SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செழுமையான வாழ்வு தரும் செங்கிடாக்காரன்

2017-05-20@ 10:14:33

நம்ம ஊரு சாமிகள் - வடுகபற்று, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ளது பொடியன்விளை. இவ்வூரில் அமைந்துள்ள பூ உளங்கொண்டாள் கோயிலில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் செங்கிடாக்காரன். கயிலாய மலையில் சிவபெருமான், உமாதேவியிடம் மறை பொருள்களை உணர்த்திக் கொண்டிருந்தார். அப்போது தந்தையும், தாயும் என்ன ரகசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டு அதை கவனிக்க முருகபெருமான் வண்டு ரூபம் கொண்டு தாயாரின் கூந்தலுக்குள் ஒளிந்திருந்தார். அகிலத்தையே காத்தருளும் அகிலாண்டேஸ்வரியான உமாதேவி இதை தெரிந்து கொண்டாா். இருப்பினும் மகனின் விளையாட்டை ரசித்தாரே தவிர தடுக்கவில்லை. இதை ஞானத்தால் உணர்ந்த சிவபெருமான், மலைமகளே! என்ன இது, ‘‘வேலவா, பெற்றவர்களை மதியாமல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் நீ கடலில் மீனாக போக கடவது.

மகன் மழலை குணத்தில் தவறு இழைத்தபோதும் அதை தடுக்காமல் ரசித்த மலைமகளே நீ அதி அரசனுக்கு மகளாக மானிடப்பிறவி எடுக்கக்கடவது என்று சபித்தார். உடனே உமா தேவி ‘‘எங்களுக்கு சாப விமோசனம் கிடைப்பது எப்போது என கேட்க, அதற்கு சிவபெருமான் நீ பருவ வயது நிரம்பும் போது, நான் வந்து உன்னை மணம் புரிவேன். அப்போது மகர மீனாக இருக்கும் முருகனும் விமோசனம் பெறுவான் என்றுரைத்தார். அதன்படி மங்கைபதி பகுதியை ஆட்சி புரிந்து வந்த அதி அரசனின் மகளாக உமாதேவி அவதரித்தாள். பருவம் வந்த பார்வதி தேவியை மண முடிக்க சிவபெருமான் பூலோகம் புறப்படுகிறார். அந்த நேரம் முனிவர்களை அழைத்த சிவன், தான் பார்வதிதேவியை மணமுடித்து திரும்பும் வரை, கயிலாயத்தை நீங்கள் அனைவரும் காக்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது முனிவர்கள், நாமும் அம்மை அப்பன் திருமணத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவலில், சிவபெருமானிடம் தங்கள் இயலாமையை எடுத்துக்கூறினார். சுவாமி, யாராவது வந்து திரவியங்களை களவாடிச் செல்ல முயன்றால் தடுப்பதற்கும், அவர்களோடு மோதுவதற்கும் உடலிலும், மனதிலும் பலமில்லையே எங்களுக்கு’’ என்று கூறினர். அப்போது சிவனார், ‘‘என் நாமம் கூறி யாகம் வளருங்கள் அதில் பிறப்பான் ஒருவன். மானிட ரூபம் கொண்டிருப்பான், மாண்ட பிணங்களையும் தின்றிருப்பான்,  பூத செயலை கொண்டிருப்பான். நீங்கள் ஏவினால் செய்து முடிப்பான். அழைத்தால் தாவி வந்து நிற்பான். மொத்தத்தில் கயிலாய மண்ணை காத்து நிப்பான்’’ என்றுரைத்தார்.

சிவன் கூறியதன்படி, நந்தி நாரதர், உருத்திர வாள்முனி, ஓமமுனி, சக்திமுனி, விசுவாசமுனி, தக்கமுனி, வசிட்டமுனி ஆகியோர் கூடி, கைலாய நல்லபுரத்தில் வேள்விக்குழி வெட்டி அணல் வளர்த்தனர். வேள்வியில் பிறந்தான் செங்கிடாக்காரன். முனிவர்கள் அவனை மண் காத்த பெருமாள் என்று அழைத்தனர். மண் காத்த பெருமாளை கயிலாய காவலுக்கு வைத்துவிட்டு சிவன், பார்வதி திருமணம் காண முனிவர்கள் சென்றனர். சிவன் திருமணம் முடிந்து கயிலாயம் வந்ததும் செங்கிடாக்காரனைப் பார்த்து, ‘‘உனது கோரப்பசிக்கும், உயிர்பலித்து உண்ணும் உனது செயலுக்கும் கயிலாயத்தில் உனக்கு இடமில்லை. ஆகவே பூலோகம் செல்ல வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அப்படியானல் எனக்கு ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும், என்னை நம்பி வணங்கும் அடியவரை காக்கும் வரமும் வேண்டும் என்று மண் காத்த பெருமாள் கேட்க, சிவபெருமானும் அப்படியே ஆகட்டும். நீ கேட்டதை பெற்றாய் என்றுரைத்து பூலோகம் அனுப்பி வைத்தார். சிவபெருமானிடம் வரம் பெற்ற செங்கிடாக் காரன், தனது உடன் பிறந்தவளான பொற்கவலக்காரியோடு அகத்தியர் வாழ்ந்த சாஸ்தா காவலில் இருந்த பொதிகை மலைக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சுடலை காவலுக்கு உட்பட்ட காக்காச்சி மலைக்கு வந்து மரச்சோலையில் வாசம் செய்தார். காலங்கள் சில கடந்த நிலையில் லண்டன் நாட்டைச் சேர்ந்த மூவர் புதிதாக கப்பல் கட்ட எண்ணினர். அவர்கள் இந்தியா வந்தனர்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்களை கண்டறிந்து அந்த பொறுப்பினை அவர்களிடம் ஒப்படைத்தனர். பட்டம் கட்டியர்கள் அறுபது பேர், பெரியதுரை, சின்னதுரை, பறங்கித்துரை ஆகிய மூன்று பேருடன் கப்பலுக்கு மரம் வெட்ட காக்காச்சி மலைக்கு வருகின்றனர். செங்கிடாக்காரன் உறைந்திருந்த மரத்தையும் சேர்த்து வெட்டிக்கொண்டு வருகின்றனர். கப்பல் கட்டப்பட்டு வெள்ளோட்டமாக பயணம் செய்ய தொடங்கினர். மேற்கு நோக்கி சென்றுவிட்டு மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்புகின்றனர். கப்பல் கேரளம் கருநாகப்பள்ளி கடந்து திருவனந்தபுரம் கடந்து குளச்சல், பள்ளம், மணக்குடி, தலக்குளம், கோவங்குளம் கடந்து முட்டபதி வரும் போது சூறாவளி காற்றுடன் பேரலை வந்து கப்பல் கடலில் மூழ்கியது.


செங்கிடாக்காரன் பருந்து ரூபம் கொண்டு பறந்து சென்று, வெங்கலராசன் கோட்டைக்கு வந்தார். வெங்கலராசன் கோட்டைக்குயில் வந்திறங்கிய செங்கிடாக்காரன் தான் வந்ததை அரசன் அறிய வேண்டும் என்று தனது திருவிளையாடலை நிகழ்த்தினார். ஊரில் நோய் நொடிகளை ஏற்படுத்தினார்.

மரங்கள் தானே முறிந்து விழ வைத்தார். கடல் நீர் ஊருக்கு பெருக்கெடுத்து வரச்செய்தார். அச்சம் கொண்ட மன்னன், கேரள நம்பூதிரிகளை வரவழைத்து சோழி போட்டு பார்க்கிறார். இது வாதைகளுக்கும் பெரியது, பூதங்களை விடவும் கொடியது என்ன வென்று தெரியவில்லை எங்களுக்கு, ஆனால் ஒரு அசுர சக்தி உங்கள் கோட்டைக்குள் வந்துள்ளது என்று கூறி சென்றனர். உடனே வெங்கலராசன் மாந்திரீக வாதிகளை வரவழைத்து பார்த்தார். அதில் வந்திருப்பது மண் காத்த பெருமாள் என்ற செங்கிடாக்காரன் என்பது தெரியவந்தது.

உடனே அவனுக்கு நிலையம் கொடுத்து செங்கிடா பலி கொடுத்து சாந்தப்படுத்தினர். செங்கிடாக்காரனும் ஆங்காரம் தணிந்து சாந்தமாகி, அடி பணிந்தவர்களுக்கு அருள் புரிந்தார். காலங்கள் உருண்டோட, அப்பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு செங்கிடாக்காரன் குல தெய்வமானான். செங்கிடாக்காரன் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பரவலாக கோயில் கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்த வடுகன்பற்று அருகேயுள்ள பொடியன்விளை என்ற ஊரில் பூ உளங்கொண்டாள் கோயிலில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் செங்கிடாக்காரன்.

சு. இளம் கலைமாறன்

படங்கள்: குமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்