SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனித் திருமஞ்சனம் சிறப்பாகக் கருதப்படுவது ஏன்?

2017-07-07@ 15:16:12

நடராஜப்பெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாள் எத்தனை சிறப்பு வாய்ந்ததோ, அதற்கு இணையானது இந்த ஆனித்திருமஞ்சனத் திருநாள். தேவர்களின் இரவுப்பொழுது என்று கருதப்படும் தட்சிணாயணத்தின் கடைசி மாதமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளிலும், பகல்பொழுது என்று கருதப்படும் உத்தராயணத்தின் கடைசி மாதமான ஆனியில் வரும் உத்திர நட்சத்திர நாளிலும் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

வருடத்தில் மொத்தம் ஆறு நாட்கள் நடராஜப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் என்றாலும் இவ்விரு நாட்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அண்ட வெளியை ஆய்வு செய்கின்ற அமெரிக்க விஞ்ஞானிகளும்கூட அம்பலத்தில் ஆடுகின்ற ஆடலரசனை, நடராஜப்பெருமானை, ஆகாய அறிவியலின் ஆண்டவனாக ஏற்றுக்கொள்கின்றனர்.

நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம் என்பதில் இருந்து ஆகாய அறிவியலை ஆள்பவன் ஆடல்வல்லான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை பிரம்மோற்சவம் நடக்கும்.  மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆருத்ரா தரிசனப் பெருவிழாவும், ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆனித் திருமஞ்சனத் திருவிழாவும் நடைபெறும். இவ்விரு நாட்களிலும் நடராஜப்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஆடிக்கொண்டே கனகசபைக்குள் எழுந்தருளும் தரிசனக் காட்சியினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பர்.

ஆனித்திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது கன்னி ராசியில், சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகள். கல்விக்கு அதிபதி புதன். அதிலும் வானவியல் அறிவினைத் தருவது புதன். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறைய பேர் வருவதை நாம் இன்றும் காண முடியும். ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும்.

இதன் காரணமாகவே சென்னையில் அமைந்துள்ள பிர்லா கோளரங்கம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள ஆலங்காயம் உள்பட அனைத்து வானவியல் ஆய்வு மையங்களிலும் இந்த ஆனி மாதத்தில் ஆராய்ச்சியாளர்கள் உற்சாகமாக செயல்படுவார்கள். பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தையும், மேலோட்டமாக அணுகாமல், அதனை ஆழ்ந்து ஆராயும் பக்குவத்தைத் தருபவர் புதன். அதனால்தான் அவரது ஆட்சியினைப் பெற்ற மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றிருப்பர். ஆக அவரது ராசிகளில் ஆன்மகாரகனாகிய சூரியனும், மனோகாரகனாகிய சந்திரனும் சஞ்சரிக்கும் இந்த ஆனித் திருமஞ்சன நாள் வானவியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.

திருவாதிரை நாளில் சந்திரன் மிதுனத்திலும், உத்திர நட்சத்திர நாளில் சந்திரன் கன்னியிலும் சஞ்சரிப்பார். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளும் புதன் கிரகத்தின் சொந்த ராசிகள் ஆகும். ஆனித்திருமஞ்சனத் திருநாளும், மார்கழி திருவாதிரைத் திருநாளும் வானவியல் சாஸ்திரத்தின்படி அந்த வருடத்தின் தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கின்ற நாட்கள். தென்மேற்குப் பருவமழையின் அளவினை ஆனித் திருமஞ்சன நாளிலும், வடகிழக்குப் பருவ மழையின் அளவினை மார்கழி திருவாதிரை நாளிலும் கணக்கிடுவார்கள்.

இவ்வாறு ஒரு வருடத்தின் தட்பவெப்பநிலையை நிர்ணயிக்கின்ற நாள் என்பதால் ஆனித் திருமஞ்சனத் திருநாள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அந்த நன்னாளில் சிதம்பரம் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும் நடராஜப் பெருமானின் அபிஷேக ஆராதனைகளை கண்டுகளிப்பதோடு, எல்லோரும் ஒருமித்த மனதோடு பிரார்த்தனை செய்தால் சரியான அளவில் மழைபொழிந்து நீர்நிலைகள் நிரம்பும், விவசாயமும் தழைக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றவுடன் ஒதுக்குகிறார்களே, அப்படியென்றால் மூலத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் எப்படி நடக்கும்?
- விஜயா இராமலிங்கம், விழுப்புரம்.

உங்கள் ஆதங்கம் நியாயமானதே. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனாருக்கு ஆகாது என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. அதற்கான ஆதாரம் எந்தவொரு ஜோதிட நூலிலும் காணப்படவில்லை. இதில் ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று மற்றொரு சொற்றொடரைச் சொல்லி ஆண்களை மட்டும் இந்தப் பழியிலிருந்து காப்பாற்றியிருப்பார்கள்.

இந்த சொற்றொடருக்கான பொருளே வேறு. அது உண்மையில் ஆனி மூலம் அரசாளும், பெண் (கன்னி) மூலம் நிர்மூலம் என்பதே ஆகும். அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும். பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரசயோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி.

அதனால்தான் ஆனிமூலம் அரசாளும் என்ற பழமொழி தோன்றியது. பெண் மூலம் என்பது கன்யா மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரநாள். இது அஷ்டமி அல்லது நவமியோடு இணைந்து வரும். துர்காஷ்டமி அல்லது ஆயுதபூஜையோடு இணைந்து வருகிற நாள்.

இந்த நாட்களில் அசுரர்களை அம்பாள் நிர்மூலம் ஆக்கிய நாள் என்பதால் பெண்(கன்னி-புரட்டாசி) மூலம் நிர்மூலம் என்ற சொல் வழக்கும் தோன்றியது. உண்மையான பொருளை உணராமல் மூல நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது அரசாளும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் அதனால் நிர்மூலம் உண்டாகும் என்றும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

மூலம் நட்சத்திரம் மட்டுமல்ல, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தால் மாமியாருக்கு ஆகாது, கேட்டையில் பிறந்தால் மூத்த மைத்துனருக்கு ஆகாது, விசாகத்தில் பிறந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது, பூராடம் நூலாடாது, ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது, திருவாதிரையில் பிறந்தால் தில்லுமுல்லு செய்வான், அமாவாசையில் பிறந்தால் திருடன் ஆவான் என்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறையை நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இந்தக் கூற்றுகள் அனைத்தும் நம்மால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவையே அன்றி இவற்றில் உண்மை இல்லை. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆணாகிலும் சரி, பெண்ணாகிலும் சரி, திருமணத்திற்கு பார்க்கும்போது இவர்களை ஒதுக்குவது என்பது அறிவீனம். ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் பலத்தினைக் கொண்டுதான் பொருத்தம் பார்க்க வேண்டும். வெறும் நட்சத்திரத்தினை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது.

பெண்கள் நாகலிங்கப் பூவினை தலையில் சூடிக் கொள்ளலாமா?- மல்லிகா அன்பழகன், சென்னை - 78.

கூடாது. நாகலிங்கப் பூவினை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பரமேஸ்வரனை பூஜிப்பதற்கு உகந்த புஷ்பமாகக இது கருதப்படுகிறது. மேலும் அதற்கு மிகவும் ஆசார, அனுஷ்டானம் தேவை என்பதால் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டில் மட்டுமே நாகலிங்கப் பூவினை பயன்படுத்துவர். நாகலிங்கப் பூவின் நறுமணம் நாகப்பாம்பினைத் தன்பால் இழுக்கும் தன்மை கொண்டது. விளையாட்டாகவோ அல்லது பரிசோதித்து பார்ப்பதற்காகவோ நாகலிங்கப் பூவினை பெண்கள் தலையில் சூடிக் கொள்வது கூடாது.

‘சிவாய நமஹ என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை,’ என்பது உண்மையானால் சிவாய நமஹ என்று சொல்லிக்கொண்டு மின்சாரத்தில் கை வைப்பார்களா என்று என் பகுத்தறிவு நண்பர் கேட்கிறாரே?- நாராயணன், கூறைநாடு.

வாதத்திற்கு மருந்து உண்டு, பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. விவாதத்தில் தீர்வு காண முடியும். விதண்டாவாதத்தில் தீர்வு காண முடியாது. உங்கள் நண்பரின் கூற்று இரண்டாவது வகையைச் சார்ந்தது. சிவாய நமஹ என்றிருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அறுபத்து மூவர் புராணமும், நந்தனார் சரித்திரமும் இந்தக் கருத்தினை தெளிவாக எடுத்துரைக்கும்.

இவற்றினை கதைகள் என்று உங்கள் நண்பர் ஒதுக்கினாலும், தற்காலத்தில்கூட இதனை மெய்ப்பிக்கும் பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அனுபவித்துத்தான் ஆண்டவனின் அருளை அறிந்துகொள்ள முடியும் என்பது கவியரசரின் கருத்து. உங்கள் நண்பரின் வாழ்விலும் அது போன்றதொரு சம்பவம் நடைபெறும்போது அவரும் அறிந்துகொள்வார். இறைவனின்பால் தனது சிந்தனையைக் கொண்டிருப்போருக்கு அபாயம் என்பது ஒருநாளும் இல்லை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது.

இறந்தவர்களை வணங்குவதால் என்ன பலன்? - சு. பாலசுப்ரமணியன், இராமேஸ்வரம்.


இருப்பவர்களை வணங்குவதைவிட இறந்தவர்களை வணங்குவது என்பது சாலச் சிறந்தது. இருப்பவர்களை என்றால் காசு, பணம் வைத்திருப்பவர்களை என்று பொருள் கொள்ளுங்கள். இருப்பவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையற்றது. இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன் நிலையானது. முன்னோர் வழிபாட்டின் மூலமே ஒவ்வொரு குடும்பத்திலும் சுபநிகழ்ச்சி என்பது நடக்கும்.

வம்சவிருத்தி என்பது இறந்தவர்களை வணங்குவதால் கிடைக்கும் பலன்களில் பிரதானமானது. இந்த முன்னோர் வழிபாடு சரியாக நடக்காத குடும்பங்கள் ராஜவம்சம் ஆயினும் காணாமல் போய்விடும் என்பது கண்கூடு. மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாள் இந்து மதத்தவரின் இல்லங்களில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமும் இதுவே.

கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தோப்புக்கரணம் போடலாமா?- வெங்கட்ராமன், செகந்திராபாத்.

இரு கரங்களால் தலையில் குட்டிக் கொள்வதும் தோப்புக்கரணம் போட்டு வணங்குவதும் பிள்ளையாருக்கு உரிய வழிபாட்டு முறையாக பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முறைக்கு ஆண், பெண் பேதம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கோயில் அல்லது வீட்டில் உள்ள பிள்ளையார் முன்பு பெண்கள் தாராளமாக தோப்புக்கரணம் போட்டு வணங்கலாம். இதில் தவறேதும் இல்லை.

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன?- எஸ். குமாரசுப்ரமணியம், பண்ருட்டி.

    
“ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருளான எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து தியானிக்கின்றேன் என்பது இதன் பொருள். ‘உலகிற்கு ஒளி கொடுக்கும்  சூரிய தேவனே, உன்னை விடாது தியானிக்கிறேன். எனக்கு அறிவு கூர்மையையும், மனோ தைரியத்தையும் தந்தருள்வாயாக’ என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம்.

பௌர்ணமி நேரத்தில் மனித மனம் வேகம் கொள்ளும் என்கிறார்களே, உண்மையா?- கனிமொழி கயல்விழி, கண்ணமங்கலம்.

உண்மைதான். மனிதனின் மனம், சந்திரனின் ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் சந்திரனை மனோகாரகன் என்று அழைப்பார்கள். அதோடு நில்லாமல், குழந்தை பிறக்கும் நேரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரமாகவும், சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே அந்தக் குழந்தையின் ஜென்ம ராசியாகவும் நமது ஜோதிடர்களால் கணக்கிடப்படுகிறது. அதேபோல பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று தனியாக பிரித்துப் பார்க்கிறோம். சந்திராஷ்டம நாட்களில், எட்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் படபடப்புடன் இருக்கும், எந்த ஒரு செயலையும் சரியாகச் செய்ய இயலாமல் போய்விடும் என்பதால் முக்கியமான பணிகளை சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்கிறார்கள்.

அதனால்தான் மனோகாரகனான சந்திரன், முழுநிலவாக ஒளி வீசும் பௌர்ணமி நேரத்தில் மனம் உற்சாகம் கொள்கிறது. அவரவர் மனநிலைக்கு ஏற்றவாறு, அதாவது அவரவர் ஜாதகத்தில் சந்திரன் கொண்டுள்ள பலத்திற்கு ஏற்றவாறு மனநிலை அமைகிறது. பௌர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கும், ஜாதகத்தில் சந்திரன் உச்ச பலத்துடன் காணப்படும் ரிஷப ராசியினருக்கும், ஆட்சி பலத்துடன் காணப்படும் கடக ராசியினருக்கும், பௌர்ணமி நாள் என்பது அதிக அளவில் மன மாற்றத்தினைத் தரும் நாளாக அமைகிறது. அதே நேரத்தில் கிரஹண காலத்தில் பிறந்தவர்களுக்கும், ராகு-சந்திரன், கேது-சந்திரன் இணைவினைப் பெற்றவர்களுக்கும் வேறுவிதமான மாற்றுப்பலனை பௌர்ணமி நாள் தருகிறது. பௌர்ணமி நாள் என்பது மனிதனின் மனதில் மாற்றத்தினைத் தரும் என்ற கருத்து உண்மையே.

பஞ்சபட்சி சாஸ்திரம் என்றால் என்ன?- மீனாவாசன், சென்னாவரம்.

பாரம்பரிய ஜோதிட முறைகளில் இதுவும் ஒன்று. இது, ஐந்து வகையான பட்சிகள், ஐந்து வகையான தொழில்கள், ஐந்து வகையான ஜாமங்கள் என்று பிரித்துப் பலன் கூறும் முறை ஆகும். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்று இந்த ஐந்து பறவைகளுக்கும் 27 நட்சத்திரங்களை பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பறவையும் அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று ஐந்து வகையான தொழில்களில் ஈடுபடும். அதேபோல ஒரு நாளைக்கு பகலில் ஐந்து ஜாமங்கள், இரவில் ஐந்து ஜாமங்கள் என்று கால அளவினை பிரித்திருக்கிறார்கள். ஒரு ஜாமம் என்பது இரண்டு மணி நேரம் இருபத்திநான்கு நிமிடங்கள் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு பட்சிக்கும் ஒரு ஜாமத்திற்கு ஒரு தொழில் என்று கணக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

இவற்றில் அரசு, ஊண் இரண்டும் உத்தம பலனையும், நடை மத்திம பலனையும், துயில், சாவு ஆகியன அதம பலனையும் குறிப்பதாகச் சொல்வர். இந்தத் தொழில்கள் வளர்பிறை நாட்களில் ஒருவிதமாகவும், தேய்பிறை நாட்களில் வேறுவிதமாகவும் காணப்படும். பஞ்சாங்கத்தில் இந்த அட்டவணையைத் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். முக்கியமான பணியைத் துவக்கும்போது இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தினை கணக்கில் கொள்வது பாரம்பரிய ஜோதிடர்களின் வழக்கமாக உள்ளது.

திருகோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-06-2018

  24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்