SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லலிதா ஸஹஸ்ரநாம தேவியர்

2017-05-19@ 10:07:24

ஓம் புவனேஸ்வர்யை நமஹ

காலமாக விரிந்தவள் காளி. தலமாக விரிந்தவள் புவனேஸ்வரி. கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூத்து மலரச் செய்தவள் புவனேஸ்வரியே. புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம் இல்லாத மந்திரமே இல்லை எனலாம். தசமகாவித்யையின் நான்காவது தேவியே புவனேஸ்வரி. புவனம் முழுதும் ஆள்வதால் புவனேஸ்வரி. ஒரு முறை பராசக்தி மூலம் பிரபஞ்சம் தோன்றிய போது சூரிய சந்திரர்கள் மட்டுமே தேவலோகத்தில் இருந்தனர். அவர்களைக் கண்ட ரிஷிகள் தாம் அவர்களுக்கு ஒரு இடத்தைத் தருவதாகவும் அதை வைத்துக்கொண்டு மூவுலகங்களையும் படைக்குமாறும் கேட்டனர். சூரியன் தன் சக்தியால் மூன்று உலகங்களைப் படைத்தார்.

அந்த மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக பராசக்தி தனது சக்தியை ஒரு தேவியாக மாற்றி அந்த சக்திக்கு புவனேஸ்வரி எனப்பெயரிட்டாள்.  அதனாலேயே அவள் ஞானசக்தியாகத் திகழ்கிறாள். அவளை ஆராதித்தால் மனதில் அமைதி தோன்றி வாழ்க்கை வளம் பெறும். பாபங்கள் விலகும். துன்பங்கள் மறையும்.
தேவி புவனேஸ்வரி வசிக்கும் இடம் மணித்வீபம் எனப்படுகிறது. உலகங்கள் எல்லாம் உருவாகக் காரணமாகிய புவனேஸ்வரி உலகங்களைப் படைப்பதற்கு முன் தான் தங்குவதற்குரிய இடம் வேண்டுமென எண்ணி அந்த நினைப்பிலேயே இந்த மணித்வீபத்தைப் படைத்தாள். நவரத்தினங்களால் ஆன பதினெட்டு பிராகாரங்களைக் கொண்டது இந்த த்வீபம். மூவுலகிலும் இதற்கு ஈடான அழகு வாய்ந்த நகரம் கிடையாது. இத்தேவியின் அழகைக் காண இரு கண்கள் போதாது என்பதால்தான் பரமேஸ்வரன் மூன்றாவது கண்ணினைக் கொண்டிருந்தார் போலும்.

அதன் எதிரில்தான் புவனேஸ்வரி வசிக்கும் சிந்தாமணி க்ரஹம் உள்ளது. அதன் மத்தியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உண்டு. அதன் நான்கு புறங்களிலும் சிருங்கார மண்டபம், முக்தி மண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம் என்னும் நான்கு மண்டபங்கள் உள்ளன. அவற்றிற்கு எதிரே பூந்தோட்டமும் புஷ்கரணியும் உண்டு. அங்கு எப்போதும் அகில், சந்தனம் போன்ற தூபங்களின் வாசனை கமழும். இந்த மண்டபங்களைச் சுற்றி அஹாபத்மாடவீ எனும் தாமரை நிறைந்த ஓடையிலிருந்து பூக்களின் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும்.  சிருங்கார மண்டபத்தில் ஜகதாம்பிகை வீற்றிருந்து தேவகான அமுதத்தைப் பருகுவாள். முக்தி மண்டபத்திலிருந்து ஆத்மாக்களின் பாசத்தைப் போக்க முயல்வாள். ஞான மண்டபத்திலிருந்து ஞானோபதேசம் தந்தருள்வாள். ஏகாந்த மண்டபத்தில் இருந்து உலகைக் காப்பதற்குரிய சிந்தனையைச் செய்து கொண்டிருப்பாள்.

மேற்கூறிய சிந்தாமணி மண்டபத்தில் பத்துப் படிகளோடு கூடிய ஒரு மஞ்சம் உண்டு. அதன் கால்கள் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், மஹேஸ்வரர் ஆவர். சதாசிவர் அந்த மஞ்சத்திற்குப் பலகையாக அமைந்துள்ளார். மகாதேவர் புவனேஸ்வரராகக் காட்சியளிக்கிறார். அங்கே ஜகன்மாதா புவனேஸ்வரி ஸர்வாபரண பூஷிதையாக ஸகல தேவதைகளும் புடைசூழக் காட்சியளிப்பாள். சங்கநிதி, பத்மநிதி இரண்டிற்கும் நடுவில் தேவி புவனேஸ்வரரின் மடியில் அமர்ந்து அருள்கிறாள். ஸ்ரீசக்ரதாடங்கங்களை அணிந்து தாமரை போன்ற முகத்துடன், சந்திரப் பிரபை, சூரியபிரபையைத் தலையில் சூடி அருட்காட்சியளிக்கிறாள். சந்தனக்குழம்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ போன்ற வாசனைத் திரவியங்கள் பூசிய ஸ்தனங்கள், சங்கு போன்ற கழுத்து, மாதுளை முத்துகள் போன்ற பற்கள், ரத்தினங்கள் இழைத்த கிரீடங்கள், கங்கையின் சுழல் போன்ற நாபிக் கமலம், மாணிக்கக் கற்களால் ஆன மோதிரம், தாமரை தளம் போன்ற முக்கண்கள், இச்சா, க்ரியா, ஞான சக்திகள் துலங்கத் திகழ்கிறாள்.

லஜ்ஜை, துஷ்டி, புஷ்டி, கீர்த்தி, காந்தி, க்ஷமை, தயை, புத்தி, மேதை, ஸ்ம்ருதி, லக்ஷ்மி போன்ற பணிப்பெண்கள் தேவிக்கு பணிவிடை செய்கிறார்கள். விஜயா, அஜிதா, அபராஜிதா, நித்யா, விலாஸினி, தோக்த்ரீ, அகோரா, மங்களா, நவா ஆகிய பீட சக்திகள் தேவியை சேவிக்கிறார்கள். ரக்தா, சாமுண்டா, பத்ரா, மஹாமாயா போன்றோர் புவனேஸ்வரியின் நாற்புறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்கிறார்கள். ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காப்பாற்றும் திறனுடையவளாகவும் சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்தருள்பவளுமானவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் எனும் மஹா மந்திரம் வர்ணிக்கும் பெருமையுடையவள். துர்க்கா, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்ச சக்திகளின் ஜனனீ.

ஹ்ரீம் மந்திரத்தால் புகழப்படுபவள். புவனேஸ்வரரின் பத்தினி. பாசம், அங்குசம், வரதம், அபயம் இவற்றால் ஜ்வலிக்கும் கர கமலங்கள் உடையவள். தேவியின் கையிலுள்ள பாசம் தன்னை நாடி வரும் பக்தியுள்ளத்தை தன் பால் இழுத்து இறுகக் கட்டி விடுகிறது. பா என்ற தாதுக்குக் காத்தல் என்றும் எங்கும் நிறைந்திருத்தல் என்றும் பொருள். எது பிரபஞ்சத்தைக் காத்து, அதன் அனைத்திலும் நிறைந்திருக்கிறதோ அதுவே பாசம். பாசம் எனில் ஆசையையும் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ராகஸ்வரூப பாசாட்யா எனும் நாமத்தில் ஜீவன்களின் கட்டும் தளையாயுள்ளது பாசம் எனக் கூறப்பட்டுள்ளது. பிறரைக் கட்டுப்படுத்தும் பாசத்தை நான் கட்டுப்படுத்தி  வைத்துள்ளேன் என்பதைக் குறிக்கவும் கட்டுண்டு கிடக்கும் ஜீவன்களை விடுவித்து முக்தியளிக்கத் தன்னால் முடியும் என்பதைக் குறிக்கவும் அன்னை புவனேஸ்வரி பாசம் ஏந்திய கரத்தினளாய் துலங்குகிறாள்.

அங்குசம் பக்தர்களின் அகந்தையை அடக்கிவிடுகிறது. ஜீவராசிகள் குரோத உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். பெரிய மகரிஷிகள் கூட தடுமாறி குரோதத்தில் விழுந்த வரலாறுகள் உண்டு. ஜீவன்களைத் தன் வயப்படுத்தும் குரோதத்தை ஈஸ்வரி தன்வயப்படுத்தி வைத்துள்ளாள். யானையின் மதத்தை அடக்க அதன் பாகனிடம் அங்குசம் இருப்பதைப் போல ஜீவன்கள் கர்வம், அகங்காரம் அடக்கி சாந்தப்படுத்தவே புவனேஸ்வரி தன் கரங்களில் அங்குசத்தைத் தாங்கியுள்ளாள். ‘அம்’ ஆத்மாவையும் ‘கு’ சரீரத்தையும் ‘ச’ மீண்டும் மீண்டும் என்ற பொருளையும் உணர்த்தும். எது சரீரங்களைக் கொண்டு வந்து ஆத்மாவில் இணைக்கிறதோ அதற்கு அங்குசம் என்று பெயர். வரத முத்திரை ‘என் பாதாரவிந்தமே என்றும் கதி என இரு’ என்பதைக் கூறாமல் கூறுகிறது. மேலும் சக்தியுடையவள்தானே கேட்டவற்றையெல்லாம் தரமுடியும்!

எல்லா தேவர்களுக்கும் வரம் கொடுக்கும் சக்தியளித்தவள், ஜீவராசிகள் வேண்டியதை அளிக்கச் சித்தமாயுள்ளாள் என்பதை வரத முத்திரை குறிக்கிறது. பயம் வந்தால் அதைப்போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள். அந்த அபய கரத்தை நினைத்த மாத்திரத்தினாலே சம்சார சூழலில் அகப்படும் பெரிய ஆபத்தினின்றும் விடுபட முடியும். பிறவித் துன்பமே தொலைந்துவிடுகிறது. உதிக்கும் ஆயிரம் சூரியனுக்குச் சமமான செந்நிற ஒளியுடையவள். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் கடார்க்களம் எனும் யந்திரத்தின் மீது தன் செந்தாமரைப் பாதங்களைப் பதித்தருள்பவள். பிறைச் சந்திரனின் கிரணங்களால், அழகிய மணிகளால் ஆக்கப்பட்ட கிரீடத்தைத் தரித்தவள்.

லலித ரூபத்துடன் பிரகாசிப்பவள். ஜகஜ்ஜனனியான புவனேஸ்வரியின் சக்தியால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சக்தியின்றி உலகம் படைக்கப்படவில்லை. ஸ்ரீமாதாவான தேவி ஹரிஹரபிரம்மாதி தேவர்கள் முதல் பிரமாண்டத்தில் உள்ள அனைத்தையுமே படைத்துக் காத்து ரட்சித்து வருபவள். இதை லலிதா ஸஹஸ்ரநாமம் ஆப்ரஹ்மகிரீடஜனனீ என்று போற்றுகிறது. மேலும், கருணையில் கடல் வடிவானவள் என்பதை கருணார ஸாகரா எனும் நாமம் உணர்த்துகிறது. மனிதர்கள் செய்யும் மாபெரும் மன்னிக்க முடியாத கொடிய தவறுகளையும் மறந்து மன்னித்து தடுத்தாட்கொண்டு ரட்சிக்கும் கருணை இந்த புவனமாதாவான புவனேஸ்வரி தேவிக்கு உண்டு. சகல அண்டங்களில் உள்ள சக்திகளுக்குக் காரணமாகவும் ஆதார சக்தியாகவும் இருப்பவள் இந்த புவனேஸ்வரி.

அவள் வலது புறத்தில் நவரத்னமயமான ஆறு ஓடிக் கொண்டிருக்கும். வேண்டுவோர்க்கு வேண்டுவனவற்றை தரும் தன்மை கொண்டது அந்த ஆறு.
சகல புவனங்களையும் நியமித்து நடத்தும் புவனேஸ்வரி தசமகாவித்யா தேவிகளுள் நான்காவது வடிவம் கொண்டவள். இவள் பரம்பொருளின் ஞான சக்தி. அனைத்திற்கும் ஆதாரமான ஆகாசதத்துவமே இவள் திருவுருவம். தேவி மஹாத்மியத்தில் தேவர்கள் தேவியைத் துதிக்கும் நமோதேவ்யை என ஆரம்பிக்கும் துதியில் ‘நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ’ என ஐந்து முறை வருகிறது. பராசக்தி பஞ்சபூதங்களிலும் உறைபவள். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என ஐம்பெரும் தொழில்களையும் புரிபவள். எனவேதான் தேவர்கள் அவளை ஐந்து முறை வணங்குகிறார்கள் போலும்.  தைத்ரீய உபநிஷத் ஐந்து கோசங்களிலும் வேறுபட்டதாயும் பிரம்மம் என்றதுமான பரமாத்ம வடிவம் புவனேஸ்வரியே என்கிறது.

இதை திருமூலர் தன் திருமந்திரத்தில்,
‘‘ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தையுடையவள்
ஆங்காரியாகி ஐவரைப் பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!’’ என்கிறார்.
‘‘கொய்யாது குவியாது குமையாது மணம் வீசும்
கோவாத தெய்வமலர்
கோவாத முத்தம், குறையாத மதியம்
கோடாத மணி விளக்கு’’
என புவனேஸ்வரியைப் போற்றுகிறார், வள்ளலார்.

புவனேஸ்வரி என்ற உடனேயே சகல ஐஸ்வர்யங்களையும் பக்தர்களுக்கு வாரி வாரி வழங்கி பின் கேட்கும் வரங்களுக்கு கொடுக்க ஒன்றுமில்லாமல் பக்தர்களிடம் கடனாளியாகிவிடுவாள், புவனேஸ்வரி! அவ்வளவு கருணை கொண்டவள் என்கிறார், வியாசராஜர். ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைபவள் புவனேஸ்வரி. தேவி பாகவதத்தின் மூன்றாவது ஸ்கந்தத்தில் புவனேஸ்வரி தேவியைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. புவனேஸ்வரியே காயத்ரி ரூபிணியாக சூர்ய மண்டலத்தில் இருந்து உலகத்திற்கு ஒளியைக் கொடுக்கிறாள் என்கிறது தேவி பாகவதம்.

அம்பாள் அஷ்டபதி எனும் துதியில் மகாபலியின் அகந்தையை அடக்கி அவனை பாதாளத்தில் தள்ளிய புவனேஸ்வரி சக்திக்கு நமஸ்காரம் என்று வர்ணிக்கிறது. மேலும் புவனேஸ்வரியை மனோன்மணி என்று போற்றுகிறது. மனதை ஞான நிலைக்கு எழுப்புபவள் என்று பொருள். புருவ மத்திக்கு மேலே பிரமரந்திரத்திற்குக் கீழ் உள்ள பிந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதி நிலை உன்மணி அல்லது மனோன்மணியாம். அங்கு உறைவதால் தேவிக்கு மனோன்மணி என்று பெயர். அங்கே நோய், நரை, திரை, கவலை, மாத்சர்யம், விரோதம் போன்றவை இல்லை. எல்லோருமே நித்ய யௌவனத்துடன் காட்சியளிப்பர். அனைவரும் புவனேஸ்வரியை பூஜித்துக் கொண்டே இருப்பர். அங்கே சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய பதவிகளை அடைய விரும்புவோர் அதை அடைவர்.

சகல ஐஸ்வர்யங்கள், சகல ச்ருங்காரம், சகல பராக்ரமம் போன்றவற்றை அனைவரும் அடைவர். அதை ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்ய லஹரியின் ஸுதாஸிந்தோர் எனும் துதியில் வாயார, மனமார புகழ்ந்துள்ளார். இந்த மணித்வீபத்தை நினைத்தாலே சகல பாவங்களும் நாசமடையும். இறக்கும்
தருவாயில் இக்காட்சி நினைவிற்கு வருமானால் அவன் மறுபடியும் தாயின் வயிற்றில் பிறக்க மாட்டான். புதுக்கோட்டை புவனேஸ்வரி, சென்னை ஆதம்பாக்கம் புவனேஸ்வரி, தாம்பரம் சேலையூர் புவனேஸ்வரி, சேலம் ஸ்கந்தாஸ்ரமம் புவனேஸ்வரி, அஸ்ஸாம் மாநிலம் காமாக்யா புவனேஸ்வரி, என புவனேஸ்வரி சந்நதி கொண்டு தன் தண்ணருள் பரப்பி வருகிறாள்.

ப்ருத்வீதரர் எனும் வடநாட்டில் வசித்த புவனேஸ்வரி தேவி உபாசகர், ‘‘புவனேஸ்வரியை அறிந்தவர்கள், அவள் மந்திரத்தை ஜபிப்பவர்கள், அவள் திருவுருவை தியானிப்பவர்கள், அவள் தோத்திரத்தை கானம் செய்பவர்கள் போன்றோரின் வாக்கிலிருந்து மிருதுவான சொற்கள் வரும்படி செய்வாள். மேலும் அமிர்த தாரை போலும், சரத்காலத்தில் நிலவு போலும் இனிமையாக அந்த உபாசகனின் கீர்த்தி மூன்று உலகங்களிலும் பரவும்’’ என்கிறார். லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் கடாக்ஷகிங்கரீபூத கமலாகோடி ஸேவிதா எனும் நாமம் யாருக்கு புவனேஸ்வரியின் கடைக்கண் நோக்கு படுகிறதோ அவர்களுக்கு கோடிக்கணக்கான மகாலட்சுமிகள் பணிவிடை செய்யக் காத்திருப்பர் என்கிறது.

ஆதியில் தேவர்கள் அசுரர்களை வென்ற செருக்கில் அலைந்த போது ஆகாசத்திற்கும் பூமிக்குமாய் ஒரு பேரொளி தோன்றியது. தேவர்கள் அனைவரும் அது என்ன என்று பார்க்கப் போனார்கள். அந்த பேரொளி ஒரு யட்ச உருவமாகி ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டு அதை அழிக்கச் சொன்னது. வாயுவினால் அதை அசைக்கவே முடியவில்லை. தீயினால் எரிக்க முடியவில்லை. கடைசியில் அனைத்து தேவர்களும் தேவேந்திரனையே அதனிடம் அனுப்பினர். தேவேந்திரன் தன் அகம்பாவத்தைத் தொலைத்து மிகப் பணிவுடன், ‘‘தாங்கள் யார்?’’ எனக் கேட்டபோது ஓர் அழகிய பெண்ணுருவம் அங்கே தோன்றியது. கேனோபநிஷத், இப்படித் தோன்றியது பரதேவதையான உமாதேவி என்கிறது. ஞானமே வடிவான அவள், ‘‘நீ ஜோதியாகப் பார்த்தது பிரம்ம ஸ்வரூபம்.

இவ்வளவு பிரபஞ்சத்திற்கும் காரணமாக இருப்பதும் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதும் அந்த பிரம்ம ஸ்வரூபம்தான். அந்த அம்பிகைக்கும் ஈசனுக்கும் உள்ள சம்பந்தத்தை சரீரபாவம் என்பர். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் ஈசன் உயிர். அந்த உயிருக்கு உடலாயிருப்பது அம்பிகை’’ என்று இந்திரனுக்கு பதிலளித்தாள். ‘த்வம் சரீரம் சம்போ’ என்றார், ஆதிசங்கரர். அந்த சம்புவின் சரீரமாய் இருக்கும் அம்பிகை அகண்ட வடிவில் விளங்குகிறாள். எப்படி பிண்டமாகிய உடல் அவளுடையதோ அதைப்போல் அண்டமாகிய உடலும் அவளுடையதே. சூரியனும் சந்திரனும் அவளின் இரு ஸ்தனங்கள். குழந்தைகளுக்கு ஸ்தனங்களிலிருந்து பால் கொடுப்பவள் தாய். இந்த புவனங்கள் எல்லாம் அம்பாளுடைய குழந்தைகள். சூரியன், சந்திரன் எனும் இரு ஸ்தனங்களால் இந்த லோகத்தை அம்பிகை காக்கிறாள்.

அவள்தான் தேவி புவனேஸ்வரி. எந்த இரவில் ஜீவர்களின் அசைவுகள் நின்று விடுகின்றதோ அந்த இரவு ஜீவராத்திரி எனப்படும். ஈஸ்வரனின் அசைவுகள் நின்றுவிடும் இரவு, மகா பிரளய காலம். அந்த ராத்திரிக்கு தேவதை புவனேஸ்வரி என தேவி புராணம் கூறுகிறது. புவனேஸ்வரியின் உபாசனையால் உலகங்களை ஜெயிக்கும் ஆற்றலை சாதகன் அடைகிறான். அளவில்லா செல்வமும் வாழ்க்கை வளமும் பதவி உயர்வும் நிச்சயமாகப் பெறுகிறான். நோய்நொடியற்றவனாய் கருணையுடன் கூடியவனாய், த்ரிகால ஞானியாகவும் விளங்குவான். ராஜவசியம், தன வசியம் கிட்டும். அரசதண்டனை, பேய், பிசாசு, ஏவல் உபாதைகள் நீங்கும். மன்னர்களாலும் வணங்கப்படுவான்.

உலகங்கள் எல்லாம் தன் ஆத்மாவே என்ற ஸர்வாத்மபாவம் (எங்கும் நானே உளன் என்கிற ஞானத்தை) நிச்சயம் பெறுவான். நிலவுலகில் புவனேஸ்வரியை உபாசித்து வழிபட்டவர்கள் தன் தேக விநியோகம் ஆன பின் மணித்வீபத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ஆதி சங்கரர் கூறியது போல நினைப்பதுயாவும் தங்களை ஸ்மரிப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி, என் வாக்கிலிருந்து வரும் சொற்கள் யாவும் தங்களைக்குறித்து நான் செய்யும் துதியாகவே ஆகட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் செயல்கள் தங்களுக்கு நமஸ்காரமாகட்டும். தாயே அருள்புரியவேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள்வாய் அம்மா என்று அவளை ப்ரார்த்திப்போம்,

ந. பரணிகுமார்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2018

  24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்