SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்ல மாப்பிள்ளை நாடி வருவார்!

2017-04-15@ 10:00:59

என் மகளின் திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ராகுகேது தோஷம் மற்றும் செவ்வாய் தோஷ பரிகாரங்கள் முறைப்படி செய்துள்ளோம். என் மகளின் திருமணம் எப்பொழுது நடைபெறும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எல்.ஆர்.கிருஷ்ணன், நாமக்கல்.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது குரு தசை நடக்கிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி 19.7.2018க்குள் கட்டாயம் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு மாப்பிள்ளை தேடுங்கள். உங்கள் மகள் பிறந்த ஊரிலிருந்து தென்திசையில் மாப்பிள்ளை அமைவார். இத்தனை வயதிற்கு மேல் ஜாதகப் பொருத்தத்திற்கு முக்கியத்துவம் தராமல், மனப்பொருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மாப்பிள்ளை தேடுங்கள்.

உங்கள் மகளின் ஜாதகத்தில் செவ்வாய்தோஷம் என்பது கிடையாது. நீங்களாக மனதிற்குள் செவ்வாய் தோஷம் உள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்று எண்ணி இருக்காமல் தேடி வருகின்ற மாப்பிள்ளைக்கு கன்னிகாதானம் செய்து கொடுங்கள். திருமணத்தை முருகன் கோயிலில் வைத்து நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தினைச் சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வர நல்ல மாப்பிள்ளை நாடி வருவார்.

“நமோஅஸ்து துப்யம் ப்ரணதார்த்தி
 ஹந்த்ரே
கர்த்ரே ஸமஸ்தஸ்யமனோரதானாம்
தாத்ரே ரதாநாம் பரதாரகஸ்ய ஹந்த்ரே
ப்ரசண்டாஸூரதாரகஸ்ய.”


பி.காம். படித்து வரும் எனக்கு எதைப் படித்தாலும் உடனடியாக மறந்து விடுகிறது. ஞாபக மறதியால் மிகவும் அவதிப்படுகிறேன். நான் நல்லபடியாகப் படித்து, பெரிய வேலைக்குச் சென்று என் பெற்றோரை நல்ல நிலையில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறேன். எனது பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லி உதவிடுங்கள். பி. மஹாலட்சுமி, சோழிங்கநல்லூர்.


கேட்டைநட்சத்திரம், விருச்சிக ராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு எதிர்காலம் என்பது சிறப்பாக உள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டு காலமாக ஏழரைச் சனியின் பிடியில் சிக்கியுள்ளீர்கள். அதனால் ஞாபகமறதி உண்டாவது என்பது சகஜம்தான். எனினும் தற்போது உங்கள் ஜாதகத்தில் சுக்கிரதசை நடந்து வருவதால் கவலைப்பட வேண்டாம். 28.4.2017 முதல் உங்கள் பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். உங்கள் மனநிலையைப் பொறுத்தவரை நீங்கள் மனப்பாடம் செய்து படிப்பதைவிட, கண்ணால் பார்த்து புரிந்துகொண்டு உள்வாங்குவதே நினைவில் நிற்கும்.

உதாரணத்திற்கு திரையில் பார்க்கும் காட்சிகள்அது திரைப்படமாக இருந்தாலும் சரி, அல்லது கல்வி சம்பந்தப்பட்ட விஷயமானாலும் சரி அது நன்றாக நினைவில் நிற்கும். ஆகவே, வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அதனை நன்றாகக் கவனித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். மனப்பாடம் செய்வதை விடுத்து பாடத்தினைப் புரிந்துகொண்டு வினாவிற்கு விடையளிக்க முயற்சியுங்கள். வெற்றி உங்களுக்குச் சொந்தமாகும். தினமும் காலையில் கீழேயுள்ள மந்திரத்தைச் சொல்லி தக்ஷிணாமூர்த்தியை மானசீகமாக வழிபட்டு வாருங்கள். உங்கள் எண்ணம் ஈடேறும்.

“ஓம் நமோ பகவதேதக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்சஸ்வாஹா.”


கடன் பிரச்னையால் சொந்த வீட்டைக்கூட விற்றுவிட்டோம். தற்சமயம் நான், எனது அப்பா, அம்மா, தம்பி எல்லோரும் ஆளாளுக்கு ஒரு இடத்தில் வாழ்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்கவும், கடன் பிரச்னை, சொத்து பிரச்னை தீரவும் நல்லதொரு பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். எம்.கலையரசன், பரமக்குடி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சனிதசை நடந்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் நீங்கள் உங்கள் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பு இல்லை. நீங்கள் தற்போது பணிபுரிந்து வரும் பனியன் கம்பெனியிலேயே தொடர்ந்து பணிபுரியலாம். சொந்த ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அப்பாவின் தாய்வழி தாத்தாவின் சொத்து வந்து சேரும் என்று நம்பியிருக்காமல் உங்கள் உழைப்பினை மட்டும் நம்புங்கள்.  பூர்வீகச் சொத்து வரும்போது வரட்டும். அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள்.

வெளிநாடு செல்வதைவிட மும்பை, பூனா, சூரத் போன்ற நகரங்களில் நீங்கள் வேலைதேட இயலும். இந்த வருட இறுதியில் பிறந்த ஊரை விட்டு தொலைதூரம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதால் மேலே சொன்னபடி தொலைதூர நகரங்களில் வேலைக்கான வாய்ப்பு வரும்போது அதனை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். மானாமதுரைக்கு அருகிலுள்ள  வேதியரேந்தல் கிராமத்தில் அருள்பாலிக்கும் பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஆலயத்தில் அமாவாசை நாளன்று மாலையில் நடைபெறும் பூஜையில் கலந்துகொண்டு வழிபடுங்கள். பிரத்யங்கிரா தேவியின் அருளால் கடன் உட்பட அனைத்துப் பிரச்னைகளும் கொஞ்சம், கொஞ்சமாக
முடிவிற்கு வரும்.

ஐந்து வருடத்திற்கு முன் ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிய வீட்டினை விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால், விற்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தாலும் தடைபடுகிறது. வீடு விற்பனையாக உரிய பரிகாரம் கூறவும். ஜானகிராமன், திருச்சி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது புதன்தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் வீட்டை விற்பதற்கு அவசரப்பட வேண்டாம். 25.4.2018க்குப் பின்னர் முயற்சித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு வீடு விற்பனை ஆவதோடு, கையில் கிடைக்கும் தொகை உங்கள் உபயோகத்திற்கும் உதவும். அவசரப்பட்டு விற்பதால் குறைந்த தொகை கிடைப்பதோடு, கிடைக்கும் தொகையும் உபயோகமின்றி அநாவசிய செலவில் கரைந்துவிடும். வீடு விற்பனை குறித்த முயற்சியை இன்னும் ஒரு வருட காலத்திற்கு ஒத்திப்போடுவதே நல்லது.

தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். கர்ம தசை வரும் காலம் என்பது இறைவனின் கையில்தான் உள்ளதே அன்றி அதை நாமாக அறிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது. பிரதி அமாவாசை நாள் அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஸ்நானம் செய்து ஏழை பிராமணர் ஒருவருக்கு தட்சிணை தாம்பூலத்துடன் அரிசி, பருப்பு, வாழைக்காய் கொடுத்து நமஸ்கரித்து வாருங்கள். முன்னோர்களின் ஆசியுடன் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

நவம்பர் 2015ல் எனக்கு திருமணம் நடந்து மணவாழ்வு இரண்டு வாரத்திற்குள் முடிவிற்கும் வந்துவிட்டது. ஒரு வருடத்திற்குள் சட்டப்படி விவாகரத்தும் ஆகிவிட்டநிலையில் தற்போது வீட்டில் வரன் பார்க்கிறார்கள். என் எதிர்கால நல்வாழ்விற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ஆனந்தப்ரியா, சங்கரன்கோவில்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. வீட்டினில் எந்தவித அவசரமும் இன்றி நிதானமாக மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்கள். 1.1.2019க்குள் உங்களது மறுமணம் நல்லபடியாக நடக்கும். மறுமண வாழ்வு உங்கள் மனதிற்கு பிடித்த மாதிரியேஅமையும். இன்ஜினியரிங் பட்டதாரியாகிய நீங்கள் அதற்குள்ளாக ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். அரசு வேலைக்காக காத்திராமல் சென்னை போன்ற பெருநகரங்களில் தனியார் நிறுவனங்களில் உங்களுக்கான வேலைவாய்ப்பினைத் தேடிப் பெறுங்கள்.

உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி குரு உச்சம் பெற்றிருந்தாலும், எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எந்தவொரு விஷயத்திலும் முதலில் தடையையும் அதன் பின்னர் உங்கள் முயற்சியினால் வெற்றியும் காண்பீர்கள். எளிதாகக் கிடைக்கும் எது ஒன்றும் வாழ்க்கையில் உங்களுக்கு நிலையான நற்பலனைத் தராது. உங்கள் பெயரினை A.A.ப்ரியா என்று மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். திங்கள் தோறும் கோமதியம்மன் சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். உங்கள் வாழ்வினில் புத்தொளி காண்பீர்கள். இந்த அந்தாதியினை தினமும் சொல்லி வாருங்கள்.

“அதிசயமான வடிவுடையாள்
அரவிந்தமெல்லாம்
 துதிசயஆனன சுந்தரவல்லி துணை இரதி
பதிசயமானது அபசயமாகமுன்
பார்த்தவர்தம்
மதிசயமாகவன் றோவாம
பாகத்தை வவ்வியதே.”


புற்றுநோயாளியாகிய நான் என் மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. அவனுக்கு இந்த ஆண்டாவது திருமணம் நடக்குமா? நல்வழி காட்டுங்கள். ஜெயமணி, மப்பேடு.


கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படி நீங்கள் பெண்ணைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உறவினர் வழியில் வெகுவிரைவில் பெண் அமையும். அவர் பிறந்த ஊரான கள்ளக்குறிச்சியில் இருந்து மேற்கு அல்லது வடமேற்கு திசையில் இருந்து பெண் அமையும். போகாத கோயில் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை என்று விரக்தியாக கடிதம் எழுதியுள்ளீர்கள். உங்களது முயற்சி எதுவும் வீணாகாது.

இறைவனின்பால் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மகனின் திருமணத்தை ஏதேனும் ஒரு சிவாலயத்தில் வைத்து நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 16.4.2018க்குள் அவரது திருமணம் நடந்துவிடும். ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று உங்களால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் பூஜையறையில் பரமேஸ்வரனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். மனம் போல் மணம் கைகூடும்.

“ய:சிவோ நாமரூபாப்யாம்  யாதேவீஸர்வ
மங்களா
தயோ: சம் ஸ்மரணாத் பும்ஸாம்
ஸர்வதோ ஜெயமங்களம்.”


11ம் வகுப்பு படித்து வரும் எனக்கு இதற்கு முன்பு நடந்த சில செயல்களால் மனம் வருந்துகிறது. எந்தச் செயலை எடுத்தாலும் அந்த செயல்தான் நினைவுக்கு வருகிறது. இதனால் படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. எனக்கு நல்ல எண்ணம், நல்ல புத்தி, நல்ல படிப்பு வரவேண்டும். அந்த செயல் என் நினைவிற்கு வரக்கூடாது., நான் தைரியமாகவும், புத்திசாலியாகவும் இருக்க நல்லபரிகாரத்தைக் கூறுங்கள். தரணி, சென்னை  53.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன்தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. ‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என்றுகவிஞரின் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். எப்பொழுது நடந்த செயலை நினைத்து மனம் வருந்துகிறதோ அப்போதே அதற்கான பிராயச்சித்தம் என்பது உண்டாகிவிட்டது. அதனால் நடந்ததைப்பற்றிக் கவலைப்படாமல் நடக்கப் போவதை எண்ணி வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஜாதகத்தில் உண்டாகியிருக்கும் சனி  ராகு, சூரியன் சுக்கிரன், சந்திரன் செவ்வாய் போன்ற இணைவுகள் உங்களை வாழ்வினில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும். கல்லூரியில் படித்து வரும்போதே வங்கிப் பணிக்கான கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லுங்கள். வங்கி அல்லது இன்ஷ்யூரன்ஸ் துறையில் உயர்ந்த பதவியினை வகிக்க உள்ளீர்கள். எதிர்காலத்தை நினைத்து உழைக்கத் துவங்கினால் கடந்தகாலம் என்பது நினைவினை விட்டு கடந்துபோகும். நடந்த செயல் நினைவிற்கு வரும்போதெல்லாம் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபடுங்கள். நடந்த செயல் மறந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

“அந்யதா சரணம் நாஸ்தி
த்வமேவசரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேநரக்ஷர
க்ஷமஹேஸ்வர.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jatayu_bird11

  200 அடி நீள ஜடாயு பறவையின் பிரமாண்ட சிலையுடன், பறவைகள் சரணாலயம் : கேரளாவில் உருவாக்கம்

 • othigai_111sunami

  கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் அச்சம்

 • chennai_udall11

  உடல் உறுப்புதான வார விழா : உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

 • SnowfallnorthernIndia

  வட இந்தியாவில் தொடங்கியது பனிப்பொழிவு: குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீ மூட்டும் மக்கள்

 • goa_train_acc

  கோவாவில் இருந்து பாட்னா சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்