறாரா தெரியலை’’ என்றாள் நீலா. உடனே செண்பகம், நீலாவை அடித்தபடி போடி … என்றபடி கூற… பின்னால் குதிரையின் காலடி சத்தம். அவர்களை நெருங்கினான் பத்மநாபன். அஞ்சிய இருவரும் வேகமாக நடந்தனர். இல்லம் சென்று பயத்தில் திரும்பி பார்க்க, அக்ரஹாரம் முனையில் குதிரையில் நின்றபடி கை அசைத்து விட்டுச் சென்றான் பத்மநாபன். கோட்டைக்கு வந்து குதிரையை விட்டு இறங்கிய பத்மநாபன், நடந்த சம்பவங்களையும், அக்கா, தங்கை இருவரும் விளையாட்டாக பேசியதையும் பெரிதாக எண்ணி, தனது ஆலோசகரிடம் கூறி  விளக்கம் கேட்க, அவர், அந்த பெண்களின் மனதில் உன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் உள்ளது.

உனது எண்ணமும், அவர்களது எண்ணமும் ஒன்றாக உள்ளதால் நிச்சயம் அவர்களுக்கு உன்மேல் பிரியம் உண்டாயிற்று என்று கூறினான். அவனது ஆசை வார்த்தையை நம்பிய பத்மநாபன். அந்த மங்கையர்கள் யார்? அவர்களது தகப்பன் யார் என்பதை அறிய அக்ரஹாரத்தை சேர்ந்த ஒரு இளைஞனை அழைத்து கேட்க, அவன் அர்ச்சகரின் மகள்கள்தான் செண்பகமும், நீலா தேவியும் என்று கூறினான். மறுநாள் சிவன் கோயில் அர்ச்சகரிடம் மகள்களை பற்றி பேசலாம் என்று நினைக்க, ‘‘அடுத்த வாரம் கோயிலில் கொடி ஏறுது அதன் பிறகு பேசு’’ என்று ஆலோசகர் கூற, அதன்படி பங்குனி தேரோட்டத்திற்கு கொடி ஏறியபின் ஒருநாள் அர்ச்சகரை கோட்டை அருகே வழி மறித்த பத்மநாபனின் உதவியாளர்,‘‘ம்... உங்க மகளை பத்மநாபன் பார்த்திருக்கிறான்.

அவனுக்கு பிடித்துப்போச்சு திருமண ஏற்பாடுகளை எப்ப செய்ய ஆரம்பிக்கணும்கறத, நீரே, நல்ல நாளா பார்த்து ஆள் மூலமா சீக்கிரமா சொல்லி விடும்’’ என்று கேட்க, ஒன்றும் பதில் சொல்லமுடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க, செய்வதறியாமல் கை, கால் நடுக்கத்துடன் வேகமாக வீட்டுக்கு வந்தார்.
மனைவியிடத்தில் சொல்லி வருத்தப்பட்டார். ‘‘படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பத்மநாபன் நம் பிள்ளைங்களை பெண் கேக்கிறாண்டி, அவன் குலத்தில் வேறுபட்டவன், குணத்தில் மாறுபட்டவன். மறுத்தால் மரணத்திற்கும் அஞ்ச மாட்டான். மன்னனுக்கு பக்க துணையாக இருப்பவன். என்ன செய்வது. வீதியில் போறவனெல்லாம் பெண் கேக்கிறானே, நான் நாதியற்று போனேனா, இல்லை சாதி கெட்டுப்போனேனா யாரிடம் முறையிடுவது. அந்த நீலகண்டனே துணை’’ என்று கூறிய அர்ச்சகருக்கு ‘‘எல்லாத்தையும் அம்மையப்பன் பார்த்துக்குவான் இப்போ உறங்குங்க’’ என்று ஆறுதல் கூறினாள் மனைவி.

வாரம் ஒன்று கடந்த நிலையில் சிவன் கோயிலில் 9வது நாள் தேரோட்டம். சிறப்பு அர்ச்சகர்கள் பலர் பூஜையிலிருக்க, அதிகாலை கோயிலுக்கு சென்று பணிவிடைகள் முடித்த அர்ச்சகர் வீடு வருகிறார். மகள்கள் தேரோட்டம் காண புறப்படுகின்றனர். அவர்களது தாயும் உடன் புறப்படுகிறாள். அர்ச்சகர் வந்து அவர்களை தடுத்து நிறுத்தி, செண்பகத்துக்கும், நீலாவுக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன். வீட்டுல ஆறு வகை கூட்டு வச்சு, பாயசம், அப்பளத்தோடு சாப்பாடு தயார் பண்ணிவை.  புள்ளைங்க கையால ஏழு பேருக்கு தானம் பண்ணின்டு அப்புறமா நாம சாப்பிடலாம் என்று கூறி மகள்களை அழைத்துச் செல்கிறார்.

கோட்டைக்கு மேல் புறத்து ஆற்றங்கரையோரம் பாழடைந்த ஆழ் கிணற்றுக்கு அழைத்து வந்து, செண்பகம், நீலா இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இருபத்தோரு கல் படிகளை தாண்டி இறங்கி, கிணற்றில் கால் அலம்புங்க என்று கூற, அக்கா செண்பகம் கூறினாள் ‘‘அப்பா, பார்க்கவே பயமா இருக்கே,’’ ‘‘அது ஒண்ணும் இல்ல வா’’ என்று கையை பிடித்து அழைத்துச் சென்றாள் நீலா. அவர்களது தந்தையான அர்ச்சகர் பின் தொடர்ந்து சென்றார். கடைசி படிக்கல்லில் இறங்கி கால் அலம்புகையில் இரண்டு பேரையும் அர்ச்சகர் கிணற்றுக்குள் தள்ளினார். தத்தளித்து மறு நிமிடமே மாண்டாள் செண்பகம். தத்தளித்தபடியே கத்தினாள் நீலா, ‘‘என் தகப்பா சண்டாளா, என்ன மோசம் செய்து விட்டாய். பாதகன் பத்மநாபனுக்கு பயந்து எங்களை கொன்னுட்டியே’’ என்று கூறியபடியே உயிர் நீத்தாள். மகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீடு சென்று தன்னுயிரை மாய்த்து கொண்டார். கணவன் மார்பில் சாய்ந்து அவரது மனைவியும் உயிர் நீத்தாள்.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • odingaelectionkenya

  கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

 • serina_wed_photos

  டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

 • Newyork_Fire

  நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

 • mikro_yogiii

  பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

 • sothnai_jaya

  21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்