SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒளிமிகு வாழ்வருள்வான் இருளப்பன்

2017-07-29@ 10:37:52

நம்ம ஊரு சாமிகள் - பரளச்சி, விருதுநகர்

வல்லாள கண்டன் என்ற அசுரன் தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்று சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவனின் தவத்தை கண்ட
சிவபெருமான், அவன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். யாராலும் எந்த ஆயுதத்தாலும் எனக்கு மரணம் நேரக்கூடாது என்று கூற, சிவன், அவ்வாறு யாரும் வாழ முடியாது என்று பதிலுரைக்க, அப்படியானால் வாழ்ந்து முடிந்த முதுமை பருவம் கொண்ட பெண்ணால் இரவு பொழுதில் எனக்கு மரணம் நேரலாம். அந்த பெண் பாதி உடல் மனித வடிவும், மீதி உடல் நாக வடிவும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினான். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்றார்.

பெண் தலையும், நாக உடலும் கொண்டு எங்கு யார் பிறந்திருப்பார்கள், பிறப்பார்கள், அப்படியே பிறந்திருந்தாலும் இம்மண்ணில் முதுமை பருவம் அடையும் வரை வாழமுடியுமா, எனவே எனக்கு மரணமே இல்லை என்று மார்தட்டிக் கொண்டான். மனைவி கண்டியிடம் பெருமை படக் கூறினான். இந்த ஆணவத்தால் வல்லாள கண்டன் தேவர்களை பலவாறு துன்புறுத்தினான். பெண்களை தனக்கு பணிவிடை செய்யக்கோரி அடிமைப்படுத்தினான். இதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்திற்கு வரும்போது, முன்னதாக ஐந்து தலையுடன் வந்த பிரம்ம தேவனை, சிவனென நினைத்து உமாதேவி மரியாதையுடன் வணங்கி நின்றாள். பின்னர் விழி திறந்து பார்த்தபோது எதிரே வந்தவர் பிரம்மன் என அறிந்து நாணம் கொண்டார்.

பிரம்மன் ஏளனமாக நகைத்தார். இதை அப்போது அங்கு வந்த சிவபெருமான் கண்டார். உடனே ‘‘தேவி, நாதன் யாரென தெரியாமலா நமஸ்கரித்தாய்’’ என்று வினவ, ‘‘சுவாமி, சிரம் ஐந்தானதால் சிந்தை நிறைந்த சிவன் என நினைத்தேன். மனையாள் அறியாது செய்ததை மனமிறங்கி மன்னித்தருள வேண்டும்
மகேஸ்வரா’’ என்று பதிலுரைத்தாள். அறியாது செய்தாலும் இப்பிழைக்கு தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என்றார், முக்கண்ணுடையான். மானிடப் பிறவி எடுக்க வேண்டும், அஷ்ட காளியாக நாகத்தின் பிள்ளைகளாக மானிட உருவத்தில் அவதரித்தாய், இப்பிறப்பில் சிரசுடன் கூடிய பாதி உடல் மனித பிறவி பெண்ணாக, மீதி கண்டம் நாக வடிவாக அவதரிக்க வேண்டும், மண்ணாலான புற்றில் பெண்ணான நீ வசிக்க வேண்டும், ஏழுலோக நினைப்பும் உனக்கு இருக்கும். என்னுள் உள்ள பாதி சக்தியும் உன்னிடம் இருக்கும். எனவே, ஆக்கும் அழிக்கும் வல்லமையும் உன்னிடம் உண்டு’’ என்று கூறினார்.

அதன்படி பிறப்பெடுத்தாள் தேவி. வல்லாள கண்டன் மனைவி தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ஆருடம் கணிப்பவரை அணுகுகிறாள். ஜோதிடர் நாக பூஜை, நாள் தவறாமல் செய்து வந்தால் மழலை வரம் உண்டு என்று கண்டியிடம் கூறினார். நாகத்தை எங்கே தேடுவது என்று யாரையும் நம்பாத கண்டி, மணாளனான அரக்க வம்ச மன்னன் வல்லாளனுக்கு தெரியாமல் ரதத்தில் வருகிறாள். சுற்றுமுற்றும் பார்த்தபடி வருகையில், ஓங்கி உயர்ந்து நின்ற புற்றை கண்டாள். அந்தப் புற்றை நாள்தோறும் வந்து வணங்கிச் சென்றாள். இதையறிந்த வல்லாளன் அந்தப் புற்றை இடித்துத் தள்ளுகிறான். அவனை பழிவாங்க, சக்தி முடிவெடுக்கிறாள். புற்று என்றால் அங்கு என்று பொருள். பாம்பு என்றால் காளம் என்று பொருள். புற்றில் இருந்த பாம்பு உடலுடன் கூடிய அம்மன் என்பதால் அங்கு+காளம்+அம்மன்
என்பதே அங்காளம்மன் என உருவாயிற்று.

அங்காளம்மன் முதுமை பருவம் கொண்ட பெண்ணாக வல்லாளன் இருப்பிடத்திற்குச் சென்று அவனது மனைவியான கண்டியிடம் வேப்பிலையும் மஞ்சளும் கலந்து உருண்டையை கொடுத்து இதை நீ உண்டால் உனக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கும். அந்தச் சிவனையும், சக்தியையும் மனதில் எண்ணிக்கொள் என்று கூற, உடனே கண்டி, சிவனைவிட என் மன்னவன் உயர்ந்தவன். சக்தியை விட நான் குறைந்தவள் அல்ல என்று ஏளனம் செய்தாள். மூதாட்டி நீ கொடுப்பதால் உண்கிறேன். பலிக்காமல் போனால் நீ பலியாவாய் மனதில் வைத்துக்கொள் என்று எச்சரித்த கண்டி அதை வாங்கி உண்டாள், குழந்தை உருவானது.நிறை மாதம் கொண்ட கண்டி, அமாவாசை தினத்தில் நள்ளிரவில் வயிற்று வலியால் துடிக்க, வல்லாள கண்டன் என்ன செய்வது என்று திகைத்தபோது அங்காளம்மன் வந்தாள்.

இருள் சூழ்ந்த நள்ளிரவு நேரம் வாரிசை எதிர்நோக்கி மனைவியின் பிரசவ வலி ஒரு புறம் இருக்க, வலுவிழந்த வல்லாளன், அங்காளம்மனை நோக்கி, கிழவி என்ன செய்கிறாய், விரைந்து செயல்படும்... என்றவாறு தனது உடை வாளை ஓங்கி எச்சரித்தான். முதுமை பெண்ணாய் நின்ற அங்காளம்மன், எரியும் விளக்கை குளிர வை. இருளில்தான் உனது வாரிசு பிறப்பான் என்று கூற, உடனே விளக்கை அணைத்தான் வல்லாள கண்டன். அப்போது அங்காளம்மன் குரல் கொடுத்தாள் இருளா வெளியே, என்று கூறிய மறுநிமிடம் கண்டியின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தான் இருளப்பன். கண்டி மாண்டாள். வல்லாளன் வாளை எடுத்து ஓங்க, ஆங்காரம் ரூபம் கொண்ட அங்காளம்மன் அவனை தன் கை விரல் நகங்களை நீட்டி வதம் செய்தாள்.

மண்ணில் விழுந்த வல்லாளன் உற்று நோக்கினான். அங்காளம்மன் இடுப்புக்கு கீழ் நாக உருவமும், இடுப்புக்கு மேல் பாகம் மானிட உருவமும் கொண்டு நின்றாள். வல்லாளனை வதம் செய்த அங்காளம்மன், இருளப்பனை அழைத்து வந்து காவலுக்கு வைத்தாள். பின்னர் இருளப்பனுக்கு அழிக்கும் வரம், ஆக்கும் வரம் கொடுத்து பொதிகை மலைக்கு தென் திசைக்கு அனுப்பி வைத்தாள். தென் திசை வந்த இருளப்பன் பொதிகை மலையில் காரையாரில் குடிகொண்டிருந்த சொரி முத்து அய்யனாரின் இருப்பிடம் தேடி வருகிறார். அங்கிருந்து கைக்கொண்ட அய்யனார் ஆலயம் வந்து பல்வேறு இடங்களில் நிலையம் கொண்டவர், சதுரகிரி மலையடிவாரத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து அருப்புக்கோட்டை கடந்து பரளச்சி கிராமத்திற்கு இருளாயி உடன் வந்து சேர்கிறார்.

ஊர் எல்லையில் சுந்தரவல்லி அம்மன், இருளப்பனை தடுத்து நிறுத்தி மகனே, எனக்கு காவலாய் நீ உன் துணையோடு அமர்ந்திரு. என்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளித்து காத்து நிப்பாய் என்று கூறி இடம் அளித்தார். சுந்தரவல்லியம்மன் ஆலயத்தில் வந்து வழிபட்ட பக்தர்கள் பலரிருக்க, அப்பகுதியைச் சேர்ந்த வெண்ணிமாலை என்பவரது தாத்தா ஒருநாள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கனவில் இருளப்பன் வந்து எனக்கு தனியாக கோயில் அமைத்து வழிபட்டு வா, உன்னையும் உன் சந்ததியினரையும் வாழ்வாங்கு வாழ வைப்பேன். அது மட்டுமன்றி என்னை நம்பி வணங்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரமளித்து காப்பேன் என்று கூறினார். அவர் அதன்படியே வெட்ட வெளி நிலத்தில் இருளப்பனுக்கும், இருளாயிக்கும் மண் பீடம் அமைத்து வணங்கி வந்தனர்.

அவரது வாரிசுகள் இடைக்காலத்தில் கோயில் கட்டினர். இருளப்பன் அவர்கள் கனவில் தோன்றி, ‘‘நான் மழையில் நனையனும், வெயிலில் காயனும். எனக்கு கூரையுடன் கோயில் வேண்டாம்’’ என்று கூற, கட்டப்பட்ட கோயில் அறையில் கணபதியை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதனருகே வெளிப்புறத்தில் இருளப்பனுக்கும், இருளாயிக்கும் கல் பீடம் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. உண்மையாக வழிபடும் அன்பர்களுக்கு துயரங்களான இருளை அகற்றி ஒளியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து காத்தருள்கிறார், வெள்ளக்குதிரை வாகனம்தான் கருமேனி கொண்டவனான இருளப்பன். இந்தக் கோயில் அருப்புக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தொலைவில் இருக்கும் பரளச்சி கிராமத்தில் அமைந்துள்ளது.

சு.இளம் கலைமாறன்,

படங்கள்: எம்.செல்லபாண்டியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்