SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பிரச்னைகளை தீர்த்து வைப்பார் பெரும்படை சாஸ்தா

2017-06-10@ 10:23:36

நம்ம ஊரு சாமிகள் - இருவப்பபுரம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி  

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா சுப்பிரமணியபுரம் அருகே உள்ள சிறிய கிராமம் இருவப்பபுரம்.  இங்கு கோயில் கொண்டுள்ள பெரும்படை சாஸ்தா, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பிரச்னைகளை தீர்த்து வைத்து பெருவாழ்வு அளிக்கிறார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு செல்வ செழிப்பாக திகழ்ந்த இருவப்பவூர் காலரா எனும் நோய் பரவியதன் காரணமாக இவ்வூரில் வாழ வந்தவர்கள் ஊரை விட்டு வெளியேறி வேறு வேறு பகுதிகளில் குடியேறினர். சிலர் நோயின் தாக்கத்தால் மாண்டனர். ஆண்டுகள் சில உருண்டோட சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மிகுதியாக வாழ, இக்கிராமம் புல், புதர்கள் வளர்ந்து காடாக இருந்தது.

இந்த கிராமத்தின் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வந்த இடைக்குல பெண் ஒருவர் பால் கொண்டு வந்து பக்கத்து கிராமங்களில் விற்பனை செய்து வந்தார். ஒருநாள் அந்த பெண் பால் கொண்டு வரும்போது மரத்தின் வேர் ஒன்று இடற, அந்த மரத்தின் வேர் பகுதியில் அந்த பெண் கொண்டு வந்த பால் முழுவதும் கொட்டியது. இதே சம்பவம் மூன்று நாட்கள் தொடர்ந்திட, செய்வது அறியாது திகைத்த அந்த பெண், தனது கணவனிடத்தில் கூறினாள். மனைவியின் கால் இடற காரணமான மரத்தின் வேரை வெட்டி வீழ்த்த கோடாரியுடன் வந்தான். அவளது கணவன் கோவிந்தன்.

முன்னால் இடைப்பெண் செல்ல, பின்னால் அவள் கணவன் தொடர, வழக்கம் போல் கால் இடறும் அந்த இடத்தில் வந்ததும் பெண்ணுக்கு கால் இடறியது. அதுமட்டுமல்லாமல் கால் இடறி விட்ட அந்த மரத்தினை பார்த்து விட்டான் அவளின் கணவன். உடனே தான் கொண்டு வந்த கோடாரி மூலம் அந்த மரத்தினை வெட்டினான். வெட்டுப்பட்ட மரத்தின் வேரில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்தது.  உடனே அதிர்ந்து போன கணவன் மனைவி இருவரும் செய்வதறியாமல் தவித்து நின்றனர். அப்போது அசரீரி கேட்டது. ‘‘கோவிந்தனே கவலை படவேண்டாம். நான் இவ்விடத்தில் வாசம் செய்பவன். என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. என்னை பூஜித்து வாருங்கள். உங்கள் வாழ்வை வளமாக்குவேன்’’ என்றது.

அதற்கு கோவிந்தன், ‘‘தினமும் பூஜிக்க எனக்கு வழியுமில்லை, அதற்கு வகையுமில்லை, வருமானமும் இல்லை’’ என்றதும், மாதத்தின் முதல் சில நாட்களில் அபிஷேகத்துடன் பூஜையும், ஆண்டுக்கு ஒரு முறை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் சைவ படையல் வைத்து உற்றார் உறவினருடன் பூஜை செய். இந்த இடத்திலே உன்னால் இயன்ற வகையில் கோயில் கட்டு. பூஜிக்கும் உன்னை மட்டுமல்லாமல் என்னை நாடி வரும் யாவருக்கும் வேண்டிய உதவிகள் செய்வேன்’’ என்றது. அவர்கள் உடனே ஊர்மக்களிடம் வந்து நடந்ததை சொல்ல, கோயில் கட்டும் பணி தொடங்கியது. கோயில் கட்டும் பணியை நிர்வகித்து வந்தவர் கனவில் சுவாமி யானை மேல் அமர்ந்து வந்துள்ளார்.

இரு தேவியருடன் அமர்ந்துள்ளார். யானை மேல் வருபவர் சாஸ்தா என்பதால் அதை நினைவில் கொண்டு அமர்ந்த கோலத்தில் பூரண, புஷ்கலையுடன் சாஸ்தா இருப்பது போன்று சிலை அமைத்து வழிபட்டு வந்தனர். சத்திரிய ஆழ்வார் சாஸ்தா என்று அழைக்கப்பட்டார். பத்தாம் நூற்றாண்டில் சோழ மன்னன் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் இவ்வூரில் இருந்து 7 கிலோமீட்டர் தென் மேற்கில்  உள்ள பெருங்குளம் ஊரில் வலங்கை மகாசேனை என்ற சோழர்களின் பெரிய படை முகாம் இட்டிருந்தது. படைவீரர்கள் காலையில் முதற்பணியே வழிபாட்டை மேற்கொள்வதுதான். உக்கிர தெய்வங்களை வழிபட்டு வருவதுண்டு. இப்பகுதியில் சாஸ்தா கோயிலை தவிர வேறு கோயில்கள் ஏதும் அப்போது இல்லை. சாஸ்தா சாந்தமாக அருள்பாலிப்பவரானாலும், அவரும் போர் வீர தெய்வம் தான்.

அவதார புருஷன்தான். அதன் காரணமாக அந்த சோழர்களின் பெரும் படை வீரர்கள் சாஸ்தாவை வணங்கி வந்தனர். பெரும்படையினர் வழிபட்ட சாஸ்தா என்பதால், இவர் பெரும்படை சாஸ்தா என்றழைக்கப்பட்டார்.  இக்கோயிலின் சந்நதி முன்பு குதிரை மேல் வீரன் ஒருவன் இருப்பது போன்று சுதை சிற்பம் உள்ளது. அவரை பட்டாணி சாமி என்று அழைக்கின்றனர். காலப்போக்கில் மக்கள் இதனை புரிந்து கொள்ளாமல் இதனைப் பட்டாணி சாமி என வழங்கத் தொடங்கி விட்டனர். சங்கிலி பூதத்தார் நின்ற கோலத்தில் பெரிய ரூபத்தில் உள்ளார். கணவன், மனைவியிடையே பிரச்னை, அண்ணன், தம்பிகளிடையே பிரச்னை, மாமியார், மருமகள் பிரச்னை என எந்த பிரச்னையானாலும் இந்த கோயிலுக்கு சென்று பெரும்படை சாஸ்தாவை மனம் உருகி வழிபட்டால் அப்பிரச்னைகள் விலகி, வாழ்வில் நலம் கூடுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பெரு வாழ்வு அளிக்கிறார் பெரும்படை சாஸ்தா. இந்தக் கோயில் ஸ்ரீவைகுண்டம் சாயர்புரம் சாலையில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இருவப்பபுரத்தில் அமைந்துள்ளது.

சு. இளம் கலைமாறன்,

படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jetairways_acci

  பயணிகளை கலங்கடித்த ஜெட் ஏர்வேஸ் - காது, மூக்கில் ரத்தம் காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

 • thirupathieight

  திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

 • 21-09-2018

  21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்