SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துயர் தீர்க்கும் நல்லதங்காள்

2017-06-03@ 10:17:37

நம்ம ஊரு சாமிகள்  : அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர்

வீட்டுப் படியிறங்கி வந்த நல்லதங்காள் முற்றத்து மரத்தின் வேர் தட்டி முண்டியடித்து விழப்போனாள். ‘‘பார்த்து… ’’என்று குரல் கொடுத்தான் காசிராஜன். நடந்து வருகிறாள் பிள்ளைகளோடு கானகம் வழியாக பசி என்று அழுத பிள்ளைகளுக்கு பாதையோரம் நின்ற மரங்களின் கனிகளை பறித்து கொடுத்து தான் பிறந்த வளர்ந்த கதைகளை பேசிபடியே நடந்து வருகிறாள். மதுரை கானகம் வழி வந்தவளுக்கு அதுக்குமேல் வழி தெரியவில்லை. திக்கு தெரியாமல் தவித்தாள். நடந்து வந்த அசதியிலே இளையமகள் தூங்கி விழுகிறாள். உடனே அங்கேயிருந்த மரத்தின் கீழ் அமர்ந்தாள் மடியிலே பிள்ளைகள் படுத்து தூங்குகிறது. மகன்கள் மூன்று பேர் மட்டும் அருகிலே நிற்கிறார்கள். அவர்களிடம் அண்ணன், அண்ணி தன்னை எப்படி வரவேற்கப்போகிறார்கள் என்பதை பெருமைப்பட கூறிக்கொண்டிருந்தாள்.

அப்போது மகன்கள் பசிக்குதம்மா என்று கூற, நல்லதங்காள் கதறி அழுதாள். அந்த சத்தம் கேட்டு வேட்டையாட நல்லதம்பியுடன் வந்த வேட்டைக்காவலர்கள் ராஜா, ஒரு பெண்ணின் அழுகுரல் கேக்கிறதே என்று கூற, யார் என்று பார்த்து வாருங்கள் என அனுப்பினான் நல்லதம்பி, காவலர்கள் வந்து பார்க்கின்றனர். யாரம்மா நீ, இந்த வனத்துக்கு ஏன் வந்தாய் என்று கேட்க, அவள் என் தகப்பன் ராமலிங்க சேதுபதி, தாயார் இந்திராணி, உடன் பிறந்தவன் ஒருத்தன் அர்ச்சுனாபுரம் ஆளும் நல்லதம்பி என்றாள். உடனே, வேகம் கொண்டு எழுந்த காவலர்கள். இதுகுறித்து நல்லதம்பியிடம் கூற, விரைந்து வந்தான் தங்கை இருக்கும் இடம்தேடி, ‘‘தாயி, உன்னை இந்த கோலத்திலா பார்க்க வேண்டும், எண்ணை இல்லாத தலையும், தன்னை அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு மெலிந்த தேகமும் ஏன் இந்த நிலை, என்று கேட்க, நடந்ததை கூறுகிறாள் நல்லதங்காள்.

காவலர்களிடம் என் மருமக பிள்ளைங்க பசியோடு இருப்பார்கள். நம்மிடம் இருக்கும் கனிகளை எடுங்கள் என்று கூறி வாங்கி, அதை அவர்களிடம் கொடுக்க, எந்த பிள்ளையும் வாங்க வில்லை. உடனே, தங்கையிடம் உன்னை நான் பாராட்டுகிறேன். கடும் பசியிலும் கண்டவர் கொடுத்ததை வாங்க விரும்பாத உன் பிள்ளைகளை எண்ணி பெருமையடைகிறேன். ஆமா, அண்ணா, இதனால தான் இவர்களை விட்டு விலகமுடியாமல், உன்னிடத்தில் உதவிகூட கேட்க வரமுடியவில்லை. தகவல் கூறி ஓலை அனுப்பியிருந்தால் ஓடி வந்திருப்பேன் என்றான். நல்லதங்காள். தாய்மாமன் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பிள்ளைகளிடம் கூற, அதன் பின்னரே அவர்கள் கனிகளை பெற்று உண்டனர்.

நான் வந்த வேலை முடியவில்லை, இரண்டு தினங்களில் இல்லம் திரும்புவேன். நீ வீட்டுக்கு செல், வீட்டில் அண்ணியார் இருக்கிறார். உனக்கு வேண்டும் உபகாரம் செய்வாள். உண்டு ஓய்வு எடு, என் மருமக பிள்ளைகள் கொஞ்சி விளையாட புலி, கரடி குட்டிகளுடன் வருகிறேன் என்றுரைத்து விட்டு, அவர்களை காவலர்கள் துணையுடன் அனுப்பி வைக்கிறான். இரண்டு காவலர்கள் துணையுடன் அர்ச்சுனாபுரம் எல்லை வந்ததும். இனி நான் சென்றுவிடுகிறேன். நான் பிறந்த ஊர். இனி நீங்கள் செல்லலாம் என்று கூறி அந்த காவலர்களை அனுப்பினாள். ஆசை, ஆசையாய் எதிர்பார்ப்போடு வருகிறாள். நல்ல தங்காள் வருவதை பார்த்து ஊரார்கள் நலம் விசாரித்தனர். அதில் ஒரு பணிப்பெண் சென்று நல்லதம்பி மனைவியிடத்தில் சொல்கிறாள் நல்ல தங்காள் வருகிறாள் என்று.  உடனே மொய்குழலாள் நாயகி, வீட்டின் முன் அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்களையும், தான் அணிந்திருந்த ஆபரணங்களையும் வீட்டுக்குள் கொண்டு பதுக்கி வைக்கிறாள்.

வாசலில் இருந்து மதனி, மதனி என்று குரல், யாரு என்றபடி நடை தளர்ந்து நோயுற்றவள் போல் வருகிறாள். அப்போது அங்கே கிடந்த மாங்கனிகளையும், வாழைப்பழத்தையும் குழந்தைகள் எடுத்து கடிக்கின்றன. உடனே அவற்றை பறித்து, இது பூசைக்கு வச்சிருக்கு அதப்போய் எடுக்குது உன் பிள்ளைங்க, என்றவளிடம், சினம் கொள்ளாமல் மதனி, பிள்ளைங்களுக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கொடுங்க என்று கேட்க, உடம்பு இயலாம எதுவும் செஞ்சு சாப்பிட முடியாம நானிருக்கிறேன். இந்தா பானை, சட்டி, கேப்பை மாவும் இருக்கு, கூழு காய்ச்சி கொடு, அடுப்பு எரிக்க விறகு என்ற கேட்ட நல்லதங்காளிடம் பச்ச தென்னை மடலிருக்கு முற்றத்து அடுப்பு சும்மா இருக்கு முடிஞ்சா செய், என்னால பேச கூட முடியல என்று கூறி கதவை வேகமாக சாத்திவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறாள்.

பானை எடுத்தாள் பத்துக்கும் மேல ஓட்டை,
‘‘படைத்தவனே பரமசிவனே  நான்
பத்தினி என்றால்  ஓட்டை
பாத்திரம் அடைபடவேண்டும்

பச்ச மட்டை அடுப்பெரிய வேண்டும்’’ என்று கூற மறுகனமே பாத்திரம் அடைப்பட்டு பச்சை மட்டை எரிந்து கூழு தயாரானது. பசியின் கொடுமையால் கூழு அருந்த பிள்ளைகள் ஆவலாய் இருக்கின்றனர். ஆலாய் பறக்கின்றனர். அவர்களிடத்தில் நல்லதங்காள் ஆக்கப்பொறுத்தீர்களே, ஆற பொறுக்கமாட்டீர்களா என்று கூறிக்கொண்டு பகிரிந்தளித்து பரிமாற வாழை இலை கேட்க, மதனியை அழைத்தாள். எழுந்து வரவில்லை. கதவை தட்டுகிறாள் திறக்கவில்லை. பசியின் வேகத்தில் குழந்தைகளும் துடிதுடித்து செய்வதறியாமல் கதவை வேகமாக தட்டுகின்றனர். ஆத்திரம் கொண்டு வந்தாள் மொய்குழலாள் நாயகி, வந்த வேகத்தில் கூழு இருந்த பானையை எட்டி உதைத்து கொட்டிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

ஏழை வீடென்றால் அக்கம் பக்கத்தினர் உதவ வருவார்கள், பெரிய வீட்டில் எது நடந்தாலும் யார் அறிய முடியும் அந்த நிலைதான் நல்லதங்காளுக்கு.
பொங்கி வந்த கோபம், பிள்ளைகளின் பரிதாபம் ஒரு முடிவுக்கு வந்த நல்லதங்காள், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊர் எல்லை கடந்து கானகம் வருகிறாள். வழியில் மாடு மேய்க்கும் இடையர்களை கண்டு அவர்களிடம் பேசுகிறாள். ஆயிரைகள் மேய்க்கும்  ஆயர் குலத்தோரே  இங்கே பாழடைந்த கிணறு உண்டோ என்று கேட்க, அவர்கள் காரணம் கேட்க, ஏதும் சொல்ல மறுத்து வேகமாக நடைபயின்றாள். பாழடைந்த கிணற்றை கண்டாள். கிழக்கே இருந்த சூரியனை கைகூப்பி வணங்கி நின்றாள். அடுத்து கிணற்றை மும்முறை வலம் வந்தாள். மா இலை பறித்து மாங்கல்யத்தை கழற்றி அதில் வைத்தாள்.

முந்தானையை பிடித்து இருந்த இளையமகளை முதலில் கிணற்றில் தூக்கிப்போட்டாள். எல்லா பிள்ளைகளும் அழுதன. வேறு வழியில்லை, வேதனை தீரவில்லை எல்லோரும் சாவோம் என்றுரைத்து வரிசையாய் ஐந்து குழந்தைகளையும் கிணற்றில் போட்டாள். முதலிரண்டு மகன்களும் ஓடினார்கள். அவர்களை விரட்டி பிடித்து வந்து கிணற்றில் போட்டு தானும் குதித்து உயிர் நீத்தாள் நல்லதங்காள். கானகம் வேட்டை முடிந்து வீடு திரும்பிய நல்லதம்பி, மனைவியை பார்க்கிறான். என்ன இது கோலம் அணிகலன்கள் ஏதும் அணியாலம் மூளியாக இருக்கிறாயே, சரி, என் தங்கையையும், தங்கை பிள்ளைகளையும் எங்கே என்று மனைவியிடம் கேட்டான். அவள் கோபித்துக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றதாக கூறுகிறாள்.

உடனே வீட்டுக்கு வெளியே நின்ற பணிப்பெண் ஓடி வந்து நடந்ததை கூறுகிறாள். கோபம் கொண்ட நல்லதம்பி, மொய்குழலாள் நாயகியை, மூளியாக்கினான், கைகால்களை வெட்டி வீழ்த்தி இறுதியில் தலையை துண்டாக்கினான். தங்கை சென்ற இடம் தேடி வருகிறான், எதிரே காசிராஜன் மனைவி, பிள்ளைகளை தேடி வருகிறான். இருவரும் சந்திக்கின்றனர். பின்னர் இருவரும் சேர்ந்து தேட, ஆயர்கள் நல்லதங்காள் சென்ற இடம் கூற, கிணற்றை கண்ட நல்லதம்பி கிணற்றில் இறங்கி, தங்கை மற்றும் குழந்தைகளின் சடலங்களை எடுக்கிறான். பின்னர் சடலங்களுக்கு காரியம் செய்து சிதை மூட்டுகிறான்.

காசிராஜன் மனைவி, மக்களை எண்ணி, வேதனையுற்று இடுப்பில் சொருகி இருந்த வாளை மண்ணில் ஊன்றி, தனது மார்பை அதில் பதித்து உயிரை மாய்த்தான். அதுபோலவே நல்லதம்பியும் உயிரை விட்டான். காலங்கள் கடந்த நிலையில் அர்ச்சுனாபுரத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட துயரத்தால் அவள் சாக முடிவு எடுத்தாள். அப்போது அவளது மகள் மேல் ஆவியாக வந்திறங்கிய நல்லதங்காள் என் மண்ணில் இனியாரும் துயரத்தால் சாக கூடாது. துயரத்தால் மாண்ட என்னையும், என் குழந்தைகளுக்கு படையலிட்டு பூசை செய்து வாருங்கள். நான் உங்களை காத்தருள்வேன். என்று கூறினாள். அதன் படி நல்லதங்காளுக்கு அர்ச்சுனாபுரத்தில் கோயில் கட்டப்பட்டது. அவள் கூறியது போலவே தன்னை நாடி வருபவர்களை வாழவைக்கிறாள் நல்லதங்காள்.
இக்கோயில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊரிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது.

(சென்ற இதழ் தொடர்ச்சி)

சு.இளம் கலைமாறன்

படங்கள்: தெ.சு.திலீபன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்