SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகதோஷம் நீக்கும் நாகராஜா

2017-08-12@ 08:49:51

நாகர்கோவில்

பாம்பு வழிபாடு என்பது தாய் வழிபாட்டிற்கும் முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாகும். மனித குலம் முதன் முதலில் கடவுளாக வழிபட்டது பாம்பைத்தான். பாம்பு என்பது ஊரும், நீந்தும் ஓர் உயிரினம். அவ்வளவுதானே என லேசாக எண்ணிவிட முடியாது. பாம்பின் ஆளுமை இல்லாத நாளோ, கோளோ, திசையோ, கிரகங்களோ, கிரகணங்களோ, இடமோ, பொருளோ கிடையாது. மனித ஜாதகத்தின் 12 கட்டங்களில் எந்த ஒரு இரண்டு கட்டங்களை ஆக்கிரமிக்கும் ராகுகேது என்னும் பாம்பு கிரகங்களைப் பொறுத்தே அவனது ஜாதகம் அமையும். பாம்புக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பாம்பு சம்பந்தப்படாத மனிதனோ, தெய்வமோ கிடையாது. பாம்பு நினைத்தால் மனித வடிவம் கொள்ளும். ஆதிசேடனே இந்த பூமியில் பதஞ்சலி முனிவராக அவதரித்துள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் குண்டலினி சக்தி என்னும் பாம்பு உள்ளது. நமது முன்னோர்கள் மிகச் சரியாக உள்ளும் புறமும் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பாம்பினை அடையாளம் கண்டு வழிபட்டனர்.

பாம்பின் மீது பயம், பிரமிப்பு, பக்தி, நம்பிக்கையெல்லாம் எதனால் ஏற்பட்டது? கடவுள் என்றால் கெட்டவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுபவர்தானே ஆவார்? பாம்பும் அதனைச் செய்தது. தன்னை வேண்டி வழிபட்டவர்களின் வேண்டுதலை ஏற்று போர்த் தளபதிபோல், படை நடத்திச் சென்று பகை முடித்தது. நவீன கால ஏவுகணைபோல ஏகத்துக்கு பேரழிவினை சில நொடிகளில் செய்து முடித்தது. பயம் வராமல் போகுமா என்ன? ஒய்டா நாட்டில் ‘தாங்கிபி’ என்ற மலைப்பாம்பு, ஒய்டா நாட்டு மக்களின் வேண்டுதலை ஏற்று போர் புரிந்து அவர்களுக்கு வெற்றிக்கனியை எளிதாகத் தட்டிப் பறித்துக் கொடுத்தது. தாங்கிபியில்  பெரிய வீட்டினைக் கட்டி வைத்து அதை கடவுளாக வழிபட்டு வரத் தொடங்கினர். அதுவே பாம்புக்காக அமைந்த முதல் தனிப்பெருங்கோயிலானது. ஏழு தலை பாம்புக்கான கோயிலொன்று கம்போடியாவில் நாகோன்வாட் என்னும் இடத்தில், 600 அடி சதுரத்தில், 180 அடி உயரத்தில், கோயில் முழுவதும் ஒரே ஒரு கருவறை அமைப்பில் எழுப்பப்பட்டது.

அந்தக் கோயிலில் மூலை, முடுக்கு என்று ஓரிடம்கூட விடாமல் பாம்புகளின் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. விதானம் எங்கும் ஏழுதலை பாம்புகளின் சித்திரங்களைக் காணலாம். கௌதம புத்தருக்கு ஏழு தலை பாம்பு குடை பிடிக்கும் சிற்பத்தைக் காணலாம். அங்கோர்வாட்டில் ஏழு தலை பாம்பு சிற்பம் ஒன்று உள்ளது. ஐந்து தலை நாகமாகிய, தேவநாகம் ஆதிசேடனுக்கு நாகர்கோவிலில், நகரின் இதயம் போன்ற முக்கிய பகுதியில் நாகராஜா திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், நாகர்கோவில், திருப்பாம்புபுரம், நாககிரி போன்ற தலங்கள் நாகவழிபாட்டால் மிகப் பிரபலமானவைகள் ஆகும்.
ராகு, கேது தலங்களான திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களில் ராகு, கேது சந்நதிகள் அமையப் பெற்றுள்ளன. ஆனால், நாகர்கோவிலில் மட்டுமே நாகராஜா மூலவராகவே சுயம்புத் திருமேனியோடு எழுந்தருளியுள்ளார்.

தனிப் பெருங்கடவுளாக வழிபடப்பட்ட பாம்பு, பிற்காலத்தில் சிவபெருமானின் பாம்பிற்கான ஆபரணங்களாகவும், பெருமாளின் பாம்பணையாகவும், பிற தெய்வங்களின் துணை தெய்வமாகவும் மாறியது. இருந்தும் பாம்புகள் தங்களது தனித்தன்மையை இழக்கவில்லை. தாய் வழிபாடு ஓங்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் நாகம்மா, நாகாத்தாள், நாககாளி, நாகதேவ கன்னிகாதேவி என்ற பெண் தெய்வங்களாக வழிபாட்டிற்கு உரியதாகியது. நாகக் கன்னி என்னும் பேரழகு படைத்த, மனித பெண் வடிவம் இடுப்பளவிலும், இடுப்பிற்கு கீழ் பாம்பு வடிவமும் கொண்டவர்கள் புராணங்களில் மட்டுமல்லாது வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளனர். தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னன் ஒரு நாகக்கன்னியின் மகன் ஆவான்.

மன்னர் பலரும் தங்கள் மனதைப் பறிகொடுத்து இவர்களை மணந்து கொண்டுள்ளனர். கி.மு.2000த்தில் ஹெர்குலீஸ் எசிந்தா முதல் மனசா, அத்திகா, வாசுகி என்ற பெண் பாம்பு அழகிகள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றனர். பாம்பு வழிபாடு, இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும்தான் ஆழ வேரோடியுள்ளது. அதுவும் வடஇந்தியாவைவிட தென் இந்தியாவில்தான் பாம்பு வழிபாடு அதிகமாக உள்ளது. இந்தியா எங்கும் நாக பஞ்சமி என்னும் பாம்பு வழிபாட்டுத் திருவிழா மட்டும் ஆனி மாதத்தில் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றது. இந்த விழா ஆயுதபூஜை விழாவைப் போலவே உள்ளது. நாகர்கோவில் நாகராஜா திருக்கோயிலின் தலவரலாற்றின்படி, ஒரு பெண் தனது நிலத்தை சீர்செய்துகொண்டிருக்கும்பொழுது, ஓடவல்லி செடிகளுள்ள புதருக்கருகே மண் வெட்டியைக் கொண்டு நிலத்தை வெட்டிய பொழுது, ஐந்து தலை பாம்புத் திருமேனியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். பச்சைப் பந்தலிட்டு, சுயம்பாக வந்த தெய்வத்தை வழிபட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலம் செல்லச் செல்ல நாகராஜாவின் மகிமை பரவ ஆரம்பித்தது. மழை வேண்டி பிரார்த்தனை, மழலை வரம், தோல் நோய்கள், குருட்டுத்தன்மை நீங்க எல்லாவித பிரார்த்தனைகளையும், நாகராஜா நிறைவேற்றி வைத்தார். கி.பி. 1526  1535ல், வேணாட்டை, களக்காட்டினைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்த பூதல வீரதிருவீர உதயமார்த்தாண்ட வர்மன், சோழ வேந்தனுக்கு துணையாக, பாண்டிய மன்னனுடன் போரிட்டு, பாண்டிய மன்னனை வென்றதால் சோழ இளவரசியை மணம் கொண்டதுடன், புலிமார்த்தாண்ட வர்மன் என்னும் பட்டப் பெயரினையும் பெற்றான். காலப்போக்கில் புலிமார்த்தாண்ட வர்மன் தொழுநோய்க்கு ஆளானான். ராஜவைத்தியங்கள் பலனளிக்கவில்லை.  நாகர்கோவில் நாகராஜாவின் மகிமைகளை கேள்வியுற்று ஆவணி மாதம் ஞாயிறன்று இத்திருத்தலத்தைச் சென்றடைந்தான். அங்கு சிலகாலம் தங்கியிருந்து வழிபாடு இயற்ற மன்னனைப் பீடித்த நோய் மறைந்து புதுப்பொலிவும் பெற்றான்.

மனம் மகிழ்ந்த மன்னன் கேரள பாணியில் நாகராஜாவிற்கு கோயில் அமைத்தான். வழிபாடுகள் தடையற நடக்க மலையாள நம்பூதிரிமார்களை நியமித்தான். வருடம்தோறும், தனது ராஜ குடும்பத்துடன் ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளை திருவிழாவிற்கு நிகராக நடத்தினான். இப்பொழுதும் ஆவணி மாதத்து ஞாயிறுகளில் ராஜா வழிபட்டதுபோலவே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த நாகராஜா திருக்கோயிலைச்சுற்றி அடர்ந்திருந்த ஓடவல்லிச்செடி புதர்களில் நாகங்கள் விரும்பி வாசம் செய்கின்றன. இந்த இலையையும், நாகராஜாவின் கர்ப்பக்கிரக தரை, வயல்போல மண்தரையாகவே இருப்பதால் அந்த மண்ணையும் இங்கு பிரசாதமாகத் தருகின்றனர். கருவறை மூர்த்தி, தேவநாகமாகிய ஐந்து தலை ஆதிசேடனாகும். காசி விஸ்வநாதர் சந்நதி, அனந்த கிருஷ்ணன் சந்நதி, கன்னி மூலை கணபதி சந்நதி, பாலமுருகன் சந்நதி, சாஸ்தா சந்நதி, தீர்த்த துர்க்கா சந்நதிகளும் உள்ளன.

கருவறையின் துவார சக்திகளாக தரநேந்திரன், பத்மாவதி என்னும் பாம்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை தளத்து மண், தட்சிணாயன புண்ணிய காலத்தில் கருப்பாகவும், உத்ராயண புண்ணிய காலத்தில் வெள்ளையாகவும் மாறுவது அதிசயமாக உள்ளது. பிரதான தெய்வங்களாக நாகராஜாவும், அனந்த கிருஷ்ணரும் கோயில் கொண்டுள்ளனர். நாகராஜாவிற்கு வழிபாடு இயற்றிய பின்னரே சிவா, விஷ்ணுவிற்கு வழிபாடு நடைபெறும். அர்த்த ஜாம பூஜை அனந்த கிருஷ்ணருக்கே நடைபெறுகின்றது. தேர்த் திருவிழாவும், தை பூசத்தன்று அனந்த கிருஷ்ணருக்கே நடைபெறுகின்றது. கொடிமரம் அனந்த கிருஷ்ணருக்கே உள்ளது. கொடிமரத்தில், கருடனின் இடத்தில் ஆமையின் புடைப்புச் சிற்பம் உள்ளது. கோயிலுக்கென திருக்குளமும்,நாகலிங்கப் பூக்கள் பூக்கும் மரத்தோட்டமும் உள்ளது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக பாலாபிஷேகமும், நாகச் சிற்பக்கற்களையும் நட்டு வைக்கின்றனர்.

இறைவி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SnakesDayatGuindy

  சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

 • PMspeachshellfellwb

  மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

 • BastilleDaycelebration

  பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

 • BodyPaintingFestival

  உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

 • 21stAnnualMudfestival

  தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்