SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிந்தவர் ஒன்றிணைவர்!

2017-07-11@ 15:24:44

என் மகளுக்கு 2011ம் ஆண்டில் திருமணம் ஆனது.2015ல் அவளின் கணவர் இறந்துவிட்டார்.3 வயது ஆண் குழந்தைக்கு தாயானஅவளுக்கு மறுமணம் செய்து வைக்க நல்லதொரு வழி சொல்லுங்கள். லட்சுமி, தூத்துக்குடி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது குருதசையில் செவ்வாய் புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் ஏழாம் இடத்திற்கு அதிபதி புதன்ஆறாம் பாவத்தில் சூரியனோடு இணைந்து அஸ்தமனத்தில் சஞ்சரிப்பது பலவீனமான அம்சம் ஆகும். அவருடைய ஜாதகப்படி 25.07.2017க்குப் பிறகு இடமாற்றத்திற்கான வாய்ப்பு உண்டு. ஆசிரியப் பயிற்சி முடித்துள்ள அவருக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 19.12.2019க்குள் அவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்துவிடும்.

அவருடைய ஜாதகப்படி மறுமணம் செய்து வைத்தாலும் மணவாழ்வு என்பது அத்தனை சிறப்பாக இல்லை. மறுமண வாழ்வை எண்ணுவதைவிட மகனின் நல்வாழ்வினில் கவனம் செலுத்தச் சொல்லுங்கள். உள்ளூரில் இருப்பதைவிட வெளியூரில் பணியாற்றுவது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. அரசுப் பள்ளியில் பணி கிடைக்க வேண்டி பிரதி வியாழன்தோறும் நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்குவதும் நல்லது.

“தேவானாஞ்ச ரிஷினாஞ்ச குரும் காஞ்சன
சந்நிபம்
பக்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ரு
ஹஸ்பதிம்.”


நாற்பத்தாறு வயதாகும் எனக்கு 36வது வயதில் திருமணம் நடைபெற்று மணவாழ்வு சரியாக அமையவில்லை. தாம்பத்ய வாழ்விற்கு ஒத்துவராத என் மனைவி அவரது வீட்டிற்குச் சென்று விட்டார். விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் என்னை விரும்பும் வேற்று இன பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ள எண்ணுகிறேன். உரிய பரிகாரம் சொல்லவும். ஜெயஅரவிந்தன், நாகர்கோவில்.

உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் நீசம் பெற்ற சனி அமர்ந்திருப்பதால் மண வாழ்வினில் சிரமத்தினை சந்தித்து வருகிறீர்கள். 21.3.2018 வரை நேரம் சரியில்லாத காரணத்தால் அதுவரை பொறுமை காத்து வருவது நல்லது. இந்த எட்டுமாத காலத்திற்குள் விவாகரத்து பிரச்னை முடிவிற்கு வருவதோடு உங்கள் உடல்நிலையும் சீரடையும். காது கேட்கும் திறன் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நல்ல மருத்துவரிடம் காண்பித்து அதற்குரிய இயந்திரத்தைப் பொறுத்திக் கொள்ளுங்கள்.

உடல்நிலையும், மனநிலையும் மிகவும் முக்கியமானது என்பதால் இதில் கௌரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற சித்திரை மாதம் உங்களை மனதாற விரும்பும் வேற்று இன பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அருகிலுள்ள அம்மனின் ஆலயத்தில் கீழ்காணும் ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். அம்மனின் அருளால் ஆனந்த வாழ்வினை அடைவீர்கள்.

“ஸச்சிதானந்த ரூபிண்யை ஸம்ஸார அரண்
யாயை நமஹ
பஞ்ச க்ருத்ய விதாத்ர்யை ச மஹாம்பிகாயை
நமோ நமஹ”


கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நல்ல நிறுவனத்தில் உதவி மேலாளராக  பணி புரிந்து வந்த நான் ஏதோ சில காரணங்களால் வெளியேற்றப்பட்டேன். அன்றிலிருந்து இன்று வரை வேறு எந்த உத்யோகமும் அமையவில்லை. எனக்கு நல்ல உத்யோகம் அமைய உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். ராஜா, சேலம்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. 10.8.2017 முதல் நல்ல நேரம் துவங்குவதால் நல்ல நிறுவனத்தில் உத்யோகம் கிடைத்துவிடும். எனினும் இன்னும் இரண்டு வருடம் கழித்து தொழில்முறையில் மீண்டும் ஒரு இடமாற்றம் உண்டாகும். அதன் பிறகு உங்கள் வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்லும். உங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய்  ராகு இணைந்து ஆறாம் பாவத்தில் அமர்ந்திருப்பது வாழ்க்கையில் அவ்வப்போது போராட்டத்தைத் தந்து கொண்டிருக்கிறது.

சேலம், சீலைநாயக்கன்பட்டியை அடுத்த ஊற்றுமலையில் அமைந்துள்ள சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் செவ்வாய்க் கிழமை நாளில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். அங்குள்ள குகையில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தை தரிசித்து மலையிலேயே அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். அலைபாயும் மனம் அமைதி அடைவதோடு வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகளுக்கு தெளிவான தீர்வினைக் காண்பீர்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சுப்ரமணியரை வணங்கிவர வாழ்வினில் முன்னேற்றம் காண்பீர்கள்.

“மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹதேவபாலம் பஜே லோகபாலம்.”


முப்பத்தியிரண்டு வயதாகும் என் மகன் கடந்த இரண்டு வருடங்களாக எங்களுடன் இல்லை. எம்.ஈ., படித்துள்ள அவன் எங்களை வந்தடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? குணசேகரன், வாழப்பாடி.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி 10.12.2017க்குப் பின், அவர் உங்களோடு வந்து இணைவார். அதுவரை பொறுத்திருங்கள். அதுநாள் வரை அவர் தனது வாழ்நாளில் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான படிப்பினையைத் தந்து கொண்டிருக்கும். அனுபவத்தின் மூலமாக அவர் அறிந்து கொள்ளும் பாடங்கள் எதிர்கால நல்வாழ்விற்கு பேருதவியாய் அமையும். 10ம் இடமாகிய தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் வலிமையுடன் அமர்ந்திருப்பதால் அவரது உத்யோகம் குறித்த கவலையை விடுங்கள். 2018ம் ஆண்டின் துவக்கத்திலேயேஅவரது உத்யோகம் ஸ்திரப்பட்டு விடும்.

திருமண வாழ்வு என்பது அவரது மனதிற்குப் பிடித்த பெண்ணோடுதான் அமையும் என்பதால் அவரது விருப்பத்தினை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஊருக்கு அருகில் அமைந்துள்ள வட சென்னிமலை ஆலயத்திற்கு பௌர்ணமி நாளில் கால்நடையாக படியேறிச் சென்று முருகப் பெருமானை வழிபடுங்கள். மகன் உங்களோடு வந்து இணைந்ததும் குடும்பத்தினருடன் பால் காவடி எடுத்து வந்து சென்னிமலையானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். ஆண்டவனின் அருளால் வெகுவிரைவில் உங்கள் மகன் உங்களோடு வந்து இணைவார். கவலை வேண்டாம்.

நானும், எனது மனைவியும் கடந்த 15 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம்.நீதிமன்றம் மூலம் விவாகரத்து ஆகிவிட்டாலும் எனது மகனின் எதிர்காலம் கருதி நானும், என் மனைவியும் மறுமணம் செய்து கொள்ளவில்லை. எங்கள் குடும்பம் ஒன்று சேர வழியுண்டா? மிகுந்த மனை உளைச்சலில் இருக்கும் எனக்கு தக்க வழிகாட்டுங்கள். பழனிவேல், வலசை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. கடந்த ஒருவருட காலமாக மனைவி, மகனுடன் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. தாமதம் செய்யாமல் உடனடியாக அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். எவருடைய துணையும் இன்றி உங்கள் மனைவியை நேரடியாக சந்தித்துப் பேசுங்கள். ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் உங்கள் மனைவி வசிக்கும் பகுதியிலுள்ள சிவாலயத்தில் உங்கள் சந்திப்பு அமையட்டும்.

இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள். நீங்கள் இருவரும் சந்தித்துப் பேசும்போது உங்கள் பிள்ளையும் உடன் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தேகத்தால் உண்டான சச்சரவால் பிரிந்த உங்கள் உள்ளங்கள் தெய்வத்தின் சந்நதியில் ஒன்றிணையட்டும். சட்டத்தின் மூலமாக நீங்கள் பெற்ற இடைவெளி சம்சார பந்தத்தில் காணாமல் போகும். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் பரமேஸ்வரனை வணங்கி வாருங்கள். பிரிந்தவர்கள் விரைவில் ஒன்றிணைவீர்கள்.

“யக்ஷராஜபந்தவேதயாலவே நம:சிவாய
தக்ஷபாணி சோபி காஞ்சனாலவே நம:சிவாய
பக்ஷிராஜவாஹ ஹ்ருச் சயாலவே நம:சிவாய
அக்ஷிபால வேதபூததாலவே நம:சிவாய.”


என் மகளுக்குத் திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அவளது கணவன் அவளை விட்டுப் பிரிந்து வேறு வீட்டில் வாழ்கிறார். அவளுடன் பேசுவதில்லை. விவாகரத்து செய்யப் போவதாகக் கூறுகிறார். அவர்கள் ஒன்றிணைய நல்ல பரிகாரம் சொல்லுங்கள். லக்ஷ்மி, கோவை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்துள்ள உங்கள் மகளுக்கு அஷ்டமத்துச் சனியும், பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்துள்ள உங்கள் மருமகனுக்கு ஏழரைச் சனியும் பாடாய்ப்படுத்தி வருகிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் சரியில்லாத நிலையில் பிரிவினை உண்டாகி உள்ளது. இது தற்காலிகமான பிரிவுதானே அன்றி நிரந்தரமானது அல்ல. உங்கள் மருமகனுக்கு தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருவதால் அவர் தெளிவான மனநிலையில் இல்லை. 19.02.2018 முதல் நேரம் மாறுவதால் தன்னுடைய தவறினை உணர்ந்து மனம் திருந்தி வருவார்.

அதற்குள் அவரிடமிருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் வந்தாலும் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் ஒன்றிணைந்து வாழவே விரும்புவதாக உங்கள் மகளை பதில் அனுப்பச் சொல்லுங்கள். வருகின்ற சித்திரை மாத வாக்கில் உங்கள் மகளின் குடும்பம் ஒன்றிணைந்து விடும். கவலை வேண்டாம். தீபாவளியை ஒட்டி வரும் கேதார கௌரீவிரதத்தை முறையாக அனுஷ்டித்து சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுத்து உங்கள் மகளை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். பரமேஸ்வரனின் அருளால் பிரிந்தவர் ஒன்றிணைவர்.

எங்கள் ஊரில் குலதெய்வத்தை அபூர்வமாகத்தான் கொண்டாடுவார்கள். 66 வயதாகும் எனக்கு நினைவு தெரிந்து எங்களுக்கு குலதெய்வ வழிபாடு என்பது இல்லை. என் மனைவியும், மருமகளும் குடும்ப முன்னேற்றத்திற்காக பூசாரியிடம் குறிகேட்ட போது குலதெய்வத்தை வணங்க வேண்டும் என்று பதில் கிடைத்தது. எங்கள் குலதெய்வத்தினை அறிந்து கொள்ள வழி சொல்லுங்கள். வேல்முருகன், பாலக்காடு.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தினையும், உங்கள் குடும்பத்தினரின் ஜாதகத்தினையும் ஆராய்ந்ததில் மலைமீது அமர்ந்திருக்கும் ஆயுதம் தாங்கிய ஆண்தெய்வமே உங்கள் குலதெய்வமாகக் காட்சியளிக்கிறது. உங்களது பூர்வீகம், அதாவது முன்னோர்கள் வாழ்ந்த பகுதியில் இவ்வாறு அமைந்துள்ள ஆலயத்தினை தேடிச் செல்லுங்கள். அந்த ஆலயத்தில் அம்பு போடுதல் அல்லது வேல் எறிதல் போன்ற திருவிழா பிரபலமான முறையில் நடைபெறுகிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு இருப்பின் அதுவே உங்கள் குலதெய்வம்.

ஒரு கையில் வில் அம்புடனும், மற்றொரு கையில் வேல்கம்புடனும் காட்சியளிக்கும் பதினெட்டாம்படி கருப்பண்ண ஸ்வாமி போன்ற காவல்தெய்வமே உங்கள் குடும்பத்தின் வழிபாட்டிற்குரிய குலதெய்வம். குலதெய்வத்தை விரைவில் கண்ணில் காட்டுமாறு உங்கள் இஷ்ட தெய்வமான பழனி ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குலதெய்வத்தை அறிந்துகொண்ட உடன் தாமதிக்காமல் உடனடியாகச் சென்று வணங்க வேண்டும். மலை சூழ்ந்த பகுதியில் வாசம் செய்யும் உங்கள் குலதெய்வத்தினை விரைவில் அடையாளம் காண்பீர்கள். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2018

  26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X