SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்தனின் அருளால் கஷ்டங்கள் தீரும் !

2017-04-08@ 10:32:18

என் மகளுக்கு திருமணமாகி இரண்டரை வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. செயற்கை முறையில் கருத்தரிக்க முயற்சி செய்து முதல்முறை குழந்தை தங்காமல் இரண்டாவது முறை முயற்சி செய்திருக்கிறார்கள். என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். சண்முகம், கிருஷ்ணகிரி.

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது. பூச நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் செவ்வாய் புக்தி நடைபெறுகிறது. இருவரின் ஜாதகங்களிலும் புத்திரகாரகனான குரு பகவானோடு கேது இணைந்துள்ளார். இது தோஷமான அம்சமென்றாலும் இருவரின் ஜாதகங்களிலும் புத்திர ஸ்தானாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ளதால் குழந்தை பாக்கியம் நிச்சயமாக இருக்கிறது.

28.8.2018க்குள் உங்கள் மகளின் மடியில் மழலை தவழும். ஒவ்வொரு அமாவாசை அன்றும் அரச மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகருக்கு பால் அபிஷேகம் செய்து அரசமரத்தையும் நாகரையும் சேர்த்து ஏழுமுறை வலம் வந்து வணங்கி வரச் சொல்லுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவதும் நல்லது.

“அஸ்வத்த ஸர்வ பாபானி ஸத ஜன்மார்
ஜிதானி ச
 நுதஸ்வ மம வ்ருக்ஷேந்த்ர ஸந்தானபாக்ய
ப்ரதோ பவ.”


பதினோராம் வகுப்பு படிக்கும் எங்களது ஒரே மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. ஆனால் அவன் எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. சரியாகப் படிக்காமல் அவன் இஷ்டம் போல் இருக்கிறான். அவன் ஒழுங்காகப் படிக்கவும், நல்ல எண்ணங்களுடன், நல்ல புத்தியுடன் வாழவும், மருத்துவம் படிக்கவும் பரிகாரம் கூறுங்கள். வெங்கடேசன், சிட்லபாக்கம்.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி நீசம் பெற்றிருந்தாலும், செவ்வாய் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் நீசபங்க ராஜயோக அமைப்பு உள்ளது. மேலும் அவருடைய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்துள்ளதால் அவருடைய எதிர்காலம் குறித்து நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. 17.1.2018 வரை நீங்கள் அவரது நடவடிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அதற்குப் பிறகு தற்போது உள்ள விளையாட்டுத்தனம் மறைந்து புத்திசாலித்தனமாக செயல்படுவார்.

நன்மை எது, தீமை எது என்பதை நன்கு அறிந்த பிள்ளையே அவர் என்பதால் நீங்கள் அவருக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும், சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதால் யாருடைய அறிவுரையும், ஆலோசனையும் அவரை மாற்றாது. அனுபவ பாடம் மட்டுமே அவரை மாற்ற இயலும். எதிர்காலம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளதால் அவரது இஷ்டம் போல் விட்டுவிடுங்கள். விடுமுறை காலத்தில் ஏதேனுமொரு செவ்வாய்க் கிழமையில் குன்றத்தூர் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடச் செய்யுங்கள். முருகனின் அருளால் முன்னேற்றம் காண்பார்.

முப்பத்தேழு வயதாகும் எனது மகனுக்கு இதுவரை திருமணம் கூடி வரவில்லை. ஜாதகத்தில் தோஷம் உள்ளதா, ஏதேனும் பித்ரு சாபமா? நல்ல பரிகாரம் சொல்லி ஏழ்மையான எங்கள் குடும்பத்திற்கு வழி காட்டவும். விஜய் ஆனந்த், மாண்டியா.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகன் வாழ்க்கையில் மிகுந்த போராட்டத்தினைச் சந்தித்து வருவார். எந்த ஒரு விஷயமும் சுலபத்தில் கைகூடாது. எதையும் போராடியே சாதிக்க வேண்டியிருக்கும். இவரது ஜாதகத்தில் லக்னாதிபதி குருபகவான் செவ்வாய், சனி, ராகு ஆகியோருடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் இணைந்திருப்பது வாழ்க்கையில் போராட்டத்தினை ஏற்படுத்துகிறது. தற்போது 26.05.2017 உடன் ராகு தசை முடிவிற்கு வந்து குரு தசை துவங்குவதால் வாழ்க்கையில் சற்று முன்னேற்றம் காண இயலும்.

இந்த வருட இறுதிக்குள் தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பெண்ணையே வாழ்க்கைத் துணைவியாகக் கொள்வார். திருமணத்திற்குப் பின் இவரது வாழ்வு முன்னேற்றப் பாதையில் செல்லும். இவரது ஜாதகப்படி பித்ரு சாபம் என்று ஏதுமில்லை. இவரது முன்ஜென்ம வினையே இந்த ஜென்மத்தில் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், சிரமத்தை எதிர்கொள்ளும் திறனை இறைவன் வழங்கியிருப்பதால் கவலையே வேண்டாம். தளராத முயற்சியும், கடுமையான உழைப்பும் கைகொடுக்கும். கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி நரசிம்மரை வணங்கி வருதல் நன்மை தரும்.

“துஷ்டானாம் பீகரம் தேவம், சிஷ்டானாம்
ப்ரஹ்லாத வரதம் விஷ்ணும் ஸ்ரீந்ருஸிம்
ஹம்பஜே.”


நாங்கள் ஐந்து தலைமுறையாக ஒரு இடத்தை ஆண்டு அனுபவித்து வருகிறோம். எங்களுக்குரிய இந்த இடத்தை பக்கத்து இடத்துக்காரர் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி ஐந்து வருடங்களாக பிரச்னை தொடர்கிறது. அந்த இடம் எங்களுக்குக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? ஆறுமுகப் பெருமாள், திருநெல்வேலி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தற்போதுள்ள சூழலின்படி இந்தப் பிரச்னையை 23.11.2017க்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேலும் நீட்டித்தால் அந்தச் சொத்தினால் உங்களுக்கு பலன் ஏதும் இல்லாமல் போய்விடும். இடைத்தரகர் யாருமின்றி பக்கத்து இடத்துக்காரரிடம் நேரிடையாகச் சென்று மனம் விட்டுப் பேசுங்கள்.

சமாதானமாய்ப் போவது ஒன்றே தீர்வு என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். ஒரு செவ்வாய்க்கிழமை, திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரிடம் உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்துவிட்டு வாருங்கள். பிரச்னை சுமுகமாக தீர்வானதும் உங்கள் வீட்டிலிருந்து பாதயாத்திரையாக வந்து தரிசிப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வாய் தோறும் காலையில் தவறாது கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். கந்தனின் அருளால் கஷ்டங்கள் தீரும்.

திருமணமான ஒரு மாதத்திற்குள் எனது மகனுடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி மருமகள் பிரிந்து சென்று விட்டார். எனது மகனுக்கு ஒரு நல்ல திருமண வாழ்க்கை அமைய பரிகாரம் கூற வேண்டுகிறேன். சிவகங்கை மாவட்ட வாசகி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சுக்கிரன், செவ்வாய் இணைந்திருப்பதும், ஏழாம் வீட்டின் அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைந்து எட்டில் அமர்ந்திருப்பதும் கடுமையான களத்திர தோஷத்தை உண்டாக்குகிறது. தற்போதுள்ள கிரகநிலையின் படி இப்போதைக்கு மறுமணம் குறித்துப் பேசுவது நல்லதல்ல.

அவரது தொழிலில் அதிக கவனத்தையும் ஈடுபாட்டையும் செலுத்துவது எதிர்காலத்திற்கு நல்லது. 31 வயது முடிந்த பின்னர் மறுமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். தேவிபட்டிணம் சென்று நவகிரக தோஷத்திற்கான சாந்தி செய்து முடித்து அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது நல்லது. 32வது வயதில் மறுமண வாழ்க்கை மலரும். அதுவரை பொறுமை காப்பதே அவரது வாழ்விற்கும், குடும்பத்திற்கும் நல்லது.

பிறந்ததிலிருந்தே கஷ்டத்தை அனுபவித்து வரும் எனக்கு எனது கஷ்டம் தீர வழி காட்டுங்கள். மளிகைக்கடை வைக்க ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும்? எஸ். ராஜதுரை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதகப்படி நீங்கள் மளிகைக் கடை வைப்பதை விட அடுத்தவர்களின் வயிற்றுப் பசியினை ஆற்றும் ஹோட்டல் தொழிலைச் செய்வதே சாலச் சிறந்தது. துவக்கத்தில் சிறிய அளவு முதலீட்டுடன் தள்ளுவண்டியில் தொழிலைத் துவக்குங்கள். வடை, பஜ்ஜி, சமோசா என்று ஆரம்பித்து புளிசாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என்று வியாபாரத்தை அபிவிருத்தி செய்யுங்கள். கவலையை விட்டொழித்து உழைப்பினை நம்புங்கள்.

உண்மையாக உழைப்பவனை இந்த உலகம் என்றுமே கைவிடுவதில்லை. உங்களுக்கான நல்ல காலம் 15.9.2018 முதல் துவங்குகிறது. சிரமம் என்பது இன்னும் ஒன்றரை வருட காலமே. அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஏறுமுகம்தான். சிம்ம ராசியில் பிறந்திருக்கும் உங்கள் இரு பிள்ளைகளின் ஜாதகங்களும் நன்றாக உள்ளதால் அவர்கள் இருவரையும் நல்லபடியாக வளர்த்து ஆளாக்குவீர்கள். உங்கள் இஷ்ட தெய்வமான முத்தாரம்மனையே வணங்கி வாருங்கள். செவ்வாய்தோறும் அருகில் உள்ள அம்மனின் ஆலயத்தில் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். அம்பிகையின் அருளால் வெகுவிரைவில் உங்கள் வாழ்வில் ஒளி வீசும்.

நான் கடந்த 10 வருடமாக சந்திர தசையில் கடன் வாங்கி மானம் மரியாதை இழந்து வியாபாரத்தில் நஷ்டம், கஷ்டம் ஏற்பட்டு துன்பப்படுகிறேன். இத்துன்பத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும். சங்கரன், திருநெல்வேலி மாவட்டம்.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஏழரைச் சனியின் தாக்கத்தில் இருந்துவரும் நீங்கள் நடந்து முடிந்த விஷயங்களை அனுபவப் பாடமாகக் கொண்டு இனிவரும் காலங்களில் மீண்டும் அந்தத் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிகம் பேசாமல் அளந்து பேசுங்கள். 15.8.2017 முதல் உங்களது தொழில் சூடு பிடிக்கும். நீங்கள் இழந்ததாகக் கருதும் மானம், மரியாதை மீண்டும் வந்து சேரும். செய்வதைச் சரியாகச் செய்யுங்கள். கிரக நிலையும், எதிர்காலத்தில் வரவுள்ள தசாபுக்திகளும் நன்றாகவே உள்ளன.

சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்து அதன் பின்னர் நீங்கள் உணவு உட்கொள்வதை ஆயுள் முழுவதும் கடைபிடித்து வாருங்கள். உங்கள் ஜாதகத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் உங்கள் லக்னாதிபதி சனி பகவான் உங்களை கைவிடமாட்டார். கவலை வேண்டாம். சனிக்கிழமை தோறும் சனி பகவானின் சந்நதியில் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் உள்ளது என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள். வெற்றி உண்டாகும்.

“காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய
தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2017

  23-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • legsSTICHESlegghj

  இரண்டு கைகளும் இல்லை கால்களால் துணிகளை தைத்து வாழுந்துவரும் அதிசய தையல்காரர்

 • CurreNCYevndvbbITION

  சென்னை நாணயவியல் கழகம் சார்பில், தேசிய அளவிலான வரலாற்று நாணயக் கண்காட்சி தொடங்கியது

 • 22-07-2017

  22-07-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • KJJKjammuCLUDBYRSTDS

  ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்