SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகோன்னத வாழ்வருளும் பஞ்ச கிருஷ்ண தலங்கள்

2017-08-12@ 08:48:01

திருக்கண்ணங்குடி

‘‘ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘சில தலங்கள் எனக்கு மிகவும் பிரியமானவை. அவற்றுள் நான் எப்போதும் என் பக்தர்களுடன், அவர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அவர்களுடனேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இந்த தலங்களில் மூலவராகவோ உற்சவராகவோ கிருஷ்ணர் கோயில் கொண்டிருப்பார். அப்படிப்பட்ட ஐந்து தலங்களாக, தமிழ்நாட்டில் திருக்கோவலூர்,  திருக்கபிஸ்தலம், திருக்கண்ணங்குடி,  திருக்கண்ணமங்கை,  திருக்கண்ணபுரம் ஆகியவை விளங்குகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக தரிசிப்போம். வசிஷ்டர் வெண்ணையினால் கிருஷ்ணனை செய்தார். வெண்ணெயை விட வேகமாக அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் உருகியது. இவரின் பக்தியை விட கிருஷ்ணனின் கருணை அதிவேகம் கொண்டது. கிருஷ்ணன், குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டான். குடுகுடுவென்று ஓடிவந்தான். வசிஷ்டர் பூஜிக்கும் வெண்ணையை கையில் ஏந்தி வாயிலிட்டு விழுங்கினான்.

வசிஷ்டர், ‘‘அடேய், அடேய்...’’ என்று குழந்தையை விரட்டினார். குழந்தை கிருஷ்ணாரண்யம் எனப்படும் அடர்ந்த காட்டுப் பகுதியான திருக்கண்ணங்குடிக்குள் ஓடியது. கானகத்திற்குள் கிருஷ்ண தியானத்திலிருக்கும் ரிஷிகள் கண்ணன் ஓடிவருவதை அறிந்தனர். தொலைதூரம் வரும் கோபாலனை நோக்கி ஓடினர். பக்தியால் பொங்கி வழியும் அவர்கள் உள்ளம் கண்ட கண்ணன் உருகினான். ஓரிடத்தில் நின்றான். ‘‘என்னை வசிஷ்டர் துரத்தி வருகிறார். வேண்டிய வரத்தை சீக்கிரம் கேளுங்கள்’’ என்றான் குழந்தைக் கண்ணன். ‘‘உன்னிடம் வேறென்ன கேட்பது கண்ணா? இப்படி உன்னைக் காணத்தானே இத்தனை காலம் இங்கு தவமியற்றுகிறோம். அதனால், இவ்விடத்திலேயே நிரந்தரமாக எப்போதும் காட்சியருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டனர். அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் அங்கு மூச்சிறைக்க வந்த வசிஷ்டர், தடேரென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தத்தில் சரிந்தார்.

மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது. ராஜகோபுரங்களும் விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும் தேவர்களும் ரிஷிகளும் வந்து குவிந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார். இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. உயர்வு நவிர்ச்சியில், திருக்கண்ணங்குடி.  மூலவர் லோகநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தாயார், லோகநாயகி. உற்சவர்கள், தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி எனும் திருப்பெயர்களோடு காட்சியளிக்கின்றனர். தாமோதரன், கோபாலனாக இடுப்பில் கைவைத்து நின்று காட்டும் அழகுக்கு ஈடில்லை. இத்தலத்தின் கல்லிலும் மண்ணிலும்கூட கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருக்கின்றன என்பார்கள். இத்தலம் நாகப்பட்டினம்திருவாரூர் சாலையில், ஆழியூர் பள்ளிவாசலுக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பொது வாகன வசதியற்ற இத்தலத்திற்கு தனி வாகனம் மூலம்தான் செல்ல முடியும்.

திருக்கண்ணமங்கை


கிருஷ்ணாரண்யம் எனும் புண்ணிய பிரதேசத்திற்குள் அமைந்திருக்கிறது இந்தத் தலம். ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனாலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்றாகி, தாயாரின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. ‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார்.

மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும் திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தைக் காண தேவர்கள் குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்கிறார்கள். இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது. திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு, ‘‘புரிகிறதா?’’ என்று பெருமாளையே கேட்கிறார்.‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள். திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில், ‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’’ என்கிறார்.

அதாவது, ‘‘கண்ணா, வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டு, சர்வ வியாபியாக இருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே! பரவாயில்லை. புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’என்றே அழைத்து விட்டார். உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது. இதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார். ஆவணி மாத ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான்.

அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு. அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம்! பக்தவத்சலப் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவம். தாயாருக்கு கண்ணமங்கை நாயகி என்ற திருப்பெயர். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. திருவாரூரிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

திருக்கோவிலூர்


மிருகண்டு முனிவர், ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதார கோலங்களைக் காண வேண்டினார். அதற்காக எதுவும் உண்ணாது, தீவிர விரதமிருந்த முனிவரின் வைராக்கியத்தை பிரம்மன் கண்டு வியந்தார். ‘‘மிருகண்டு முனிவரே, தாங்கள் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில், கிருஷ்ண க்ஷேத்ரத்தில், கிருஷ்ணன் எனும் திருநாமத்தோடு பகவான் கோயில் கொண்டிருக்கும் தலத்திற்குச் சென்று தவமியற்றுங்கள்’’ என்று பணித்தார். உடனே, முனிவர் இந்த திருக்கோவிலூர் வந்து தவமியற்றி வாமன, திருவிக்ரம தரிசனத்தை கண்டார்.  இந்த தலத்திற்கு ஆதியில் கிருஷ்ணன் கோயில் என்றே பெயர் இருந்திருக்கிறது. சதுர் யுகங்களுக்கு முற்பட்ட தொன்மையை உடையது. கோபாலன் எனும் சொல்லே கோவாலன் எனத் திரிந்தது. அதுவே திருக்கோவலூர் என்றும் கோவிலூர் என்றும் ஆனது.

மிருகண்டு முனிவருக்கு திருவிக்ரமராக அவதாரத்தைக் காட்டும் முன் கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த சந்நதி, தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே உள்ளது. சாளக்கிராமத் திருமேனியுடன் ஆதிசந்நதியில் அருள்பாலிக்கிறார் கிருஷ்ணர். இங்கு கிருஷ்ணன் ஆனந்தமாக உறைவதை அறிந்த துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இங்கு கோயில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோயிலும், வழிபாடுகளும் உண்டு. இதை திருமங்கையாழ்வார், ‘‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்’’ என்று புகழ்கிறார். கிருஷ்ண பத்திரா நதியைத்தான் பெண்ணை ஆறு என்கிறோம். மகாபலி அளித்த தானத்தை கண்டு வியந்தல்லவா பெருமாள் இங்கு திருவிக்ரமனாக காட்சி தருகிறார். தன்னையே கொடுக்கிறானே இந்த தியாகி என்கிற ஆச்சரியத்தின் உயரம் அது! திருவிக்ரமன் எனும் இந்த கோலத்தை விராட்புருஷ நிலை என்பார்கள்.

அங்கிங்கெனாதபடி சகலமும் எம்பெருமான்தான் என்பதை உணர்த்தும் நிலை. மேலும் கீழும், இடமும் வலமும் நானே இருக்கிறேன் என்று காட்டும் விஸ்வரூப தரிசனம். எது சிறியதோ அந்த வாமனமும் நான்தான். எது பெரியதோ அந்த விக்ரமனும் நானேதான் என்று சொல்லும் தத்துவம் இங்கு கோயிலாகியிருக்கிறது. இடது திருக்கரத்தில் சக்கரமும் வலக் கரத்தில் சங்கும் ஏந்தி சியாமள வர்ணனாக அழகு காட்டுகிறான் கிருஷ்ணன். திருமார்பில் ஸ்ரீவத்ஸமும் கண்டத்தில் கௌஸ்துபமும் காதுகளில் குண்டலமும் வைஜெயந்தி வனமாலை புரள தேஜோ மயமாக விளங்குகிறான். பிரகலாதன், மகாபலி, விஷ்வக்சேனர் புடை சூழ ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளியிருக்கிறான். உற்சவராக ஆயன், ஆயனார், கோவலன், கோபாலன் எனும் பல்வேறு திருநாமங்களோடு கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். விழுப்புரம், திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூரை எளிதில் அடையலாம்.

திருக்கபிஸ்தலம்

கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலம் இது. துர்வாசரின் சாபத்தினால் மன்னன், கஜேந்திரன் என்ற யானையானான். இத்தலத்து குளத்தில் நீர் குடிக்க இறங்கினான். உடனே கஜேந்திர யானை சட்டென்று நிலைகுலைந்தது. அதன் காலை ஓர் முதலை வாயால் கவ்வியிருந்தது. முதலையை உதற முடியாமல், அங்கேயே திகைத்து நின்றது. திருமாலை தொழுதது. முன் ஜென்மத்தில் ‘ஹுஹூ’ எனும் கந்தர்வனாக இருந்தவனே தேவலர் எனும் முனிவரின் சாபத்தினால் முதலையாக வந்து, இப்போது யானையின் காலைப் பற்றினான். ‘‘எப்போது கஜேந்திரனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதே உனக்கு முக்தி’’ என்று தேவலர், தேவனை அடையும் வழியையும் சொன்னார், கஜேந்திரன்  வருந்திக் கண்ணீர் வடித்தது. ‘‘ஆதிமூலமே....’’ என்று இருதயத்தின் அடியிலிருந்து பிளிறியது.

அப்போது கருட வாகனத்தில் வந்த பெருமாள், தன் சக்ராயுதத்தால் முதலையை வெட்டிச் சாய்த்து கஜேந்திரனை மீட்டார். இந்தப் புராணம் நிகழ்ந்தது இங்குதான் என்பதால்,  மூலவர், கஜேந்திர வரதர் ஆனார். சரி, இத்தலம் எப்படி பஞ்ச கிருஷ்ண தலங்களுள் ஒன்றானது? இத்தலத்தின் பெயரிலேயே அதற்கான புராணம் உள்ளது. ‘கபி’ என்றால் வானரம் (குரங்கு). திருக்கபிகளான அனுமனும் சுக்ரீவனும் அவர்களை சார்ந்த மற்ற வானரர்களும் வழிபட்ட தலமாதலால் திருக்கபிஸ்தலம் என்றானது. ராவணனை அழித்து ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பிவிட, கிஷ்கிந்தையை சுக்ரீவன் அரசாண்டான். ஆனாலும் சுக்ரீவனுக்குள் இனம் புரியாத துக்கம் கவ்வியது. அண்ணன் வாலியை கொன்று விட்டு இப்படி நாடாளுகிறோமே; தர்மத்தின் முழுவடிவான ஸ்ரீராமர் கையினாலேயே வாலிக்கு மரணம் நேர்ந்ததும் அதற்குத் தானே காரணமாக இருந்ததும் அவன் நெஞ்சை முள்ளாய் தைத்தன.  

அண்ணன் இல்லாத இந்த நாட்டை நான் எப்படி ஆளுவது என்று துடித்தான். ‘‘குருதேவா, என் மனம் குற்ற உணர்வில் குறுகுறுக்கிறது’’ என்று குறுமுனி அகத்தியரின் பாதம் பணிந்து வழி கேட்டான்.‘‘காவேரி நதியில் நீராடி, அதன் கரையில் கிருஷ்ணரை ஸ்தாபித்து வழிபடு’’ என்று அருட் கட்டளையிட்டார் முனிவர். ஸ்ரீராமர் காலத்தில் கிருஷ்ணரா? அவதாரங்கள் என்பதே எப்போதும் நித்தியமாக இருப்பதேயாகும். நாராயணன் எடுத்த அவதாரங்கள் அந்தந்த யுகங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ராமாயணத்தில்கூட பல இடங்களில் கிருஷ்ண நாமத்தின் பெருமை பேசப்படுகிறது. அப்படி ஆதியில் சுக்ரீவன் இந்த ஆற்றங்கரையில் கண்ணனை வழிபட்டதைத்தான் திருமழிசை ஆழ்வார், ‘ஆற்றங்கரை கிடந்த கண்ணன்’ என்கிறார். அந்த கபியான சுக்ரீவன் கண்ணனை வணங்கியதாலேயே இன்றும் அத்தலம் திருக்கபிஸ்தலம் என்றிருப்பது எத்தனை பொருத்தமானது! அங்கிருக்கும் கஜேந்திர வரதன், கண்ணனே எனும் பாவனையில் தரிசித்தால், குழலின் ஓசை ஒலிப்பதையும் உணர முடியும்!

திருக்கண்ணபுரம்

பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் இன்னொன்று. அதனாலேயே கண்ணபுரம் என்றானது. அதைத் தவிரவும் ஒரு காரணம் உண்டு.‘‘அஷ்டாட்சரமான ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால் பகவானின் தரிசனம் கிட்டும்? அப்படிப்பட்ட க்ஷேத்ரத்தை எனக்குக் கூறுங்கள்’’ என்று கண்வ முனிவர் நாரத மகரிஷியிடம் வேண்டினார். ‘‘கிழக்கு சமுத்திரத்திற்கு சமீபத்தில் திருக்கண்ணபுரம் எனும் கிருஷ்ண க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு  கருணைக் கடலாக சேவை சாதிக்கிறார், சௌரிராஜன். க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது. கிருஷ்ண க்ஷேத்ரமாகவும் வனத்தில் கிருஷ்ணாரண்யமாகவும் காவிரி நதி பாய்ந்து வளமூட்டியபடியும் கிழக்கு கடலின் கரையினிலும் (வங்காள விரிகுடா), உபரிசிரவசு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கண்ணபுரம் என்கிற நகரமும் நித்ய புஷ்கரணியும் உத்பாலவதாக விமானம் கொண்டு ஆலயம் விளங்குகிறது.

கிருஷ்ணாரண்ய சௌரிராஜன், அஷ்டாட்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். எனவே, அங்கு சென்று மந்திரத்தை ஜபிக்க, பரந்தாமனின் தரிசனம் நிச்சயம்’’ என்று நாரத மகரிஷி மகிமைகளை விஸ்தாரமாகக் கூறி அனுப்புகிறார்.  கண்வ முனிவருக்கு அதிசுந்தரமான தரிசனத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அளித்ததால் கண்வபுரம் என்று பெயர் பெற்று, அதுவே கண்ணபுரமாக மாறியது. இங்கு சேவை சாதிக்கும் சௌரிராஜன் சாட்சாத் கிருஷ்ணனே. கோயில் அர்ச்சகர் ஒருவர் தன் காதலிக்கு சூடிய மாலையை பெருமாளுக்கு சாத்தி விட்டார். கோயிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு சூட்டிய மாலையை பிரசாதமாகத் தந்தார். அதற்குள் இருந்த தலைமுடியை கண்டு மன்னன் கோபம் கொண்டான். எப்படி வந்தது என்று வெகுண்டான்.

அர்ச்சகர், ‘‘பெருமாளுக்கு சௌரி உள்ளது. அதுதான் இது’’ என்று பொய் கூறி, பெருமாள் பாதத்தை சரணடைந்தார். மறுநாள் மன்னன் வந்து பார்த்தபோது தலையில் முடியோடு சௌரிராஜனாக சேவை சாதித்தார், பெருமாள்! விபீஷணன், ‘‘கிடந்த கோலத்தை திருவரங்கத்தில் கண்டேன். நடையழகை காணுவேனா?’’ என்று கோரினான். இத்தலத்தில் பெருமாள் விபீஷணனுக்கு நடையழகை காட்டி அருளினான். இன்றும் அமாவாசை தோறும் இந்நிகழ்ச்சியை நடித்துக் காட்டும் திருவிழா இங்குண்டு. ‘சௌரி’ என்ற சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதரிப்பவன் என்று பொருள். பல்வேறு யுகங்களை கண்ட திவ்ய தேசம் இது. ‘‘திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் எனது துயர்களெல்லாம் போயின.

இனி எனக்கு என்ன குறையுள்ளது!’’ என்று நம்மாழ்வார் வினவுகிறார். மூலவராக சௌரிராஜப் பெருமாளும் கண்ணபுர நாயகித் தாயாரும் சேவை சாதிக்கிறார்கள். திருவாரூரிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு.   இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று எங்கிருந்தாலும் சரி, இந்தத் தலங்களின் பெயரை உச்சரித்தாலேயே கிருஷ்ணன் சந்தோஷப்படுவான். வாய்ப்பிருந்து தரிசிக்க முடிந்தால், பார்வையால் ஆரத் தழுவிக் கொள்வான். இந்த ஐந்து தலங்களின் மீது அத்தனை பிரியம் அவனுக்கு. இவை என் ஊர்கள் என்று தனித்த அபிமானம் கொண்டிருக்கிறான். அதனாலேயே இந்த ஐந்து தலங்களிலும் ‘‘வாருங்கள்...’’ என்றழைத்தபடி நமக்காகக் காத்திருக்கிறான்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2017

    21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்