SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்முடனேயே வாழ்கிறார் ஸ்ரீராமானுஜர்!

2017-05-10@ 15:28:24

ஸ்ரீபெரும்புதூர்

ராமானுஜர், தான் அவதரித்த இடத்திற்கு எதிரிலேயே தன் தினசரி தரிசனத்துக்காக உருவாக்கினாரோ என்று எண்ண வைப்பது போல அமைந்திருக்கிறது, ஆதிகேசவப் பெருமாள் கோயில். ஊர் ஸ்ரீபெரும்புதூர். சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு. திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ. கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம். அதன் படிதொட்டு வணங்கி உள்ளே நுழைந்தால் நெடிதுயர்ந்து, தகதகவென மின்னியபடி நிற்கிறது கொடிமரம். அதனை தரைபணிந்து வணங்கி நிமிர்ந்தால் உயரே சற்றே பெரிய அளவிலான ஆலய மணி. இதைப் பார்க்கும்போதே ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்ற கோலம்தான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்தபடி ஊர் மக்களையெல்லாம் அழைத்து அனைவரும் நலம் பெறும்படியாக, தான் உபதேசமாகப் பெற்ற மந்திரத்தை, ஆலய மணியோசைபோல உச்சரித்த கம்பீரம் நினைவுக்கு வருகிறது.  

அந்தப் பேரருளாளன் அவதரித்த தலம் இது, அவர் காலடிபட்ட கோயில் இது என்று எண்ணும்போதே, அங்கே பாதம் பதிக்கும் உடல் பக்திப் பரவசத்தால் நடுங்கத்தான் செய்கிறது. பிராகார சுற்றுச் சுவரில் 108 வைணவத் தலங்களை விவரிக்கும் அழகிய சித்திரங்கள் கண்களையும் மனதையும் ஈர்க்கின்றன. இடது பக்கத்தில் தங்க மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மண்டபத்தில்தான் விசேஷ நாட்களில் ராமானுஜரை கொலுவீற்றிருக்கச் செய்கிறார்கள். குறிப்பாக ராமானுஜர் அவதார உற்சவ திருநாட்களில் அதாவது 2 முதல் 10ம் திருநாள் சாத்துமுறை வரை தினமும் அதிகாலை மஞ்சத்திலிருந்து சுவாமியை புறப்பாடு செய்து இந்த மண்டபத்தில் இருத்தி அன்றன்றைய வைபவத்தைத் துவக்குகிறார்கள்.

இந்த தங்க மண்டபத்துக்கு நேர் எதிரே பூத மண்டபம் உள்ளது. ஒரே கல்லினாலான தூண்கள் என்று அதனை பெரியவர்கள் விவரிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அத்தனை நுண்ணிய கலைநயம் மிக்க தூண்கள் அவை. அந்தத் தூண்களை அடுத்து தனி கருவறையில் ராமானுஜர் கம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார். இந்த அறைக்கு வெள்ளிக் கதவுகள் மேலும் பொலிவூட்டுகின்றன. அவர், யாரும் யாருக்கும் உயர்ந்தவரில்லை அல்லது தாழ்ந்தவரில்லை என்ற பேருண்மையை பலநூறு வருடங்களுக்கு முன்பே உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய உண்மை, இப்போதைய உலகியலை நினைக்கும்போது சுடத்தான் செய்கிறது.

அவர் சந்நதிக்கு முன்னால் நிற்கும் நேரம் வரையிலாவது தனிமனித கர்வம், அகம்பாவமெல்லாம் கரைந்தோடிப்போவது சத்தியம். அவருக்கு அருகில், இடது பக்கம், நம்மாழ்வார் சந்நதி. இந்த இரு சந்நதிகளையும் சுற்றி வரும்போது சுவர்களில் ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை தனித் தனியாக ஃபிரேமிட்டு, ஓவியப் பலகைகளாக நிறுவியிருக்கிறார்கள். வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியைக் காணலாம். இந்த சந்நதிக்கு முன்னால் ஓர் அடுப்பும், சில விறகு கட்டைகளையும் காணும்போது சற்று வியப்பாகவே இருக்கும்.

அந்த அடுப்பு ராமானுஜருக்காக. ஆமாம், மார்கழி, தை மாதங்களில் ராமானுஜருக்குச் செய்யப்படும் தினசரி திருமஞ்சனத்துக்காக இங்கே வெந்நீர் தயாரித்து எடுத்துச் செல்கிறார்கள். இந்தப் பணியை ஆண்டாள் மேற்பார்வை பார்க்கிறாள்! 120 வயதுவரை வாழ்ந்த ராமானுஜர் இன்றும் நம்முடனேயே வாழ்கிறார் என்ற யதார்த்த உண்மையை இதுபோன்ற செயல்முறைகளால் நிரூபிக்கிறார்கள்.

வெந்நீர் நீராட்டல் மட்டுமல்ல, இந்தக் குளிர்க் காலங்களில் அவருக்குத் தொப்பி அணிவித்து, சால்வை, ரஸாய் போர்த்தி அவருக்கு இதமளிக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலமாக, அவரை தரிசிக்க வரும் பக்தர் ஒவ்வொருவர் வீட்டிலும் வயதானவர்களை, பிறர் எப்படி பாசத்துடன் பராமரிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்து கிறார்கள்!

பிற பத்து மாதங்களிலும் அவருக்கு கோயிலின் அனந்தசரஸ் தீர்த்தத்திலிருந்து எடுத்துவரப்படும் நீரால் திருமஞ்சனம் செய்விக்கிறார்கள். பூதங்கள் தாங்கள் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்தபோது அவர்களுக்காக ஆதிசேஷன் உருவாக்கிய தீர்த்தம் இது. இத் திருக்குளத்தில் நீராடி ஆதிகேசவப் பெருமாளை வழிபட்ட பின்னர் அந்த பூதங்களுக்கு விமோசனம் கிடைத்ததாம். அதனாலேயே இந்தத் தலம் ‘பூதபுரி’ என்றும், பிறகு மருவி ‘ஸ்ரீபெரும்புதூர்’ என்றானதாகவும் சொல்கிறார்கள்.

ஹரிதன் என்ற அரசன் கொடிய மிருகங்களை வேட்டையாடச் சென்றபோது, சாதுவான ஒரு பசுவைக் கொல்ல நேர்ந்தது. அதனால் தோஷம் பீடிக்கப்பட்ட அவன், அதற்கு பிராயசித்தம் செய்ய இந்த பூதபுரிக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு நாராயணன் ஆதிகேசவப் பெருமாளாக தரிசனம் தந்ததோடு, அந்தத் தலத்திலேயே ராமானுஜர் என்ற மகா புண்ணிய ஆத்மா ஒன்று அவதரிக்கும் என்றும் எடுத்துக் கூறினாராம். அங்கேயே வைகானஸ சாஸ்திரப்படி பஞ்சபேர விதானத்தை பிரதிஷ்டை செய்து கேசவப் பெருமாளுக்காக கோயிலும் நிர்மாணித்தானாம் ஹரிதன்.

ராமானுஜர் சந்நதியைச் சுற்றி வரும்போது அவருடைய சீடரான மணவாள மாமுனிகளின் சிற்பம் ஒரு அகன்ற தூணில் வடிவமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கேதான் அவர், தம் சீடர்களுக்கு ராமானுஜரைப் பற்றியும் அவருடைய கீர்த்திகளையும் விரிவாக எடுத்துச் சொன்னார். தினமும் இந்த மூலையில் விளக்கேற்றி வைத்து இன்றும் அவர் விவரிப்பதை மானசீகமாக உணரும்படி செய்திருக்கிறார்கள். இந்த மணவாள மாமுனிக்கு, வெளியே தனியே ஓர் கோயிலும் உள்ளது.

ராமானுஜர் சந்நதியை வலம் வந்து பக்கவாட்டில் திரும்பினால் ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் தரிசனம் தருகிறார். ‘என் புகழ் விளங்க வைத்த, வைணவ நம்பிக்கைகளை உலகெங்கும் பரப்பிய என் இனிய பக்தன், இதோ என்னருகிலேயே இருக்கிறான்’ என்று பெருமை பொங்கும் விழிகளுடன் நம்மைப் பார்க்கிறார். இவருக்கு வலதுபுறத்தில் நம்மாழ்வார் மதுரகவிகள், நாதமுனிகளுடன் சேவை சாதிக்கிறார்.

பிராகார வலம் வரும்போது அன்னை எதிராஜ நாகவல்லி தாயார் அருள் பெருக்கும் விழிகளுடன் நம் துயரெல்லாம் கரைக்கும் தாய்மை பொங்க தரிசனம் தருகிறாள். நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் அன்னையும் இத்தலத்தில் ராமானுஜ அவதாரத்தைப் பெருமைப் புன்னகையுடன் அங்கீகரிக்கிறாள். அருகிலேயே ராமருக்கு தனி சந்நதி. இவருக்கு முன்னால், கோயிலுக்கு வடப் புறத்தில் ஒய்யாளி சேவை மண்டபம் விளங்குகிறது. வடகிழக்கு மூலையில் கண்ணாடி அறையும் யாகசாலையும் உள்ளன.

அன்னை கருவறைக்கு முன்னால் காயத்ரி மண்டபம் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. கோயிலுக்கு எதிரே 100 கால் மண்டபம். அதனுள் சென்றால் ராமானுஜர் அவதார இடத்தைக் காணலாம். இந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் கூரத்தாழ்வான் சந்நதி. பக்கத்திலேயே சிறிய கோபுரத்துடன் மணவாள மாமுனிகளுக்குக் கோயில் இருக்கிறது.

இக்கோயிலுக்குள் லோகாச்சார்யார் சந்நதியும் மண்ணளந்த பெருமாள் சந்நதியும் உள்ளன. மண்ணளந்த பெருமாள் சந்நதிக்கு முன்னால்தான் ராமானுஜர் அட்சராப்பியாசம் மேற்கொண்டிருந்தாராம். இந்தத் திருத்தலத்தை விட்டு நீங்கிய பின்னும் ராமானுஜரின் பொதுஉடைமை தத்துவம் நெடுநேரம் மனதை விட்டு நீங்காது நிலைத்திருப்பது மட்டும் நிஜம்.

- தாரா சந்திரசேகர்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்