SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவதாரத்துக்கு முன்னாலேயே அர்ச்சாவதாரமாக ஆவிர்பவித்த ஆசார்யன்

2017-04-06@ 10:02:52

ராமானுஜர் - 1000

துத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி, பாரம்பரியப் புகழ் வாய்ந்தது. ஆன்மிகத் தொன்மை மிக்கது. இந்தப் பெருமைக்கு முக்கிய காரணம், இந்தத்  திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீமத் ராமானுஜர்தான் என்றால் அது மிகையாகாது. பொதுவாகவே பரந்தாமன் ஒவ்வொரு அவதாரம் மேற்கொண்ட  பிறகே அந்தந்த அவதாரத்தின் அர்ச்சாவதார மூர்த்தங்கள் கோயில் களில் இடம்பெற்றன. ஆனால் ஸ்ரீமத் ராமானுஜருக்கோ அவரது அவதாரம் நிகழுமுன்னரே  விக்ரகம் வடிக்கப்பெற்றது வியப்புக்குரிய தனிச்சிறப்பாகும். பிற ஆசார்யார்கள் மற்றும் ஆழ்வார்கள் யாருக்குமே கிடைக்கப்பெறாத அரும்பேறு இது என்றே  சொல்லலாம். இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

ஆழ்வார் திருநகரியில் காண்போர் மனங்களிக்கும் வண்ணம் அமைந்திருக்கும் ஸ்ரீமத் ராமானுஜரின் இந்த அர்ச்சாவதார விக்ரகம், அவருடைய அவதாரத்துக்கு  நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருவானது என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது! யார் உருவாக்கிய பேரெழில் வடிவம் இது? கலியுகம்  ஆரம்பித்த நாற்பதாவது நாளில் நம்மாழ்வார் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. (இவருக்கு முந்தைய குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள்,  திருமங்கையாழ்வார்; திருப்பாணாழ்வார், திருமிழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்; பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் அகியோர் துவாபர  யுகத்தில் அவதரித்ததாகவும் சொல்வார்கள்.) நம்மாழ்வாரின் முதல் சீடர் மதுரகவியாழ்வார்.

தன்னை நெறிபடுத்த தக்கதோர் ஆசானைத் தேடி வட பாரதப் பகுதியிலிருந்து புறப்பட்டு தென்பகுதிக்கு வந்த அவர், நம்மாழ்வாரை தரிசித்தார். தன் ஒரே  கேள்விக்கான அவருடைய பதிலில் அப்படியே சரணடைந்து விட்டார். அந்தக் கணத்திலிருந்தே   அவரையே தன் ஆசார்யனாக சிரமேற்கொண்டார். ஆசார்யரின்  அணுக்கத் தொண்டராக அவருக்குப் பல பணிவிடைகள் செய்து அத்யந்த சீடனாகத் தன் கடமைகளை உளப்பூர்வமான பக்தியுடன் நிறைவேற்றிவந்தார்.  இந்த வகையில் தான் தினமும் ஆராதனை மேற்கொள்ள தனக்கு ஓர் விக்ரகம் வேண்டுமென மதுரகவி ஆழ்வார் குருநாதர் நம்மாழ்வாரிடம் விண்ணப்பித்தார்.  ஆசார்ய மஹானுபாவரும், தாமிரபரணி ஆற்றிலிருந்து நீரெடுத்து அதனைக் காய்ச்சினால், ஓர் விக்ரகம் அவர் அடையப் பெறுவார் என்று உள்ளன்புடன்  ஆசிர்வதித்தார். மதுரகவி ஆழ்வாரும் அவ்வாறே செய்ய, இரு கரங்கள் கூப்பிய நிலையில்  அஞ்சலி ஹஸ்தராக  ஒரு விக்ரகம் உருவாயிற்று. அந்த விக்ரகமே  ஸ்ரீமத் ராமானுஜர் தோற்றம். (இந்த விக்ரகத்தைதான் ஆழ்வார் திருநகரி திருத்தலத்தில் இன்றும் நாம் தரிசிக்கிறோம்.)

ஆனால், மதுரகவி ஆழ்வாரோ அந்த விக்ரகத்தைப் பார்த்துப் பரிதவித்துப் போய்விட்டார். ‘நான் ஆராதனை செய்யவேண்டும் என்று விக்ஞாபித்து எனக்குக்  கிடைத்துள்ள இந்த விக்ரகம் அஞ்சலி ஹஸ்தம் கொண்டிருக்கிறதே. ஆனால், நான் கடைநிலை சீடனல்லவா? நானல்லவோ அனைவருக்கும் வணக்கம்  செலுத்தவேண்டும்? நான் ஆராதிக்கும் விக்ரகம் அவ்வாறு செலுத்தலாமோ? இது குரு அபசாரமல்லவா!’ என்று நெக்குருகி கண்ணீர் பெருக்கினார். உடனே தன்  ஆசார்யரை அணுகித் தன் மனக்கிலேசத்தை வெளிப்படுத்தினார். நம்மாழ்வாரும் மலர்ப் புன்னகையுடன் ஆசியருள, இரண்டாம் முறையாக தாமிரபரணி ஆற்று  நீரைக் காய்ச்சினார். காய்ச்சும்போதே மனசுக்குள் மழைமேகமாய் மண்டியது பிரார்த்தனை: ‘அடியேன் பரம சிஷ்யன். நீர் எனக்கு குரு, ஆசார்யன். ஆகையால்  ஞான முத்திரையுடன் ஆசார்ய பாவத்தில் விக்ரஹமாகப் பூக்கவேண்டும்.’

அதேபோல ஓர் உற்சவ மூர்த்தி வெளிப்பட்டார். இந்த மூர்த்திதான் ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிநாதர் கோயிலில் திகழும் நம்மாழ்வார் உற்சவ மூர்த்தி.
நம்மாழ்வாருக்குப் பிறகு மற்றைய ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அவதரித்தபின், நாதமுனிகளுக்கும் அடுத்தே ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீபெரும்புதூரில் திருஅவதாரம்  காட்டினார். அவ்வாறு அவர் அவதரிப்பற்கும் முன்னால் தோன்றிய அவரது அந்த விக்ரகத்தை, ஆழ்வார் திருநகரியில் பரிமளிக்கும் அந்த விக்ரகத்தை  ‘பவிஷ்யதாசார்யன்’ என்றழைக்கிறார்கள் பெரியவர்கள். ‘பவிஷ்யத்’ என்றால் ‘இனிமேல் வரக்கூடிய’ என்று பொருள். ஆகவே இவருக்கு வெள்ளை  வஸ்திரம்தான் அணிவிக்கப்படுகிறது; காஷாய வஸ்திரம் அணிவிப்பதில்லை. தொன்று தொட்டு நிலைத்திருக்கும் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும்  ராமானுஜருக்கு கண்டிப்பாக ஒரு சிறு சந்நதியாவது இருக்கும் என்ற உண்மையே ஸ்ரீமத் ராமானுஜரின் அவதார காலத்துக்கு ஆதாரமாகத் திகழ்கிறது.

உதாரணமாக திருமலை திருப்பதி கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பிராகாரத்தில் ராமானுஜருக்கு சந்நதி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  பெருமாளை தரிசிக்கச் செல்லும்போது வலப்புறத்திலுள்ள சந்நதியில் கொலுவிருக்கும் ஸ்ரீமத் ராமானுஜரை தரிசிக்கலாம். ஆழ்வார் திருநகரியில் ராமானுஜ  சதுர்வேதிமங்கலம் என்ற இடத்தில் தனிக்கோயில் அமைந்திருப்பது விசேஷம். இங்கு மூலவர் ஸ்ரீமத் ராமானுஜருக்கு ஆதிசேஷன் குடை பிடித்துக்  கொண்டிருக்கிறார்! இதேபோன்ற காட்சியை கர்நாடக மாநிலத்தில் தொண்டனூரில் மட்டும்தான் தரிசிக்க இயலும். மற்ற தலங்களில் மணவாள  மாமுனிகளுக்குத்தான் ஆதிசேஷன் குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ராமானுஜர் விக்ரஹமும், நம்மாழ்வார் விக்ரஹமும் ஒரே நாளில் ஆழ்வார் திருநகரிக்கு வந்ததால்தான் இங்கு மட்டும் ராமானுஜருக்கும், நம்மாழ்வார்க்கும் சேர்த்து  ஒரே திருமஞ்சனவேதியில் (தொட்டியில்) ‘‘சேர்த்தி திருமஞ்சனம்’, வருடத்திற்கு மூன்று முறை நடைபெறுகிறது: 1) வைகாசி மாதம் நம்மாழ்வார் உற்சத்தின்  ஏழாம் திருநாளன்று; 2) மாசி மாதம் நம்மாழ்வார் உற்சவத்தின் ஏழாம் திருநாளன்று. இத்திருநாளில் நம்மாழ்வார், பவிஷ்யதாசார்யன் (ராமானுஜர்) சந்நதிக்கு  எழுந்தருள, அங்கு சேர்த்தி திருமஞ்சனம் நடக்கும்; 3) மார்கழி மாதம் அத்யயன (பகல் பத்து, ராப்பத்து) உற்சவத்தில் இருபது நாட்களும் ராமானுஜர் ஆதிநாதர்  கோயிலில்தான் இருப்பார். அந்த காலகட்டத்தில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளன்று இருவருக்கும் அங்கு சேர்த்தி திருமஞ்சனம் நடக்கும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவு பல்லக்கில் நம்மாழ்வாருக்கு அழகிய மணவாளனாக சயன திருக்கோலமும், ராமானுஜருக்கு நாச்சியார் பாவமாக  தாயார் திருக்கோலத்தில் நம்மாழ்வார் திருவடியை பிடித்துக்கொண்டிருப்பது போலவும் அலங்காரம் செய்வார்கள்  மாறன் அடி பணிந்து உய்ந்தவன் என்பதற்காக! ஆழ்வார் திருநகரி தலத்திற்குச் சென்று பவிஷ்யதாசார்யனான ஸ்ரீமத் ராமானுஜரை தரிசிப்பது அவரது இந்த ஆயிரமாவது ஆண்டில் நாம் பெற்றிருக்கும் பெரும்  பேறு!

ஸ்ரீநிவாசன்

அர்ச்சகர், பவிஷ்யதாசார்யன் சந்நதி, ஆழ்வார் திருநகரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்