SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலயங்களில் கும்பாபிஷேகம் எதற்காக செய்கிறார்கள்?

2017-04-17@ 16:00:42

கும்பாபிஷேகத்தில் நூதனம், ஜீர்ணோத்தாரணம், புனருத்தாரணம் என்று பல வகைகள் உண்டு. புதிதாக ஒரு ஆலயத்தை நிர்மாணித்து அதற்கு செய்யப்படுகின்ற  கும்பாபிஷேகம் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று அழைக்கப்படும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்திற்கு  ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று பெயர்.

அஷ்டபந்தனம், ரஜத பந்தனம், ஸ்வர்ண பந்தனம் என்ற பிரிவுகளுக்கு ஏற்றவாறு கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கால இடைவெளியானது மாறுபடும்.  ஏற்கெனவே உள்ள ஆலயத்தில் பராமரிப்பு பணிகளைச் செய்து ஒரு சில மாறுதல்களோடு புதுப்பித்து செய்யப்படுகின்ற கும்பாபிஷேகத்தினை புனருத்தாரண  மஹா கும்பாபிஷேகம் என்று அழைப்பார்கள். இவற்றில் கும்பாபிஷேகத்தினை ஏன் செய்கிறார்கள் என்பதே உங்கள் கேள்வி.

அதாவது, ஒரு ஆலயத்தை நிர்மாணித்து, ஸ்வாமி சிலையை பிரதிஷ்டை செய்து அதை அப்படியே பூஜை செய்யத் துவங்கலாமே, அதனை விடுத்து கும்பங்களை  வைத்து யாகசாலை பூஜை செய்து இறுதியில் அந்த கும்பத்தில் உள்ள நீரினை கோபுர கலசங்களின் மீதும், மூலவர் உள்ளிட்ட சிலைகளின் மீதும் ஊற்றி  கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய காரணம் என்ன என்பதே உங்களின் சந்தேகம்.

தெய்வீக மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்வதற்கான விதிமுறைகள் வேதஆகமங்களில் உண்டு. ஆகமவிதிகளின்படி அந்த மூர்த்தங்களுக்கு சாந்நித்யம் வந்து  சேர்வதற்காக பூஜைகள் நடத்தப்படுகின்றன. கும்பாபிஷேகப் பத்திரிகையில் உள்ள நிகழ்ச்சி நிரலை கவனமாக படித்துப் பார்த்தால் அதில் பல வார்த்தைகள் இடம்  பெற்றிருக்கும்.

ம்ருத்சங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், கலாகர்ஷணம், கும்ப அலங்காரம், ஆவாஹனம், ப்ராண பிரதிஷ்டை, சிலா பிரதிஷ்டை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை  என்று பல நிகழ்வுகளைக் குறித்திருப்பார்கள். நன்கு அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நீர் நிரப்பி, ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான வாசனாதி  திரவியங்களை சிறிதளவு கலந்து, அதில் மாவிலையை வைத்து, அதன் உச்சியில் முழு தேங்காயை வைத்து கும்பம் என்று யாகசாலை மேடையில் வைப்பார்கள்.

அந்த மேடைக்கு வேதிகை என்று பெயர். வேதிகையில் வைக்கப்பட்டுள்ள கும்பத்தில் எந்த தேவதையை பிரதிஷ்டை செய்ய உள்ளார்களோ, அந்த தேவதைக்கு  உரிய சக்தி வாய்ந்த மந்திரத்தைச் சொல்லி ஆவாஹனம் செய்வார்கள். அந்தந்த தேவதைக்கு உரிய அர்ச்சனைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அந்த  தேவதைக்கு உரிய அவிர்பாகத்தைத் தரும் விதமாக யாகங்களை நடத்துவார்கள்.

அவரவர் வசதிக்கு ஏற்றவாறு நான்கு, ஆறு, ஒன்பது, பதினொன்று காலங்கள் என பூஜைகளைச் செய்து இறுதியில் கும்பாபிஷேக நாள் அன்று அந்த கும்பங்களில்  உள்ள நீரினை சிலைகளின் மீது ஊற்றி கும்பத்தில் ஏற்றப்பட்ட சாந்நித்தியனை மூர்த்தங்களுக்கு மாற்றுவார்கள். முறையாக கும்பாபிஷேகம் செய்யாமல் வெறும்  சிலையை மட்டும் வைத்திருந்தால் அது வெறும் கலைப்பொருளாகவே காட்சியளிக்கும்.

அதேநேரத்தில் அந்தச் சிலையை தெய்வமாக பாவித்து அதற்குரிய பூஜைகளைச் செய்து அந்த மூர்த்தங்களின் மீது கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட புனித  நீரை ஊற்றும்போது தெய்வத்தின் சக்தி முழுவதும் அந்த சிலையின் மீது வந்து இறங்கும். அருகில் இருந்து இந்த காட்சியினைக் காண்பவர்கள் அந்த அழகினை  அனுபவித்து உணர்ந்திருப்பார்கள். எளிதில் புரியும்படியாக ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் கற்சிலைகளுக்கு உயிரூட்டும் விதமாகவும், அந்த  சிலைகளின் மீது சாந்நித்தியத்தினையும், தெய்வீக சக்தியையும் கொண்டு வந்து சேர்க்கும் விதமாகவும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

* மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் இப்பிறவியில் செய்யும் செயல்களா, முற்பிறவியில் செய்த வினையா அல்லது பெற்றோர்கள் செய்த  பாவங்களா? - பொன். நடேசன், சின்ன அய்யம்பாளையம்.

மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு இந்த மூன்றிற்கும் பங்கு உண்டு. பதவி பூர்வ புண்யானாம் என்ற கூற்றின்படி முற்பிறவியில் செய்த வினையின்  அடிப்படையில் நமது வாழ்க்கை முறை, வசதி வாய்ப்பு போன்றவை அமைகிறது. பெற்றோர் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் நமது உடலின் அமைப்பு,  பரம்பரையாகத் தொடரும் பிரச்னைகள் போன்றவை அமைகின்றன. இந்தப் பிறவியில் செய்யும் பாவங்கள் ஒரு மனிதனின் அந்திம காலத்தில் அவன் மன  நிம்மதியைக் குலைக்கிறது.

சுருங்கச் சொன்னால் ஒரு மனிதனுக்கு உடல் ரீதியாகத் தோன்றும் பிரச்னைகள் பெற்றோர்களாலும், வாழ்க்கைத்தரம் மற்றும் வசதி வாய்ப்பில் தோன்றும்  பிரச்னைகள் முற்பிறவியில் செய்த வினையாலும், மனதளவில் உண்டாகும் நிம்மதியின்மை என்பது அந்த மனிதன் இப்பிறவியில் செய்யும் செயல்களாலும்  உண்டாகின்றது. இதனைப் புரிந்துகொண்டு நாம் வாழும் காலத்தில் நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்கு துன்பம் இழைக்கா வண்ணம் செயல்பட்டோமேயாகில்  நாமும் நல்லபடியாக வாழ்வதோடு அடுத்த தலைமுறை மட்டுமல்லாது, அடுத்த பிறவியும் நல்லபடியாக அமையும்.

* சோமவார பிரதோஷம், சனிப் பிரதோஷம் இவற்றின் முக்கியத்துவம் என்ன? - தில்லைசிதம்பரம், சேலம் - 7.


பிரதோஷ காலம் என்பது பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவம் நிகழுகின்ற காலம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. தினசரி பிரதோஷ காலம் என்று  மாலையில் வரும் சந்தியாகாலத்தினைக் குறிப்பிடுவர். பொதுவாக திரயோதசி திதியானது மாலை நேரத்தில் வரும் நாளில் பிரதோஷ விழாவினைக்  கொண்டாடுவது நமது வழக்கத்தில் உள்ளது.

இந்த திரயோதசி நாளில் நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையில் பரமேஸ்வரனின் ஆனந்த தாண்டவத்தினை தரிசிக்க இயலும் என்று புராணங்கள்  சொல்வதால், அதாவது பரமேஸ்வரனின் ஆனந்தத் தாண்டவம் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் நந்திக்கு அபிஷேக  ஆராதனைகளைச் செய்து வணங்குகிறோம்.

உலகத்திற்கே அப்பனாகிய இறைவன் மன மகிழ்ச்சியோடு ஆனந்தமூர்த்தியாக நடனமாடும் நேரத்தில் பிள்ளைகளாகிய நாம் கேட்கும் வரங்கள் அனைத்தும்  உடனடியாக இறைவனின் அருளால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இறைவனை மகிழ்விக்கும் விதமாக சிரத்தையோடு பூஜிக்கிறோம். இதில்  திங்கட்கிழமை என்பது பரமேஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாள்.

சந்திரனை தனது தலையில் சூடி காட்சி தரும் பிறைசூடன் ஆகிய எம்பெருமானுக்கு அந்த சந்திரனுக்கு உரிய நாள் ஆகிய திங்கட்கிழமை என்பது மிகவும் உகந்த  நாள் ஆகும். சோமாஸ்கந்தர் ஆன இறைவனுக்கு அந்த சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ நாள் என்பது மிகவும் உகந்ததாகச்  சொல்லப்படுகிறது. அதிலும் வளர்பிறை திரயோதசி நாள், அதாவது பௌர்ணமிக்கு முன்னதாக வருகின்ற பிரதோஷம் திங்கட்கிழமையில் இணைந்து  உண்டாகின்ற சோமவார பிரதோஷ நாளில், சந்திரோதய காலத்தில் பிரதோஷ வழிபாடு செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும்.

குறிப்பாக அரசியல்வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள், பதவி உயர்விற்காகக் காத்திருப்போர், நிலச்சுவான்தார்கள், ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரம்  செய்வோர்கள், அந்நிய தேசத்தில் பணிசெய்வோர் என அனைவருக்கும் உடனடி பலனைத் தரக்கூடியது வளர்பிறையில் வரும் சோமவார பிரதோஷ நாள் ஆகும்.  இதற்கு ‘சுக்ல சோம பிரதோஷம்’ என்று பெயர். நவகிரஹங்களில் சனி என்பவரை துன்பத்தைத் தரக்கூடியவர், தடைகளை உண்டாக்கி சிரமத்தைத் தருபவர்  என்றெல்லாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

இந்தச் சனியால் உண்டாகும் தடைகள் விலகி, நாம் கையில் எடுத்த செயல் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றித் தருவது  சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நாள் ஆகும். அதிலும் குறிப்பாக தேய்பிறையில் வரும் திரயோதசி நாள், அதாவது அமாவாசைக்கு முன்னர் வருகின்ற  பிரதோஷ நாள் சனிக்கிழமையில் வந்தால், அந்த சனிப்பிரதோஷ நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு ‘க்ருஷ்ண சனி பிரதோஷம்’ என்று பெயர்.

இந்த நாள் ஏழை எளியவர், பாமர மக்கள், சாமானியர்கள் என எல்லோருக்கும் பயன் தரக்கூடியது. இந்த நாளில் ஆலயத்தில் வரும் பக்தர்களுக்கு அன்னதானம்  செய்வதன் மூலம் சனியால் உண்டாகும் தடைகள் விலகி நமது காரியம் நல்லபடியாக நடந்தேறும் என்பது நம்பிக்கை. எல்லா பிரதோஷ நாட்களும் விசேஷ  நாட்களே என்றாலும், வளர்பிறையில் வரும் சோமவார ப்ரதோஷமும், தேய்பிறையில் வரும் சனிப்ரதோஷ நாட்களும் ஜோதிடவியல் ரீதியாக பரிகார  நாட்களாகக் கருதப்படுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

* சங்கு, சக்கரம் தரித்த விநாயகர் ஓவியம் ஒன்றைக் கண்டேன். இதன் மகத்துவம் என்ன?  - சிவ. இளமுருகு, திருச்சி -2.

மஹாவிஷ்ணுவின் அம்சமாக விநாயகரைச் சித்தரிக்கும் ஓவியம் அது. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தும்பிக்கை ஆழ்வார் என்று விநாயகரைச் சொல்வோரும்  உண்டு. ஒரு சிலர் விஷ்வக்சேனர் என்றும் வழிபடுவர். சங்கு, சக்கரம் தரித்த விநாயகர் சித்திரம் என்பது மிகவும் மடி, ஆசாரத்துடன் பூஜிக்கப்பட வேண்டிய ஒன்று.  அதனை காட்சிப் பொருளாக வீட்டினில் வைப்பது தவறு. பூஜை அறைக்குள் வைத்து தினசரி பூஜை செய்து வந்தால் நமது துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும்.  முக்கியமாக நோய், கடன், எதிரிகள், வீண் வம்பு வழக்குகள் என அனைத்து விதமான பிரச்னைகளும் விலகும்.

* ராகுகாலத்தில் வெளியூருக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் மனதில் கொஞ்சம் கலக்கம். ஏதேனும் பரிகாரம் செய்துவிட்டு அப்புறம்  போகலாமா அல்லது போய்விட்டு வந்து செய்யலாமா? - அருணாசலம், கள்ளக்குறிச்சி.

போய்விட்டு வந்து செய்வதற்கு பரிகாரம் எதற்கு? ராகுகாலத்தில் வெளியூருக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ராகுகாலம்  என்பது கால தேச வர்த்தமானத்தின் அடிப்படையில் நாம் கடைபிடித்து வருகின்ற நம்பிக்கைகளுள் ஒன்று. தமிழகத்தில் ராகுகாலம் என்பதற்கு மிகவும்  முக்கியத்துவம் தரும் வேளையில் வட இந்தியர்கள் ராகுகால வேளையினை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது அவரவர் சம்பிரதாயமாக கடைபிடித்து  வருகின்ற ஒரு நம்பிக்கை.

ராகு கால வேளையில் புறப்படுகிறோமே என்று மனதில் கொஞ்சம் கலக்கம் என்று நீங்கள் கருதும் பட்சத்தில், வீட்டின் பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து  இறைவனை மனதாற வழிபட்டு பின்னர் கிளம்புவது நல்லது. அல்லது ராகுகாலம் வருவதற்கு முன்பாக நீங்கள் கையில் எடுத்துச் செல்லும் உங்கள் உடைமைகள்  அடங்கிய பை அல்லது சூட்கேசினை பக்கத்து வீட்டிலோ அல்லது உங்கள் சொந்த வாகனமாகிய காரிலோ வைத்துவிடுவதும் நல்லது.

இவ்வாறு வைப்பது நீங்கள் ராகுகாலத்திற்கு முன்பே புறப்பட்டுவிட்டீர்கள் என்ற நம்பிக்கையை உங்கள் மனதில் தோற்றுவிக்கும். ராகுகாலம் மட்டுமல்ல,  எப்பொழுது வெளியூருக்குப் புறப்பட்டாலும் ஒரு சுமங்கலிப் பெண் அல்லது கன்னிப் பெண்ணின் கையால் ஒரு குவளை நீர் வாங்கி அருந்திவிட்டுச் செல்வதால்  பிரயாணம் நல்லபடியாக அமைவதோடு பிரயாணத்தின் குறிக்கோளும் வெற்றி பெறும் என்பது முன்னோர் நமக்குச் சொல்லிச் சென்ற நடைமுறை. அதனை  நம்பிக்கையோடு கடைபிடித்து வாருங்கள். வெற்றி காண்பீர்கள்.

* நெற்றியில் விபூதி பூசுவது எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. பர்னாதன் என்பவன் உணவையும், தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு  கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான். அப்போது அவனைச் சுற்றி சிங்கம், புலி, பறவைகள் என பலவிதமான காட்டில் வசிக்கும்  உயிரினங்கள் யாவும் காவலுக்கு நின்றன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னாதன் முன் வைத்தன.

இது ஈசனின் கருணையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தினைத் தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடின.  தவத்தை முடித்துக்கொண்டு சிவ வழிபாட்டினைத் தொடங்கினான். ஒருநாள் தர்ப்பைப் புல்லை அறுக்கும்போது, அவன் கையில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது.  ஆனால், அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை.

குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதைப் போல பதறியது ஈசன் நெஞ்சம். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி பர்னாதன் கையைப் பிடித்து ரத்தம்  வராமல் அழுத்திப் பிடித்தார். என்ன ஆச்சரியம், ரத்தம் கொட்டிய இடத்தில் இருந்து விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவனான சாக்ஷாத்  பரமேஸ்வரனே என்பதை பர்னாதன் அறிந்து கொண்டான்.

ரத்தத்தை நிறுத்தி சாம்பலைக் கொட்டச் செய்த தாங்கள், நான் வணங்கும் சர்வேஸ்வரன்தான் என்பதை அறிவேன், இந்த அடியேனுக்கு தங்கள் சுய உருவத்தைக்  காணும் பாக்கியம் இல்லையா என்று வேண்டினான் பர்னாதன். ஈசன் தன் சுயரூபத்தில் காட்சி தந்து அருளியதோடு, “உனக்காகவே இந்த சாம்பலை  உருவாக்கினேன், அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும், உன் நல் தவத்தால் விபூதி உருவானது, அக்னியை எதுவும் எவ்வாறு  நெருங்க முடியாதோ, அவ்வாறே விபூதியைப் பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது, விபூதி எனது ரூபமே, அதற்கு நீயும்  துணையாக இருந்து வா” என்று ஆசி வழங்கினார் சிவபெருமான். விபூதியால் என்ன நன்மை என்று ஒருமுறை ஸ்ரீராமர் அகத்திய முனிவரிடம் கேட்டார்.

“பகை, தீராத வியாதி, மனநல பாதிப்பு, செய்வினை, இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்னைகள் விலகும்” என்று  அகத்திய முனிவர் ஸ்ரீராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீ மஹாலடட்சுமிக்கும் உகந்தது விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள்.  திரு என்றால் மஹாலக்ஷ்மி என்று பொருள். அதனால் தான் விபூதியை திருநீறு என்றும் அழைக்கிறோம். ‘மந்திரம் ஆவது நீறு’ என்ற தேவாரப் பதிகத்தின்  வாயிலாக திருநீற்றின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம்.

* சித்திரை மாதத்தில் பிள்ளை பிறந்தால் தந்தைக்கு ஆகாது என்று சொல்லப்படுவது உண்மையா?
- எம். ரவிச்சந்திரன், திருவண்ணாமலை.


இல்லை. இது முற்றிலும் தவறான கூற்று. இந்த உலகத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒன்பது குழந்தைகள் பிறக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். ஒரு  நிமிடத்திற்கு ஒன்பது குழந்தைகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ஐநூற்றி நாற்பது குழந்தைகள். ஒரு நாளைக்கு எத்தனை குழந்தைகள், ஒரு வாரத்திற்கு  எத்தனை குழந்தைகள், ஒரு மாதத்திற்கு எத்தனை குழந்தைகள் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அப்படியென்றால் சித்திரை மாதத்தில் பிறந்துள்ள அத்தனை குழந்தைகளின் தந்தைக்கும் ஆகாது என்று சொன்னால் அது எப்படி சாத்தியமாகும் என்று யோசித்துப்  பாருங்கள். சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகங்களில் தகப்பனைக் குறிக்கும் பித்ரு காரகன் சூரியன் உச்ச பலத்தோடு சஞ்சரிக்கும்போது,  சித்திரையில் பிள்ளை பிறந்தால் தகப்பனுக்கு ஆகாது என்று சொல்லப்படும் கூற்றும் உண்மைக்குப் புறம்பானதே. இந்த கூற்றினை கவனத்தில் கொள்ளத்  தேவையில்லை.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்