SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவி மகாத்மியம் கூறும் மகாகாளி

2017-08-04@ 08:56:19

தேவி மகாத்மியம், மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரங்களாக விரிந்திருக்கிறது. துர்க்கையின் லீலைகளையும் மகிமைகளையும் சொல்லும் சரிதம். ‘துர்க்கா சப்த சதீ’ என்றே அழைப்பர். சப்த சதம் என்றால் எழுநூறு என்று பொருள். இந்த  துர்க்கா சப்த சதீயைத்தான் தேவி மகாத்மியம் என்கிறோம். தேவி மகாத்மிய மைய நாயகியை சண்டிகா என்பர். எழுநூறு மந்திரங்களும் அவளின் முழுத் திருவுருவாக விளங்குவதால் சண்டீ என்று போற்றுகின்றனர். நவராத்திரியின்போது தேவி மகாத்மியத்தை பாராயணமாகச் செய்வதும், அதையே சண்டீ ஹோமமாக நிகழ்த்துவதும் நெடுங்காலமாக வழக்கத்திலுள்ளது. இந்த மகாத்மியத்தை மேதஸ் என்கிற மகாமுனிவர் சுரதன், சமாதி என்பவர்களுக்கு உரைத்தார்.

தன் ராஜ்யத்தை இழந்த சுரதன், தன்னைச் சார்ந்தவர்கள் தர்மம் விலகியவர்களாய், சுயநலமிகளாய் இருந்ததையும் கண்டு மனம் வெறுத்து கானகம் ஏகினான். அங்கே தன்னைப் போலவே வாழ்வில் விரக்தியடைந்த சமாதி என்ற வியாபாரியின் நட்பு கிடைத்தது. இருவரும் ஒரு குடிலை அடைந்தார்கள். மகா குருவும், ஞானியுமான மேதஸ் அவர்கள் இருவரின் பூர்வ கதைகளைப் பொறுமையோடு கேட்டார். இருவரும் தங்களுக்கு அவர் ஞானத்தின் துறையைக் காட்டுமாறு பணிந்து கேட்டுக்கொண்டனர். உடனே அவர், தேவி மகாத்மியத்தின் மூன்று முக்கிய நாயகியரான காளி, லட்சுமி, சரஸ்வதியின் வீர வைபவங்களை உரைக்கத் தொடங்கினார்.

அது பிரளய காலம். பராசக்தி அனைத்தையும் நீரால் கரைத்து நீரையும் தனக்குள் கரைத்து தானே சகலமுமாய் மாறி நிற்பாள். பிரம்மா தன் நான்கு சிரசுகளாய் விளங்கும் வேத அதிர்வுகளை அடுத்த பிரபஞ்சப் படைப்பில் பரவவிட்டார். இப்போது பராசக்தியின் பிரளயத் தாண்டவம் தன் உச்சியை எட்டியது. மகாசக்திக்குள் ஈசன், விஷ்ணு, பிரம்மா மூவரும் அடங்க, இப்போது பராசக்தி மட்டும் அனைத்துமாகி நின்றாள். ஊழிக் காலத்தில் எங்கும் ஒரே நீர் மயம். ஆதிசேஷத்தின் மீது விஷ்ணு நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். சட்டென்று அவரின் செவிக் குள்ளிருந்து அழுக்கு போல இரண்டு அசுரர்கள் வெளிப்படுகிறார்கள். அவர்களின் பார்வை நாபியின் மீதிருக்கும் பிரம்மாவின் மீது திரும்பியது. ‘‘நாங்கள் மதுகைடபர்கள். மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் அமரும் தகுதி இனி எங்களுக்குத்தான்’’ என்று அந்த பிரளய காலத்தில் தப்பிப் பிழைத்த அசுரர்கள் பிரம்மாவை மிரட்டினர்.

பிரம்மா பயப்படவில்லை என்றாலும் பிரளய காலத்தில் அசுரர்களால் வதம் செய்யப்பட்டார். அந்த இறுதி கட்டத்திலும்  அற்புதமான துதிகளால் காளியை துதித்தார். உடனே அவள் ஆவிர்பவித்தாள். பேரூழியிலுள்ள காரிருளையும் விட கன்னங் கரியவளாக விளங்கினாள். மிக விசித்திரமான பத்து முகங்கள். பத்து கைகள். பத்து பாதங்கள். மூன்று நயனங்கள். வலப்பு கீழ்க் கரத்திலிருந்து தொடங்கி இடது புறக் கீழ்க்கரம் வரையில் தனது பத்து கரங்களிலும் கத்தி, அம்பு, கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்கிற கவண், குண்டாந்தடி, வில், குருதி கொட்டும் தலையை தரித்திருந்தாள். தெற்றுப் பற்களோடு அட்டகாசமாக சிரித்தாள்.
‘‘மகாகாளி, மகாவிஷ்ணுவே நித்திரை கலைந்து இவர்களை வதைத்து தம்மிடமே சேர்த்துக் கொள்ளத் தாங்கள் அருள் புரிய வேண்டும்’’ என்று இரைஞ்சினார்.

இப்படி வேண்டிக்கொண்ட அந்தக் கணமே தாமஸீ எனும் தேவதை விஷ்ணுவை விட்டு விலகினாள். விஷ்ணுவும் யோக நித்திரையிலிருந்து எழுந்து அந்தக் கணமே மதுகைடபருடன் மாபெரும் போர் தொடுத்தார். ஆனால் அவர்களுக்கு நீரில் இருக்கும் வரை மரணம் சம்பவிக்காது என்ற உண்மை தெரிந்து மகாவிஷ்ணு தீவிரமாக பராசக்தியை நோக்கி தவம் செய்தார். சட்டென்று பேருருவம் கொண்டார். அகன்றிருந்த தனது திருத்தொடைகளை நீட்டினார். அவை அப்படியே கெட்டிப்பட்ட பூமியாக இருந்தன. அந்த பூமிப் பகுதியில் மதுவையும் கைடபனையும் தூக்கி வைத்துக் கொண்டார். அவர்களின் தலைகளை நோக்கி சக்ராயுதத்தை பிரயோகித்தார். இருவரும் தம் அசுர குணங்கள் அழிந்து மீண்டும் விஷ்ணுவின் மூலத்திற்கு சென்று ஒடுங்கினர்.

மதுகைடபர் வேறு யாருமல்ல. பிரளயத்தின் போது கூட ஒடுங்க மறுத்த அதர்மங்கள்தான். சிற்றின்ப வாசனைகளின் வடிவமே மது. மனிதனை அவனுக்கான தர்மத்தை மறக்கச் செய்து வெறும் புழு (கீடம்) போல அவனை மாற்றி ‘ப’ என்கிற மனிதனாகக் காட்டுகிற ‘கீட  ப’ மான துன்ப நுகர்ச்சியே கைடபன். மது  கைடபரின் ரகசியத் தூண்டுதலால்தான் மனிதர்கள் பாவம் புரிகிறார்கள். இப்படி பிரளய காலத்திலும் கூட கர்ம வாசனைகள் அசுரர்களாக அலையும்போது அதை அழித்து மூலத்திற்கு கொண்டு செல்பவள்தான் காளி. அடுத்து மேதஸ் முனிவர் மான்மியத்தின் மத்திய சரித நாயகியான லட்சுமியின் வீரமும் ஞானமுமிக்க வைபவங்களை கூறத் தொடங்கினார்.  

அசுர சகோதரர்களான கரம்பனும், ரம்பனும் தவம் மேற்கொள்ளப் போகிறார்கள் என்று செவியுற்றபோது தேவர்கள் மிரண்டு போயினர். கரம்பன், ஜலஸ்தம்பனம் என்றழைக்கப்படும் நீரின் சக்தியை தன் வசமாக்கும் வித்தையால் மூச்சை நிறுத்தி நீருக்குள் நெடுநேரம் ஜீவிக்கும் தன்மையை தன்வயமாக்கினான். சகோதரன் ரம்பன் மேகம் முட்டும் உயரத்திற்கு அக்னியை மூட்டி, ஒற்றைக் காலில் நின்று மனதை ஒருமையாக்கி தீக்கடவுளை சித்தத்தில் நிறுத்தி, தீக்குள் தீயாகி மறையும் ஆற்றல் பெற்றான். அசுரர்கள் மும்மூர்த்திகளிடமிருந்து வரம் கோருவதில் சமர்த்தர்கள். அதைத் தடுக்க வேண்டும். உடனே இந்திரன் முதலை உருவில் நீருக்குள் நுழைந்தான். கரம்பனின் காலைக் கவ்வினான். கபளீகரம் செய்தான். சகோதரனின் மரண ஓலத்தை கேட்டு ரம்பன் புரண்டு புரண்டு அழுதான். தன்னைச் சுடாத அக்னியிடம் புலம்பினான். அவர் அருளால், இந்திரனை வீழ்த்தும் வியூகத்தை அமைத்தான். ஒரு எருதாக உருமாறினான்.

ஒரு பெண்ணெருமையை இணையாக்கிக் கொண்டான். ஆனால், இன்னொரு எருது ரம்பனை கொம்பால் குத்த, ரம்பன் சரிந்தான். தம் தலைவனை அசுர ஜனங்கள் சிதையில் வைத்து தீ மூட்டினர். ரம்பனுடன் இணைந்த பெண் காட்டெருமை பதிவிரதை போன்று தீப்பாய்ந்தது. இதை அசுரர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெண்ணெருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து எருமைத் தலையோடும், மானுட உடலோடும் அதீத சக்தி பொங்க ஒருவன் வெளிவந்து விழுந்தான். அசுரக் கூட்டம் புதியவனை ஆரத்தழுவியது. 'மகிஷன்' என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தையின் அவாவை மகிஷன் நிறைவேற்றத் துடித்தான். எருமைபோல் சோம்பியிருக்காது ‘போர்... போர்' என தேவர்களை எதிர்கொண்டான்.

முழு வலிமையோடு அவன் இறங்க, தேவப் படை சிதறி ஓடியது. ஆனால், மீண்டும் வந்து போருக்கு நின்றது. இதைப் பார்த்த மகிஷன் கலங்கினான். மரணமே இல்லாததால்தான் அவர்கள் வெல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். தன் தந்தையின் நினைவு சட்டென்று நெஞ்சில் நிழலாட, அவரின் தபோ பலத்தாலேயே தான் உருவாகியுள்ளோம் என்று எண்ணம் உதித்தது. உடனே பிரம்மனை நோக்கி உக்கிரத் தவ மியற்றினான். பிரம்மனும் பிரசன்னமானார். ‘எனக்கு மரணம் வராதிருக்க வேண்டும்’ என்று அவன் கேட்க, ‘‘ஒரு பெண்ணால் தவிர வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது'' எனக் கேட்டான். பிரம்மன் வரம் தந்தார். மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது.

தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது. மானிடர்களும், அந்தணர்களும் இருண்டனர். இந்திரன் தளர்ந்துபோய் தனது குருவான வியாழ பகவான் எனும் பிரஹஸ்பதியின் பாதத்தைச் சரணடைந்தான். குரு தேவர்களின் நிலையினை எண்ணி வருந்தினார். ‘‘ராசக்தியிடம் பாரம் கொடுத்துவிடு. பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு’’ என்று அறிவுரை கூறினார், பிரகஸ்பதி. உடனே பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர். ஈசனும், மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க கோபாவேசத்தோடு தவம் செய்தனர். தேவர்களும் அவர்களோடு இணைந்தனர். சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது மங்களமான பெண் உருவாகத் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் பிராட்டி.

பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல் கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின் இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாக மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார். கனலாகிச் சிவந்தாள் துர்க்கா. வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் மேலுதடாகவும் ஒளிபரப்பி சிவந்திருந்தன. தேவர்கள் கண்களில் நீர் பொங்க, ‘ஜெய்... ஜெய்...' என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மஹாளய அமாவாசைக்கு முதல் தினம். பிரளயத்தின் போது பார்வதி காளியாகி வந்தாள். இப்போது மகாலக்ஷ்மியே அஷ்டபுஜ துர்க்கையாக எழுந்தாள். சகல ஆயுதபாணியாக, சிம்ம வாகினியாக சிலிர்த்து கம்பீரமாகத் தோன்றினாள்.

சிம்மத்தின் கர்ஜனை மகிஷனின் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாக கிள்ளி எறிந்தாள். அசுரக் கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை, அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது! இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள். மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி' எனப்படுபவள். ‘மர்த்தனம்' என்றாலே ‘மாவுபோல் அரைப்பது' என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி' என அழைக்கப்படுகிறாள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்