SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சமடைந்தோர்க்கு முத்திப்பேற்றை அளிக்கும் பெருமாளே!

2017-06-19@ 09:32:11

அருணகிரி உலா - 31

‘‘தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி
உன்னைத்
திண்டாட வெட்டி விழ விடுவேன்!
செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டாயடா அந்தகா! வந்துபார் சற்று என்கைக் கெட்டவே’’

- என்ற கந்தர் அலங்காரச் செய்யுளைக் கூறியவண்ணம் நாமும் திருக்கடவூரிலிருந்து புறப்படுகிறோம். அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் திருத்தலம் திருக்கடவூரிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள திருவிடைக்கழி. மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டால் தில்லையாடி சென்று, தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம்.

அழகிய வயல்வெளியூடே பயணம் செய்யும்போது முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ள திருவிடைக்கழியை காண ஆர்வம் மேலிடுகிறது. ஒரே கருவறையில் முருகப்பெருமானும், பின்னால் சற்று உள்ளடங்கிப் பாவநாசப் பெருமான் லிங்க வடிவிலும் வீற்றிருப்பது ஒரு அதிசயம் தான். இருவருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. முருகனது விமானம் சற்று அதிக உயரமாக உள்ளது.

‘‘செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நிழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர் கெடும் மாலுலா மனமே’’
- திருவிசைப்பா

நாரதரின் அறிவுரையின்படி சூரபத்மனின் மகன் இரண்யாசுரனை வதம் செய்ய வருகிறான் முருகப்பெருமான். தந்தையும் தானும் மடிந்து போவோம் என்று முன்கூட்டியே உணர்ந்திருந்தான் இரண்யாசுரன். போர் முடிவில் சூரபத்மன் தன் தவ வலிமையால் சேவலும் மயிலுமாகப் பிரிந்து முருகனுடன் நிரந்தரமாகக் குடிகொண்டு விடுகிறான். ஆனால், அடுத்த நாள் மரிக்கப் போகும் தான், தன் தந்தைக்குப் பித்ரு காரியங்கள் செய்ய வேண்டுமென்றெண்ணி கீழ்க்கடலில் சுறா மீனாக மாறித் தவம் புரிகிறான் இரண்யாசுரன். அவனைக் கொல்ல வந்த முருகப்பெருமான், சிவபூஜை செய்பவனைக் கொல்லக் கூடாது என்று தயங்கி நின்றான். இரண்யாசுரனுடன் போரிடச் சென்ற மகனைக் காணவில்லையே என்று முருகனைத் தேடி வந்த பார்வதி, தயங்கி நிற்கும் முருகனைக் கண்டு ‘மாயையில் வல்ல இரண்யாசுரனைச் சம்ஹாரம் செய்து விட்டு, அருகிலுள்ள நாக தலத்திற்கு சென்று சிவபூஜை செய்து தோஷ நிவர்த்தி பெறலாம்’ என்று யோசனை கூறுகிறாள்.

அதன்படி நாகராஜா வழிபட்ட திருவிடைக்கழியில் வந்து சிவபூஜை செய்ய, இறைவன் அகமகிழ்ந்து மகனுக்குத் தன்னிடத்தைக் கொடுத்து விட்டுத் தான் பின்னால் சென்று அமர்ந்து விடுகிறார். அன்னை, தரங்கம்பாடியிலேயே தங்கி விட்டதால் அவருக்கு இங்கு தனிச்சந்நதி இல்லை. சூரனைச் சம்ஹரித்த முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வயானையை மணமுடித்துத் தருவதாக வாக்களிக்கிறான். அசுரனை வதம் செய்து, சிவபூஜை முடித்து முருகன், தன்னை எப்போது மணப்பான் என்றெண்ணிக் காத்திருக்கிறாள் தெய்வயானை. எனவே தான் இங்கு தனிச்சந்நதியில் குடிகொண்டிருக்கும் தெய்வயானையின் முகம் முருகன் இருக்கும் திசையை நோக்கித் திரும்பியவாறு அமைந்துள்ளது. தெய்வயானை திருமணம் நிச்சயிக்கப்பட்ட இடம் திருவிடைக்கழி என்பர். அழகான ஏழு நிலை ராஜகோபுரத்தைக் கடந்து விநாயகர், பலிபீடம், கொடிமரம்  தரிசித்த பின் சிறு மண்டபத்தில் முருகனை நோக்கியவண்ணம் அமர்ந்திருக்கும் மயிலைத் தரிசிக்கிறோம்.

‘‘குராமலி விராவுமிழ் பராரை யமரா நிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினிதுலாவிய
குலாவிய கலாப மயிலாம்’’
(அருணகிரியாரின் மயில் விருத்தம்)

உள்ளே நுழைந்ததும் இடப்புறம் சந்திரன், குஞ்சரி ரஞ்சித குமரன், சேந்தனார், நடராஜர், அருணகிரிநாதர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, நவசக்தி அம்மன், சித்தி விநாயகர், அனுக்ஞை விநாயகர், கோட்டத்தில் அண்ணாமலையாருக்கு எதிரே மேலகுமரர், ஸ்ரீநாகநாதர், கஜலட்சுமி, பிரம்மா, உமையொருபாகர், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரைத் தரிசிக்கிறோம். சண்டிகேசர் சந்நிதியில் இருவர் உள்ளனர். சிவச்சண்டிகேசர், குகச் சண்டிகேசர் என இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். இரணிய சம்ஹார மூர்த்தியாக முருகப்பெருமான் வில்லேந்திய வேலவராகக் காட்சி அளிக்கிறார். கருவறைக்கருகே வருகிறோம். மஹாகணபதியான வலம்புரி விநாயகரை வணங்கி தந்தையையும் தனையனையும் ஒருசேரத் தரிசித்து மகிழ்கிறோம்.

ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் வலக்கரத்தை அபயஹஸ்தமாகவும், இடக்கரத்தை இடுப்பில் வைத்து நிற்கும் பாலசுப்ரமணியனின் பேரழகில் மனதைப் பறி கொடுக்கிறோம். தனயனுக்கு முன்னால் அவன் ஆத்மலிங்கமாகப் பூசித்த ஸ்படிக லிங்கத்தைக் காண்கிறோம். ‘பொன்னே! மணியே! பொருளே! அருளே! மன்னே! மயில் ஏறிய வானவனே! ஆனா அமுதே! அயில்வேல் அரசே! ஞானாகரனே’ எனும் கந்தர் அனுபூதி வாக்குகள் மனக்கண்முன் ஓடுகின்றன. கருவறையை வணங்கி வலம் வரும்போது பிரசித்தி பெற்ற குரா மரத்தைக் காணமுடிகிறது. முருகன் இம்மரத்தின் கீழ் யோக நிஷ்டையில் இருப்பதாக நம்பப்படுவதால் இங்கமர்ந்து தியானம் செய்வது மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

‘கொந்துவார் குரவடி’ (பூக்கள் நிறைந்த குரா மரத்தின் அடி)
‘அடியவர் சிந்தை வாரிஜநடு’ (அடியவர்களின் மனத்தாமரையின் நடு)
‘கொண்ட வேத நன்முடி’ (வேதங்களின் சிறந்த உச்சி)

- இவை மூன்றும் முருகனுக்குகந்த இருப்பிடங்கள் என்று தணிகையில் பாடுகிறார் அருணகிரிநாதர்.

‘‘கொந்துவார் குரவடியினும், அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு, நெறிபல
கொண்ட வேத நன்முடியினு மருவிய குருநாதா!’’

திருப்புகழ், திருவகுப்பு, மயில் விருத்தம் போன்ற பல பாடல்களிலும் குரா பற்றிய குறிப்பை வைத்துள்ளார் அருணகிரியார்.

‘‘குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும்
குலாவி இனிதோது அன்பினர் வாழ்வே’’

‘‘முத்தி வீட்டணுக, முத்தராக்க, சுருதிக்
குராக்கொள் இரு கழல் தாராய்’’
‘‘அவிழ்ந்த அன்பால் குராப்புனை தண்டையந்தாள்
தொழல் வேண்டும்.’’

திருவிடைக்கழியில் அருணகிரியார் ஆறு பாடல்களைப் பாடியுள்ளார். ‘பகரு முத்தமிழ்’ எனத் துவங்கும் பாடலில், ‘‘முத்தமிழ் நூல்களின் பொருள், உண்மைத் தவத்தால் பெறும் பயன், பல வகையான வாழ்வு, பழைமையாய் வரும் முத்திச் செல்வ நிலை, அனைவரும் நட்பு வைத்துப் போற்றும் கற்பக விருக்ஷ தேவலோக வாழ்வு, குற்றமற்ற பக்தியுடன் கூடிய அரச வாழ்க்கை மாதிரியான சிறந்த வாழ்வு, ஐம்புலக் கள்வர்களை அடக்கிய நிலையில் உனது பல்வகைப் பெருமைகளைப் புகழும் அறிவு பலம், நாவன்மை ஆகிய அனைத்தையும் தர வேண்டும்’’ என்று பிரார்த்திக்கிறார்.

‘‘பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனுமெப்படிப் பல வாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் தருவாழ்வும்
புகரில் புத்தியுற்றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் பெருவாழ்வும்
புலனகற்றிடப் பல விதத்தினைப்
புகழ் பலத்தினைத் தரவேணும்
தகரிலற்ற கைத்தலம் விடப்பிணைச்
சரவணத்தினிற் பயில்வோனே
தனி வனத்தினில் புனமறத்தியைத்
தழுவு பொற்புயத் திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறலயிற்சுடர்க் குமரேசா
செழுமலர்ப் பொழிற் குரவமுற்ற பொற்
றிருவிடைக்கழிப் பெருமாளே’’

இப்பாடலின் பிற்பகுதியில் முருகனின் பெருமைகளைப் பாடுகிறார். ‘‘தட்ச யாகத்தில் தகர்க்கப்பட்ட அக்னிதேவனது கைகள் சிவப்பொறிகளின் சூடு தாங்காமல் கங்கையில் விட்டுவிட, கங்கையும் அவற்றைச் சரணப்பொய்கையில் சேர்த்து விட, அங்கு பொருந்தி இருந்தவனே! கிரெளஞ்சமலைச் சிகரங்களைப் பிளந்த ஞானமும் வெற்றியும் உடைய ஒளிர் வீசும் வேலாயுதத்தை உடைய குமரனே! செழும் பூஞ்சோலையில் குரா மரங்கள் நிறைந்த அழகிய திருவிடைக்கழிப் பெருமாளே!’’ என்று பாடுகிறார். ‘படி புனல்’ எனத் துவங்குகிறது மற்றொரு திருவிடைக்கழிப் பாடல்.

‘‘ஐம்பூதங்கள், முக்குணங்கள், நோய்கள், மூளை, சுக்கிலம், ரத்தம், எலும்பு, பசி, மாமிசம் இவற்றுடன் கூடிய அறிவற்ற பொருளாகிய இவ்வுடலைத் தாங்கி மிகவும் கீழ்த்தரமான இப்பிறப்பிலே ஞானத்தோடு கூடிய உள்ளம் இல்லாத அடிநாயேன் இப்படித் திரிவது நீதியல்ல, எனவே உன் திருவடிகளை எனக்களித்து, உனது பழைய அடியார் கூட்டத்துடன் சேர்த்து வைத்து அருள் புரிய வேண்டும்’’ என்று கேட்கிற பாடல் இது.

‘‘படிபுனல் நெருப்படற் பவனம் வெளி பொய் கருப்
பவ முறை அவத்தை முக்குண நீடு
பயில்பிணிகள் மச்சை சுக்கிலமுதிர மத்தி மெய்ப்
பசி படுநிணச் சடக் குடில்பேணும்
உடலது பொறுத்தறக் கடைபெறு பிறப்பினுக்கு
உணர்வுடைய சித்தமற்று அடிநாயேன்
உழுலுமது கற்பலக் கழலிணை எனக்களித்து
உனது தமரொக்க வைத்து அருள்வாயே’’
பாடலின் பிற்பகுதியில் முருகனைப் பலவிதமாகப் போற்றுகிறார்:
‘‘கொடிய ஒரு குக்குடக் கொடிய வடிவிற்புனக்
கொடிபடல் புயக்கிரிக் கதிர்வேலா
குமர சமரச் சினக்கும் அரவு அணி அத்தன் மெய்க்
குமர மகிழ் முத்தமிழ்ப் புலவோனே
தடவிகட மத்தகத் தடவரையரத்தரத்து
அடன் அனுச வித்தகத் துறையோனே!
தருமருவு மெத்தலத் தருமருவ முத்தியைத்
தரு திருவிடைக்கழிப் பெருமாளே!””

‘‘குமரனே! போரில் மிகவும் கோபிக்கும் பாம்பை அணியும் சிவபிரானது மெய்ப்புதல்வனே! அனைவரும் மகிழும் முத்தமிழ் வல்லவனே! விசேஷமான மத்தகத்தோடு கூடிய பெரிய மலையைப் போன்ற கணபதியின் தந்தைக்குக் குருவே! அக்கணபதியின் வீரமிக்க தம்பியே! ஞானமே வடிவானவனே! மரங்கள் நிறைந்த திருவிடைக்கழியில் வீற்றிருப்பவனே!

எம்பூமியில் உள்ளவரும் தன்னிடம் தஞ்சமடைந்தால் அவர்களுக்கு முத்திப்பேற்றை அளிக்கவல்ல பெருமாளே!’’ ‘கொடிய ஒரு குக்குட’ என்பதிலும் (சூரனே சேவல் ஆனதால் ‘கொடிய ஒரு குக்குட’ என்றார்) ‘குக்குடக் கொடிய’ (சேவலைக் கொடியாகக் கையில் பிடித்தவனே) என்பதிலும், ‘புனக்கொடி படர் புயக்கிரி’ (புனத்தில் வளர்ந்த கொடி போன்ற வள்ளியம்மையை அணைந்த மலை போன்ற புயங்களை உடையவனே!) என்பதிலும் வரும் சிலேடை ரசித்துப் போற்றத்தக்கது!

‘‘கனகச் சிகரக் குலவெற்புருவக்
கறுவிப் பொருகைக் கதிர்வேலா
கழியைக் கிழியக் கயல் தத்தும் இடைக்
கழியில் குமரப் பெருமாளே’’

(உப்பு நீர்ப்பரப்பு (கழி) கிழியும்படிக் கயல்மீன்கள் குதிக்கின்ற (திரு) இடைக்கழியில் வீற்றிருக்கும் குமரப்பெருமாளே!)
- அனல்அப்பு (திருப்புகழ்)

‘‘திருக்கைவேல் வடிவழகிய குருபர முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
இருக்கு வேதனும் இமையவர் பரவிய
திருக்குராவடி நிழல்தனில் உலவிய
பெருமாளே’’
- (பெருக்கமாகிய - திருப்புகழ்)

‘‘பழியுறு சட்டகமான’’ எனத் துவங்கும் இடைக்கழித் திருப்புகழில், திருப்புகழை பக்தி அமுது ரசம் ஊறப் பாடுவதற்கு அருள்புரிய முருகனை வேண்டுகிறார்:

‘‘பழியுறு சட்டகமான குடிலை எடுத்திழிவான
பகரும் வினைச் செயல் மாதர் தருமாயப்
படுகுழி புக்கினிதேறும் வழிதடவித் தெரியாது
பழமை பிதற்றிடு லோக முழுமூடர்
உழலும் விருப்புடனோது பல சவலைக் கலைதேடி
ஒரு பயனைத் தெளியாது விளியாமுன்
உனகமலப்பதநாடி உருகி உளத்தமுதூற
உனது திருப்புகழ் ஓத அருள்வாயே’’

‘‘பழி பாவங்களுக்கு இடமான உடல் எனும் இக்குடிசையை எடுத்து, விலைமாதர்கள் சேர்க்கையெனும் படுகுழியில் விழுந்து அதினின்றும் நல்லபடியாக வெளிவரும் வழியைத் தடவிப் பார்த்தும் தெரியாமல், ஆராய்ச்சிநோக்கு இல்லாமல் பழம் கொள்கைகளையே பின்பற்றும் உலகத்திலுள்ள முழு முட்டாள்களுடன் திரிந்து, ஆசையுடன் ஓதுகின்ற குழப்பமான பல நூல்களை நானும் தேடி, அதனால் ஒரு பிரயோஜனமும் அடையாமல், கடைசியில் மடிந்து போகுமுன்னால் உனது தாமரையன்ன திருவடிகளை விரும்பி, உளத்தில் பக்தி அமுது ரசம் ஊற உனது திருப்புகழை சிரத்தையுடன் பாட அருள் புரிவாயே’’ என்று வேண்டுகிறார்.

பாடலின் அடுத்த பகுதியில்,
‘‘தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெரு மேரு
திடுதிடெனப் பல பூதர் விதமாகத்
திமி திமெனப் பொரு சூரன் நெறு நெறெனப் பலதேவர்
ஜெயஜெயெனக் கொதிவேலை விடுவோனே
அழகு தரித்திடு நீப, சரவண உற்பவ, வேல,
அடல்தரு கெற்சித நீல மயில்வீரா!
அருணை திருத்தணி நாகமலை பழநிப்பதி கோடை
அதிப! இடைக்கழி மேவு பெருமாளே’’

‘‘ஆரவாரிக்கின்ற உப்புக் கடல் கொந்தளிக்கவும், பெரிய மேரு மலை இடிபடவும், பூதகணங்கள் பலவிதமாக மகிழ்ச்சி நடனம் ஆடவும், எதிர்த்து வந்த மாமரமான சூரன் நெறுநெறென முறியவும், இதைப் பார்த்த தேவர்கள் ஜெயகோஷமிடவும், சினத்தால் கொதிக்கும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே! அழகிய கடப்பமாலைகளை அணிபவனே! நாணல் பொய்கையில் தோன்றியவனே! வேலனே! வலிமையுடன் சிங்கம் போல் கர்ஜிக்கும் நீலமயில் வாகனனே! திருவண்ணாமலை, திருத்தணி, திருச்செங்கோடு, பழநி, வல்லக் கோட்டை ஆகிய தலங்களுக்குத் தலைவனே! திரு இடைக்கழியில் வீற்றிருக்கும் பெருமாளே!’’ என்று பலவாறாகத் துதிக்கிறார்.

நாயக-நாயகி பாவத்தில் பாடப்பட்ட ஒரு பாடலில் தான் அணிந்துள்ள கடப்பமாலையை முருகன் தனக்களிக்கக் கோருகிறார்.

‘‘திருக்குராவடி நிழல்தனில் உறைவோனே!
திருக்கை வேல் வடிவழகிய பெருமாளே!
கடப்பமாலையை இனிவர விட வேணும்’’
- என்று இறைஞ்சுகிறார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்களில் அதிகம் படாத சிற்பத் தொகுதி ஒன்று வடக்குச் சுற்றுச் சுவரில் காணப்படுகிறது. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்