SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவணி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

2017-08-16@ 13:55:59

சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை ஆவணி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு யோகம், அதிர்ஷ்டம் உண்டு. வருடத்திற்கு ஒருமுறை சூரியன் தன் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதே காரணம். மற்ற கிரக, ஜாதக அமைப்புகள் இல்லாமல் ஒரே ஒரு கிரகம் சொந்த வீட்டில் இருக்கும்போது பிறப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். பட்டம், பதவி, அதிகாரம், அந்தஸ்து, லட்சியம், கொள்கை, தலைமைப் பதவி, ஆள்பலம் என்று பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள சூரியன் பலமாக ஒருவரின் ஜாதகத்தில் இருப்பது மிகவும் விசேஷமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் ஆழ்ந்து, சிந்தித்து சுதந்திரமாக இருக்க விரும்புபவர்கள். உயர்ந்த எண்ணமும், பரந்த நோக்கமும், தயாள குணமும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள். இவர்களின் நோக்கமும், செயல்பாடும் கண்டிப்புடனும், நேர்மையாகவும் இருக்கும். பிறரிடம் அதை இவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். இவர்கள் செயல்பாடுகளில் மதியூகம், காலந்தவறாமை இருக்கும். அதனால் இவர்களை பிடிவாதக்காரர்கள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் உயரிய பண்புகளும் உதவும் எண்ணமும், தர்ம சிந்தனையும், விட்டுக்கொடுக்கும் தயாள குணமும் நிரம்ப இருக்கும். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும், எந்த பொறுப்பு வகித்தாலும் திறம்பட செயல்படுவார்கள். அந்தஸ்து, அதிகார பதவி, மந்திரி., M.P., M.L.A., அரசியல் அதிகார தலைமை போன்றவற்றில் இருப்பவர்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு இவர்களுக்கு இயற்கையாகவே அமையும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத குணம், மனதில் பட்டதை பேசும் பாங்கு, அதே நேரத்தில் இடம், பொருள், ஏவல் அறிந்து காரியம் சாதிக்கும் தன்மை போன்றவை இவர்களுக்கு வரப்பிரசாதமாகும். ஒரு செயலில் இறங்கிவிட்டால் அதை எப்படியும் முடித்துக்காட்ட வேண்டும்.

நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற போர்க்குணம், அதனால் உண்டாகும் கோபதாபங்கள், இவற்றால் இரண்டு விதமான பெயர் இருக்கும். ஒரு சாரார் நேர்மையானவர், நல்லவர், நாணயம் மிக்கவர் என்று சொல்வார்கள்; வேறு சிலர் மூர்க்கன், ஆணவக்காரர், அகம்பாவம் கொண்டவர் என்று தூற்றுவார்கள். ஆனால், இதன்பொருட்டு தங்களின் தனித்தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். அதையும் உடனே செய்து விடுவார்கள். ‘இன்று வா, நாளை பார்க்கலாம்’, என்று காலம் கடத்தமாட்டார்கள். யாரிடமாவது உதவி பெற்றால் அதற்கு பிரதி உபகாரமாக எதையாவது செய்துவிடுவார்கள். சோதனை காலங்களில் மனம் தளரமாட்டார்கள். பிரச்னைககளில் இருந்து எப்படி விடுபடுவது என்று யோசித்து செயல்படுவார்கள்.

தனம்  குடும்பம்  வாக்கு

குடும்பத்தில் இவர்கள் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். சிலநேரங்களில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டாலும் உடனே சமாதானமாக போகக்கூடியவர்கள். ரத்தபந்த சொந்தங்களை அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக பேசிவிடுவதால் ரகசியம் இவர்களிடம் தங்காது. பணம் எப்பொழுதும் புரண்டுகொண்டே இருக்கும். கணக்கு போட்டு காய் நகர்த்துவதில் வல்லவர்கள். அவசர, அவசிய செலவிற்கு பணம் தேவைப்பட்டால், கடன் வாங்கியாவது உடனே கொடுத்துவிட முனைப்புடன் செயல்படுவார்கள். கொடுக்கல், வாங்கலில் நேர்மை, வாக்கு, சுத்தம் இருக்கும். இவர்களை நம்பி எந்த உத்திரவாதமும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் கொடுக்கலாம். யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும். நல்ல விஷயங்களை பேசி முடிப்பதற்கும், தூது செல்வதற்கும் மிகவும் ஏற்றவர்கள்.

திட  தைரிய  வீரியம்

பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படமாட்டார்கள். முன்வைத்த காலை பின்வைக்கமாட்டார்கள். பிறரைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார்கள். அதேநேரத்தில் அதிகார தோரணையோடு நடந்துகொள்ளவும் இவர்களுக்குத் தெரியும். தான் என்ற மமதை இருந்தாலும், மனசாட்சியோடு நடப்பவர்கள். வெளிவிவகாரங்கள், பிரச்னைகள், மனக்குழப்பங்களை குடும்பத்தினரிடம் காட்டமாட்டார்கள். லக்னாதிபதியும், புதனும் நல்ல அமைப்பில் அம்சத்தில், சாதகமாக அமைந்துவிட்டால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு ஏற்பட்டுவிடும். மறைமுக, நேர்முக எதிர்ப்புகளை மீறி வெற்றி பெறுவார்கள்.

சொத்து  சுகம்

இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் கை கொடுக்கும். அரசியல் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, நிலபுலன்கள் சேரும். தாய்வழி மூலம், தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமும் செல்வம் சேரும். பூமிகாரகனான அங்காரகன் என்ற செவ்வாய் பலத்துடன் இருக்கும் பட்சத்தில் விவசாய விளைநிலங்கள், தோப்புகள், காப்பி, தேயிலை எஸ்டேட்டுகள் போன்றவை அமையும். உடல்நலம் இவர்களுக்கு இளமையில் சாதகமாக இருந்தாலும் 40 வயதிற்கு மேல் ஜீரணக் கோளாறுகளால் அவதியுறுவார்கள். ரத்த அழுத்த நோய் மிகவும் சிரமத்தைத் தரும். தலைபாரம், சைனஸ், அடுக்குத் தும்மல், அலர்ஜி போன்ற உபாதைகள் வரவும் வாய்ப்புள்ளது. உள்மூலம், வெளிமூலம், உஷ்ண சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம்.

பூர்வ புண்ணியம்  குழந்தைகள்

இவர்கள் முகராசி, கைராசி மிக்கவர்கள். வாக்குபலிதம் இருக்கும். இவர்களால் தொடங்கி வைக்கப்படும் காரியங்கள் நல்ல விருத்தியாகும். ஒன்றுக்கு பத்தாகப் பல்கிப் பெருகும். ஆண், பெண் வாரிசுகளை குறைவின்றிப் பெறுவர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டு. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர உறவுகள் இவர்களை வயோதிக காலத்தில் தாங்கிப் பிடிப்பார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம் இருக்கும். சில விஷயங்களை மனஆற்றல் மூலம் கணித்து சொல்லிவிடுவார்கள். கலைகளில் தேர்ச்சிபெற்று பெரிய வித்தகர்கள் எனப் பெயரெடுப்பார்கள். ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைவார்கள். சிவபெருமான், முருகன், அய்யனார், ஐயப்பன், காளி, துர்க்கை, கருப்பண்ணசாமி போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்கும். சிலருக்கு ஆன்ம தாகம் இருக்கும். இதனால் காஞ்சி மகாசுவாமிகள்,சேக்ஷாத்ரி சுவாமிகள், ரமணர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற அவதார மகா புருஷர்களின் அருளுரைப்படி நடப்பார்கள்.

ருணம்  ரோகம்  சத்ரு

இவர்களுக்குப் பெரும்பாலும் கடன்சுமை இருக்காது. எதையும் திட்டமிட்டு வேலை பார்ப்பதால் சிக்கல் வரவாய்ப்பில்லை. கர்மவினை காரணமாக நோய் உண்டாகி அதனால் பணவிரயம் ஏற்படும். கடனை எப்பாடு பட்டாவது அடைத்து விடுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்புகள் இருக்கும். புதன், செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் எதையும் எதிர்கொண்டு சமாளித்துவிடுவார்கள். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவதை சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவே  கருதுவார்கள்.

பயணங்கள் மனைவி கூட்டாளிகள்

பயணங்கள் செய்வதில் அலாதி பிரியமுடையவர்கள். குடும்பத்தினருடன், நண்பர்களுடனும் உல்லாசப் பயணங்கள் சென்று வருவார்கள். மலை வாசஸ்தலங்களில் தங்குவதற்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் இயற்கையை ரசிப்பார்கள். இவர்களுக்கு கூட்டாளிகள், நண்பர்கள் வட்டாரம் பெருமளவில் இருக்கும். இவர்களின் கறாரான போக்கு காரணமாக சில கருத்து வேறுபாடுகள் வந்தாலும் இவர்களின் குணம் அறிந்து விட்டுக்கொடுத்து சமாதானமாகி விடுவார்கள். வாழ்க்கைத்துணையைப் பொறுத்தமட்டில் இவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான மணவாழ்க்கை உண்டு. சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து அனுபவிக்கும் யோகமும் கிடைக்கும்.

தசமஸ்தானம் தொழில்

உத்யோக அம்சத்தில் அதிகாரம் செலுத்தும் பதவிகள் கிடைக்கும். I.A.S., I.P.S., I.F.S., ராணுவம் போன்ற அரசு இயந்திரங்களை இயக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். சூரியன், புதன், சுக்கிரன் நல்ல பலத்தில் இருந்தால் எத்துறையில் இருந்தாலும் ஏற்றம் பெறுவார்கள். சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கதை, காவியம், பாடல்கள், இசை போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். பேச்சில் வல்லவர்கள். வக்கீலாக நல்ல பெயர் புகழ் சம்பாதிக்க முடியும். பதிப்பகம், புத்தகம் வெளியிடுதல், அச்சுத்துறை போன்றவையும் நல்ல பலன் தரும். புதன் பலம் உள்ளவர்கள் அக்கவுண்டன்சி, ஆடிட்டர் துறையில் புகழ் பெறுவார்கள். வியாபாரத்தில் தங்கம், வெள்ளி வியாபாரம், கலைநயம் மிக்க பொருட்கள் மற்றும் பெண்கள் விரும்பும் நவநாகரிக பொருட்கள், விலை மதிப்புமிக்க ஆடைகள், உள்ஆடைகள், வாசனாதி திரவியங்கள் விற்பனையில் ஜீவனமும் அதன்மூலம் சொத்து சுகம், பெயர், பெரும்தனம் கிடைக்கப் பெறுவார்கள்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்