SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுக்கோட்டை புவனேஸ்வரி

2017-08-04@ 08:54:15

இந்தக் கோயிலில் புவனேஸ்வரி தேவி பூரண மகாமேருவுடன் மூலக் கருவறையில் வீற்றிருந்து அருள்கிறாள். இத்தலம் நவசாலபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஞானவடிவான சரஸ்வதியும் கிரியா வடிவான மகாலட்சுமியும் இச்சா வடிவான மகாகாளியும் இத்தலத்தில் ‘சாமுண்டீஸ்வரி
புவனேஸ்வரி’யாக அருள்வதாக ஐதீகம்.

ஹ்ரீம் பீஜத்தில் உறைபவள் இத்தேவி. ‘ஹ்ரீம் ஹ்ரீம்’ என்று  ஜபம் செய்பவர்களுக்கு மகாலட்சுமி மாலை போட்டு வளம் அருள்வாள் என்கிறது புவனேஸ்வரி கல்பம்.

புவனேஸ்வரி எனில் புவனங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரி என்று பொருள். ஈசனுக்கு கைலாசம்போல, திருமாலுக்கு வைகுண்டம்போல புவனேஸ்வரி தேவி, மணித்வீபம் எனும் அகில உலகங்களுக்கும் மேலான இடத்தில் வசிப்பவள்.

பூர்வாசிரமத்தில் சதாசிவபிரம்மேந்திரர் எனும் நீதிபதி, சாட்சிகளின் வாதம் காரணமாக தன் மன நிலைக்கு மாறாக தீர்ப்பு கூற நேரிடுமோ என அஞ்சி பதவியைத் துறந்து, அவதூதராக மாறி இத்தலத்தில் சித்தியடைந்தார்.

சதாசிவபிரம்மேந்திரரின் சீடர் சுயம்பிரகாச சுவாமிகள், புதுக்கோட்டையில் அவருக்கு அதிஷ்டானத்தை அமைத்து, ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் என்று அழைக்கப்படச் செய்தார்.

1921ம் வருடம் மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்த சுப்ரமண்யம், தவயோகி சாந்தானந்தரானார். அவரை ஜட்ஜ் சுவாமிகள், சுயம்பிரகாச சுவாமிகள் போன்ற குருவருளோடு, புவனேஸ்வரி தேவியின் திருவருளும் ஆட்கொண்டது. இத்தல பூரண மகாமேருவும் புவனேஸ்வரி தேவியும் சாந்தானந்தரால் பிரதிஷ்டை
செய்யப்பட்டவை.

புவனேஸ்வரி பஞ்சரத்தினம் என்ற துதியை பாராயணம் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பார்கள்.

புவனேஸ்வரி தேவி தசமகாவித்யா வடிவங்களுள் ஒருவளாக போற்றப்படுபவள். வட இந்தியாவில் உள்ள காமாக்யாவில் இத்தேவி பிண்ட வடிவமாக அருள்கிறாள்.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இந்த புவனேஸ்வரியே பதினான்கு புவனங்களையும் காக்கிறாள் எனக் கூறப்பட்டுள்ளது.

மூலக்கருவறையில் பாசம், அங்குசம், வரதம், அபயம் தரித்து வாயிலின் இருபுறங்களிலும் வாராஹியும், மாதங்கியும் துவார சக்திகளாகத் திகழ, நுழைவாயிலில் அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருக்க, சந்நதியின் முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் அன்னை அழகு தரிசனம் தருகிறாள்.

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம், சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சென்னை தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமம் மூன்றும் சாந்தானந்த சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு, பூஜை முறைகளும் ஒரே மாதிரி நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கதே.

புவனேஸ்வரி தேவிக்கு நேர் எதிரே அஷ்டதசபுஜ மகாலட்சுமி அருள்கிறாள். இந்த அன்னைக்கு மடிசார் புடவை அணிவித்திருப்பது விசேஷம்.

இத்தலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை உலக நன்மைக்காக யாகம் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் நிச்சயம் மழை பொழிவது இன்றும் இங்கே நிகழ்கிறது.

ஆலயத்தில் அர்ச்சனை எதுவும் செய்யப்படுவது கிடையாது. கற்பூர ஆரத்தி மட்டுமே. அதுவும் அதற்காகக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.

ஆலயத்தில் பஞ்சமுக அனுமன், தன்வந்திரி, சாஸ்தா, பக்தர்களே அபிஷேகம் செய்யும் லிங்கம், பொற்பனையான் ஆகிய மூர்த்திகள் அருள்கின்றனர்.

இத்தலத்தில் கிடைக்கும் புவனேஸ்வரி தசாங்கமும் குங்குமமும் கோயில் நிர்வாகத்தினராலேயே தயாரிக்கப்படுவதால் தரமானதாகக் கருதப்படுகிறது.

ஆலயத்தில் பன்னிரெண்டு அடி உயரத்திலும் பத்து திருக்கரங்களுடனும் பிரமாண்டமாகத் திகழும் ஹேரம்ப கணபதி வரப்பிரசாதியாக அருள்கிறார்.

புதுக்கோட்டை நகரின் மையத்தில் உள்ளது இந்த அற்புதக் கோயில்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • accident20

  அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

 • 20-02-2020

  20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்