SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவங்களைக் கரைக்கும் நாசத்தீர்த்தம்

2017-05-19@ 10:14:10

அருணகிரி உலா  - 28

கி.பி. 10701118 ஆண்டுகளில் சோழர்களால் செங்கற்களால் அமைக்கப்பட்ட மயிலாடு துறை மயூரநாதர் கோயில், 1928ல் கருங்கற்களால் மாற்றிக் கட்டப்பட்டது. வெளிப் பிராகாரத்தில் மதிலை ஒட்டி, கிழக்கு முகமாக ஒரு சிறு கோயில் உள்ளது. அங்கு லிங்க மேனியாக எழுந்தருளியுள்ளார் ஆதி மயூரநாதர் [முன்பு உடையார் கோயில் என்று வழங்கப்பட்டது. உள்ளே ஒரு மயில் உருவம் உள்ளது. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய பாடல்களை அவர்களே பாடக் கேட்டவர் ஆதி மயூரநாதரே என்று கூறுவர். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நம்பப்படுகிறது. 151315ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட, 164 அடி உயரமும், ஒன்பது நிலைகளும் கொண்ட ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். கிழக்கு மற்றும் வடக்கு கோபுர வாசல்கள் மட்டுமே உபயோகத்திலுள்ளன. கோயிலுள் நுழைந்ததும் நீராழி மண்டபமுடைய பிரம்ம தீர்த்தத்தைக் காணலாம்.

இங்குதான் விசேஷ நாட்களில் தீர்த்தவாரியும், வசந்தோற்சவத்தின்போது தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன. கோபுரத்தை அடுத்து உள்ளே செல்லும்போது 16 கால் மண்டபமும், இரண்டாவது கோபுரத்தைக் கடக்கையில் 100 கால் மண்டபமும் தென்படுகின்றன. கொடிமரம், பலிபீடம் கடந்து செல்லும்போது மிகப் பெரிய உருவத்துடன் எழுந்தருளியிருக்கும் ‘பெரிய பிள்ளையார்’ என்ற பெயருடைய தல விநாயகரைத் தரிசிக்கலாம் [விநாயகர் சதுர்த்தி அன்று கோயிலில் காணப்படும் 21 விநாயகர் திருவுருவங்களுக்கும் மோதக நிவேதனத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன]. கருவறைக்குள் சுவாமியையும், அம்பாளையும் ஒருசேரத் தரிசிக்கலாம். தஞ்சையை ஆண்ட முதலாம் குலோத்துங்கன் காலத்தில்தான் சுவாமி திருக்கோயில் என்றும், அம்பிகை திருக்கோயில் என்றும் தனித்தனியாக இரு சந்நதிகள் அமைக்கப்பட்டன என்று சோழர்கள் வரலாறு தெரிவிக்கின்றது.

மூன்றாம் கோபுர வாயில் கடந்து மூலவர் சந்நதியை நோக்கிச் செல்லலாம். அருகே மிக உயரமான மகா மண்டபம் உள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் விநாயகர் உருவங்களே உள்ளன. இடது கோடியிலும், வலது கோடியிலும் முறையே துவார விநாயகரும், துவார சுப்ரமணியரும் உள்ளனர். மூலவர், பிரம்மன் வழிபட்டதால் பிரம்மலிங்கம் எனவும், தேவர்களுக்குக் குறைவற்ற அருள் புரிந்தமையால் வள்ளலார் எனவும், மயிலுருவில் வந்து நடனமாடி இறைவியை ஆட்கொண்டதால் கெளரீ தாண்டவேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். எதிரே அமைந்துள்ள பாவநாசத் தீர்த்தம், நம் பாவ மூட்டையைக் கரைத்து விடும் என்பதால், அமாவாசை, பெளர்ணமி மற்றும் கிரகண காலங்களில் மக்கள் அதில் நீராடுகின்றனர்.

ஞானசம்பந்தர் மயூரநாதரைத் தரிசிக்க வந்து கொண்டிருந்தபோது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இறங்கும் துறை தெரியாமல் தத்தளித்தவருக்கு மயூரநாதர் வேடன் உருக்கொண்டு துறையைக் காட்ட, காவிரிநீர் வடிந்து வழிவிட்டது. இதனால் இறைவன் துறை காட்டும் வள்ளலாக கிழக்குத் திசையில் அமர்ந்தார். இந்த இடம் திருவிளநகர் எனப்படுகிறது. சிலகாலம் தன் மாணாக்கரோடு இங்கு தங்கிய அகத்தியர், சிறு குளமொன்றும் அகத்திய தீர்த்தம் விநாயகர் ஆலயமொன்றும் அமைத்தார். ஊரைச் சுற்றியுள்ள ஏழு தலங்களிலிருந்து சப்த மாதாக்களும் வந்து மயூரநாதரை வணங்கி அருள் பெற்றுச் சென்றனர். திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர் முதலானோரோடு கழுகு, கிளி, குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை ஆகிய உயிரினங்களும் இவரை வழிபட்டுப்பேறு பெற்றுள்ளன.

மயில் வடிவம் நீங்கி இயற்கையான திருஉருவம் உற்ற அம்பிகையின் பிரார்த்தனைப்படி சபையொன்று நிருமித்து, அதில் மயூரநாதர் தாண்டவமாடி அருளி, திருமால் முதலானோர் வேண்டுகோளுக்கிணங்க அம்பிகையை இங்கே திருமணம் செய்து கொண்டார் என்பர். அந்த சபைக்கு ‘ஆதிசபை’ என்றும், அத் தாண்டவத்திற்கு ‘கெளரீ தாண்டவம்’ என்றும் பெயர்கள் உள்ளன. இத்திருமண நிகழ்ச்சி ஆண்டுதோறும் துலாமாத உற்சவத்தின் ஏழாவது நாள் மாலை நடத்தப்படுகிறது. கர்ப்பகிரகத்தின் இடப்புறம் சபா மண்டபத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியர் எழுந்தருளியுள்ளனர். வடபுறம் நேர் எதிரே நடராஜர் சந்நதி உள்ளது. தெற்குப் பிராகாரத்தில் விநாயகர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள் மற்றும் அறுபத்து மூவர் உள்ளனர். கோட்டத்தில் லிங்கோத்பவரும், அவரது நேர் எதிரே முருகப் பெருமானும் எழுந்தருளியுள்ளனர். இங்கு தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளையின் கீழ் பூஜைகளும் அனைத்துத் திருவிழாக் களும் நடைபெறுகின்றன.

‘‘எந்தையே வருக, எனை ஈன்ற தாயே வருக,
என் கண்மணி வருக வருக,
எண்ணனந்தம் கோடி மன்மதாகாரமாம்
என்றும் இளையோன் வருகவே,
மைந்தனே வருக, மணியே வருக, வள்ளலே
வருக, வைப்பே வருகவே,
மாயூரநகர் மேவு கேயூரமணி புய
மயூரவாகனன் வருகவே’’


என்று மயிலாடுதுறை முருகப் பெருமானைக் குறித்து காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் பாடியுள்ளார். முருகப் பெருமான் ஒரு முகமும் நான்கு சுரங்களும் கொண்டு நின்ற கோலத்தில் தேவியருடன் விளங்குகிறான். உற்சவமூர்த்தி வேலும் வில்லும் ஏந்தி நிற்கிறார். அருணகிரிநாதர் இங்கு பாடியுள்ள பாடலைப் பார்ப்போம்:

‘‘வமிச மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும்
மறுகிட உக்ரக் கொடும்பையான புன்
மதி கொடழித்திட்டு இடும்பை ராவணன்
மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம் விளைக்கக் குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டிலங்கு மாயவன் மருகோனே
எமது மலத்தைக் களைந்து பாடென
அருள அதற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட்டுயர்ந்த பேறருள்
முருகோனே
எழில் வளை மிக்கத் தவழ்ந்துலாவிய
பொனிநதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டியூருறை
பெருமாளே!


‘வமிசமிகுத்து’ என்று ஆரம்பித்து ‘மருகோனே’ என்று முடியும் வரிகளில், ‘தனது வம்சம் பெருக, உலகமெல்லாம் கலக்கமுற, கொடிய இழிய புத்தியைக் கொண்டு அழிவுச் செயல்களை மேற்கொண்டு துன்பம் விளைவித்த ராவணன், குற்றமில்லா கற்பில் உயர்ந்த சீதைக்குத் துக்கம் விளைவிக்க, வானர சேனையின் உதவியால் அந்த ராவணனது குலத்தை அறுத்த திருமால் மருகனே!’ என்று முருகனைப் புகழ்கிறார். ‘எமது’ என்று தொடங்கி ‘முருகோனே’ என்று முடியும் வரிகளில் அருணகிரியாரின் வாழ்க்கை வரலாறு அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் தன்னை முருகன் காத்தது குறித்து நன்றி கூறுகிறார். ‘‘எனது மும்மலங்களையும் அறுத்து ஒழித்து ‘என் புகழ்பாடுதி’ என நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன்படி நான் உனைப் புகழ்ந்து பாடிய பாடல்களை மெச்சி, உயர்ந்த கதியை எனக்கு அருளிய முருகோனே’’ என்கிறார்.

‘குரைசுழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே’ என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறார். பந்தணைநல்லூரைக் கந்துகாபுரி எனவும், எட்டுகுடியைக் காஞ்சிரங்குடி எனவும் ரசித்துப் பாடும் அருணகிரியார், இல்லத்தைச் ‘சிகண்டியூர்’ எனக் கூறியிருப்பதும் அருமை! கோயிலின் மேற்குப் பகுதி உள்பிராகாரத்தில் உற்சவர், அம்பாள் சகிதமாக ஐயாறப்பர் உள்ளார். இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் மற்றும் நிருதி லிங்கம் இவற்றைத் தரிசித்துத் திருமாலையும் வணங்குகிறோம். வடக்கு உள் பிராகாரத்தில் நந்தி தேவருடன் லிங்க ரூபமாக உள்ள அண்ணாமலையாருக்காகக் கோயிலில் கிரிவலம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அம்பிகை சந்நதியை வந்தடைகிறோம். நாவுக்கரசர் தேவாரத்தில் இத்தலத்து அம்பிகை, ‘அஞ்சொலாள்’ [அழகிய இனிய சொற்களை உடையவள்] எனப்படுகிறாள்.

காலப்போக்கில் இது ‘அஞ்சலாள்’ என்றாகிவிட்டிருக்கலாம். இதற்கான வடமொழிச் சொல் ‘அபயாம்பிகா’ என்பதால், தேவாரத்திற்குப் பின் வந்த மயிலாடுதுறை இலக்கியங்கள் தேவியை ‘அபயாம்பிகை’ என்றே வர்ணிக்கின்றன. ‘‘நாமங்கள் எப்படி மாறினாலும் அம்பிகை அதே கருணையுடன் திகழ்கிறாள் என்பார் அமரர், முனைவர் செல்வகணபதி அவர்கள்! சிறிய ராஜகோபுரத்துடன், தரை மட்டத்திற்குக் கீழே மூன்று அடியில் அமைந்துள்ள ஆலயத்தில், கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறாள், அபயாம்பிகை. மேற்கரங்கள் இரண்டு, சங்கு, சக்கரத்துடனும், இடக்கரம் தொடை மேலாகவும் வலது திருக்கரம் கிளியை ஏந்தி அபயம் அளிப்பதாகவும் விளங்குகின்றன. 1925ல் நகரத்தார் செய்த இறைப்பணி காரணமாக அபயாம்பிகை சதகம் எனப்படும் 100 பாடல்களும், முத்து ஸ்வாமி தீட்சதரின் கீர்த்தனைகளும் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளன.

‘அறியாமையைப் போக்குவதிலும், பிரத்தியட்சமல்லாத பரலோகத்தின் உண்மையை அறிவிப்பதிலும், அபயாம்பிகை அன்னையைத் தவிர மற்றொரு தெய்வம் அறியேன்; மத்தகஜம் போன்ற நடை அழகுடையவள்; ஜகம் முழுவதும் வியாபித்த பரம்பொருளாவாள்; ஆகாயத்தில் தென்படும் அனைத்திலும் ஒளியிற் சிறந்த சூரியனுடைய கதிக்கு ஆதாரமானவள்; நாதமும் லயமும் சேர்ந்த இசையில் திகழ்பவள்; பாலா, திரிபுர சுந்தரி போன்ற பெயர்களுக்குச் சிறப்பைத் தருபவள்’’ என்று போற்றும் முத்துஸ்வாமி தீட்சிதர் இங்கு 18 கீர்த்தனைகள் பாடியுள்ளார்! அம்பிகை சந்நதியின் இடப்புறம் ஆடிப்பூர அம்மன் சந்நதியும், பள்ளியறையும் உள்ளன. இறைவன் கௌரீ தாண்டவம் ஆடிய நாளான ஐப்பசி 25 அன்று அம்பாள் மயில் உருவமாக எழுந்தருளி ஊரின் நான்கு வீதிகள் மற்றும் காவிரிக்கரை வரை சென்று பின்னர் மாலையில் நான்கு உள் பிராகாரங்களிலும் மயிலாக ஆடிப் பின் அம்பாளாக எழுந்தருளி இறைவனோடு ஐக்கியமாகும் அற்புதக் காட்சி காண்போரைப் பரவசமடையச் செய்யும் என்கின்றனர்.

அம்பிகையின் கருவறையின் தென்புறத்தில் ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளது. அநவித்யாம்பிகை என்ற பெயருடைய இந்த லிங்கத்திற்குப் புடவை அணிவிக்கிறார்கள். இதற்கு ஒரு வரலாறு உள்ளது. நாதசர்மாஅநவித்யா தம்பதி, பல திருத்தலங்களுக்கும் பயணம் செய்து விட்டு முடிவில் திருவையாறு வந்தடைந்தனர். ஐயாறப்பரின் கட்டளைப்படி மயிலாடுதுறை வந்து இறைவனைப் பூசித்தனர். அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்த மாயூரநாதர் ‘எம்மைத் தரிசித்த பலன், உங்களைத் தரிசித்த பின்னரே யாவரும் அடைவர்’ என்றருளினார். கணவன்மனைவி தாங்கள் பூசித்த லிங்கங்களிலேயே ஐக்கியமாயினர். அவை இன்றும் அவ்விருவர் பெயராலேயே வழங்கப்படுகின்றன.

அநவித்யை ஐக்கியமான லிங்கம் என்பதற்கு அறிகுறியாக அவ்விலிங்கத்திற்கு இன்றளவும் புடவை சாத்தப்படுகிறது. சுவாமியைத் தரிசித்து வெளிவாயில் வழியே வந்து இடப் புறத்தில் நோக்கினால் நாதசர்மா சித்தராகக் குடிகொண்டுள்ள லிங்கத்தையும் கண்டு வணங்கலாம். இத்தம்பதியுடன் இங்கு மேற்கே எழுந்தருளியுள்ள ஐயாறப்பர், தன் பரிவாரங்களுடன் அருகிலுள்ள கோயில்களில் சப்தஸ்தான உற்சவமும் கொள்கிறார். தட்சிணாமூர்த்தி சந்நதி அருகே பதினெண் சித்தர்களுள் ஒருவரான குதம்பைச் சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. காலைமாலை திருக்கோயில் பூஜை வேளையில் முதலில் நடராஜருக்கும் பின்னர் இவருக்கும் பூஜை செய்த பின்னரே அனைத்துப் பிற தெய்வங்களுக்கு பூஜை நடைபெறுகிறது.

நாதசர்மா சந்நதிக்கு எதிரில் கணக்கடி விநாயகர் எழுந்தருளியுள்ளார். வருடப் பிறப்பு முதல் நாளன்று இச்சந்நதியில் விநாயகர் முன், வருடப்பிறப்பு சிறப்புச் செய்திகள் படிக்கப்பட்டு இத்திருக்கோயில் கணக்குகள் புதிதாகத் தொடங்கப் பெறுகின்றன. கோயிலின் ஒரு தனிச்சந்நதியில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள் எழுந்தருளியுள்ளனர். ஒருவர் சண்டீஸ்வரர்; மற்றவர் த்வனிச் சண்டர். தான் எப்போதும் சிவ த்யான நிலையில் இருப்பதால் சிவாலய தரிசனத்தை முடித்து இறுதியில் பக்தர்கள் இவரது சந்நதியில் கர ஒலியை மிக மெதுவாக எழுப்பிச் சிவதரிசனப் பலனைப் பெற பிரார்த்திக்க வேண்டும் என்பது சைவ சமய மரபாகும். சிவாலயங்களில் அர்த்த ஜாமப் பூஜை நிறைவில் ஈசனுக்கு உள்ள நிர்மால்ய புஷ்பம், நைவேத்தியம், வஸ்திரம் ஆகிய அனைத்தும் இவருக்கு உரியதாக்கி அன்றைய பூஜைகளை நிறைவு செய்வர். மயில்களைப் போன்றே, பிறவிச் சூழலில் பட்டு அவதியுற்று வந்து அடைக்கலம் புகும் ஆன்மாக்களுக்கு எக்காலத்தும் அபயம் அளிக்கும் அபயாம்பிகையையும் அவள் குமரனையும் வணங்கி அருணகிரி உலாவில் நமது அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்.

(உலா தொடரும்)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்