SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தற்புகழ்ச்சி என்பது தற்கொலைக்குச் சமானம்!

2017-04-21@ 10:17:56

குறளின் குரல் - 57

சான்றோரின் உயர் பண்பு என்பது அடக்கம்தான், அடங்காமை அல்ல. அடக்கமின்றிப் பேசும் பேச்சுகள் யாரிடமிருந்து புறப்படுகிறதோ அவர்களைச் சான்றோர் பட்டியலிலிருந்து நாம் நீக்கி விடவேண்டும். பெருமை என்ற அதிகாரத்தில் இக்கருத்தைப் பல குறட்பாக்களில் தெரிவிக்கிறார் வள்ளுவர்.

'ஒளியொருவற் குள்ள வெறுக்கை இனியொருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.’

ஒருவருக்குப் புகழ் என்பது செய்வதற்கரிய செயல்களைச் செய்யத் தூண்டும் ஊக்க மிகுதியே ஆகும். அந்த ஊக்கமின்றி உயிர் வாழலாம் என்று ஒருவர் எண்ணுவாராகில் அதைவிட இழிவுடையது வேறொன்றில்லை.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்.’


உலக இலக்கியத்தின் ஒப்புயர்வற்ற கவிதை இந்தக் குறள். எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையதுதான். ஆனால் செய்கின்ற தொழில்களைப் பொறுத்துத்தான் வேற்றுமைகள் தோன்றுகின்றன. (தொழில் வேற்றுமையைப் பிறப்பின் வேறுபாடாகக் கொள்வது தவறு.)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதால் பிறப்பிலேயே ஜாதி வேற்றுமை பாராட்டுவதைத் தவறு எனத் தெளிவாக அறிவிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. ஜாதி வேறுபாடுகள் தலைவிரித்தாடும் இன்றைய காலகட்டத்தில் இந்தக் குறளின் பொருள் எல்லோராலும் உணர்ந்து பின்பற்றுவதற்குரியது. தனி அலுமினிய தம்ளர் கலாசாரம் இன்னும் தமிழகத்தின் பல கிராமத்துத் தேநீர்க் கடைகளில் பின்பற்றப்படுகிறது என்பது எத்தனை பெரிய அநீதி!

மதுரை வைத்தியநாதய்யர் மீனாட்சியம்மன் ஆலயத்திற்குள் ஹரிஜனங்களை அழைத்துச் சென்று புரட்சி செய்தார் என்பதை வரலாறு சொல்கிறது. அதற்கு முன் மதுரை வந்த மகாத்மா காந்தி, கீழ்சாதியினர் செல்ல இயலாத கோயிலுக்குள் நானும் செல்ல விரும்பவில்லை என்று சொன்னதும் வரலாறுதான்.

ஆனால் எத்தனை மகான்கள் எத்தனை சீர்திருத்தங்களைப் போதித்தாலும் மக்கள் மனப்பான்மையில் மாறுதல் ஏற்படுவதில்லை என்பதையே இன்றளவும் தமிழகத்தில் நிலவும் ஜாதி வேற்றுமை தெரிவிக்கிறது. இந்தத் திருக்குறளின் கருத்தைத் தொடர்ந்து பிரசாரம் செய்வதன் மூலம் தமிழர்கள் மனத்திலிருந்து ஜாதி வேற்றுமை நீங்க வழி பிறக்கக் கூடும். பெருமை என்ற அதிகாரத்தில் இந்தக் குறளை ஏன் வள்ளுவர் வைத்தார்? ஜாதிப் பெருமை பேசுவது எத்தனை அருவெறுப்பானது என்பதை உணர்த்தவே இக்குறள் இந்த அதிகாரத்தில் அமைந்துள்ளது!

'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்
கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.’


சமுதாயத்தில் மேல் நிலையில் இருந்தாலும் உயர் பண்புகள் ஒருவருக்கு இல்லையென்றால் அவர் கீழானவரே ஆவார். அதேநேரம் சமுதாயத்தில் கீழ் நிலையில் இருப்பவர் ஒருவர் கூட உயர் பண்புகள் உடையவராக இருந்தால் அவரே மேலானவர் ஆவார். ஜாதியோ பதவியோ அதிகாரமோ ஒருவரை மேலானவராக்குவது இல்லை. உயர் பண்புதான் ஒருவரை மேலோராக்குகிறது.

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.’


கற்புடைய பெண்களைப் போல ஒருவன் தவறாது தன் நிலையைக் காத்து நடப்பானாகில் எல்லாப் பெருமையும் அவனைத் தேடி வரும். பெருமை தேடிவர வேண்டுமானால் உயர் குணங்களை விட்டுவிடாதிருக்க வேண்டும்.  

'பெருமையுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்.’


செய்யக் கடினமான செயல்களையெல்லாம் பெருந்தன்மையுடைய பண்புகள் நிறைந்த மேலோர் தங்களுக்குரிய வழியில் ஆற்றக் கூடிய வல்லமை பெற்றிருப்பார்கள்.

'சிறியார் உணர்ச்சியுள் இல்லை
பெரியாரைப் பேணிக் கொள்வேமென்னும் நோக்கு.’


பெரியோர்களைப் போற்றி அவர்கள் கொண்டொழுகும் உயர்ந்த பண்புகளைத் தாமும் கொண்டு வாழவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் சிறியவர்களிடம் இருப்பதில்லை. சிறியார் பெரியோரைப் பார்த்தாகிலும் அவர்களது குணங்களைக் கைக்கொண்டு உயர வேண்டும் என்று வள்ளுவர் விரும்புகிறார்.  

'இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தாம்
சீரல் லவர்கண் படின்.’


சிறியாரிடத்தில் கல்வி செல்வம் போன்ற உயர்ந்த சிறப்புகள் சேர்ந்தாலும் அவை வரம்பு மீறிய செயல்களைச் செய்யத் தூண்டுமே அன்றி அவற்றால் பயன் இல்லை. இழிந்த குணமுடையவர்களிடம் செல்வம் சேர்ந்து என்ன பயன்? அச்செல்வம் மேலும் இழிந்த செயல்களைச் செய்யவே அவர்களைத் தூண்டும். சிறியார் குணநலன்கள் பெற்றுப் பெரியோராக மாறினால் அதனால் அவர்களுக்கும் பயன் உண்டு. இந்த சமுதாயத்திற்கும் பயன் உண்டு.

'பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.’


பெருமையுடையவர்கள் எக்காலத்திலும் பணிவோடு நடந்துகொள்வார்கள். ஆனால் சிறியோர் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். எனவே தற்புகழ்ச்சி என்பது சிறியோரின் குணம் என்பதைத் தெள்ளத் தெளிவாக இக்குறளில் அறிவிக்கிறார் வள்ளுவர்.

'பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.’


 பெருமைக் குணம் என்பது பெருமிதம் கொள்ளத் தக்க காரணங்கள் இருந்தாலும் கர்வமின்றி இருத்தலாகும். அத்தகைய பெருமைப்படத் தக்க காரணம் ஏதும் இல்லாவிட்டாலும் கூட, அளவுகடந்த கர்வத்தோடு இயங்குவதே சிறுமையாகும்.

'அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.’  


பெருமைக்குரிய பண்புடையோர் பிறர் குற்றங்களை மறைத்துப் பேசுவர். சிறுமைக்குரியவர் பிறர் குற்றங்களையே எப்போதும் பெரிதுபடுத்திப் பேசித் திரிவர். வள்ளுவர் அடக்கத்தின் மேன்மையை இந்த அதிகாரத்தில் பல விதங்களில் பேசி அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

தற்பெருமையும் பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்வதும் எத்தனை தவறானவை என்பதை  மகாபாரதக் கதை ஒன்று மிக அழகாக விளக்குகிறது. மகாபாரதப் போர் நடந்துகொண்டிருந்த காலம். சூரியாஸ்தமனம் ஆகிவிட்டால் போரை நிறுத்திவிடுவது அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த வழக்கம்.

சூரியாஸ்தமனம் ஆகிவிட்டதால் அன்றைய போர் முடிவுக்கு வந்துவிட்டது. பாண்டவர்கள் ஒவ்வொருவராகப் போர்க்களத்தை விட்டுப்பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். தர்மபுத்திரர், பீமன், நகுலன், சகாதேவன் நால்வரும் திரும்பிவிட்டார்கள். ஆனால் அர்ச்சுனனை இன்னும் காணோம். இருள் விழத் தொடங்கிவிட்டது. அர்ச்சுனனின் வரவை எதிர்பார்த்துப் பாசறை வாயிலில் தலைவிரி கோலமாகக் காத்திருக்கிறாள் பாஞ்சாலி.

'பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்
பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம்
மேவி இரண்டும் கலந்தே குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் அது
செய்யுமுன்னே முடியேன்!’


- என்று சபதம் செய்தவள் அல்லவா அவள்? அர்ச்சுனனின் நிழலுருவம் மெல்ல மெல்லப் பாசறை நோக்கி நடந்துவருவது தெரிகிறது. அவனை அடையாளம் கண்டுகொண்ட தர்மபுத்திரர் அவன் அருகே வந்ததும் ஆவலோடு கேட்கிறார்:

'இன்றாவது கர்ணனைக்கொன்றாயா அர்ச்சுனா?’  கெளரவர் அணியில் இருக்கிற மாவீரனான கர்ணனைக் கொல்ல வேண்டும். அதுதானே பாண்டவர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது? ஒவ்வொரு நாளும் இதே கேள்வியை தர்மபுத்திரர் கேட்பதும் நாளை கொல்கிறேன் என அர்ச்சுனன் பதில் சொல்வதும் வழக்கமானதுதான். அன்றும் அர்ச்சுனன் அதே பதிலைச் சொல்கிறான்: 'நாளை கொன்றுவிடுவேன் அண்ணா!’

அன்று தர்மபுத்திரர் நாக்கில் சனி. 'நாளையா? அப்படியானால் இன்று கொல்லவில்லையா நீ? உன் கையில் இருக்கும் காண்டீபம் என்ன வில்லா இல்லை புல்லா?’ உணர்ச்சி வசப்படடுச் சீறுகிறார் தர்மபுத்திரர். அவர் அவசரத்தில் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். தன் காண்டீபத்தை யாராவது பழித்தால் அவர்களைக் கொல்வது என அர்ச்சுனன் வாழ்நாள் சபதம் செய்திருக்கிறான்.

இப்போது என்ன செய்வது? பாஞ்சாலி திகைக்கிறாள். தர்மபுத்திரர் தயக்கமின்றிச் சொல்கிறார்: 'நல்லது அர்ச்சுனா. உன் சபதத்தை மறந்துவிட்டேன். சரி. இன்று என்னைக் கொன்றுவிடு. நாளையாவது கர்ணனைக் கொல்!’ இதென்ன குழப்பம்! பாஞ்சாலி திகைக்கிறாள். கண்ணனை பக்தியோடு அழைக்கிறாள். காட்சி தருகிறான் கண்ணக் கடவுள். தர்மபுத்திரரைக் காப்பாற்றச் சொல்கிறாள் பாஞ்சாலி. கண்ணன் நகைத்தவாறே அர்ச்சுனனிடம் சொல்கிறான்.

'அர்ச்சுனா! சாஸ்திரப்படி உன் அண்ணனைக் கொல்லாமல் கொல்ல ஒரு வழியுண்டு. அந்த வழியில் செயல்பட்டால் அண்ணன் கொல்லப்படமாட்டார். ஆனால் உன் சபதம் நிறைவேறியதாகவும் ஆகும். நம்மில் வயதில் மூத்தோரை அவமரியாதையாக ஏகவசனத்தில் பேசினால் சாஸ்திரப்படி அவர்களைக் கொன்றதற்கு சமானம்.’

இதைக் கேட்ட அர்ச்சுனன் தன் அண்ணனை ஏகவசனத்தில் மரியாதை இல்லாமல் பேசுகிறான். அப்படித் தன் சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். ஆனால் இப்போது அர்ச்சுனனுக்கு ஒரு பெருங் கவலை. அண்ணனைக் கொல்வதற்கு இணையான செயலைச் செய்துவிட்டுத் தான் உயிரோடிருக்க வேண்டுமா? அவன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறான். பாஞ்சாலி மறுபடி ‘கண்ணா கண்ணா’ எனக் கதறுகிறாள். அவளுக்குக் கண்ணனை விட்டால் வேறு கதியேது? கண்ணன் நகைத்தவாறே சொல்கிறான்.

'அர்ச்சுனா! நீ சாகவேண்டும். ஆனால் சாகக் கூடாது. அதற்கும் சாஸ்திரத்தில் ஒரு வழி இருக்கிறது. உன்னை நீயே தற்பெருமையாக ஏதேனும் புகழ்ந்து பேசிக்கொள். தற்பெருமை பேசுவது சாஸ்திரப்படி தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது!’ அர்ச்சுனன் கண்ணன் அறிவுரைப்படித் தன்னைத் தானே புகழ்ந்து பேசி சாஸ்திரப்படித் தற்கொலை செய்துகொண்டு தன்னைக் காத்துக் கொண்டான் என்கிறது மகாபாரதக் கிளைக்கதை.

ஒரு பேட்டியில் ஓர் எழுத்தாளரிடம் ‘நீங்கள் உங்களைத் தவிர வேறு யாருடைய எழுத்துக்களை விரும்பி வாசிக்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அடக்கத்தோடு அந்த எழுத்தாளர் சொன்ன பதில்: 'என்னைத் தவிரத் தமிழில் வேறு யாராவது எழுதுகிறார்களா என்ன?’ ஒரு பிரமுகரைச் சந்திக்கச் சென்றிருந்தார் ஒருவர். அந்தப் பிரமுகர் தற்பெருமையில் அளவுகடந்த நாட்டமுடையவர்.

தன்னைப் பற்றியே நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர் அலுப்படைந்தார். அந்த அலுப்பின் ரேகைகளை அவர் முகத்தில் கண்டுகொண்டு விட்டார் அந்தப் பிரமுகர். உடனே பிரமுகர் சொன்னார்: 'என்னைப் பற்றியே நெடுநேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் நான். உங்களுக்கு அலுப்பாக இருப்பது இயல்புதான். எனவே இனி நான் பேசப் போவதில்லை.

ஓர் அரை மணிநேரம் நீங்கள் என்னைப் பற்றிப் பேசுங்கள்!’ இது எப்படி! தற்புகழ்ச்சி என்பதற்கு எங்கெங்கே அனுமதியுண்டு என்று பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் ஒரு நூற்பா விளக்குகிறது.

'மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலைப் பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே!’


தன் ஆற்றலை விளக்கி மன்னருக்குக் கடிதம் எழுதும்போதும், தன் ஆற்றலை உணராதவர்களிடம் அதைப் பற்றிச் சொல்ல நேர்ந்த தருணத்திலும், அவையில் வெற்றி பெற்ற தருணத்திலும் தன்னை யாராவது பழித்துப் பேசினால் அப்போதும் தன்னைப் புகழ்ந்துகொள்வதில் தவறில்லை என்கிறது அந்த நூற்பா. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் தற்புகழ்ச்சி என்பது தவறுதான்.

மாபெரும் காப்பியமான கம்பராமாயணத்தில் ஏறக்குறையப் பத்தாயிரம் பாடல்களை எழுதிய கம்பர் வால்மீகி ராமாயணம் என்ற பாற்கடலை ஒரு பூனை குடிக்க நினைக்கிற செயலைப் போன்றது நான் தமிழில் ராமாயணத்தைத் தரத் துணிந்தது என்று அடக்கத்தோடு குறிப்பிட்டுக் கொள்கிறார். அந்த மாபெரும் சாதனையாளரின் அடக்கம் நம்மை வியக்க வைக்கிறது.

உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூடத் தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை என்பதைப் பார்க்கும்போது வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SvetlanaVillageRussia

  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

 • karaneeswarargod

  காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

 • TorontoPedestriansAttack

  கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Sachin45thBirthday

  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

 • SingaporeperumalTemple

  164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்