SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலய மணியை நன்கொடையாகக் கொடுங்கள்!

2017-03-28@ 10:42:45

எனது மகளுக்கு எப்பொழுது இரண்டாவது திருமணம் நடக்கும்? இரண்டாவது திருமண வாழ்க்கையாவது நன்றாக அமையுமா? நல்ல வேலை எப்பொழுது கிடைக்கும்? பெரும்பாலான கிரகங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் சாரத்தில் உள்ளன, சூரியன் பன்னிரண்டாம் இடத்தில் இருக்கிறான் என்றெல்லாம் சொல்கிறார்கள். இதற்கென்ன பரிகாரம்? எனது சொத்து எனது மகள் மற்றும் அவள் படித்த ECE படிப்பு மட்டுமே. எனது மகள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுங்கள். ஸ்ரீநிவாசன், சென்னை 42.

தங்கள் மகளுக்கு மகர லக்னம். சிம்ம ராசி. மகம் நட்சத்திரம். தற்போது சூரிய தசையில் ராகு புக்தி வருகிற ஜூன் மாதம்வரை உள்ளது. கடுமையான ராகு தோஷம் உள்ளது. பெரும்பாலான கிரகங்கள் அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் அமர்வதும், களத்ர ஸ்தானாதிபதி எட்டிலும் விரய ஸ்தானாதிபதி குரு களத்ர ஸ்தானத்தில் இருப்பதும் முதல் திருமண உறவை பிரித்துவிட்டது. கவலை வேண்டாம். உங்கள் மகளுக்கு மறுமண வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும். லக்னத்திற்கு 9ம் அதிபதி புதன் 11ம் வீட்டில் சுயசாரத்தில் அமைந்த காரணத்தால் வருங்காலத்தில் அமையும் கணவரால் மகள் மிகச் சிறப்பான யோக பலனை அனுபவிக்க உள்ளார். வேலையைப் பொறுத்தவரை சூரிய தசையில் ராகு புக்தியால் அலைச்சல்களும் தொந்தரவும் வந்து நீங்கும். வருகிற 21.3.2018 முதல் வேலையில் நல்ல மாற்றமும், யோகமும் வர உள்ளன. அதேகாலம் திருமணமும் சனி புக்தியிலே கைகூடும். உங்கள் மகளை வாரம்தோறும் தட்சிணாமூர்த்தி பகவானுக்கும், வடக்கு பார்த்த விநாயகருக்கும் தீபமேற்றி வழிபடச் சொல்லவும். மேற்சொன்ன காலம் வரும் வரை பொறுத்திருந்து திருமண ஏற்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

எனது அப்பா அம்மாவின் ஆயுட்காலம் எப்படி? எனது மனைவி இறுதிவரை என்னுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா? ஜோதிட நண்பரின் வாயிலாக ஜோதிடம் பயின்று வருகிறேன். எனக்கு ஜோதிடத்தை தொழிலாகச் செய்யும் யோகம் உள்ளதா? கடன் சுமை எப்பொழுது தீரும்? என் மனைவியின் சொத்து என் கைக்கு வருமா? வீட்டில் பில்லி சூனியம் உள்ளதா? தங்கவேல், கரூர்.

உங்களுக்கு ராசி, லக்னம் இரண்டுமே துலாம்தான். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, புதன் தசையில் சுக்கிர புக்தி நடைபெறுகிறது. வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்ந்திருக்க, பூர்வ புண்ணியாதிபதியான சனி எட்டில் மறைந்து பார்வை பெறுவது, ஜோதிடத்தை வைத்து ஜீவனம் நடத்தும் யோகத்தை காட்டுகிறது. அதற்கான சூழல் சனி பகவான் விருச்சிக ராசிக்கு வந்த காலம் முதலே ஏற்பட்டுவிட்டது. தாராளமாக ஜோதிடம் பார்க்கலாம், யோகமாக அமையும். தந்தைக்கு நடப்பு புதன் தசையில், குரு புக்தி காலம்வரை ஆயுள் பங்கம் ஏதுமில்லை. மனைவி வழியான சொத்துகள் நிச்சயம் தங்களுக்குக் கிடைக்கும். களத்திர பாவத்திற்கு மூன்றுக்கும் ஆறுக்கும் அதிபதியான புத பகவான் தங்கள் லக்னத்திற்கு தன ஸ்தானத்தில் இருப்பது மனைவி வழியில் சொத்துகள் கிடைக்கும் யோகத்தை காட்டுகிறது. 2019ல் புதன் தசையில் சூரிய புக்தி வரும்போது கிடைக்கும். வீட்டில் பில்லி சூனியம் ஏவல் என்று எதுவுமில்லை. வாழ்வில் ஏற்றம் பெற, நீங்கள் செய்ய வேண்டியது மகாலட்சுமி வழிபாடாகும்.

எனக்கு வயது 82. என் இரண்டாவது மகனுக்கு அவரது 25வது வயது முதல் திருமணம் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை கைகூடவில்லை கோயில் பரிகாரம் அனைத்தும் செய்துவிட்டோம். எப்படிப்பட்ட பெண் அமைவாள்? இத்தனை வருடங்கள் வாழ்ந்தும் பிள்ளைகளுக்கான கடமைகளைச் சரிவர செய்யாமல் போய்விடுவேனா என்கிற பயமும் ஆதங்கமும் உள்ளது. என்.டி.ஆர்.டி.ராம். திருச்சி18.

உங்கள் மகன் மகர லக்னம், திருவோண நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்போது 48 வயதாகிறது. இதுவரை நடைபெற்ற தசையே திருமண தாமதத்திற்கு காரணமாகும். கடந்த 17 வருடங்களாக குடும்ப ஸ்தானாதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் பெற்றிருக்க, களத்திர ஸ்தானாதிபதியான சூரியன் லக்னத்தில் அமர்ந்து அம்சத்தில் நீசம் அடைந்திருக்கிறான். சூரியன் நின்ற நட்சத்திர நாதன் செவ்வாயும், அம்சத்தில் நீசம் பெறுவதால், திருமணத்திற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. அதற்கு குடும்பாதிபதி குருபகவானும் தனது தசையில் வக்கிரம் பெற்றிருப்பதால் பலனைத் தரவில்லை. தற்போது குரு தசையின் கடைசி புக்தியான ராகுபுக்தி 2019 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளதாலும் கோட்சாரத்தில் குரு, கன்னி ராசியில் இருப்பதாலும் வருகிற ஜூலை மாதம் திருமணம் நடைபெறும் சூழல் உள்ளது. சொந்தத் தொழில் செய்யலாம். எதிர்காலம் சிறப்பாக உள்ளது. குலதெய்வ வழிபாடு போதுமானது.

எனது அக்காள் மகனுக்கு வயது 32. நிறைய பரிகாரம் செய்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை. போரூர் சென்று சகல பரிகாரமும் செய்து வந்தோம். எப்பொழுது திருமணம் கைகூடும்? ஜி. தமிழ்ச்செல்வி. பொள்ளாச்சி.

உங்கள் அக்காள் மகன் பிறந்திருப்பது கும்ப லக்னம். மகர ராசி. உத்திராட நட்சத்திரத்தில். தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. அவருக்குத் திருமண யோகம் கைகூடும் காலம் தொடங்கி விட்டது. வருகிற ஜூன் மாதம் திருமணம் நடைபெறும். காலசர்ப்ப தோஷமானது 32 வயது வரை வீர்யமாகச் செயல்படும். ராகு/கேது நின்ற வீட்டின் அதிபதியான செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெறுவதும், தன ஸ்தானத்தில் அமர்வதும் மிக உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டுவதாகும். திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கை அமையும். ஒருமுறை திருச்சானூர் பத்மாவதி கோயிலுக்குச் சென்று வரவும்.

எனது மூத்த மகனுக்கு 28.10.2010ல் திருமணம் நடைபெற்றது. அந்த வாழ்க்கை நல்லபடியாக அமையவில்லை. குடும்ப நீதிமன்றம் மூலமாக விவாகரத்தும் வாங்கி விட்டோம். எனது மகனுக்கு மறுமணம் சிறப்பாக அமையுமா? என் மனைவி காலமானதும், எனது உடல் நிலை சரியில்லாமல் இருப்பதும் என் கவலையை அதிகரிக்கின்றன. சந்திரசேகரன், சென்னை.

ஜாதகர் பிறந்தது மிதுன லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரத்தில். தற்போது சூரிய தசை நடக்கிறது. ராகு, கேதுவால் கடுமையான களத்திர தோஷம் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதி குரு பாதாகாதிபதியாகி சூரியன் நட்சத்திர சாரம் பெற்றிருக்கிறார். சூரியனும் 5ம் இடத்தில் நீசம் பெற்றிருக்கிறார். ஐந்தாம் இடத்து சுக்கிரன் நான்காம் வீட்டில் நீசம் அடைந்து குரு சனியோடு சேர்க்கை பெற்றிருக்கிறார். தந்தை வழியான பெண்ணின் சாபம் உள்ளது. குலதெய்வ வழிபாடும் இடைப்பட்ட காலத்தில் வேறு தெய்வ வழிபாட்டையும்  நம்பிக்கையோடு செய்யவும். அதோடு ஜாதகர் தற்போது உள்ள வீட்டை விட்டு வேறு வீட்டை மாற்றினால் விரைவில் நல்ல பலன்களை அடைவார். சூரியன் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடப்பதால் ஏதேனுமொரு கோயிலுக்கு ஆலயமணியை நன்கொடையாக கொடுங்கள். சிறிய மணியாக இருந்தாலும் நன்மையே. திங்கட்கிழமை ராகுகாலத்தில் சிவன் கோயிலில் சிவன் சந்நதியில் தீபம் ஏற்றவும். வருகிற நவம்பர் மாதம் மறுமணம் நடக்கும்.

எனது மகள் வங்கியில் மேலாளராக பணிபுரிகிறாள். பத்தாண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுக் கொண்டிருக்கும் அவளது திருமணத்திற்காகப் பரிகாரங்கள் பல செய்தும் எவ்வித பயனுமில்லை. தயவு செய்து திருமணத்தடை நீங்க பரிகாரம் சொல்லவும். ஒரு வாசகி

உங்கள் மகள் பிறந்தது மீன லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில். கடந்த 10 ஆண்டுகளாக திருமணத்திற்காக வரன் பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. திருமணம் தாமதமாவதற்கு மாங்கல்யகாரகன் செவ்வாய் லக்னத்திற்கு மூன்றாவது வீட்டில், ராகு கேதுவுக்கு மைய புள்ளியில் அமர்ந்து, தன் காரகத்தை இழக்கிறார். 2011ம் ஆண்டு முதல் ரோக ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம் பெற்றிருக்கிறது. நீங்கள் வசிக்கும் வீட்டில் அக்னியால் தோஷம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அக்னி தோஷ பரிகாரமாக வீட்டில் யாகம் வளர்ப்பது நல்லது. 22.5.2017 முதல் நல்ல வரன் அமைந்து திருமணம் கை கூடும்.

பிரசன்ன ஜோதிடர் கடலூர் பார்த்தசாரதி

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை  600 004.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • swati_hunger_strike

  போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

 • volvo_boat_comp

  பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

 • wildanimals_docto11

  காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

 • teachers_protest11

  டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

 • road_safetyr

  சாலை பாதுகாப்பு வார விழா : போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்