SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடலும் நீயே! உயிரும் நீயே!

2017-03-31@ 16:50:35

வலங்கைமான்

வலங்கைமானில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர், கோவிந்தம்மாள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே என்பது மட்டுமே இந்தத் தம்பதிகளின் ஒரே குறையாக இருந்து வந்தது. வலங்கைமானுக்குத் தெற்கிலுள்ள புங்கஞ்சேரி என்னும் கிராமத்தில்தான் கோவிந்தம்மாள் வாணிபம் செய்வது வாடிக்கை. ஒரு வெள்ளிக்கிழமை, வியாபாரம் முடிந்து மனமகிழ்வுடன் அந்த ஊர்க்குளத்தில் குளித்து விட்டுக் கரையேறிய போது ஐயனார் கோயில் வாசலில் ஒரு குழந்தை அழும் குரலைக் கேட்டாள். அதை நோக்கி ஓடினாள். ஊர்க்காரர்களும் ஓடி வந்தனர். அழுது கொண்டிருந்த குழந்தையை கோவிந்தம்மாள் வாரி எடுத்தாள். உடனே அழுகையை நிறுத்திய அந்தப் பெண் குழந்தை, அவளைப் பார்த்துச் சிரித்தது. குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். யாரும் தென்படவில்லை.

அதன் அழகில் மயங்கினர் ஊர்க்காரர்கள். இறுதியில் குழந்தையை ஊர் நாட்டாண்மைக்காரரே எடுத்து வளர்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்கே கிடைக்கும் என்று எதிர்பார்த்த கோவிந்தம்மாளின் வருத்தமும், ஏக்கமும் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இதையடுத்து புங்கஞ்சேரியில் கோழிகளும், ஆடு மாடுகளும் மர்மமான முறையில் இறக்கத் தொடங்கின. ஊர் மக்கள் பலருக்கு அம்மை போட்டது. ஐயனார் கோயிலில் கிடைக்கப்பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் வைசூரி வார்த்து விட்டது. அப்போது ஊர்க்காரர் ஒருவர் மீது அருள் வந்து, அந்தப் பெண் குழந்தையை கோவிந்தம்மாளிடம் கொடுத்து விடவேண்டும் அப்போதுதான் ஊர் நலம் பெறும் என்ற வாக்கு வெளிப்பட்டது.

கோவிந்தம்மாளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. சீதளா என அதற்குப் பெயரிட்டு கோவிந்தம்மாள் அகமகிழ்ந்தாள். ஆனால், கடுமையான வைசூரி நோய் காரணமாக, மூன்றாம் நாளே அந்தக் குழந்தை இறந்து விட்டது. ஆறாத் துயரடைந்த கோவிந்தம்மாளும் அவள் கணவரும் இறுதிச் சடங்குகளைச் செய்து, குழந்தையின் உடலைத் தம் வீட்டுக் கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். அதன் பின்னர்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர் கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறத்தின் அருகே வந்த போது, அவர்களில் ஒருவர்மீது அருள் வந்து, ‘‘நான் குழந்தை வடிவில் வந்த மாரியம்மன். எனக்கு உடல் இல்லையே தவிர உயிர் உள்ளது. என்னை வழிபடுவோர்க்கு அருள் புரிவேன்.’’ என்று குழந்தை சீதளா சொன்னாள்.

அதன்படி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்றுக் கொட்டகை போடப்பட்டது. மக்கள் வழிபடத் தொடங்கினர். பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது. சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் கொண்டு வரம் தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். ‘உடல் இன்றிப் போனாலும் உயிரோடு உள்ளேன்’ என்று அம்மன் அருள்வாக்கு வழங்கியதால் இந்த அம்மனிடம் குறைதீர்க்கக் கோரி வரும் பக்தர்கள், தம் உடலையே காணிக்கையாக அளிக்கும் பாடைக்காவடி பிரார்த்தனையை நிறைவேற்ற ஆரம்பித்தனர். இதனை, ‘பாடைக்கட்டித் திருவிழா’ என்றும் சொல்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கோடையின் துவக்கத்தில் பங்குனி மாதத்தில் இந்த விழா நடைபெறும். அன்னை பராசக்தியே உலகின் வெப்பம் நீக்கி உயிர்களைக் காக்கும் மழையைப் பொழிய வைக்கும் மாரியம்மனாக இங்கு தோற்றம் கொண்டிருக்கிறாள்.

வலங்கைமான் வளம் செறிந்த ஊர், குடமுருட்டி ஆற்றின் தென்திசையில் உள்ளது. ஊரின் ஈசான்ய திசையில் மகாமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலய முகப்பின் முன் மண்டபம் அடைப்புச் சுவர் ஏதுமின்றி திறந்த அரங்கமாக அமைந்துள்ளது. பக்தர்கள் பகலில் ஓய்வெடுக்கவும், இரவில் தங்கவும் வசதியாகக் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் தூண்களில் அஷ்டலட்சுமிகளின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. தலவிருட்சமாக வில்வமரம் கோயிலின் பின்னால் அமைந்துள்ளது. முன்மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் மகா மண்டபம். இதன் தென்புறத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். வடபுறத்தில் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனின் தேவியர் இருவர் என கிராம தேவதைகள் கருங்கல் திருவுருவங்களாக அருள்கின்றனர். முன்மண்டபத்தை அடுத்து உற்சவ அம்மன் துலங்கும் அர்த்த மண்டபம். அதையடுத்து பிரதானமான கருவறை.

கருவறையில் மின்னும் விளக்கொளியில் சீதளாதேவி மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் கொலுவிருக்கிறாள். நான்கு திருக்கரங்கள் கொண்ட இத்தேவி வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் தாங்கியருள்கிறாள். இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டு அன்னை வீர சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. அன்னையின் முகத்தில் மாறாத புன்னகை தவழ்கிறது. எத்தனையோ உயிர்களை மீட்டுத் தந்த அம்மன் என்பதால் அவள் முன்னிலையில் நிற்கும்போது நம் நோய், நொடி, குறைகள் எல்லாம் நம்மை விட்டு உருகி ஓடுவதை சிலிர்ப்புடன் உணர முடிகிறது.

பங்குனி மாதம் முதல் ஞாயிறன்று திருவிழா தொடங்கி, ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. எட்டாம் நாளான அடுத்த ஞாயிறன்று பாடைக்கட்டித் திருவிழா. இந்தத் திருவிழாவின்போது வலங்கைமானே மக்கள் வெள்ளத்தில் மூழ்குகிறது. உறுமி மேளங்களின் ஓங்காரம், தாரை தப்பட்டைகளின் அதிரடி, சின்னச் சின்னக் குழுக்களாக குடமுருட்டி ஆற்றில் மூழ்கி எழுந்து பாடையில் படுக்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் மக்கள். இளநீர், பணியாரங்கள், வேண்டுதல் பொம்மைகள், ஐஸ்க்ரீம் வண்டிகள், மணக்க மணக்க இலவசமாய் நீர் மோர் வழங்கும் மோர் பந்தல்கள்.... இத்திருத்தலத்தின் மகிமையே பாடைக்காவடித் திருவிழாதான். மருத்துவரால் கைவிடப்பட்டு எந்த பக்தன் அன்னையிடம் ‘எனக்கு உயிர்ப்பிச்சை தா. உனக்கு பாடைக்காவடி எடுக்கிறேன்’ என்று வேண்டிக் கொள்கிறானோ, அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து நல்வழியில் வாழ வைக்கிறாள் அன்னை.

வேண்டுதல் நிறைவேறிய பிறகு, பாடைக்காவடி எடுத்துத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள் பக்தர்கள். பாடைக்காவடி எடுக்க இருக்கும் பக்தர்கள் ஒருவாரம் அல்லது இருவாரங்கள் அன்னையை வேண்டி விரதம் இருப்பர். காவடி எடுக்கும் நாளன்று, ஒருவர் இறந்தால் எவ்வாறு அவருக்குப் பாடை கட்டி இறுதிச் சடங்கு செய்கிறோமோ அதுபோல நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தரை ஆற்றில் குளிக்க வைத்து பாடையில் படுக்கச் செய்து, அவரை நான்கு பேர் தூக்கிக் கொண்டு திருக்கோயிலை மூன்று முறை வலம் வருவர். பின் கோயிலின் முகப்பில் பாடையை இறக்குவர். கோயிலில் பூசாரி வேண்டிக் கொண்டு பிணம் போலக் கிடக்கும் பக்தர்மேல் அபிஷேக நீர் தெளித்து அன்னையின் பிரசாதமான விபூதியைப் பூசி அவரை எழச் செய்வர். இதனாலேயே மக்கள் அன்னையை ‘பாடைக்காவடி மாரியம்மன்’ என்றும் போற்றுகின்றனர். ‘கடைசியில் இதுதான். இவ்வளவுதான் என்பதால் இருக்கும்வரை எப்போதும் அன்புடனேயே இருங்கள்,’ என்று அறிவுறுத்துவதுதான் இந்தப் பரிகார வேண்டுதலின் நோக்கம். கும்பகோணத்திலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
 
ராதா பாஸ்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்