SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முயற்சியை வெற்றியாக்கும் மூன்று யுகம் கண்ட அம்மன்

2017-07-08@ 10:09:31

நம்ம ஊரு சாமிகள் - வள்ளியூர், நெல்லை

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் மூன்று யுகம் கண்ட அம்மன் வீற்றிருக்கிறாள். இந்த அம்மனை நினைத்து முயற்சி செய்யும் காரியங்களை அம்மனே  வெற்றியாக்கி தருகிறாள். காஞ்சிபுரத்தை ஆண்டு வந்த மன்னன் பாண்டியராஜாவுக்கும் அவரது மனைவி மாலையம்மாளுக்கும் பிள்ளை இல்லையே என்ற ஏக்கம்  இருந்தது. ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கு செல்கின்றனர். அங்கு நம்பூதிரி ஒருவர் மாலையம்மாள் கையைப்  பார்த்து அடுத்து வரும் ஆவணி முதல் உனக்கு ஐந்து ஆண் குழந்தைகள் ஆண்டுக்கு ஒன்றாய் தொடர்ந்து பிறக்கும் என்று கூறி வாழ்த்தி அனுப்பினார்.
அதன்படி முப்பத்தியோரு வயதில் மாலையம்மாள் முதல் குழந்தை பெற்றெடுத்தாள். மொத்தம் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தன. குலசேகரப் பாண்டியன், கூன்  பாண்டியன், பொன்பாண்டியன், சேகரப் பாண்டியன், சேர்மப் பாண்டியன் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

இவர்களே ஐவர் ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டவர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆரூடம் கணிக்க, திருவண்ணாமலையிலிருந்து ஜோதிடரை  வரவழைத்தனர். அவர் வந்து பார்த்து மூத்தவன் குலசேகரப்பாண்டியனுக்கு பெண்ணொருத்தியால் தோஷம் உள்ளது. தோஷம் நிவர்த்தியாக, குமரியாக சக்தி  வீற்றிருக்கும் கன்னியாகுமரி சென்று கடலில் நீராடி, தான தர்மங்கள் செய்து வந்தால், கோட்டை கட்டி வாழலாம் என்று கூறினார். பரிகாரத்திற்காக  குலசேகரப்பாண்டியன் தென்திசை நோக்கி பயணிக்க தயாரானார். அண்ணன் பிரிவை தாங்க முடியாதவர்கள் தாங்களும் உடன் வருவதாக கூற, ஐந்து பேரும்  சேர்ந்தே புறப்பட்டனர். அவர்கள் வாலிபர்கள், ஆகவே அவர்களை வழி நடத்தி அழைத்துச் சென்று வருமாறு மந்திரி இருவர் மற்றும் சிறு படைகளையும் உடன்  அனுப்பி வைத்தார் மன்னன் பாண்டிய ராஜா.

குமரி வந்து தீர்த்தமாடி தானதருமங்கள் செய்துவிட்டு அங்கிருந்து படை பரிவாரங்களுடன் காஞ்சிக்கு திரும்புகின்றனர். நெல்லை சீமைக்கு முன்பு தற்போதைய  பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் ஊரில் (அப்போது காடாக இருந்தது) தங்கி இளைப்பாறுகிறார்கள். மன்னன் இன்று இரவு இங்கே தங்குவோம் என்று  கூறுகிறான். உடனே உற்சாகம் அடைந்தனர். படைவீரர்கள் மன்னனின் உத்தரவு பெற்று படைவீரர்களில் சிலர் நாய்களுடன் முயல் வேட்டைக்கு சென்றனர். நல்ல  பருவம் வந்த எட்டு முயல்கள் அவ்வழி வந்தன. அதைக்கண்டு நாய்கள் துரத்தின. பின்னால் வீரர்களும் சென்றனர். வள்ளியூர் அருகே ஊர் எல்லையில் ஓங்கி  உயர்ந்த புற்று இருந்தது. அந்த புற்று அருகே சென்றதும் ஓடின முயல்கள் நின்றன. திடீரென ஒருவித வேகம் கொண்டு, சத்தம் எழுப்பியபடி திரும்பி நாயைத்  துரத்தின. வியப்புற்று ஓடிவந்த வீரர்கள், மன்னனிடம் நடந்ததை கூற, குலசேகரப் பாண்டியன் அவ்விடம் சென்று பார்த்தான்.

அப்போது அந்தப் புற்றில் அம்மன் முகம் தெரிந்தது. வியந்து, வணங்கி நின்றான் மன்னன். அப்போது அசரீரி கேட்டது. ‘‘மன்னவனே, குலசேகரப் பாண்டியனே,  நான் ஆதி சக்தி, வையகம் தோன்றியது முதல் இவ்விடம் உள்ளேன். நான்காவது யுகத்தில் என்னை நீ கண்டு இருக்கிறாய். எனக்கு இவ்விடத்தில் கோயில் கட்டி  என்னை வணங்கி வா. நீயும் இப்பகுதியிலே கோட்டை கட்டி ஆட்சி செய். உன்னை நான் மேம்படுத்துவேன் என்று கூறியது. நடந்ததை ஓலையாக ஒற்றர் மூலம்  பெற்றோருக்கு அனுப்பினான் குலசேகரப் பாண்டியன். பெற்றோர் ஆசியுடன் அம்மன் கூறியபடி கோயிலை கட்டினான். அம்பாளுக்கு மூன்று யுகம் கண்ட அம்மன்  என்று பெயரிட்டு வணங்கி வந்தனர். அவ்விடம் கோட்டைகட்டி ஆட்சி புரிந்தனர்.

கோயிலில் மூலவரான அம்மன் இடது காலை மடித்து வைத்து, வலது காலை தொங்கவிட்டு, நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள்.  சிவனும் சக்தியும் ஜெயந்தீஸ்வரர், சௌந்தர்ய நாயகி எனும் பெயரில் அருள்புரிகின்றனர். சிவன் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். சௌந்தர்யநாயகி நின்ற  கோலத்தில் அருள்புரிகிறார். விநாயகர், சுப்ரமணியர், பைரவர் பரிவார தெய்வங்களாக வீற்றிருக்கின்றனர். இக்கோயில் வள்ளியூர் பேருந்து நிலையத்திலிருந்து  சுமார் 1 கி.மீ தூரத்தில் கிழக்கே சித்தூர் செல்லும் சாலையில் உள்ளது.

சு.இளம் கலைமாறன் படங்கள்: வள்ளியூர் ந.கண்ணன்

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்