SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடைகள் விலகும்!

2017-07-13@ 15:50:59

என்னுடைய ஜாதகம் இணைத்துள்ளேன். எனக்கு திருமணம் தடைபடுகிறது. எனது ஜாதகத்தில் தோஷம் ஏதாவது இருக்கின்றதா? எப்பொழுது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?- கி.பாலாஜி, சென்னை.

தங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி குரு 3ல், ராகு, கேது 12-6ல் நீசம். 7ல் களத்திர ஸ்தானத்தில் சனி, களத்திரகாரகன், களத்திர ஸ்தானாதிபதி சனியின் வீட்டில். இவ்வமைப்பு ஜாதகத்திலுள்ள களத்திர தோஷத்தையும், திருமண விஷயத்தில் ஏற்படும் தடங்கல்களையும் தெளிவாகக் காட்டுகின்றது. மண்ணடி பகுதியில் தாங்கள் இருப்பதால் திருவொற்றியூரிலுள்ள பட்டினத்தார் சந்நதியில் வியாழக்கிழமைதோறும் இரண்டு நெய் தீபம் ஏற்றி வரவும். திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாண பெருமாள் கோயிலில், தங்களின் நட்சத்திரத்தன்று சென்று, தோஷ நிவர்த்தி செய்து கொள்ளவும்.

ஸர்வ காம துகே தேவி
ஸர்வ தீர்த்தாபிஷே சினி
பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே
தேவி துப்யம் நமோஸ்துதே


என்கிற மந்திரத்தைச் சொல்லி பசுவிற்கு தங்களால் இயன்ற உணவு அளித்துவர சகல தடைகளும் நீங்கி நல்ல இல்லற வாழ்வு அமையும்.

எனது மகள் மற்றும் மருமகன் ஜாதகம் இணைத்துள்ளேன். திருமணமாகி எழு வருடங்கள் ஆகின்றன. இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை இல்லை. எனது மகளை இங்கு எனது வீட்டில் கொண்டு வந்து விட்டு மூன்று மாதம் ஆகிறது. இன்னும் கூட்டிச் செல்லவில்லை. அவர்கள் இருவரும் மனமொத்து வாழ ஏதேனும் பரிகாரம் உள்ளதா? - தேவராஜ், டி. வாடிப்பட்டி.

தங்கள் மகள் மற்றும் மருமகன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் மகளுக்கு 2ல் ராகு, செவ்வாய் சேர்க்கை, கேது நீச்சம், களத்திர ஸ்தானாதிபதி 3ல், களத்திரகாரகன் சுக்கிரன் 6ல். மருமகனுக்கு 7ல் செவ்வாய், குரு, ராகு சேர்க்கை, ராகு பகை. ஜாதகப்படி இருவருமே விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். மருமகனின் ஜாதகப்படி மனம் அடிக்கடி சலனப்படவும், ஸ்திர தன்மை குறைந்தும் காணப்படுகிறது. மகளின் ஜாதகப்படி சந்தேகமும், கோபமும் இருக்கலாம். இருவருமே ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தும் சூழ்நிலையே நிலவுகிறது.

இவர்களுக்குள் பிரிவு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் மந்திர ராஜபத ஸ்தோத்திரத்தை தினமும் 16 முறை தங்கள் மகளை படித்துவரச் சொல்லுங்கள். தம்பதியாக திருப்பரங்குன்றம் சென்று தரிசித்து வருவது மிகவும் நல்லது. மேற்கொண்டு கருத்து வேறுபாடு ஏற்படாமல் முருகனின் அருட்துணை நிற்கும். கீழேயுள்ள ஸ்ரீஆதிலட்சுமி ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்துவர தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும்.

த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச சாபயாம்
வரதாந்விதாம்
புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன
சம்ஸ்த்திதாம்
புஷ்ப தோரண சம்யுக்தாம் ப்ரபா மண்டல
மண்டிதாம்
சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம்
பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு பந்தநாம்
ஸ்தநோந்நதி சமாயுக்தாம் பார்ச்மயோர்
தீபசக்திகாம்
செளந்தர்ய நிலையாம் சக்திம் ஆதிலட்சுமி மஹம் பஜே.


எனது மகனின் ஜாதக நகலை அனுப்பியுள்ளேன். படிப்பு பி.எஸ்சி. தற்சமயம் தனியார் நிறுவன வேலையில் உள்ளார். அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதா? வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்ய வாய்ப்பு உள்ளதா? உண்டு எனில் எப்பொழுது அமையும்? - ஆர்.எஸ்.பிரகாஷ், காஞ்சிபுரம்.

லக்னாதிபதி குரு 7ல் பகை, பாக்ய ஸ்தானாதிபதி சூரியன் 2ல் பகை. பதவி அமைப்பைச் சொல்லும் பத்தாமிடத்திற்கான அதிபதி புதன் லக்னத்தில் சனியுடன் சேர்ந்திருக்கிறார். அரசு வேலைக்கான வாய்ப்புகள் குறைவு. வெளிநாட்டு வேலையே கடந்த டிசம்பருக்குள் கிடைத்திருக்க வேண்டும். மீண்டும் அதற்கான வாய்ப்பு 2019 மே மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்புண்டு. வருகின்ற 2018 ஜனவரி வரை புதிய முயற்சிகள் எதையும் எடுக்க வேண்டாம். ஜனவரிக்குப் பிறகு உத்யோக மாறுதல் இருக்கும். வியாழக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு தீபமேற்றி வரச் சொல்லவும். கீழேயுள்ள அனுமனின் துதியை தினமும் பக்தியுடன் சொல்லிவர தடைகள் விலகி அற்புதமான வாழ்வு கிட்டும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்
தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.


எனது மகளுக்கு 28 வயது முடிவடைந்து விட்டது. இதுவரை வந்த எந்த ஜாதகமும் பொருந்தவில்லை. வருகின்ற ஜாதகமும் தோஷமுள்ளதாக வருகிறது. என் மகளின் ஜாதகம் தோஷமில்லாதது. பரிகாரங்கள் செய்துள்ளோம். எதனால் இத்தனை தாமதம்? எப்பொழுது திருமணம் நடக்கும்? - வைத்தியநாத பிரசாத், திருச்சி.

தங்கள் மகளின் ஜாதகப்படி 4 மற்றும் 7க்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதனும், களத்திரகாரகனான சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகியுள்ளது. இருந்தாலும் சுக்கிரன் உச்ச பலம் பெற்றுள்ளதால் விரைவில் திருமணம் நடக்கும். இவரது 22 வயதில் திருமணத்திற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. அது சரியாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று தோன்றுகிறது.

தோஷமில்லாத ஜாதகம் என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். பிறகு ஏன் பரிகாரம் செய்ய வேண்டும்? என்ன பரிகாரம் செய்தீர்கள்? என்ற விபரம் இல்லை. தங்கள் மகளின் ஜாதகப்படி வருகின்ற அக்டோபருக்கு பிறகு முயற்சி செய்யுங்கள். வியாழக்கிழமை தோறும் ஏதேனும் ஒரு ஜீவ சமாதி அல்லது குருவிற்கு தீபம் ஏற்றி வரச் சொல்லுங்கள். ஒருமுறை திருக்கோவிலூரிலுள்ள ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். கீழேயுள்ள நவபிருந்தாவன ஆச்சார்யார்களின் ஸ்லோகத்தை தினசரி படித்துவர சகல தடைகளும் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.

‘பத்மநாபம் ஜெயமுனீம் கவீந்த்ரம் சவாகீசம்
வ்யாஸராஜம் ஸ்ரீநிவாஸம் ராமதீர்த்தம் ததைவ ச
ஸ்ரீ ஸுதீந்த்ரம் ச கோவிந்தம்
நவ பிருந்தாவனம் பஜே


என் உறவினர், குடும்பத்தார் மற்றும் அவர்களுடைய இறப்பு விபரங்கள் அனுப்பியுள்ளேன். அதில் இளம் வயதிலேற்பட்ட இரு துர்மரணங்கள் பற்றிய விபரமும் அனுப்பியுள்ளேன். இதில் 4ம் தலைமுறை பேரனாகிய 14 வயது நிரம்பிய விஷ்ணுவர்த்தனின் எதிர்காலம் கவலையளிக்கிறது. அவனது ஆயுட்காலம் எப்படி இருக்கும் என்பதையும், ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும். - தங்கவேலு, திருப்பூர்.

ஐயா, தங்கள் கடிதம் மிகுந்த வருத்தத்தை தந்தது. தங்கள் உறவினர், குடும்பத்தாரின் துர்மரணங்கள் சில பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனை சரியான முறையில் கணிக்க விஷ்ணுவர்த்தனின் ஜாதகம் அவசியம். தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தேதி நட்சத்திரம் மட்டுமே உள்ளது. தயவு செய்து பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் மற்றும் குலதெய்வ விபரங்களுடன் அனுப்பினால் சரியாகக்கணித்துச் சொல்ல முடியும்.

என் மகனின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்தாலும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. எப்பொழுது அமையும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - பானுமதி, சென்னை.

லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்த கேது, 7ல் ராகு, களத்திரகாரகனாகிய சுக்கிரன் 7, 12க்கு அதிபதியாகி 4ல் சனியுடன் பரிவர்த்தனை. ஜாதகருக்கு சொந்தத்தில் அல்லது தெரிந்த, பழகிய இடத்தில் திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்சமயம் நேரம் சரியாக இருப்பதால் முயற்சி செய்தால் தைக்குள் திருமணம் முடிய வாய்ப்புண்டு. வைத்தீஸ்வரன் கோயில் அல்லது பழனியில் விஸ்வரூபத் தரிசனம் செய்வது மிகுந்த பலனை தரும். செவ்வாய்க்கிழமைதோறும் முருகனுக்கு தீபம் ஏற்றி வரவும். கீழேயுள்ள ஸ்ரீசுப்ரமண்ய ஸ்லோகத்தை தினசரி பாராயணம் செய்து வரச் சொல்லவும்.

ஸிந்தூராருணகாந்திமிந்து வதனம் கேயூர
ஹாராதிமி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்கஸ்ய
ஸெளக்யப்ரதம்
அம்போஜா பய சக்தி குக்குடதரம் ரக்தாங்கா
தாம் சுகம்
ஸுப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம்
பீதிப்ரணாசோத்யதம்.


எனது மகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். 17 வயதாகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்து வருகிறது. அதனால் நாளுக்குநாள் அவள் உடல்நிலை கவலைப்படும்படியாக உள்ளது. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகி, சென்னை.

தங்கள் மகளின் ஜாதகப்படி 21 வயதுவரை இத்தகைய மருத்துவ உதவி கட்டாயம் தேவைப்படும். தினமும் விநாயகர் அகவல் படித்துவரச் சொல்லவும். அல்லது தாங்கள் அருகில் அமர்ந்து படிக்கவும். ஒவ்வொரு மாதமும் அவரது நட்சத்திரத்தன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்து வரவும். சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் ஆஸ்ரமத்திற்கு முடிந்தவரை அழைத்துச் செல்லவும். கவலைப்பட வேண்டாம். கீழேயுள்ள ஷண்முக கவசத்தை தினமும் படித்துவர சொல்லுங்கள். விரைவில் பூரண நலம் பெறுவார்.

அண்டமாய் அவனியாகி அறியொணாப்
பொருளது ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு
தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
திண்திறல் சரவணத்தான் தினமும் என்
சிரசைக் காக்க.


எனது மகன் ஜாதகம் இணைத்துள்ளேன். எந்த படிப்பு அவருக்கு ஏற்றதாக இருக்கும்? இன்ஜினியரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் அல்லது சிவில், எது சரியாக இருக்கும்? - வடிவேல், திருப்பூர்.

தங்கள் மகனின் ஜாதகப்படி செவ்வாய் உச்சமாக இருப்பதால் சிவில் இன்ஜினியரிங் நல்ல தேர்வாக அமையும்.

எனது மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும்? - பட்டாபிராமன், விழுப்புரம்.

தங்கள் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதி சூரியன் 9ல் பாக்ய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால்  கண்டிப்பாக அரசு வேலை உண்டு. வருகின்ற 2018 மே மாதத்திற்குப் பிறகு கண்டிப்பாக கிடைக்கும். பரிகாரம் தேவையில்லை.

ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் தி.ஸ்ரீனிவாசராமன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்