SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணிமைபோல் காத்தருளும் காயத்ரி தேவி

2017-08-04@ 08:55:08

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரம் அருகில் காயத்ரி மலையில் ஐந்து சிரங்களும், பத்து கரங்களும் கொண்டவளாய் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள் காயத்ரி தேவி. நான்முகனால் உருவாக்கப்பட்டதால் இத்தலம் புஷ்கர் என வழங்கப்படுகிறது. இத்தலம் ஆஜ்மீரிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. முன்பொரு சமயம் பூமியில் யாகம் செய்ய சிறந்த இடமொன்றைத் தேடினார் நான்முகன். அப்போது அவரது திருக்கரத்திலிருந்த புஷ்பம் ஒன்று தற்செயலாக கீழே விழுந்ததாம். புஷ்பம் விழுந்த இடத்திலிருந்து நீர் பெருகி ஒரு குளம் போல மாறி பின்னர் அதைச்சுற்றி அமைந்த ஊரே புஷ்கர் என அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த சக்தி பீடத்தில் காணுமிடமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. புஷ்கர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுப்ரபா, கனகா, பிராசி, நந்தா மற்றும் சரஸ்வதி நதிகள் பாய்ந்தோடி இப்பிரதேசத்தை மேலும் அழகுறச் செய்கின்றன. புஷ்கர் ஏரியில் நீராடுவது ஆனந்த அனுபவம்.

காசியைப் போலவே இங்கும் இறக்க முக்தி. கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் இந்த ஏரியில் மூழ்கி, வராக மூர்த்தியை தரிசித்தால் முக்தி நிச்சயம். நூறு வருடங்கள் தவம் செய்த பலன் கிட்டும் என்பது ஐதீகம். இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால் நான்முகன் இந்த ஏரியில் மூழ்கினால் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவார்கள் என்று அருளியதால், பாவிகளும் மற்றும் நித்ய கர்மாக்களைச் செய்ய வேண்டிய மக்களும் தங்கள் கடமைகளை மறந்ததால் இந்த ஏரியில் நீராடி மோட்சத்தை அடைந்து அங்கு சொர்க்கலோகம் நிரம்பி வழிய பிறகு நான்முகன் தன் தவறை உணர்ந்து கார்த்திகை மாத சுக்ல பட்சம் (கார்த்திகை மாதம் கடைசி ஐந்து நாட்கள்) என்று மாற்றியருளினார். மற்ற நாட்களில் அங்கு நீராடினாலும் இறைவன் அருள் கிடைப்பதென்பதும் நிச்சயம்.  இந்த சக்திபீடத்தில் நான்முகன் அருகிலேயே காயத்ரி தேவி வீற்றிருக்கிறாள்.

நான்முகன் ஆலய முன்முக மண்டபம் முழுதும் சலவைக்கல்லால் ஆனது. பிரார்த்தனை செய்து கொண்டு பதித்து வைத்த வெள்ளி நாணயங்களை இம்மண்டபம் முழுவதும் காணலாம். தரையில் பதிக்கப்பட்ட இந்த நாணயங்கள் பக்தர்கள் கால்கள் பட்டு தேய்வது போல தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும் தேய்ந்து விடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கணவன், மனைவியருக்கிடையே ஏற்படும் பூசல்கள் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, தேவ, தேவியர்க்கும் உண்டு. நான்முகன் யாகம் செய்ய பூமியில் இடம் தேடினார், இத்தலத்தில் யாகம் செய்ய முற்பட்டபோது தன் மனைவியான் சாவித்ரி தேவி நாரதரின் கலகத்தால் வர தாமதமாக, அவர் காயத்ரி எனும் இடையர் குலப் பெண்ணை வைத்து யாகத்தைத் தொடங்கினார், சிறிது காலதாமதமாக வந்த சாவித்ரி தேவி அங்கு வந்து சேர்ந்து மிகவும் வேதனைப்பட்டு தான் இருக்கும் இடத்தில் வேறொரு பெண்ணா என மனம் கொதித்து நான்முகனை நோக்கி உமக்கு இந்த புஷ்கர் தவிர வேறு இடத்தில் ஆலயம் அமையாது என்றும் யாகத்திற்கு உதவியாக இருந்தவர்களையும் சபித்தும் சென்றாள்.

அந்த சாவித்ரி தேவிக்கு நான்முகன் ஆலயத்திற்குப் பின்னால் மலையில் ஒரு கோயில் உள்ளது. அவளை வணங்கும் பெண்கள் நித்யசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. புஷ்கரத்தை வலம் வருவதை பரிக்ரமா என்று கூறுவர். இதில் பலவகைகள் உண்டு. அந்தர்வேதி என்பது முதல் பிரதட்சிணம். இது 10 கி.மீ தொலைவு. மத்யவேதி என்பது 16 கி.மீ தொலைவு கொண்டது. ப்ரதான்வேதி என்பது மூன்றாவது பிரதட்சிணம் இது 77 கி.மீ. புஷ்கரத்தின் சிறப்புகள் அனைத்து அங்கு அமைந்துள்ள தீர்த்தத்தில் அடங்கியுள்ளது. தேவியின் விரல்களிலிருந்து பிறந்தது கங்கை என்பர். அந்தக் கங்கையிலே நான்முகனின் கமண்டல நீர் கலந்து புஷ்கரம் என்ற தீர்த்தம் உற்பத்தியானதாகக் கூறப்படுகிறது. புருஷோத்தமனே அங்கு நீர் வடிவில் காட்சியளிக்கிறார். புஷ்கரம் எனில் தாமரை என்றும் பொருள் உண்டு. பூமி பிளந்து மூன்று இடங்களில் ஜேஷ்ட புஷ்கரம், மத்ய புஷ்கரம், கனிஷ்ட புஷ்கரம் ஆகியவை உண்டானதாம்.

அவை மூன்றிலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் உறைவதாகக் கூறப்படுகிறது. மாபாதகங்களைத் தீர்க்கும் அருட்சக்தியாக அன்னை விளங்குகிறாள். கெளதமமுனிவரால் சபிக்கப்பட்ட அகலிகை இவ்விடத்தில்தான் ராமபிரானால் சாபவிமோசனம் பெற்றாள். விஸ்வாமித்திரர் தவம் செய்த இந்த இடத்தில் அகத்தியரின் குகையும் உள்ளது. ஸர்வானந்தரின் ராணி காயத்ரி தேவி. இவள் ஒளி வீசும் மணிவேதக பீடத்தில் அமர்ந்தவள். ஸர்வாணி. ஆண்டாண்டு காலமாய் அன்போடு வணங்கும் அன்பர்களுக்கு காலனைக் கடிந்த நீலகண்டரின் அருளையும் சேர்த்து வழங்கும் கருணாகரி. எல்லை காண இயலாத சம்சாரக் கடலில் சிக்கி, கரையேறும் வழி தெரியாது வருந்தும் அன்பர்களுக்கு வரம்பற்ற கருணையுடன் குறைவற்ற அருளைப் பொழிந்து காக்கும் தாயும் இவளே. கரங்களில் கங்கணங்கள் அசைய பொல்லாத முன்வினைகளுக்கு அஞ்சேல் என அபயம் அளிப்பவள். கணக்கற்ற பிறவிகளாகிய கழல்களில் இருந்து விடுவித்து உள்ளத்தை அவளது திருவடிகளில் கலக்குமாறு அருள்பவள்.  

காயத்ரி மந்திரத்தை தவறாது ஜபித்து பலன் பெறுவோர் எண்ணற்றோர். மந்திரங்களுள் மிகவும் மகிமை வாய்ந்த இம்மந்திரம் 24 எழுத்துக்களைக் கொண்டது. வால்மீகி முனிவர் தன் ராமாயணத்தில் ஓராயிரம் ஸ்லோகங்களுக்கு ஒரு முறை எனும் கணக்கில் காயத்ரி தேவியின் அட்சரங்களை உட்பொதிந்து வைத்துள்ளார். வேத மந்திரங்களின் சாரம் என்றே காயத்ரி போற்றப்படுகிறது. வேத மாதாவின் மறுவடிவம் காயத்ரி தேவி. இவள் ஐந்து முகங்கள், பத்து கரங்கள் கொண்டவள். அவற்றுள் முறையே தாமரை, சங்கு, சக்கரம், கதை, பாசம், அங்குசம், கபாலம், சாட்டை, வர, அபய முத்திரை தரித்தவள். பத்துகரங்கள் கொண்டு தசமகாவித்யாக்களும் தானே என உணர்த்துகிறாள் தேவி. சங்கு, சக்கரங்கள் திருமாலையும், முகங்களில் முக்கண்கள் சிவனையும் குறிக்கிறது, தாமே திருமகளும் பிரம்மனும் என்பதை உணர்த்த தாமரையை ஏந்தியுள்ளாள். முக்கண்கள் முச்சுடர்களைக் குறிக்கின்றன.

ஐந்து முகங்களில் பதினைந்து கண்களைக் கொண்டவள் இவள். ஸ்ரீவித்யையின் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்திற்குரிய பராசக்தி இவளே. தேவியின் ஐந்து திருமுகங்கள் பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நவம்பர் மாதம் வரும் பெளர்ணமியில் ஒன்று கூடி புஷ்கரில் நீராடி பலன் பெறுகிறார்கள். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி எனும் பழமொழி பிறந்ததும் இந்த தலத்தில்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோதாவரி நதிக்கரையிலும் புஷ்கரவிழா நடைபெறுகிறது.
ஒரு முறை தேவாசுரப் போர் நிகழ்ந்த போது போரில் மிக உயர்ந்த பொருட்கள் அழிவது கண்டு பொறுக்காத அன்னை அனைத்தையும் கவர்ந்து தன் வசப்படுத்தினாள். போர் முடிந்து அமைதி திரும்பியதும் அதை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தாள் தேவி. எனவே, போராலும், தீய சக்திகளாலும் அழியாமல் நம்மை அம்பிகை காக்கிறாள் என்பது திண்ணம்.  யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க்கடவுளின் ஒளியினை தியானிப்போமாக என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள். நாமும் காயத்ரி தேவியின் மந்திரத்தை சொல்லி கவலைகளை மறப்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • accident20

  அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

 • 20-02-2020

  20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்