SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெளிவான புத்தியுள்ளவன் அவமானப்பட்டால் ஆபத்து!

2017-07-17@ 17:40:09

மகாபாரதம் - 65

தருமர் கைகாட்டினார். அர்ஜுனனும், பீமனும் தாக்குதலை நிறுத்தினார்கள். இப்பொழுது சித்ரசேனன் தேரிலிருந்து கீழ் இறங்கி கை கூப்பியபடியே தருமரை நோக்கி வந்தான். ‘‘உங்கள் மீது கோபமில்லை. அதனால் எங்களால் ஜெயிக்க முடியவில்லை. கோபம் இருப்பினும் அர்ஜுனனை ஜெயிக்க யாராலும் முடியாது. எங்களுடைய பெண்களை பயமுறுத்தியதால், துன்புறுத்தியதால் நான் கௌரவர் பெண்களை பிடித்தேனே தவிர, எனக்கு அவர்கள் மீதும் எந்த வருத்தமும் இல்லை. கர்ணனை நம்பி  துரியோதனன் என்ற முட்டாள் செய்த காரியத்திற்கு இத்தனை கலவரம் ஏற்பட்டுவிட்டது. உங்களோடு சண்டை செய்ய நேரிட்டது. நீங்கள் தலையிடாவிட்டால் துரியோதனனை எங்கள் இடத்திற்கு அழைத்துப் போய் சிதைத்து கொன்றிருப்பேன். உங்கள் பிரச்னைகள் தீர்ந்து போயிருக்கும். எனினும் இவன் உங்கள் கையால் கொல்ல வேண்டும் என்று விதி இருப்பதால் நான் விடுவிக்கறேன்.

எங்களோடு போர் புரிய வேண்டாம்’’ என்று சொல்ல, அர்ஜுனனும், பீமனும் அந்த கந்தர்வ அரசனை நோக்கி வணங்கினார்கள். அந்த கந்தர்வப் படை அர்ஜுனனுடைய சூரத்தனத்தை சொல்லிக் கொண்டே அவர்கள் பெண்டிருடன் வானத்தில் ஏறி வடக்கு நோக்கி போயிற்று. தருமபுத்திரர், எப்படி ஜெயித்தேன் பார்த்தாயா என்று காண்பிக்கிற நியாயம். எங்களை உன்னால் ஜெயிக்க முடியுமாஎன்று எடுத்துகாட்ட வேண்டிய சமயம். ஆனால், எதுவும் தருமரால் சொல்லப்படவில்லை. கட்டுகளை விடுவித்து உனக்கு ஒன்றுமில்லை நீ போய் வா என்று ஒரு அந்நிய பாவத்தோடு அவனை அவன் இருப்பிடத்திற்கு அனுப்பினார். துரியோதனனும் அதற்கு மேல் நன்றி சொல்லத் தோன்றாதவனாய் வெகு விரைவாக தன் பக்கத்தில் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டான். தேரில் ஏறி பலமுறை தலையில் அடித்துக் கொண்டான்.

‘எவ்வளவு கேவலமாயிற்று. கர்ணன் காப்பாற்றுவான் என்று நினைத்தேன். கர்ணன் புறமுதுகு இட்டல்லவா ஓடிப் போனான். கர்ணனால் ஜெயிக்க முடியவில்லை. நானல்லவா உதை வாங்கினேன். அத்தனை பேரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டு கர்ணன் மட்டும் நகர்ந்து போனது எவ்வளவு அசிங்கமாக இருந்தது. கர்ணனுடைய சூரத்தனத்தை நம்பித்தான் நான் யுத்தத்தில் இறங்கினேன். ஆனால் அர்ஜுனனுக்கு முன்னால் கர்ணன் எதுவும் இல்லை என்று தெரிந்து போயிற்று’ என்று நொந்து கொண்டான். தனக்குள்ளேயே பேசிக் கொண்டான். அவன் முகபாவம் அவன் மனநிலையை எடுத்துக் காட்டியது. கர்ணன் அருகே வந்து உட்கார்ந்தான். துரியோதனன் முகம் திருப்பிக் கொண்டான்.

‘‘என் மீது கோபம் வேண்டாம். யுத்தம் வரும் என்று நான் இங்கு நினைக்கவில்லை. யுத்தத்திற்காக என்னை அழைத்துப் போகவில்லை. ஏதோ வேடிக்கை பார்த்துவிட்டு திரும்பிவிடுவோம் என்றுதான் சொன்னாய். நாம் ஒரு யுத்தத்திற்கு போக வேண்டுமென்றால் அதற்கான யுக்திகள் இருக்க வேண்டாமா. அதற்கான ஹோமங்களையும், யாகங்களையும், விரதங்களையும் கைகொள்ள வேண்டாமா. அதற்கான மந்திரங்களை நான் உச்சரிக்க வேண்டாமா. எந்தக் காப்பும் இன்றி என்னை திடீரென்று ஒரு யுத்தத்தில் ஈடுபடுத்திவிட்டு நான் காப்பாற்றவில்லை என்று கவலைப்பட்டால் என்ன செய்வது. என்னுடைய வீரத்தின் மீது உனக்கு எப்படி நம்பிக்கை இல்லாமல் போயிற்று. அர்ஜுனனும், பீமனும் எப்பொழுதும் யுத்தத்திற்கு தயாராக இருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சூரத்தனத்தை வெகு எளிதாக காட்டினார்கள். எனக்கு அப்படி சொல்லப்படவில்லை. தவறு உன்னுடையது. யுத்தம் நடக்கும் என்று நீ சொல்லியிருந்தால் நான் காபந்தோடு வந்திருப்பேன். பல அஸ்திரங்களோடு வந்திருப்பேன். கோபத்தைவிடு. மிகவும் சோர்ந்திருக்கிறாய். கொஞ்சம் உணவு எடுத்துக் கொள்’’ என்று வற்புறுத்தினான்.‘‘இல்லை. நான் பட்டினி கிடந்து சாகப் போகிறேன். இந்தத் தோல்வி என்னை அவமானமடையச் செய்துவிட்டது. நான் உன்னால் காப்பாற்றப்படவில்லை. என் எதிரி அர்ஜுனனால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன். என் மிகப்பெரிய எதிரியான பீமனுடைய ஆதரவால்  காப்பாற்றப்பட்டிருக்கிறேன். இது என்னை நோகடிக்கிறது. வேதனைச் செய்கிறது.

நான் அரசனாக இருக்க லாயக்கில்லையோ என்று தோன்றுகிறது. நான் எதற்கு உயிர்வாழ்வது. நான் உணவு எதுவும் உண்ணமாட்டேன். பட்டினி இருந்து சாகப் போகிறேன்’’ என்று உரத்த குரலில் சொல்ல, கர்ணன் பல்வேறு விதமாக தன்னுடை இயலாமையைச் சொன்னான். பலரும் அதை ஆமோதித்தார்கள். துரியோதனன் ஒருவாறு மனம் தேறினான். சோர்வோடு அஸ்தினாபுரம் நோக்கி பயணப்பட்டான். ஆனால், அவனுடைய மனம் தோற்றுப்போன உளைச்சலிலேயே இருந்தது. அர்ஜுனனுடைய சாகசங்கள் அவன் கண்முன்னே இருந்தன. கர்ணனால் தன்னை காப்பாற்ற முடியவில்லை என்ற வேதனையும் அவனை அரித்துக் கொண்டிருந்தது. அலங்கரித்து வந்திருந்த தன்னுடைய மனைவியர் முன்பு வெகு தீனமாக பஞ்ச பாண்டவர்களை நோக்கி அலறியது ஞாபகம் வந்தது.

‘இந்த துரியோதனன் என்கிற துராத்மா உனக்கு கெடுதல் செய்திருக்கிறானே அவனை விடுவிப்பதற்காக ஏன் வந்திருக்கிறாய் அர்ஜுனா என்று சித்ரசேனன் கேட்டதும், ஆயிரம் எங்களுக்குள் பகை இருந்தாலும் அவன் எங்கள் சகோதரன். அந்தப் பெண்கள் எங்கள் குலத்துப் பெண்கள். எங்கள் குலத்துப் பெண்களுக்கு இழுக்கு ஏற்படும்படியாகவும், எங்கள் சகோதரனுக்கு அவமானம் நேரும்படியாகவும் உள்ள ஒரு விஷயத்தை பார்த்துக் கொண்டு நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நீ என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறாய் துரியோதனனை’ என்று பதிலுக்கு சினேகமாய் கேட்க, சித்ரகுப்தன், ‘இந்திரனிடம் கொண்டுபோய் இவனை சமர்ப்பிக்கப் போகிறேன்’ என்று சொல்ல, அப்படி ஏதும் செய்ய வேண்டாம். அவனை விடுவித்துவிடு. உனக்கு நான் நண்பனாக இருக்கிறேன். நமது நட்பு தொடரட்டும்.

உனக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்கிறேன் என்று சமரசம் சொல்ல, அந்த கந்தர்வர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க, சித்ரசேனன் விடுவிக்க, அர்ஜுனனின் துணையோடு வெளியே வந்து தருமபுத்திரரை வணங்கி, அங்கிருந்து மனைவியரோடு தன் பக்கம் வந்து சேர்ந்ததை நினைக்க நினைக்க குமுறலாய்தான் இருந்தது. உபவாசம் இருந்து உயிர்துறக்கப் போவதாக துரியோதனன் திரும்பவும் சொன்னான். சகுனியும், கர்ணனும், துச்சாதனனும் கவலைப்பட்டார்கள். அவனைப் பலவிதமாக தேற்ற முயற்சி செய்தார்கள். ‘‘ஒரு தேசத்தில் குடிமகனுக்கு அவனுடைய அரசனுக்கு ஊழியம் செய்வதற்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. அது அவனுடைய கடமையும்கூட.

அப்படித்தான் இந்த தேசத்தில் ஒரு பகுதியான வனத்தில் வசிக்கின்ற பாண்டவர்கள் உனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் உனக்கு அடிமைப்பட்டவர்கள். அவர்களுடைய ரத்தினங்களையும், அவர்களுடைய ஆஸ்தியையும் நீ அனுபவிக்கிறாய். எனவே, உன்னுடைய ஊழியர்கள் உனக்குச் செய்த உதவிக்காக நீ எப்படி மனம் மறுகுவாய் என்று தெரியவில்லை’’ என்று கர்ணன் சொன்னான்.‘‘உங்களால் செய்ய முடியாததை அவன் செய்திருக்கிறானே என்பதை நினைக்கத்தான் எனக்கு ஆத்திரம் அதிகமாகிறது. துச்சாதனா, நீ இங்கே வா. நான் ராஜ்ஜியத்தை துறக்க நினைக்கிறேன். இந்த அரச பதவி எனக்கு வேண்டாம். இந்த அவமானத்தோடு என்னால் அரசனாக அஸ்தினாபுரத்தில் நுழைய முடியாது. நீ அரசாட்சியை ஏற்றுக் கொள். மன்னனாக மாறிவிடு.

குருவையும், மற்றவர்களையும் மதித்துப் போற்று. அற்புதமான தானியங்கள் விளையும் அந்த தேசத்தை சுபிட்சமாக ஆண்டு வா. நான் இங்கு அமைதியாக உயிர் துறக்க விரும்புகின்றேன்’’ என்று மரவுரி தரித்து, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உபவாசத்தில் ஆழ்ந்தான். துச்சாதனனுக்கு அழுகை பொங்கி வந்தது. தன் அண்ணனுடைய முடிவை நினைத்து வாய்விட்டு அலறினான். அவன் பாதங்களை பிடித்துக் கொண்டான். ‘‘எனக்கு அரச பதவி வேண்டாம். இன்னும் நூறு வருடங்கள் ஆனாலும், நீங்கள்தான் அரசன். உங்களைத் தவிர வேறு யாரும் அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்ய முடியாது. ஒருபொழுதும் நான் அங்கு மன்னனாக இருக்க மாட்டேன்.

நீங்கள் இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன். நீங்கள் தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு அங்கே வந்து விடுங்கள்’’ என்று கெஞ்சினான். அண்ணனும், தம்பியும் கட்டிக்கொண்டு அழுதார்கள். தெளிவான புத்தியுள்ளவன் அவமானப்படுகிறபோது அந்த அவமானம் மிகப் பெரிதாகி அவனையே கபளீகரம் செய்யும். புத்தியால் அவனால் எதிர்கொள்ள முடியாது. அவமானத்தை பிரித்து ஆராய முடியாது. சரியான விடை தேட இயலாது. எனவே, ஒரு அவலமான சூழ்நிலைதான் அங்கு உருவாயிற்று.

சகுனியும், கர்ணனும் கவலையடைந்தார்கள். எப்படித் தேற்றுவது என்று நினைத்தார்கள். அப்போது பாதாளத்தில் இருக்கின்ற தைத்யதானவர்கள் என்கிற பைசாசங்களைப் போன்றவர்கள் துரியோதனன் உபவாசம் இருந்து உயிர் துறந்தால் ஒருபொழுதும் சண்டை ஏற்படாது. போர் நடக்காது. போர் நடக்காவிட்டால் நமக்கு அதனால் பெரிய நஷ்டம் உண்டாகும். கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இறந்தால்தான் நமக்கு பலம் பெருகும். அந்தப் பலத்தை நாம் இழந்துவிடக் கூடாது. எனவே, போர் மூள்வதற்குண்டான யோசனையை நாம் செய்ய வேண்டும். துரியோதனனை உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்லி, அதர்வண வேதத்தில் சொல்லி யிருக்கின்ற மந்திரத்தைப் பிரயோகம் செய்து ஒரு ஏவல் பிசாசை உண்டுபண்ணி அந்த ஏவல் பிசாசை துரியோதனனை அங்கிருந்து எடுத்து வரும்படி ஏற்பாடு செய்தார்கள்.

பாதாள லோகத்தில் ஒரு நல்ல சபையில் துரியோதனன் உட்கார வைக்கப்பட்டான். ‘‘எதற்காக பயப்படுகிறீர்கள். நாங்களெல்லாம் பஞ்ச பாண்டவர்களை எதிர்க்கிறவர்கள். பழி வாங்க துடிப்பவர்கள். இறப்புக்குப் பிறகும் இன்னும் உயிரோடு இருந்து அவர்களை வெற்றி கொள்ளும் வெஞ்சினத்தோடு அலைகிறவர்கள். கிருஷ்ணனால் கொல்லப்பட்டவர்கள் பலபேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் கிருஷ்ணன் மீதும், அர்ஜுனன் மீதும் கோபம் கொண்டிருக்கிறார்கள். எனவே, உன் பக்கம் இவ்வளவு பெரிய பலத்தை வைத்துக் கொண்டு எதற்காக நீ தோற்றுவிடுவோமோ என்று எண்ணுகிறாய். ஒரு சிறிய நஷ்டத்திற்காக ஏன் பெரிதாக புலம்புகிறாய்’’ என்று தேற்ற ஆரம்பித்தார்கள்.

‘‘உன்னுடைய நாபிக்கு மேல் உடம்பு வஜ்ஜிரத்தால் ஆனது. கதையாலோ, அம்பாலோ, ஈட்டியாலோ அதைப் பிளக்க முடியாது. உன்னுடைய நாபிக்கு கீழே உள்ள உடம்பு  மலர்களால் ஆனது. அது பெண்களை கவர்வதற்கான உண்டான அம்சம். ஒரு திவ்ய புருஷனாக நீ பிரம்மனால் உருவாக்கப்பட்டிருக்கிறாய். இந்தப் போரில் நீ ஜெயிப்பது உறுதி. எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்று நினைக்கிறாயா. உன்னுடைய வீரர்கள் பலபேர் உடம்பில் நாங்கள் புகுந்து கொள்வோம். அவர்கள் சக்தியைவிட அதிகமான சக்தியை அவர்கள் போரின்போது பிரயோகம் செய்வார்கள். கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரனின் ஆன்மா கர்ணனுடைய உடம்பில் புகுந்து கொள்ளப் போகிறது. கர்ணன் மிக உக்கரமாக போர் செய்யப் போகிறான்.

அர்ஜுனனை அழிக்கப் போகிறான். இதற்காகவெல்லாம் நாங்கள் சபதம் செய்திருக்கிறோம். நீ மட்டுமே போர் செய்வதாக நினைக்காதே. உங்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம்’’ என்று பாதாளத்தில் வசிக்கின்ற அந்த தைத்யதானவர்கள் துரியோதனனுக்கு உற்சாக மூட்டினார்கள். அந்த ஏவல் பிசாசை மறுபடியும் கொண்டு போய் துரியோதனனை அவன் இடத்தில் விட்டு விடும்படியாகச் சொன்னார்கள். இவை அனைத்தும் கனவில் கண்டதாக துரியோதனன் எண்ணினான். மறுபடியும் யோசித்துப் பார்த்தான். எழுந்து நின்றான். உபவாசத்தை துறந்தான். நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். கர்ணன் தன்னுடைய அமானுஷ்ய சக்தியால் அர்ஜுனனை கொல்லுவான் என்ற நினைப்போடு அவன் தொடர்ந்து அஸ்தினாபுரம் நோக்கிப் பயணப்பட்டான். தோல்வியில் புலம்புகிறவனுக்கு மறுபடி வெற்றி பெறுவோம் என்று ஏதோ ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது.

சக மனிதர்களால் கிடைத்த நம்பிக்கை போதாது என்றால் சூட்சும ரூபமாகவும், ஆழ்மன சிந்தனையாகவும் இருக்கின்ற விஷயங்கள் அவனுக்கு உற்சாகம் கொடுப்பின் அதனால் அவன் மறுபடியும் போர்செய்ய, அவமானத்தை நீக்க இறங்கிவிடுவான் என்பது ஒரு உண்மை. அஸ்தினாபுரம் வந்ததும் துரியோதனனை பீஷ்மர் அழைத்தார். சகுனியுடனும், கர்ணனுடனும், துச்சாதனனுடனும் அவர் அரண்மனைக்கு துரியோதனன் போனான். ‘‘நடந்தது அனைத்தையும் கேள்விப்பட்டேன். பாண்டவர்களை உன்னை காப்பாற்றிக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டதே. உனக்கு ஏதேனும் புரிகிறதா. கர்ணனால் ஜெயிக்க முடியாத கந்தர்வர்களை வெகு எளிதில் அர்ஜுனனும், பீமனும் ஜெயித்து கொடுத்திருக்கிறார்களென்றால் கர்ணனுக்கு போதவில்லை என்றல்லவா அர்த்தம்.

என்னுடைய அபிப்ராயப்படி அர்ஜுனனுக்கு முன்னால் பதினாறில் ஒரு பங்குகூட கர்ணன் வலிவுடையவன் அல்ல. அவனால், அர்ஜுனனை ஜெயிக்க முடியாது. இவனை நம்பிக்கொண்டா யுத்தத்தில் இறங்குகிறாய். வெறும் வாய் பேச்சு. வெறும் தொடை தட்டல். பாண்டவர்களுடைய பங்கை அவர்களுக்குக் கொடுத்துவிடு. சமாதானம் செய்து கொள். அவர்களை அழைத்து வந்து மரியாதையாக அவர்கள் செல்வத்தையும், ராஜ்ஜியத்தையும் கொடுத்துவிடு. உன்னை இழிவுபடுத்தி குருகுலத்தையும் அவமானப்படுத்தாதே.

துர்புத்தி உள்ள சகுனியும், வெறும் திமிர் பேச்சு உடைய கர்ணனும் உன்னை தூண்டிவிடுகிறார்கள். நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவதற்கு உன் தம்பி துச்சாதனன் இருக்கிறான். இந்த மூன்று பேராலுமே நீ அழிந்து போகிறாய். உனக்கு எதிரிகள் எதிரே இல்லை. அவர்கள் பாண்டவர்கள் இல்லை. இவர்கள்தான் உன் எதிரிகள்’’ என்று சுட்டிக் காட்ட, அந்த இடத்திலிருந்து வெகுவேகமாக துரியோதனன் வெளியேறினான். தன்னை மதிக்காமல், தனக்கு பதில் சொல்லாமல் துரியோதனன் நகர்ந்து போனது பற்றி பீஷ்மர் வெட்கமடைந்தார். தவறான நபருக்கு, தவறான நேரத்தில் நல்ல உபதசேம் செய்தது மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்தார். பீஷ்மருடைய பேச்சால் கர்ணன் அதிகம் பாதிக்கப்பட்டான். அவனுக்கு துரியோதனன் முன்பு தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வேறு என்னவிதமான பதில் சொன்னாலும், சமாதானம் சொன்னாலும் துரியோதனன் ஏற்கமாட்டான். எனவே, செயல்திறனை மட்டும் காண்பித்து துரியோதனனை வசப்படுத்த வேண்டும் என்று பீஷ்மருடைய பேச்சால் அவன் தூண்டப்பட்டான். பீஷ்மருடைய பேச்சுக்கு எழுந்து வந்து சரி என்று நினைத்தாலும் அந்த இடத்தில் தன்னை ஆதரித்து பீஷ்மரிடம் துரியோதனன் பேசவில்லை என்பதும் வருத்தமாக இருந்தது. கர்ணன் அர்ஜுனனை கொல்லுவான் என்று அழுத்தம் திருத்தமாக பீஷ்மரிடம் சொல்லாதது வருத்தம் தந்தது. ‘‘துரியோதனா, நான் திக் விஜயம் செய்யப் போகிறேன். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திசைகளிலும் என் படைகளோடு வலம் வரப் போகிறேன். அங்குள்ள மன்னர்களை எதிர்த்து உனக்கு வரி கட்டும்படி நிர்ப்பந்திக்கப் போகிறேன்.

அங்கு கிடைத்த வரிகளோடு இங்கு வந்து உன் பொக்கிஷத்தை நிரப்பப் போகிறேன். பீஷ்மருடைய பேச்சு என் மனதை கொதிக்க வைத்துவிட்டது. எந்த பக்குவமும் இல்லாத அந்தக் கிழவர் நம்மை ஏளனம் செய்வதையே முக்கியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். பாண்டவர்கள் மட்டுமே, அவர்கள் நலம் மட்டுமே அவர் கண்ணுக்குத் தெரிகிறது. உன் சோறு தின்று கொண்டு உன் எதிரிக்கு துணையாகப் பேசுகின்ற அவரை நீ ஏன் இன்னும் எதிர்க்கவில்லை என்று புரியவில்லை. இப்போது உன் எதிரே ஒரு சபதம் செய்கிறேன் கேள். அர்ஜுனனை என் கையால் கொல்லப்படாதவரை நான் மற்றவரால் கால் கழுவப்படமாட்டேன். நீரிலிருந்து தோன்றிய பொருட்களை சாப்பிடமாட்டேன். மிகப் பெரிய விரதங்களை தரிக்கமாட்டேன். யார் எது கேட்டாலும் இல்லை என்று கூறமாட்டேன்’’ என்று தன் வில்மீது அடித்து சத்தியம் செய்தான்.

திருதராஷ்டிரப் புதல்வர்கள் இந்த மிகப் பயங்கரமான சபதம் கேட்டு பெரிய ஹுங்காரம் செய்தார்கள். துரியோதனன் எழுந்துபோய் தன் நண்பனை தழுவிக் கொண்டான். ‘‘போ. நீ நினைத்ததை செய். வெற்றியோடு திரும்பி வா’’ என்று தலை தடவி உச்சி முகர்ந்தான். மிகப் பெரிய படைகளோடு கர்ணன் திக்விஜயம் மேற்கொண்டான். நல்லநாளில் கர்ணன் தலைமையில் படைகள் நகர்ந்தன. துருபதனின் தேசத்தை சூழ்ந்து கொண்டு துருபதனை தன் வசப்படுத்தி தங்கம், வெள்ளி, பலவகை ரத்தினங்களை தனக்கு வரியாக அளிக்குமாறு செய்தான். வடதிசை சென்று பகதத்தனை வென்றான். பிறகு இமயத்தின் மீது ஏறினான். அங்கிருந்து எல்லா திசைகளுக்கும் சென்று எல்லா மன்னர்களையும் தன்வயப்படுத்திக் கொண்டான்.

நேபாள தேச மன்னனை வென்றான். பிறகு இமயத்தில் இறங்கி கிழக்கு திசை நோக்கி பயணப்பட்டான். அங்கதம், வங்கம், கலிங்கம், கண்டிகை, மிதிலா, மகதம், கர்ககண்டம் என்னும் தேசங்கள் அனைத்தையும் தன்னுடைய ராஜ்ஜியத்தோடு, வக்ஷீர யோக்ய அதிசத்திர தேசத்தையும் வென்றான். பிறகு வத்சல பூமியில் கால் வைத்தான். கேவலா, ம்ருத்யாதிகாபதி, மோஹன், பக்தன், திரிபுரா, கோசலா என்னும் தேசங்களை தன் அதிகாரங்களுக்குட்படுத்தினான். சகலரிடமிருந்தும் வரிகளை வசூலித்தான். தென்திசையை அடைந்த கர்ணன் ருக்மியோடு போர் புரிந்தான். பிறகு பாண்டிய தேசத்திற்கும், ஸ்ரீசைலத்திற்கும் புறப்பட்டான். கேரள மன்னன், நீல மன்னன் மற்றும் வேணுதாரி புதல்வனை தோற்டித்தான்.

தென்திசையிலிருந்த முக்கிய மன்னர்கள் அனைவரையும் வென்று வரி வசூலித்தான். அவந்தி தேச மன்னர்களையும், வ்ருஷ்னி வம்சத்து யாதவர்களிடமும் சண்டையிட்டு அவன் மேற்கு திசையை அடைந்தான். மேற்கு திசையில் யவனர்களையும், பர்பர மன்னர்களையும் தோற்கடித்தான். இவ்விதம் கிழக்கு, மேற்கு, வடக்கு என்று எல்லா திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டி, மிலேச்சர் வானவாசி, வனவாசி, மலை ஜாதியினர், பத்ரா, ஆத்ரேயர், மாலவர் முதலிய ராஜ்ஜியங்களையும் தோற்கடித்தான். மிகப்பெரிய பெருமிதத்துடன் அஸ்தினாபுரம் திரும்பினான். ‘‘துரோணாச்சாரியாராலோ, பீஷ்மராலோ, க்ருபராலோ கிடைக்காத ஐஸ்வர்யம் உன் மூலம் எனக்கு கிடைத்துவிட்டது.

இந்த ஐஸ்வர்யங்களை எனக்கு சினேகமாக இருக்கின்ற மன்னர்களுக்கும் பங்கு போடுவதின் மூலம் நான் மிகப் பெரிய கௌரவத்தை அடைவேன். அந்த கௌரவம் எனக்கு கர்வத்தை கொடுக்கும். எனக்கு சந்தோஷத்தையும், நிறைவையும், நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்கும். அபூர்வமான வஸ்திரங்களையும், தங்கக் குவியல்களையும் கொண்ட இந்த மன்னர்கள் எனக்கு வசப்பட்டு இருப்பார்கள்.  இதற்காக உனக்கு எப்படி நன்றி சொன்னாலும் தகும்’’ என்று துரியோதனன் கர்ணனிடம் சொல்லி சந்தோஷமடைந்தான். செல்வத்தினால் தானமும், போகமும் கிடைக்கும். இவை இரண்டையும் கர்ணனுடைய உதவியால் துரியோதனன் குறைவர அனுபவித்தான். துரியோதனன் அந்தணர்களை வரவழைத்து தன் பங்குக்கு தன் கர்வத்தை உயர்த்திக் கொள்ள என்ன செய்வதென்று ஆலோசித்தான். ராஜசுய யாகம் செய்ய வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தான்.

‘‘உங்களுடைய தமையனார் தருமபுத்திரர் உயிரோடு இருக்கும்போது ராஜசுய யாகம் நீங்கள் செய்ய இயலாது. ஒரு தேசத்தின் ஒரு வம்சத்தின் தலைவன்தான் இதைச் செய்ய முடியும். தலைவன் வேறு பக்கம் இருக்க, அடுத்தவர் ராஜசுய யாகம் செய்வதற்கு உரிமை இல்லை. எனவே, ராஜசுய யாகத்திற்கு இணையான வைஷ்ணவ யாகத்தை செய்யுங்கள் என்று சொல்லி, தங்கத்தால் ஏர்கலப்பை செய்யச் செய்து அந்த ஏர்கலப்பையை துரியோதனனை விட்டு யாகசாலையை உழச்செய்து, அந்த யாகசாலையை சீர்செய்து இடையறாது அன்னமும், விதவிதமான பானங்களும், அனைவருக்கும் வழங்கி, படை பலத்தையும், வில் திறமையையும், தன் மனோபலத்தையும் கர்ணன் வெளிப்படுத்த கடுமையான விரதங்கள் இருந்து, உயர்வான ஒரு யாகத்தை செய்வதின் மூலமும் அதற்குண்டான தான தர்மங்களை இடையறாது செய்வதின் மூலமும் கர்ணனும், துரியோதனனும் தன் புகழை நிலைநாட்டிக் கொண்டார்கள்.

பரஸ்பரம் பாராட்டிக் கொண்டார்கள். நடந்துபோன தோல்வியிலிருந்து மீட்க இந்த விஷயங்கள் அவர்களுக்கு பெரிதும் உதவின. கந்தர்வர்களிடம் தோற்றதை கெட்ட கனவென மறந்து போனார்கள். கர்ணன் செய்த சபதம் ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் காதுக்கு எட்டியது. யுதிஷ்டர் கவலையடைந்தார். மிகப் பெரிய வைஷ்ணவ யாகம் நடைபெற்றதையும், குறைவின்றி நடந்ததையும் கேள்வியுற்று மேலும் துயரடைந்தார். இரவில் கனவுகள் பலதும் வந்தன. ஒரு கனவில் மிருகங்கள் அவரை சூழ்ந்துகொண்டன. அவர் திடுக்கிட்டு விழித்திருக்க, எங்களை உங்கள் சகோதரர்கள் தொடர்ந்து கொல்கிறார்கள். எங்கள் வம்சம் அருகிக் கொண்டே வருகிறது. கடைசி நிலைக்கு வந்துவிட்டோம். தயவு செய்து இந்த இடத்தைவிட்டு போய்விடுங்கள். அப்பொழுதுதான் நாங்கள் பல்கி பெருக முடியும் என்று வேண்டி கேட்டுக் கொண்டனர். தைத்ய வனத்திலிருந்து தன் சகோதரர்களுடன் இந்த செய்தியை விவரித்துச் சொல்லி அவர் காம்ய வனத்திற்கு புறப்பட்டார்.

பாலகுமாரன்

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்