SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணம் விரைவில் ஈடேறும்!

2017-04-01@ 10:23:03

என் மகளுக்கு ஒன்றரைவயதாகிறது.நடக்க, உட்கார முடிவதில்லை. தலை ஓரளவு நிற்கிறது.இன்னும் பேசஆரம்பிக்கவில்லை. சிலசமயம் பற்களை கரகரவென கடிக்கிறாள். சிலசமயம் இரவு நேரத்தில் அழுதுகொண்டே இருக்கிறாள். தகுந்த பரிகாரம் கூறுவும். க. மூர்த்தி.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள்மகளின் ஜாதகத்தில் பிறந்தது முதல் 17.5.2017 வரை சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. மகளின் ஜாதகத்தில் ராகு பிரச்னையைத் தரும் ஆறாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் மருத்துவச் செலவினை சந்தித்து வருகிறீர்கள். அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் மூன்றாம் பாவத்தில் சூரியனோடு இணைந்திருப்பது தற்போதைய சூழலில் பலவீனமான அம்சமாக உள்ளது. நரம்பு மண்டலம் வலிமை பெற்றுவிட்டால் உங்கள் பெண் எதிர்காலத்தில் மிகுந்த பலசாலியாகத் திகழ்வாள்.

தினமும் சூரியன் உதயமாகும் வேளையில் 15 முதல் 20 நிமிடம் வரை அவளது உடல் மீது சூரிய ஒளி படும்படியான இடத்தில் குழந்தையை வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியோடும் தளராத மனதுடனும் முயற்சித்து வாருங்கள். 17.5.2017 முதல் குழந்தையின் உடல்நிலையில் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேற்றம் காண்பீர்கள். பத்து வயது முதல் உங்கள் குழந்தையின் வளர்ச்சி உங்களை அசரடிக்கும். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி நரசிம்ம ஸ்வாமியை மனதார பிரார்த்தித்து வாருங்கள். உங்கள் மகள் இந்த உலகினை ஆள்வாள்.

“யந்நாமஸ்மரணாத் பீதா: பூத வேதாள
ராக்ஷஸா:
ரோகாத்யாஸ் ச ப்ரணச்யந்திபீஷணம் தம்
நமாம்யஹம்.”


கடன் வாங்கினால் அதனை உடனடியாக திருப்பித் தரவேண்டும் என்றஎண்ணம் இருந்தும் என்னால் தர முடிவதில்லை. தொழில்ரீதியாக எனக்கு வர வேண்டிய பணத்தையும் வசூலிக்க முடியவில்லை. இதிலிருந்து மீள உரிய பரிகாரம் கூறுங்கள். வாசன், வந்தவாசி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் நான்கு கோள்கள் இணைந்திருப்பது சாதகமான நிலை அல்ல. மேலும், நீங்கள் பிறந்தநாள் அமாவாசை என்பதோடு அன்றைய தினம் சூரிய கிரஹணத்திற்கு உரியநாளும் கூட. இந்தியாவில் சூரிய கிரஹணம் தெரியாததால் உங்களுடைய வாழ்வு பிரச்சினைஅதிகமின்றி சுமுகமாக செல்கிறது. உங்களுடைய ஜாதகப்படி கடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடக் கூடாது. தான, தருமம் செய்யலாமே தவிர, அவசரத்திற்கு என்று அடுத்தவர்களுக்கு செய்யும் பணஉதவி திரும்ப வந்து சேராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தற்போது நடந்து வரும் சனிதசை முடிந்ததும், அடுத்து வரும் புதன் தசையில் ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவது மட்டுமே உங்கள் வாழ்விற்கான அர்த்தத்தைப் புரிய வைக்கும். அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்து வாருங்கள். திவசம் முதலான முன்னோர் வழிபாட்டினையும் விடாது சரிவரச் செய்து வாருங்கள்.வேறு விசேஷ பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

எனக்குத் திருமணமாகி 26 வருடங்கள் ஆகிறது. திருமணம் ஆனநாள் முதல் என் கணவரிடம் நிறைய கஷ்டங்கள் அனுபவிக்கிறேன். கல்யாண வயதில் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வழியை கூறுங்கள். மகேஸ்வரி, சென்னை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் பெயரைக் கொண்டு அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பிறந்த தேதியின்படி கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி என்று சொல்லி ஆலயத்தில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். 26 வருடங்களாக கணவரை சமாளித்து வரும் உங்களுக்கு இனிமேல் கவலை எதற்கு? வயதிற்கு வந்த பிள்ளைகள் உங்களுக்குத் துணை இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்து மனதிற்கு சரியென்று தோன்றுவதை தைரியமாக எடுத்துச் சொல்லுங்கள்.

ஏழரைச் சனி நடந்து வந்தாலும், உங்களுடைய எழுச்சிக்கு சனிபகவான் துணையிருப்பார். ஏதேனும், ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் குடும்பத்துடன் கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலைக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். செவ்வாய் தோறும் அருகிலுள்ள முருகன் கோயிலில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து உங்கள் கணவரின் மனம் பக்குவப்பட வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள்.

“ஸ்ரீஸ்வாமிசைலேவஸந்தம் ஸாதுஸங்கஸ்ய ரோகான் ஸதாஸம்ஹரந்தம்
ஓங்காரதத்வம் வதந்தம் சம்பு கர்ணேஹஸந்தம் பஜேஹம் சிசுந்தம்.”

 
நான் சொந்தமாக ஹோட்டல் நடத்தி நஷ்டப்பட்டு கடனாளியாகி வீட்டில் இருக்கிறேன். ஸ்வீட் ஸ்டால் மட்டும் வைக்கலாமா என்று யோசனையாக உள்ளது. என்னுடைய பிரச்னைக்கு நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வு சொல்ல வேண்டும். சேதுராமன், திருச்சி.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. தொழிலைச் சொல்லும் 10ம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருப்பதால் உங்கள் எண்ணப்படியே ஸ்வீட் ஸ்டால் வைக்க இயலும். அதேநேரத்தில் தன்னை வெறும் முதலாளியாக மட்டும் எண்ணிக் கொண்டு இருக்காமல், நீங்களே இறங்கி ஸ்வீட், காரம் தயாரிக்க வேண்டும். மாஸ்டர் வரவில்லை என்று பேசாமல் இருக்கக் கூடாது. உங்கள் ஜென்ம லக்னத்தில் இடம் பெற்றுள்ள சனி உங்கள் திறமையை மேலும் மெருகூட்டுவார்.

40 வயது வரை கடன் பிரச்னை என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். அதன் பிறகு நீங்கள் உங்கள் கடையினுடைய பல கிளைகளை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த இயலும். “திருச்சி ஸ்ரீரங்கா ஸ்வீட்ஸ்” என்ற பெயரில் கூட நீங்கள் உங்கள் கடையினைத் துவக்கலாம். வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலையில் ஸ்ரீரங்கம் அரங்கனின் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தினை வலம் வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி அரங்கனை வழிபட்டு வர உங்கள் எண்ணம் விரைவில் ஈடேறும்.

“லக்ஷ்மீநிவாஸே ஜகதாம் நிவாஸே
ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே
ஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே.”


என் பேரன் +1 படிக்கும்போது பள்ளியில் தகராறில் ஈடுபட்ட காரணத்தால் சர்ட்டிஃபிகேட் கொடுத்து அனுப்பி விட்டார்கள். இந்த ஆண்டு அவனை எந்த பள்ளியிலும் சேர்க்க இயலவில்லை. அவன் மேற்கொண்டு படிக்கவும், அவனது எதிர்காலம் சிறக்கவும் தகுந்த யோசனையும், பரிகாரமும் சொல்லவும். ராமசாமி, மேட்டூர்.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள இந்தப் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது சனிதசை நடந்து வருகிறது. சனி ஜாதகத்தில் நீசம் பெற்றுள்ளதால் தவறான மனிதர்களுடனான தொடர்பு அவரது மனதினை மாற்றுகிறது. இன்னும் ஐந்து வருட காலத்திற்கு அவரை பெரியவர்களின் கண்காணிப்பில் வைத்திருப்பது நல்லது. இந்தக் கல்வியாண்டில் அவரை மீண்டும் வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்.

தற்போது புதன் புக்தி நடந்து வருவதால் அவரால் தனது படிப்பினைத் தொடர இயலும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து வரச் சொல்லுங்கள். எதிர்காலத்தில் காவல்துறையைச் சார்ந்த பணிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று தரிசிக்கச் செய்யுங்கள். தினமும் காலையில் குளித்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி ஆஞ்சநேயரை மனதார வழிபட்டு வரச்சொல்லுங்கள். அவரது வாழ்வு சிறக்கும்.

“மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம்
சிரஸா நமாமி.”

 
நான் சி.ஏ. படித்து வருகிறேன். சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆகும் வாய்ப்பு உள்ளதா அல்லது வேறு தொழில் செய்ய வேண்டுமா? எனது சுய சம்பாத்தியத்தில் சொந்தக் காலில் நிற்கவும், எனது தாழ்வு மனப்பான்மை அகலவும் உரிய பரிகாரம் கூறவும். செல்வராஜ், தாராபுரம்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள தங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது நல்லஅம்சம். அதே நேரத்தில் கணக்காளரான புதன் 12ம் வீட்டிலும், குரு பகவான் 6ம் வீட்டிலும் அமர்ந்திருப்பது உங்களை ஒரு முழுமையான சார்ட்டட் அக்கவுன்டன்ட் ஆக பணி செய்ய விடாது. இருப்பினும் ஒரு ஆடிட்டருக்கு உரிய மொத்த அறிவினையும் பெற்றிருப்பீர்கள். சென்னை போன்ற பெருநகரத்தில் ஏதேனும் ஒரு மிகப்பெரிய லிமிடெட் நிறுவனத்தில் இதே அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் உங்கள் வேலைவாய்ப்பிற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் தற்போது பயிற்சி பெற்று வரும் ஆடிட்டரை உதவி செய்யுமாறு கோருங்கள். தற்போதைய கிரக நிலைப்படி 24.9.2018 வரை நேரம் நன்றாக உள்ளது. அதற்குள்ளாக கடுமையாக முயற்சி செய்து ஒரு நிரந்தர வேலையினைப் பெற்றுக் கொள்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. கீழ்க்கண்ட அபிராமி அந்தாதியைச் சொல்லி தினமும் காலையில் அம்பிகையை வழிபட்டு வர தாழ்வுமனப்பான்மை நீங்கி உயர்வு பெறுவீர்கள்.

“உடைத்தனை வஞ்சப்பிறவியைஉள்ளம்
உருகும் அன்பு
படைத்தனைபத்மபதயுகம் சூடும் பணி
எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கைஎல்லாம்
நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏதேன்று
சொல்லுவதே.”

 
நான் ஒருவரை காதலித்து வந்தேன். அவர் ஏழை என்பதோடு வேறு சாதி என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னால் என் காதலரை மறக்க இயலவில்லை. பெற்றோர் சம்மதத்துடன் என் விருப்பப்படி திருமணம் நடக்க ஏதேனும் பரிகாரம் உண்டா? ஆர்.எஸ்.கீது, கன்னியாகுமரி.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி காதல் திருமணம் என்பது நல்ல வாழ்வினைத் தராது. மேலும், உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயோடு ஏழிற்கு அதிபதி சுக்கிரனும் இணைந்திருப்பதால் அவசரப்பட்டு திருமணம் செய்வது நல்லதல்ல. தற்போது உங்கள் ஜாதகத்தில் ராகு தசை துவங்கியுள்ளதால் நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். உங்கள் கவனத்தை வேறு மார்க்கத்தில் செலுத்துங்கள். தியாக உள்ளத்தோடு அடுத்தவர்களுக்குச் சேவை செய்ய இறைவன் உங்களைப் படைத்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நர்சிங் போன்ற துறையில் பயிற்சி பெற்று பணிக்குச்செல்வது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. உங்களது 27வது வயதில் நீங்கள் சந்திக்க உள்ள ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதரோடு பெரியவர்கள் சம்மதத்துடன் உங்கள் திருமணம் நல்லபடியாக நடந்தேறும். அதுவரை மனதினை அலைபாய விடாமல் படிப்பினில் கவனத்தை செலுத்துங்கள். முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனைக்குச் சென்று தியானம் செய்யுங்கள். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமையில் குமரிஅம்மனை தரிசித்து மனமுருகி பிரார்த்தனை செய்து வாருங்கள். 12 வாரங்கள் முடிவதற்குள் உங்கள் மனம் தெளிவு பெறும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

 • road_safetyr

  சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்