SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க்கை பாதை சீராகும்!

2017-07-06@ 09:36:02

வேற்றுமதத்தைச் சார்ந்த பையனை என்மகள் பிடிவாதமாக கரம் பிடித்தாள். திடீரென்று பையன் பைக் விபத்தில் இறந்து விட்டான். அதிலிருந்து இதுநாள்வரை யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. ஒருமுறை தற்கொலைக்கும் முயன்றாள். இறந்துபோன பையனின் நினைவாகவே உள்ள அவளது எதிர்காலத்திற்கு ஒரு நல்லவழி கூறுங்கள். எம்.சாமி, பெங்களூரு.

திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகுதசை நடக்கிறது. அவரது ஜாதகத்தில் ஏழாம் இடத்திற்கு அதிபதி சனி வக்ரகதியில் எட்டாம் பாவத்தில் சஞ்சரிப்பது பேரிழப்பைத் தந்திருக்கிறது. தற்போதுள்ள சூழலில் அவருக்கு மறுமணம் செய்ய நினைப்பதைவிட அவரது மனநிலையில் கவனம் செலுத்துவதே நல்லது. ஊர் விட்டு ஊர் இடம் மாறி இருப்பதும் நல்லது. ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று வருவது அவரது மனதில் மாற்றத்தைத் தோற்றுவிக்கும். அவரது ஜாதகத்தில் நிலவும் தசாபுக்தியின்படி 20.07.2020க்குப் பின் திருமணம் என்பது நடைபெறும்.

அவரது கடந்த காலத்தைப் புரிந்துகொண்டு நல்வாழ்வு தரும் மணமகன் வந்து சேர்வார். அதுவரை அவசரப்படாதீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரைத் தனிமையில் இருக்க விடாதீர்கள். அவ்வப்போது ஸ்ரீகிருஷ்ணனின் ஆலயத்திற்குச் சென்று வருவது நன்மை தரும். அவர் ஆலயத்திற்கு வரமறுக்கும் பட்சத்தில் வீட்டினில் ஆங்காங்கே ராதாகிருஷ்ணனின் படங்கள் அல்லது பொம்மைகளை அவரது கண்ணில் படும்படியான இடங்களில் வையுங்கள். ஸ்ரீகிருஷ்ணர் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள், கதைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளச் செய்யுங்கள். மனம் மாறி மீண்டும் உற்சாகமான வாழ்வினைத் துவங்குவார்.

37 வயது ஆகும் என் மகனுக்கு திருமணம் தள்ளிப் போகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தநிலையில் திருமணம் நின்றுவிட்டது.என் மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கஎன்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தாமோதரன், மேடவாக்கம்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் ஏழாம் பாவத்திற்கு அதிபதியான செவ்வாய் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். அதோடு குரு, சனி ஆகிய இருவரும் வக்ரகதியில் அமர்ந்துள்ளனர். மேலும், 29வது வயதில் அவருக்கு திருமண யோகம் என்பது வந்திருக்கிறது. ஏதோ காரணத்தால் அந்தக் காலநேரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தவிர்த்துள்ளீர்கள். தற்போது அவரது ஜாதகத்தில் சனிதசையில் கேது புக்தி துவங்கியுள்ளது.

இனி வருகின்ற 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. அவரது திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணத்தை திருமலையில் நடத்துவதாக உங்கள் பிரார்த்தனைஅமையட்டும். வருகின்ற ஆடி மாதத்தில் ஆங்காங்கே நடைபெறும் திருவிளக்கு பூஜையில் பங்கு பெறும் பெண்களுக்கு திருமாங்கல்ய சரடு வாங்கித் தாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வேங்கடவனை வழிபட்டு வரச் சொல்லுங்கள்.

“கமலாகுச சூசுக குங்குமதோ நியதா
ருணிதாதுல நீலதநோ
கமலாயத லோசந லோகபதேவிஜயீபவ வேங்கட சைலபதே.”

கடந்த பத்து ஆண்டுகளாக வெளிநாட்டில் எலக்ட்ரிகல் இன்ஜினியராகப் பணிபுரியும் எனக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. எனது நிறுவனத்தில் ஃபேமிலிஸ்டேட்டஸ் கொடுக்கமறுப்பதால் ஜூலை மாதத்தில் இந்தியா திரும்ப எண்ணுகிறேன். குழந்தை பாக்கியத்திற்காகவும் காத்திருக்கும் எனக்கு நல்லவழி காட்டுங்கள். சிவசெந்தில்குமார், கரூர்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது செவ்வாய்தசைநடந்து வருகிறது. உங்கள் எண்ணத்தின்படியே இந்தியாவிற்கு திரும்பிவிடுவது நல்லது. இந்தியாவிற்கு வந்தபிறகு மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினை கனவிலும் எண்ணிப் பார்க்காதீர்கள். உங்களுடைய திறமைக்கும், அனுபவத்திற்கும் உள்ளூரிலேயே வேலை கிடைக்கும். இயந்திரத் தொழிற்சாலை, வண்டி வாகனம் சார்ந்த தொழிற்சாலைகளில் பணிக்கு முயற்சியுங்கள். சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.

ஊருக்குத் திரும்பியவுடன் ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமையில் பழனிக்குச் சென்று தம்பதியராக பழனிஆண்டவனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குழந்தை பிறந்தவுடன் பழனிமலையானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள். பிரதிமாதந்தோறும் வளர்பிறையில் வரும் சஷ்டி நாளில் உங்கள் மனைவியை விரதமிருந்து வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி காலை, மாலை இருவேளையும் வேலவனை வணங்கிவர வேலை கிடைப்பதோடு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வேளையும் வந்து சேரும்.

“மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாயமங்களம்
மங்களம் ஸூகுமாராயஸூப்ரஹ்மண்யாயமங்களம்
ஸ்ரீகௌரீகர்ப்பஜாதாயஸ்ரீகண்டதநயாய ச
ஸ்ரீகாந்த பாகினேயாய ஸ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்.”


கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் எங்களின் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கவும், எங்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையவும். உரிய பரிகாரம் சொல்லுங்கள். இளையராஜா, சென்னை  68.

கேட்டைநட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்களுடைய ஜாதகத்தையும், பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் இருவருக்கும் தற்போது திருமணயோகம் என்பது இல்லை. நீங்கள் இருவருமே தற்போது திருமணம்
செய்துகொண்டு குடும்பம் நடத்தும் பக்குவத்திற்கு வரவில்லை. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். அதுவரை உங்களுடைய காதல் தொடரும் பட்சத்தில் உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். அதற்கு முன்பாக தொழில்முறையில் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சியுங்கள்.

தற்போது உங்களுக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் எந்தவொரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்ற மனநிலைக்கு வர முயற்சியுங்கள். வேலைநிமித்தம் தொலைதூரத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். அதனால் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஞாயிற்றுக் கிழமையில் வியாசர்பாடி ரவீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று பரமேஸ்வரனுக்கு மஞ்சள் புஷ்பத்தினால் தொடுத்த மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். பெற்றோரின் துணையுடன் உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கடந்த ஐந்து வருடமாக நான் தொட்டதெல்லாம் நஷ்டமாகிறது. தொழில், பணம், நகையெல்லாம் இழந்ததுடன் நண்பர்கள், உறவினர்களுடனும் பகை உண்டாகிறது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. பயத்திலும், வேதனையிலும் தவிக்கும் எனக்கு நல்லவழி கூறவும். சீனிவாசன், தாரமங்கலம்.

விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிரதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. கடந்த ஐந்து வருட காலமாக சுக்ர தசை நடந்து வந்தாலும் மூன்றாம் பாவத்தில் சூரியனுடன் இணைந்து சுக்கிரன் அமர்ந்திருப்பது பலவீனமான அம்சம் ஆகும். எனினும் தற்போது ஜூன் மாதம் முதல் தொழில்முறையில் நல்ல நேரம் துவங்கிஉள்ளதால் மிகச்சிறியஅளவிலான முதலீட்டுடன் உங்கள் தொழிலை மீண்டும் துவக்க முடியும். உங்கள் வாயே உங்கள் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

அதிகம் பேசாமல் அமைதி காப்பதுடன் காரியத்தில் கண்ணாய் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அநாவசியமான பேச்சுக்கள் வீணாக எதிரிகளை உருவாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மௌனமாக இருப்பதே பல பிரச்னைகளுக்கு தீர்வு என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள். தினமும் அதிகாலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் செய்வதால் உங்களின் பயம் விலகும். மனதில் தைரியம் கூடும். ஒருவருட காலத்திற்கு தினசரி அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட்டு வாருங்கள். பாழடைந்த உங்கள் வாழ்வு சீரடையும்.

“பாஹிமாம் உமா மனோக்ஞ தேஹ
தே நம:சிவாய
தேஹிமேவரம் ஸிதாத்ரி கேஹ தே நம:சிவாய
மோஹிதர்ஷிகாமிநீ ஸமூஹதே நம:சிவாய
ஸ்வேஹிதப்ரஸந் நகாமதோஹ
தே நம:சிவாய.”


நான் சில வருடங்கள் விவசாயம் பார்த்தேன். கட்டிட வேலையும் பார்த்தேன். எதிலும் வருமானம் இல்லை. இப்போது நீர்மட்டம் பார்க்கும் வேலையைக் கற்றுக்கொண்டு செய்து வருகிறேன். இந்த வேலையிலும் போட்டியும், பொறாமையும் அதிகமாக உள்ளது. அருகில் உள்ளவர்கள் செய்வினை செய்துள்ளார்களா என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்லவழி காட்டுங்கள். செங்கோட்டையன், பூதப்பாடி.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும், ஜீவன ஸ்தானாதிபதி குருவும் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது பலவீனமான அம்சம் ஆகும். ஆயினும் தற்போது நீங்கள் செய்து வரும் நீர்மட்டம் பார்க்கும் தொழில் உங்கள் வாழ்க்கைக்கு கைகொடுக்கும். அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் உங்கள் தொழில்மீது மட்டும் கவனத்தை செலுத்துங்கள். இது இறைவனின் அருளால் கற்றுக்கொண்ட கலைஎன்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

இறைவனின் அருளால் வந்து சேர்ந்திருக்கும் தொழிலை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உங்கள் பகுதியில் மட்டும் நில்லாது தென் இந்தியா முழுவதும் சுற்றி வரும் அம்சம் உங்களுக்கு உள்ளது. முழு முயற்சியோடு செயல்படுங்கள். 10.09.2017 முதல் உங்களுக்கான நல்லநேரம் துவங்குகிறது. ஒவ்வொரு முறையும் கங்கையம்மனை வணங்கி உங்கள் தொழிலைத் துவக்குங்கள். ஆடி 18 நாளன்று அருகிலுள்ள ஆற்றங்கரையில் கங்கை பூஜை செய்து வழிபடுங்கள். உங்கள் தொழிலைத் துவக்கும்போது கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லித் துவக்குவதால் வெற்றி நிச்சயம். கவலை வேண்டாம்.

“கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதிநர்மதே
சிந்து காவேரீஜலேஸ்மின் சந்நிதிம் குரு.”


நான் கடந்த மூன்றரை வருடங்களாக என் மனைவியைப் பிரிந்து வாழ்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். விரைவில் நாங்கள் ஒன்றுசேர பரிகாரம் கூறவும். ஒரு வாசகர், நீலகிரி.   

பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகுதசையில் கேதுபுக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதி குருவும், மனைவியைக் குறிக்கும் களத்ர ஸ்தானாதிபதி சுக்கிரனும் ஒன்றிணைந்து 12ம் பாவத்தில் இணைந்திருப்பது பலவீனமான அம்சமாகும்.  இந்தநிலை உங்களை குடும்பத்தினருடன் இணைந்திருக்க விடாது. மேலும், நீங்கள் எப்பொழுதும் உங்கள் தொழிலைபற்றியே சிந்தித்துக் கொண்டிருந்ததால் குடும்பத்தினரின் மனநிலையில் கவனம் செல்லாமல் போய் இருக்கிறது.

53வது வயது வரை நீங்கள் குடும்பத்தோடு இணைந்திருக்க இயலாது என்றாலும், பிரிந்த மனங்கள் விரைவில் ஒன்றிணையும். 04.01.2018க்கு மேல் உங்கள் மனைவியை நேரில் சந்தித்து உங்கள் நிலைமையை விளக்கிச் சொல்லுங்கள். இடைத்தரகர்கள் யாருமின்றி நீங்களே நேரடியாகச் சென்று உங்கள் மனைவியிடம் பேசுங்கள். தீபாவளிக்கு மறுநாள் வரும் கேதார கௌரீ விரதபூஜையை வீட்டினில் முறையாக அனுஷ்டித்து மூன்று தம்பதியருக்கு வஸ்திரத்துடன் கூடிய தாம்பூலம் அளித்து வணங்குங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சிவசக்தியை தினமும் வணங்கிவர விரைவில் பிரிந்தவர் ஒன்றிணைவீர்கள்.

“மாத்ஸர்ய தோஷாம் சுகஸம்பவாய மாதுர்
பிதுர் துக்கநிவாரணாய
மாஹேச்வரீஸூக்ஷ்மவராயநித்யம் தஸ்மைம
காராயநம:சிவாய.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-02-2018

  26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-02-2018

  25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X