SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடி வருவோரை வாழவைப்பாள் நல்ல தங்காள்

2017-05-27@ 10:40:07

நம்ம ஊரு சாமிகள் - அர்ச்சுனாபுரம், வத்திராயிருப்பு, விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது அர்ச்சுனாபுரம். இவ்வூரில் அமைந்துள்ளது நல்ல தங்காள் கோயில். மாதம் மும்மாரி மழை பொழியும் பாண்டிய மண்ணில் மதுராபுரி நகரில் பிறந்த மன்னன் ராமலிங்க நல்ல மகாராஜா அர்ச்சுனாபுரத்தை தலைமையிடமாகப் கொண்டு அப்பகுதியை ஆட்சி புரிந்துவந்தார். அவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு மணமாகி ஆண்டுகள் சில கடந்தும் குழந்தை இல்லை. இதனால் வேதனையுற்றனர். மழலை வரம் வேண்டி மகாதேவனை மனதாற எண்ணினாள்  இந்திராணி. அதன் பயனாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகன் நல்லதம்பி ராஜா, இளையமகள் நல்லதங்காள். இருவரும் செல்வ செழிப்போடு வளர்ந்து வந்தார்கள்.

காலம் கடந்து குழந்தைகள் பிறந்ததாலும், தங்களுக்கு முதுமை நெருங்குவதாலும் அரசாள மகனுக்கு முடிசூட்டவும், வீடாள மருமகள் வரவேண்டும் என்பதற்காக மகனுக்கு மணமுடிக்கவும் ராமலிங்கம் எண்ணினார். அதற்கு மகன் இன்னும் பருவம் நிரம்ப வில்லையே என முதலில் மறுத்த அவரது மனைவி இந்திராணி பின்னர் ஒப்புதல் அளித்தார். குந்தளதேசத்தை ஆட்சி புரிந்து வந்த கோமகன் பெற்றெடுத்த மொய்குழலாள் நாயகியை (மூளியலங்காரி), நல்லதம்பி ராஜாவுக்கு மணமுடித்து வைத்தனர். மணமுடித்த பத்தாவது நாள் இந்திராணி இறந்து விடுகின்றாள். மனைவி இறந்த வேதனை ஒருபுறமிருக்க, மகளின் மணக்கோலத்தை தான் காண வேண்டும் என்ற எண்ணமும் உருவானது ராமலிங்க ராஜாவுக்கு. உடனே மகன் நல்லதம்பியை அழைத்தார்.

‘‘மகனே, நான் கண் மூடும் முன், உன் தங்கை நல்லதங்காளுக்கு மணமுடிக்க வேண்டும். அவளை ஒருவன் கையில் பிடித்து கொடுத்துவிட்டால் நான் நிம்மதியாக கண் மூடுவேன்’’ என்று கூறினார். நல்லதம்பி தனது தந்தையிடம், ‘‘தந்தையே, உங்களுக்கு ஒன்றும் ஆகாது. தங்கை, யாதுமறியா குழந்தையப்பா, அவளுக்கு இப்போதே குடும்பச் சுமையா, வேண்டாம் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’’ என்று பதிலுரைத்தார். இது நடந்த ஓரிரு தினங்களில் ராமலிங்க ராஜா இறந்து விடுகிறார். தந்தையும், தாயும் இறந்த நிலையில் அண்ணன் நல்லதம்பியின் பாசம். பெற்றோர் இல்லை என்கிற குறை தெரியாமல் இருந்தது நல்லதங்காளுக்கு. அவளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து கவனித்து வந்தான் நல்லதம்பி.

நல்லதங்காளுக்கு சேவை செய்ய பணிப்பெண்களை அமர்த்தினான். அவள் மனம் கோணாமல் நடந்து கொள்ளவேண்டும் என்று தனது மனைவிக்கும் அன்புக்கட்டளையிட்டான். பருவ வயதை அடைந்த நல்லதங்காளுக்கு மணமுடிக்க விரும்பிய நல்லதம்பி ராஜா, வரன் தேடினான். பல வரன்கள் தேடி வந்த நிலையில் மானாமதுரை காசிராஜன் நல்லதங்காளை மணம் புரிய விரும்பி, பெண் கேட்டு வருகிறார். ஜோதிடர்களை வரவழைத்து பொருத்தம் பார்த்து மணநாள் குறிக்கப்படுகிறது. செல்ல மகள் நல்லதங்காளுக்கு சித்திரையில் மணவிழா நடத்த உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்படுகிறது. சித்திரை திங்கள் புதன்கிழமை அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காளுக்கும், காசி மகாராஜனுக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது.

தங்கத்திலும், வைரத்திலும் ஆபரணங்கள், வெள்ளியிலே பூஜைப்பொருட்கள், வெண்கலம், செம்பு உலோகங்களில் பண்ட பாத்திரங்கள் என அடுக்கடுக்காக சீர்வரிசைப்பொருட்கள் கொடுத்து ஒன்பது பணிப்பெண்களையும் உடன் அனுப்பி வைத்தான். பிறந்த வீட்டிலிருந்து கணவனுடன் செல்லும் நல்லதங்காள் கண்கலங்கினாள். வாய் விட்டு அழுதான் நல்லதம்பி. அப்போது காசிராஜன், ‘‘மன்னவனே, மைத்துனனே, உன் தங்கை, பிறந்த வீட்டில் இருந்த நிலையை விட ஒரு மடங்கு உயர்வான இடத்தில் வைத்து அவளை நான் பார்த்துக் கொள்வேன். தலப்பிள்ளை பிரசவமும் தனது வீட்டிலே நடக்கும். இனி நல்லதங்காளை பற்றி கவலை உமக்கு வேண்டாம். வாழ்த்தி வழியனுப்புங்கள்’’ என்றுரைத்தான் காசிராஜன். அகமகிழ்ந்த நல்லதம்பி அப்படியே அவனை கட்டியணைத்தான்.

கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துவிட்டு, வண்டியிலே ஏற்றி விடுகிறான். ‘‘நீ என்ன கேட்டாலும் தருவதற்கு அண்ணன் இருக்கிறேன்’’ என்ற நல்லதம்பியிடம், ‘‘அண்ணே, நீ கொடுத்ததே போதும். நான் இனி நம்ம வீடு வரும்போது பச்ச சேலை ஒண்ணு வாங்கி கொடு அண்ணே, என் வாழ்க்கை பசுமையாய் அமையும்’’ என்று கூறிய தங்கையை பார்த்தான். உதடு திறந்து பேச முடியாமல் தவித்த நல்லதம்பி, தங்கையின் உச்சி முகர்ந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தான். இரட்டை குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியிலே கணவனும் மனைவியும் செல்ல, பின்னால் குதிரை வண்டிகளில் சீர் வரிசைப்பொருட்களும், பணிப்பெண்களும் செல்ல, அந்த வண்டிகளைத் தொடர்ந்து மாட்டு வண்டிகளில் தானிய வகைகளும், கனி வகைகளும் சென்றன.

மானாமதுரை எல்லையிலே மேள தாளம் முழங்க, ஆடல், பாடலோடு வரவேற்பு நடந்தது. மனமகிழ்ந்து கணவன் கரம் பற்றினாள் நல்லதங்காள். இருவரின் இனிதான இல்லற வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளில் ஏழு பிள்ளைகள் பெற்றாள் நல்லதங்காள். முதல் பிறந்த நான்கும் ஆணாக, பின் பிறந்த மூன்றும் பெண்ணாக ஏழு பிள்ளைகள். நன்றாக இருந்த வாழ்க்கையில் வந்ததே புயல். மண்ணும் பொன்னாகும் மானாமதுரையிலே தலை விரித்தாடியது தண்ணீர் பஞ்சம், தானிய தாவரங்கள் கருகியது. உணவுப் பஞ்சம் வாட்டியது. ஆடு, மாடுகள் மடிந்தது. பொன்னும், பொருளும் விற்று வயிற்றை நிரப்பும் நிலைமை வந்தது. சீர் வரிசை பொருட்களும், உயர் தர சேலை துணிமணிகளும் ஓராண்டு உணவுக்கே சரியாய் போனது.

மாதம் முடிந்தால் மறு வேளை உணவின்றி மடிய வேண்டியதுதான் என்ற நிலையில் காசிராஜன் அழைத்தான் ‘‘நல்ல தங்காள், நாம வேறு இடம் சென்று வேலி விறகெடுத்து அதை விற்று பிள்ளைகளை காப்பாற்றுவோம். வா, போகலாம்’’ என்றுரைத்தான். ‘‘நான், ராமலிங்கம் இந்திராணி மகள் நல்லதம்பி ராஜாவின் தங்கை, விறகு விற்று வயிறு நிரப்ப வேண்டிய நிலை எனக்கில்லை. எங்க அண்ணன் கோட்டை கட்டி வாழ்கிறான். யானை கட்டி சோறு போடுகிறான். எனக்கும், என் பிள்ளைகளுக்கும் சோறு போடாமலா போயிருவான். வாருங்கள் நாம் அங்கே போகலாம்’’ என்றாள்.

‘‘பிழைப்புக்கு வழியின்றி பஞ்சத்தால் பெண் எடுத்த வீட்டில் தஞ்சம் செல்வது என்குலத்து ஆடவனுக்கு அழகல்ல. அதனால் நான் வருவது சரியல்ல’’ என்றான். ‘‘அப்படியானால் நானும், பிள்ளைகளும் செல்ல உத்தரவு கொடுங்கள் அத்தான்’’ என்று உருகி பேசினாள். ‘‘என் உத்தமி நீ உள்ளம் உருக கேட்கிறாய் சென்று வா, திரட்டப்பட்ட செல்வங்கள் கைவிட்டுப்போயின, பெற்றெடுத்த நம் செல்வங்களை பத்திரமாக பார்த்துக்கொள்’’ என்று கூறி அனுப்பி வைத்தான்.

சு.இளம் கலைமாறன்

படங்கள்: தெ.சு. திலீபன்

(நல்ல தங்காள் தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்