SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கவலைகளை நீக்குவாள் கருங்காளி

2017-06-17@ 10:27:30

நம்ம ஊரு சாமிகள் - பத்தமடை, களக்காடு, திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்தமடையில் அருள்பாலிக்கும் கருங்காளி, தன்னை வணங்கும் அடியவர்களுக்கு கவலைகளை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்வை தருகிறாள். தாரகாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி கடுமையான தவமிருந்தான். அவனது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், அவன் முன்பாகத் தோன்றினார். என்ன வரம் வேண்டும் எனக் கேட்டார். தனக்கு எந்த நிலையிலும் மரணம் நேரக்கூடாது என்றான். பிறக்கும் எல்லா உயிருக்கும் இறப்பு உண்டு என்றார், அவர். அப்படியானால், மணமுடிக்காத இளம் மங்கை, அகோர முகத்தோடு, ஆடை அணிகலனின்றி என்னோடு யுத்தம் செய்து என்னை வீழ்த்த வேண்டும். என்று கேட்டான் தாரகாசுரன். எந்த பெண் ஆடைகளின்றி ஆண்கள் முன் வருவாள்.

அப்படி இருக்கையில் யுத்தமா, நினைத்துப் பார்க்கவே முடியாது. எனவே இப்பிறப்பில் தனக்கு மரணமே நேராது என்று மனதிற்குள் நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். சிவபெருமானும் அவன் விருப்பப்படியே வரத்தைக் கொடுத்தார். வரம் பெற்ற தாரகாசுரன். தேவர்கள் உட்பட ஏனைய உயிர்களுக்கு எண்ணிலடங்கா துன்பத்தை விளைவித்தான். அவனது ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமானது. அவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவன் அருகே இருந்த உமையாளை பார்க்க, உமையவள் தன் மேனியிலிருந்து தனது சாயலுடன் ஒரு சக்தியை உருவாக்கினாள். அவளே அனல் கொண்ட பார்வையும், ஆங்கார ரூபமும் கொண்ட காளிதேவியானாள்.

தாரகாசுரனை அழிக்க புறப்பட்டாள். தாரகாசுரன், சண்ட, முண்டாவை காளியோடு யுத்தம் செய்ய அனுப்புகிறான். அவர்கள் காளியோடு யுத்தம் புரிகின்றனர். யுத்தத்தின்போது காளி தனது வலது கரத்து வாளால் சண்டனை வெட்ட, அவன் உடலிலிருந்து கொட்டிய ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஒரு அசுரன் தோன்றினான். உடனே, காளி ஆக்ரோஷம் பொங்க, தனது சடைமுடியை எடுத்தெறிய, அதிலிருந்து கருங்காளி தோன்றினாள். அவளை தன்னகத்தே கொண்டு அகோரத் தோற்றம் கொண்டு எழுந்தாள். அசுரர் நெருங்க, ஆயிரம் கண்ணும், கரங்களும் கொண்டவளாய் காளி ஆயிரம் பேராக நின்றாள்.

அசுரர்களை வெட்டி வீழ்த்திய காளிதேவி, மீண்டும் அசுரர்கள் பிறக்கா வண்ணம் சண்ட முண்டாவை வதம் செய்தாள். அவர்கள் உடலில் இருந்து வெளியேறிய ரத்தம் மண்ணில் விழாதவாறு அதைக் குடித்தாள். அசுரனை அழித்த மகிழ்ச்சியில் வெறிகொண்டு ஆடினாள், காளி. அப்போது பின்னால் நின்ற சிவனை இடித்து விட, அவரும் கீழே விழ, அவர் மீது ஏறிநின்று ஆடினாள். சிறிது நேரத்தில் தனது தவறை உணர்ந்த காளி, நாணத்தால் தனது நாக்கை கடித்தாள். அதிலிருந்து  ரத்தம் கொட்டியது. மேலும் அதனால் ஏற்பட்ட வலியின் காரணமாக நாக்கை வெளியே நீட்டினாள்.  அகோர முகமும் முழுநிர்வாண கோலமும், கழுத்தில் கபால மாலையும் கொண்ட அட்டக்கருப்பு நிறத்தில் இருந்த கருங்காளி தோற்றத்தை தன்னிடமிருந்து விலக்கி விட்டாள்.

அது ஒரு ரூபமாக வெளியேறி சென்றது. பின்னர் காளி, சிவனும் நடனம் புரிந்து அதில் தோற்றதன் காரணமாக தில்லையில் வீற்றிருக்கிறாள். காளியிடமிருந்து விலகி வந்த நிழல் ரூபமான கருங்காளி, பொதிகை மலைக்கு வருகிறாள். நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பத்தமடையில் ஆயிரத்தம்மன் கோயிலில் கொடைவிழா சிறப்பாக நடந்து வரும் வேளையில் மாலைப்பொழுதில் கோயில் வளாகத்தில் வரி தாரர்கள் பொங்கலிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரின், பொங்கல் பானை கரண்டியை, அருகே பொங்கலிட்டு கொண்டிருந்த மற்றொரு சமுதாய பெண் எடுத்து பயன்படுத்த, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாக இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.

அதன் விளைவாக, கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து தங்கள் பகுதியில் கோயில் அமைத்தனர். மூலவர் ஆயிரத்தம்மன் என்றாலும் கருக்கல் பொழுதில் அம்மன் வந்ததால் கருக்காளி அம்மன் என்றும், கருங்காளி என்றும் அழைக்கப் படலானாள். சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தனர். கும்பாபிஷேகம் நடத்த சில தினங்கள் இருந்த நிலையில், கோயில் சீரமைப்பு பணிக்காக ஓலையால் வேயப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த அம்மனை மீண்டும் மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வதற்கு பூசாரி, அம்மன் சிலையை சுத்தம் செய்தார். அப்போது அம்மன் சிலையில் இருந்த நான்கு கரங்களில் ஒரு கரம் உடைந்து விட்டது. ஆனாலும் கும்பாபிஷேகம் நின்று விடக்கூடாது என்று கருதி அந்த அம்மனை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்து முடித்தனர்.

இதற்கிடையில் மறுநாள் நெல்லை டவுனுக்கு சென்று அங்கு தயார் நிலையில் இருந்த அம்மன் சிலை ஒன்றை வாங்கி வந்தனர். அந்த சிலை தாமரை மலரில் அம்மன் அமர்ந்திருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட சிலை. அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு, கை உடைந்த அம்மன் சிலையை, பத்தமடையில் இருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள கோடகநல்லூர் சுடுகாடு அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் கொண்டு வீசினர். இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஊரில் பல கஷ்ட, நஷ்டங்கள், நோய், நொடி என பல இன்னல்கள் நேர்ந்தது கோயிலை சார்ந்த சமுதாய மக்களுக்கு. உடனே சமுதாய பிரமுகர்கள் பிரச்னம் பார்த்தனர். அதில் அம்மன் தாமிரபரணி ஆற்றுக்குள் இருக்கிறாள். அந்த சிலையை  கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தால் மட்டுமே பழைய படி அம்மன் அருள் பெற்று உங்கள் கவலைகள் நீங்கும் என்று உத்தரவு வந்தது.   

மறுநாளே விரதமிருந்த பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்கி தேடினர். சிலை கிடைக்கவில்லை. தூத்துக்குடியை சேர்ந்த ஒரு மாந்த்ரீகம் கற்ற ஒருவரிடம் சென்று குறிகேட்க, அவர், ஆற்றில் விடப்பட்ட அம்மன் நிச்சயம் கிடைப்பாள். அன்றைய தினம். இடி மின்னலுடன் கனமழை பெய்யும். ஆற்றின் அருகே இருக்கும் மயானத்தில் பிணம் எரியும். சிலையை நானே வந்து எடுத்து தருகிறேன்  என்று கூறுகிறார். அதன் படியே அவர் வருகிறார். இதனிடையே பாபநாசம் தலையணையில் கருங்காளி குடியிருந்த மரத்தை ஒருவர் வெட்ட, மறுகனமே வெட்டியவர் மாண்டு போக, அந்த மரம் தாமிரபரணி ஆற்றில் மிதந்து வருகிறது. கோடக நல்லூர் அருகே வரும் மரம் அங்குள்ள கசத்தில் மூழ்குகிறது. அம்மரத்தில் இருந்த கருங்காளி, அங்குள்ள கசத்தில் இருந்த சிலையில் ஐக்கியமானாள்.
மறுநாள் தூத்துக்குடி சுவாமிஜி, தான் சொன்னது போலவே வந்து அம்மன் சிலை எடுக்க ஆற்றில் இறங்குகிறார். அந்த நேரம் கோடகநல்லூரில் இறந்து போன ஒருவரின் சடலம் அங்குள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டு, எரிந்து கொண்டிருக்கிறது. மாந்த்ரீகம் கற்ற அந்தச் சாமியார் ஆற்றில் இறங்கும் முன்பு தனது வலது கையில் வெட்டி, எட்டு சொட்டு ரத்தத்தை தண்ணீரில் விட்டார். மீண்டும் கழுத்திலும் ஒரு பகுதியில் வெட்டி ரத்தம் விடுகிறார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஊரார்கள் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஆற்றுக்குள் சாமியார் இறங்கியதும். இடி மின்னலுடன் கனமழை பெய்தது. சிலையை கண்டவர், அதில் கயிறு கட்டி அந்த கயிற்றின் ஒரு பகுதியை வெளியே தூக்கிபோட இளைஞர்கள் அதை இழுக்க, அம்மன் சிலை மேல வந்தது.

கோயிலில் அந்த அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலஸ்தானத்தில் சாந்த ரூபமாக அமர்ந்த கோலத்தில் அம்மன் வீற்றிருக்கிறார். அதன் அருகே சூரனை தனது காலில் வைத்து அமிழ்த்திய வண்ணம் அமர்ந்த கோலத்தில் பழைய அம்மனும் காட்சி தருகின்றனர். கன்னி மூல விநாயகர், நித்திய கல்யாணி அம்மன், பைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. காவல் தெய்வமாக தளவாய்மாடன் கோயில் பிராகாரத்தில் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வைகாசி மூன்றாம் செவ்வாய் கொடை விழாவும், புரட்டாசி மாதம் பத்து நாட்கள் தசரா திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோயில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து பாளையங்கோட்டை செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பத்தமடை என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.

சு. இளம் கலைமாறன்

படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்