SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ஜுனன் என்ற அசகாய சூரன்!

2017-03-20@ 10:47:46

மகாபாரதம் - 58

‘‘உங்களுடைய இந்த விஸ்வரூபம் பார்க்கும்போது உங்களுடைய பலத்தை என்னால் உணர முடிகிறது. ராவணன் என்கிற அரக்கனை நீங்கள் ஒருவரே அடித்து  வீழ்த்தியிருக்க முடியும். அப்படி இருக்க, நீங்கள் ராமருக்குத் துணையாக ஏன் போனீர்கள்? அவர் படையில் ஒருவராக ஏன் ஆனீர்கள்? நீங்கள் ஏன் ராவணனை  வதம் செய்யவில்லை?’’ என்று பீமன் ஹனுமாரைப் பார்த்துக் கேட்டான்.

‘‘உண்மை. என்னால் ராவணனை வதம் செய்திருக்க முடியும். ஆனால், அது என் வேலை அல்ல. அந்த யுகத்தில் அது பரந்தாமனின் வேலை என்று தெளிவாக  உணர முடிந்தது. எனவே, அவர் வருகைக்காக காத்திருந்து, அவர் வந்ததும் அவரைச் சந்தித்து அவரை நான்தான் சுக்ரீவனிடம் அழைத்துப் போனேன். ஒரு  அவதார புருஷனை சந்திக்கிறேன் என்பதை உணர்ந்து செய்தேன். ராவணனை அழிப்பதற்காகவே, அவர் பிறந்திருக்கிறார் என்பதை புரிந்து செய்தேன்.

ராமருடைய புகழுக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்று நான் அமைதியாக இருந்தேன்’’ என்று சொன்னார் ஹனுமார். ‘‘சகோதரா, பீமசேனா, உன்னை  சந்தித்ததிலிருந்து என் மனம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை அதிகம் தேடுகிறது. உன்னைத் தழுவிக் கொள்கிறபோது ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை தழுவிக் கொள்வது  போலவே இருக்கிறது. நான் இங்கிருப்பதை எவரிடமும் சொல்லாதே. இந்த இடம் ரகசியமாகவே இருக்கட்டும்.

கந்தர்வர்களுடைய அப்ஸர ஸ்திரீகளும், தேவ பெண்மணிகளும் இங்கே வருகின்ற நேரமாகிவிட்டது. எனவே திரும்பிச் செல். உனக்கு நான் என்ன செய்ய  வேண்டும் என்று தெரிவி. இப்பொழுதே போய் துரியோதனனை அடித்து நொறுக்கி விடவா, கற்பாறைகளால் அவனுடைய தேசத்தை நாசம் செய்துவிடவா?  என்னால் முடியும். சொல், உனக்கு என்ன வேண்டும்?’’ பீமன் அவரை இறுக்க தழுவிக் கொண்டான். ‘‘உங்கள் அன்பு என் கண்ணில் கண்ணீரை  வரவழைக்கிறது.

என் மனதை நெகிழச்செய்கிறது. எப்பேர்ப்பட்ட அண்ணனை நான் பெற்றிருக்கிறேன் என்ற சந்தோஷமே என்னை குதூகலமடைய வைக்கிறது. நீங்கள் என்னை  தழுவிக் கொண்டதும் என் உடல் வலியெல்லாம் போயிற்று. என் பலம் அதிகரித்தது போல் ஆயிற்று. எனக்கு நீங்கள் என்ன செய்தாலும் தகும். ஆனால்,  துரியோதனனை பஞ்ச பாண்டவர்களாகிய நாங்களே பழி வாங்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

எனவே, அது தவிர்த்து வேறு ஏதும் செய்வீர்களாக’’ என்று பணிவுடன் கேட்டான். ‘‘பகைவருக்கு எதிரே நீ சிங்கநாதம் செய்கிறபோது அந்த கர்ஜனையில் நான்  இருப்பேன். என் குரலும் சேர்ந்து ஒலிக்கும். அந்தக் குரலை கேட்டே அவர்கள் நடுங்கிப் போவார்கள். அர்ஜுனனுடைய கொடியில் நான் வீற்றிருப்பேன். அங்கிருந்து  என் பலத்தை அர்ஜுனனுக்குத் தந்து எதிரிகளை பயப்பட வைத்து உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவேன்’’ என்று உறுதியளித்தார் ஹனுமார்.

மறுபடியும் இரண்டு சகோதரர்களும் நெடு  நேரம் ஆலிங்கனம் செய்து பிறகு மெல்ல விலகினார்கள். பீமன் வணங்கியபடி ஹனுமாரை விட்டுப் பிரிந்தான். பிறகு  கந்தமான பர்வதத்தின் சரிவில் இறங்கி சௌகந்தி பூக்களோடு திரௌபதியை நோக்கி நடக்கத் துவங்கினான். அவர்கள் பரந்த புல்வெளியில் வட்டமாக அமர்ந்து  ஸ்ரீகிருஷ்ணனை நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆதூரத்துடன் பார்த்துக் கொண்டு இன்னும் பேசத் தொடங்கினார்கள்.

தருமபுத்திரர் தன்னைப் பற்றி விசாரிக்கட்டும் என்று அடக்கமாக அர்ஜுனன் காத்திருந்தான். அவ்வப்போது நகுலனும், சகாதேவனும் அவனை இரண்டு  பக்கத்திலிருந்து தொட்டுக் கொண்டு இருந்தார்கள். பீமன் மிகுந்த பாசத்துடன் தன் தம்பியை கவனித்தபடி இருந்தான். ‘‘கைலாசத்திலிருந்து கிளம்புவதற்கு முன்பு  ஏதேனும் யுத்தம் நடந்ததா? யாருடனாவது போர் புரிய நேரிட்டதா? உன்னுடைய உடம்பில் பச்சைத் தழும்புகள் தெரிகின்றன. சில இடங்கள் கன்றி இருக்கின்றன.

உன்னுடைய உள்ளங்கைகள் நாண் இழுத்ததால் தோல் உரிந்து காணப்படுகின்றன. கையுறைகளையும் மீறி இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றால்  வெறுமே வேட்டையாடுவதால் மட்டும் ஏற்பட்டிருக்காது. இடையறாது அம்புகள் தொடுப்பதால்தான் ஏற்பட்டிருக்கும். என்ன நடந்தது என்பதை நடந்தவாறு கூறு.  நான் அறிய ஆவலாக இருக்கிறேன்,’’ என்று குரலில் குதூகலம் சேர்த்து தருமபுத்திரர் வினவினார்.

தமையனார் கேட்டதும், அவரைப்போலவே சகோதரர்களும் அவனுடைய அனுபவத்தைக் கேட்கும் ஆசையுடன் காத்திருக்க, அதுவரை தானே தன் நடவடிக்கைகள்  பற்றி சொல்லாது, தன் வெற்றிகளை பறையறிவிக்காது, அமைதி காத்த அர்ஜுனன் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினான். ‘‘பரமசிவனை சந்தித்த பிறகு  என்னை அங்கே அனுப்பிய ஒரு அந்தணன் மறுபடியும் தேவலோகத்திற்குப்போய் இந்திரனை சந்தித்து இன்னும் அஸ்திரங்களை பெற்று வரலாமே என்று சொல்ல,  நான் தேவலோகம் நோக்கிப் போனேன்.

இந்திரன் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றான். ‘மானுடன் எளிதாக இந்த இடங்களில் சஞ்சரிக்க முடியாது. அதற்குண்டான உடல் வலிமை அவர்களிடம் இல்லை.  ஆனால், நீ மனிதர்களில் மேம்பட்டவன். மிக எளிதாக இங்கு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் சொல். ஸ்ரீகிருஷ்ணருடைய துணையைப்  பெற்றிருக்கின்ற உங்களுக்கு உதவி செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று சொன்னான்.

நான் சந்தோஷமாக, ‘இன்னும் அஸ்திரங்கள் வேண்டும். மிகப்பெரிய போருக்கு நான் தயாராக வேண்டும். நீங்கள் வைத்திருக்கின்ற அத்தனை விதமான  அஸ்திரங்களும் எனக்கு தேவைப்படுகின்றன’ என்று கைகூப்பி பணிவாகக் கேட்டேன். ‘நிச்சயம் தருகிறேன். இவை யாவும் உனக்கே’ என்று அக்னியையும்,  வாயுவையும், வருணனையும் வரவழைத்து அவர்களிடமிருந்த அஸ்திரங்களை என்னருகே அனுப்பினான்.

ஒவ்வொன்றாக அந்த அஸ்திரங்கள் என்னிடம் வந்து என்னோடு கலந்து கொண்டன. சிறிதுகூட தயங்காமல் கேட்டதும் எல்லா அஸ்திரங்களையும் வாரி வழங்கிய  இந்திரனை நோக்கி நான் கை கூப்பி வணங்கினேன். ‘‘எவ்வளவு அழகாக உதவி செய்கிறீர்கள். எத்தனை உண்மையாக நட்பு பாராட்டுகிறீர்கள். உங்களுக்கு  பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். ஒரு குரு காணிக்கைபோல உங்களுக்கு நான் ஏதேனும் செய்ய  விரும்புகின்றேன்’’ என்று பணிவாகப் பேசினேன்.

அதற்குக் காத்திருந்தவன்போல இந்திரன், ‘நல்லது. நான் ஜெயிக்க முடியாத அசுரர்கள் ஒரு இடத்திலே இருக்கிறார்கள். அறிவில் சிறந்தவர்கள். தேவர்களாலோ,  கந்தர்வர்களாலோ, யட்சர்களாலோ தங்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்று வரம் வாங்கியவர்கள். மாயையில் வல்லவர்கள். மிகுந்த படை பலம் உடையவர்கள்.  ஆயிரக்கணக்கான பேர் மிக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

ஒரே வேகத்தில் யுத்தத்தில் இறங்குகிறார்கள். நாலா பக்கமும் சூழ்ந்து கொண்டு எதிரியை திணறடிக்கிறார்கள். மனிதர்கள் மூலம் ஜெயிக்கக்கூடாது என்ற  வரத்தை அவர்கள் வாங்கவில்லை. மனிதர்களை சிறு புழு, பூச்சிகளாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். எனவே மனிதர்களில் சிறந்தவனான நீ அந்த நிவாத  கவசகர்களைக் கொன்றொழிக்க வேண்டும். தேவர்களுக்கு அது பெரும் நிம்மதி. எல்லா நேரமும் அவர்களைப் பற்றிய கலவரம் எங்களுக்கு உண்டு’ என்று  பரிதாபமாகக் கூறினான்.

‘நிச்சயம் செய்வேன், போய் வலிய யுத்தத்திற்கு அழைத்து அவர்களை நிர்மூலம் செய்வேன். மனிதர்கள் அல்பமானவர்கள் அல்ல. அவர்கள் செயற்கரிய  காரியத்தை செய்ய வல்லவர்கள். தேவர்களிலும் மேம்பட்டவர்கள் என்று நான் அவர்களுக்கு நினைவூட்டுவேன். எங்கிருக்கிறார்கள் அவர்கள்? அவர்கள் இருக்கும்  தீவு எங்கே இருக்கிறது?’ என்று நான் வேகத்தோடு  கேட்க, ‘என்னுடைய தேரை எடுத்துக் கொள்.

என் தேரோட்டி மாலியவான் உனக்குத் துணை வருவான். மாலியவானுக்கு அவர்கள் இருப்பிடம் தெரியும். அவர்களின் யுத்த முறையும் தெரியும். மாலியவான்  மிகச்சிறந்த தேரோட்டி. அவன் இருப்பு உனக்கு மிகப்பெரிய துணை. தக்க சமயத்தில் தக்க விதமாக ஆலோசனை சொல்ல, அவன் பழக்கப்பட்டவன்’ என்று  இந்திரன் மாலியவானை புகழ்ந்தான். ஆனால் நான் கொஞ்சம் சந்தேகத்தோடு பார்த்தேன்.

ஒரு தேரோட்டியை நம்பியா யுத்தத்தில் இறங்குகிறேன் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. ஆனால், மாலியவான் தேரில் ஏறி அந்த தேர் கிளம்பியதும்  மாலியவானின் சாமர்த்தியம் எளிதில் விளங்கிவிட்டது. அவன் வெறும் தேரோட்டி அல்ல. தேவர்களில் மிகச் சிறந்தவன் என்பது புரிந்தது. மாலியவானை நான்  மனதாரப் பாராட்டினேன்.

பதிலுக்கு மாலியவானும் என்னைப் புகழ்ந்தான்: ‘இந்திரன்கூட இந்த குதிரைகள் கிளம்பும்போது கொஞ்சம் ஆடியபடிதான் வருவார். ஆனால், எந்தவிதமாக இந்தத்  தேரை செலுத்தினாலும் நீ ஆடாது, அசையாது இந்த தேரின் ஓட்டத்திற்கு ஏற்ப நீ அமர்ந்து ெகாள்கிறாய். இது மிகப் பெரிய சாமர்த்தியம். இந்த தந்திரம்  தெரிந்தவனால் மற்ற வித்தைகளை எளிதில் அறிந்து கொள்ள முடியும். உன்னுடைய இருப்பு எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

வெகுவிரைவில் நாம் நிவாத கவசர்களை சந்திப்போம்’ என்று சொல்லி, வானத்திலிருந்து சற்று கீழ் இறங்கி அந்தத் தீவை சுட்டிக் காட்டினான். இன்னும்  நெருங்கிய போது அந்தத் தீவில் நெருக்கமாக பல அசுரர்கள் வசிப்பதும், ஒரு ஒழுங்கு முறையில் அந்தத் தீவு இருப்பதும், தற்காப்பு ஏற்பாடுகள் பலமாக இருப்பதும்  எனக்குப் புரிந்தது. மாலியவானின் தேரின் வருகை அவர்களால் வெகு எளிதில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் கீழிருந்து யுத்த வாத்தியங்களை முழக்கினார்கள். இடைவிடாது சரங்களை மாலியவானின் தேர் நோக்கி செலுத்தினார்கள். அந்த அசுரர்களிடம் மிகச்  சிறந்த ஒழுக்கம் இருந்தது. பகுதி பகுதியாக வராது ஒட்டு மொத்தமாக எதிரியை சூழ்ந்து கொள்கிறார்கள். எடுத்தவுடனேயே மிகக் கடுமையாக தாக்குகிறார்கள்.  எந்தவிதமான அஸ்திரங்களை பிரயோகம் செய்தாலும் அதைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அம்பு மழை பொழிகிறார்கள். மூன்று பக்கங்களிலும் சூழ்ந்து தாக்குவதால்  திக்கு முக்காடிப் போகின்ற நிலைமை ஏற்படுகிறது.

சற்று கவனக் குறைவானவர்கள் அதில் மாட்டிக் கொண்டு தவிப்பது உறுதி. ஆனால், நான் மிக நிதானமாக செயல்பட்டேன். மாலியவானின் தேரோட்டம் எனக்கு  உதவியாக இருந்தது. நான் எந்தப் பக்கம் பார்க்கிறேனோ அந்தப் பக்கம் அவன் தேரைச் செலுத்துகிறான். குறிப்பறிந்து நடக்கிறான். நான் மிகுந்த வலிமையோடு  அசுரர்களை எதிர்ப்பது கண்டு திகைத்துப் போனார்கள்.

அசராத ஒரு எதிரியை சந்தித்துவிட்டோம் என்று பேசிக் கொண்டார்கள். ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து இருளை உண்டாக்கினார்கள். பெரும் கற்பாறைகளை  கொண்டு வந்து வழியை மறித்தார்கள். எந்த பக்கமும் நகர ஓட்டாது செய்தார்கள். மூச்சு திணறும்படியான வேகத்தில் தாக்கினார்கள். நான் வாயுவாஸ்திரத்தை  பிரயோகம் செய்து அந்த கற்பாறைகளை தூக்கி அடித்தேன்.

அவர்கள் மாயத்தை நீக்கினேன். வெளிச்சத்தை உண்டு பண்ணினேன். அவர்கள் சிதறினார்கள். பலபேரை அடித்து வீழ்த்தினேன். குற்றுயிரும், குலையுயிருமாகச்  செய்தேன். அந்தப் போரிலே துடிப்பாக இருப்பவர்களை இனம் கண்டு கடுமையாகத் தாக்கினேன். சிரத்தைக் கொய்து அகற்றினேன். அவர்கள் நடுங்கிப் போனார்கள்.  கலந்து ஆலோசித்து வான் வெளியில் நின்று மேலிருந்து தாக்கினார்கள்.

மாலியவான் மிக சாமர்த்தியமாக அந்தத் தேரை அந்த இடத்திலிருந்து விலக்கி அவர்களை பின் தொடரச் செய்தான். சமமான தூரத்தில் பின்தொடர்ந்ததால்  அவர்களை எதிர்ப்பது எளிதாக இருந்தது. நான் புறம்கண்டு ஓடுவதாக அவர்கள் நினைத்து தொடர்ந்தபோது சட்டென்று நின்று அவர்களை கடுமையாகத்  தாக்கினேன். மாலியவான் ஆச்சரியப்பட்டான்.

‘உன்னை வெல்ல தேவர்களாலும் முடியாது. மிக அற்புதமாக யுத்தம் செய்கிறாய். எப்படி எதிரியை நிலைகுலையவைக்க வேண்டும் என்பதை வெகு விரைவில்  திட்டமிடுகிறாய்’ என்று பாராட்டினான். நிவாத கவசர்கள் அனைவரும் அழிந்தார்கள். இவர்களுக்கப்பால் பௌமர்களும், கால கேயர்களும் இவர்களுக்கு ஆதரவாக,  தேவர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு வந்தார்கள்.

அவர்களுக்குள் அபிப்ராய பேதம் இருந்தாலும் என்னை பொது எதிரியாக கொண்டார்கள். அவர்களும் கடுமையாக தாக்கினார்கள். பாசுபதாஸ்திரத்தை நான்  வளைத்து ஏவி சகலரையும் எரித்து சாம்பலாக்கினேன். அவர்கள் அடையாளம் காண முடியாதபடி அழிந்து போனார்கள். நான் செலுத்திய அனைத்து  அஸ்திரங்களும் மறுபடியும் என்னிடம் வந்து வரிசையாக புகுந்து கொண்டன. எந்த அஸ்திரமும் என்னிடமிருந்து விலகவில்லை. நான் மறுபடியும் முழு  பலத்தோடு தேவேந்திரனை சந்தித்தேன்.

தேவேந்திரன் ஆரத் தழுவிக் கொண்டான். இதோ எனக்கு ஏற்ற இந்தக் கவசமும், கிரீடமும், நைந்து போகாத இந்த நாணும் கொடுத்தான். ‘இந்த அசுரர்களை  வென்ற நீ தேவர்களைவிடவும் பலசாலி. துரியோதனனோ, கர்ணனோ, துச்சாதனனோ, பீஷ்மரோ, துரோணரோ உனக்கு இணையானவர்கள் அல்ல.

பாண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம்’’ என்று ஆசிர்வதித்தான். ‘‘உன்னுடைய பிராதாக்கள் உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்காக காத்துக்  கொண்டிருக்கிறார்கள். என்னால் அதை உணர முடிகிறது. எனவே, அவர்கள் காத்திருப்பை நீ வீணாக்காதவாறு அவர்களிடம் போய் சேர்ந்து கொள்’ என்று  வழியனுப்பி வைத்தான். நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்ற விஷயம் தெரிந்து நான் மிக வேகமாக இங்கு ஓடி வந்துவிட்டேன்.

உங்கள் அத்தனை பேரையும் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அண்ணா, இனி யுத்தம் என்று ஒன்று வந்தால் துரியோதனனை நிச்சயம் ஜெயிப்போம். கதற  அடிப்போம்,’’ என்று அர்ஜுனன் உரத்த குரலில் சொல்ல, சகோதரர்கள் மகிழ்ந்தார்கள். ஓடிவந்து அர்ஜுனனை அணைத்துக் கொண்டார்கள். கந்தமான  பர்வதத்திலிருந்து மெல்ல கீழிறங்கி தைத்ய வனத்திற்கு நகர்ந்தார்கள்.

வனத்தில் தனியாகச் சுற்றிக் கொண்டிருந்த பீமன் ஒருவித வாசனையை உணர்ந்து, நல்ல நறுமணமாக இருக்கிறதே என்று நகர, காலுக்குக் கீழே பூமி நகர்ந்து  ஒரு பெரிய மலைப்பாம்பு வெளிப்பட்டு அவனை சுற்றிக் கொண்டது. இறுக்கத் துவங்கியது. மிகுந்த பலசாலியான பீமன் பல்வேறு விதங்களில் முயற்சி செய்து  அந்த பாம்பிலிருந்து விடுபட முயன்றான்.

ஆனால், பாம்பு அவனை விடுவதாக இல்லை. வால் நுனியால் அவனை அடித்து பிணைத்த வண்ணம் இன்னும் இறுக்கிற்று. அவன் கைகளைத் தவிர, உடம்பு  முழுவதும் இறுக்கிக் கொண்டு அவனை மூச்சுத் திணற வைத்தது. பீமன் கொஞ்சம் பயந்து போனான். தருமரை நினைத்தான். கிழக்கு திசையில் ஒரு நரி  ஊளையிடுவது கண்டு தருமர் திடுக்கிட்டார்.

சகல திக்கும் பார்க்க, எல்லா திக்கிலும் துர் சகுனங்கள் தோன்றின. அர்ஜுனன் திரௌபதியோடு பேசிக் கொண்டிருக்க, நகுல, சகாதேவர்கள் வேறு வேலைகளில்  ஈடுபட்டிருக்க பீமனை காணோம் என்பதை உணர்ந்தார். எங்கிருக்கிறான் பீமன் என்று தேடத் துவங்கினார். பீமன் போன வழியில் கிளைகள் உடைக்கப்பட்டும்,  மரங்கள் உலுக்கப்பட்டும் இருந்தன. அந்த தடயங்களை வைத்துக் கொண்டே போக, ஒரு மலைப் பாம்பு அவனைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

பீமனை உண்பதற்காக மிகப் பெரியதாய் வாயைத் திறக்க, அந்த பாம்புக்கு அருகே போய் அதை தடவிக் கொடுத்தார். ‘‘சற்று நில். இவன் பீமசேனன்.  என்னுடைய தம்பி. நான் அவனுடைய அண்ணன் தருமன். நீ யார்? உனக்கு பசிதான் பிரதானம் என்றால் உனக்கு உண்ண நல்ல விஷயங்களைத் தருவோம்.  பீமனை விட்டுவிடு’’ என்று மிருதுவாகப் பேசினார்.

‘‘எனக்கு வேட்டையாடி யானைகளையும், காண்டாமிருகங்களையும் பிடித்து உண்ணத் தெரியும். ஆனால், எந்த இரை என் பக்கம் வருகிறதோ அதை உண்பது  என்பதுதான் என் விரதம். பீமன் என் மீது ஏறி நின்றான். அவனை உண்ணப் போவது உறுதி. அவனைவிடமாட்டேன்’’ என்று பாம்பு சொன்னது. ‘‘உன்னுடைய  மனதை தெளிவாகச் சொல்லி விட்டாய். ஆனாலும் நான் கேட்பதை புரிந்துகொண்டு மேற்கொண்டு செயல்படு.

என்ன செய்தால் பீமனை விடுவிப்பாய் என்று சொல். நான் அதைச் செய்கிறேன்.’’ அந்த பாம்பு வாய்விட்டு சிரித்தது. ‘‘என் பெயர் நகுஷன். நான் உங்கள்  குலத்தின் மூத்தோர்களில் ஒருவன். என் குலத்தில் உள்ள இளைஞனே கொழுப்புள்ளவனாக, தசையுள்ளவனாக, சுத்த ரத்தம் கொண்டவனாக இங்கு வந்திருக்கும்  பொழுது அதை உண்ணுகின்ற பேரானந்தம் எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை நான் விடுவதாக இல்லை. ஆனால், தருமனே நீ கேட்பதிலிருந்து உன் அறிவு கூர்மை புலப்படுகிறது. நீ வாதத்திற்கு தயாராக இருக்கிறாய்  என்பது புரிகிறது. மறுபடியும் சொல்கிறேன். நான் நகுஷன். ஒரு காலத்தில் அரசனாக இருந்தேன். மிகுந்த அறிவுடையவனாக இருந்தேன். கல்வி, கேள்விகளில்  பலம் பொருந்தியவனாக இருந்தேன்.

என்ைன பல பிரம்ம ரிஷிகள் பல்லக்கில் தூக்கினார்கள். அப்படி அவர்கள் தூக்கிக் கொண்டு போவதில் எனக்கும் பெருமை அதிகம். அவ்வாறு என்னைச் சுமக்க,  அகத்தியர் வந்து என்னைத் தூக்கியபோது நான் குள்ள உருவமுடைய அவரை விரைவாகப் போகும்படி என் கால்களால் உதைத்தேன். ‘சர்ப சர்ப’ என்று  திட்டினேன். விரைவாக விரைவாகப் போ என்று அதற்கு அர்த்தம். அகத்தியர் அதற்கு திரும்பி, என்னை நோக்கி ‘சர்ப சர்ப என்றாயே, நீ சர்பமாகக் போகக்  கடவது’ என்று சாபமிட்டார்.

அந்த அந்தணர் சாபமிட்ட க்ஷணத்திலேயே என்னுடைய உடல்கூறு அழிந்து, உயிர் பிரிந்து நான் ஒரு பாம்பாக உருமாறி இந்த இடத்திலே வந்து விழுந்தேன்.  அகத்தியர் என்ற அந்த அந்தணருடைய மனோவலிமை தெரிந்தது. தருமனே, நான் அறிவார்த்தமான ஒரு அரசனாக இருந்தபோது எனக்குள் உள்ள  கேள்விகளையே நான் இப்போது உன் முன் வைக்கப் போகிறேன். பாம்பாக உருமாறிய நான் அகத்தியரிடம் எனக்கு சாபவிமோசனமும் உண்டல்லவா என்று  கேட்க, குந்தியின் மைந்தன் தருமபுத்திரனால் உனக்கு சாபவிமோசனம் என்று சொன்னார்.

நீ வந்துவிட்டாய். என் விமோசன காலமும் நெருங்கிவிட்டது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனாலும், என் மனதிலுள்ள கேள்விகளுக்கு நீ பதில்  சொல்லியாக வேண்டும். இல்லையெனில் உன் தம்பியை இரையாகக் கொள்வேன்.’’ ‘‘சரி, எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்.  என் தம்பியை தளரவிடு.

அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும். அவன் போகமாட்டான். நான் உறுதி கூறுகிறேன்’’ என்று சொல்ல, பாம்பு பீமனை தளர்த்தியது. பீமன் பாம்பின் மீது  சாய்ந்து கொண்டான். எல்லா அரக்கர்களையும் கொன்று போடுகிற வலிவு பீமனிடம் இருந்தாலும், பல அஸ்திரங்களை தாங்கிக் கொண்டிருக்கிற சிறப்பு  அர்ஜுனனிடம் இருந்தாலும், இந்த நேரம் இந்த பாம்பிடமிருந்து தப்பிக்க தருமபுத்திரர் புத்தியால் மட்டுமே முடியும் என்பது பீமனுக்குப் புரிந்தது.

தன் தமையனாரின் வலிவை, புத்திக் கூர்மையை மிகுந்த கவனத்தோடு அவன் பார்த்துக் கொண்டிருந்தான். பாம்பு முதல் கேள்வியை தருமபுத்திரர் முன்பு  வைத்தது. ‘‘பிராமணன் என்பவன் யார்? அவன் தகுதிகள் என்ன?’’ ‘‘எவனிடம் ஒழுக்கம், அன்பு, கொடை, நேர்மை, தியாகம் போன்ற குணங்கள்  நிறைந்திருக்கிறதோ அவனே அந்தணன்.’’ ‘‘குணமா அந்தணன்? ‘‘பாம்பு மறுபடியும் கேட்டது. ‘‘ஆமாம்.

குணம்தான் அந்தணன். பிராமணனாகப் பிறந்தவன் இந்த குணங்கள் இல்லையெனில் அவன் அந்தணனாக மாட்டான். சூத்திரனாக பிறந்த ஒருவன் இந்த  குணங்களைக் கொண்டிருந்தால் அவன் அந்தணன் என்று அறியப்படுவான்.’’ ‘‘அப்படியென்றால் ஜாதி என்பது பயனற்றுப் போகிறதே’’ ‘‘ஆமாம். ஜாதி  என்பது பயனற்ற ஒரு விஷயம்தான். இந்த உலகத்தில் எல்லா ஆண்களும் எல்லாவித ெபண்களோடும் கூடி குழந்தைகள் பெறுகிறார்கள்.

அப்படிக் குழந்தைகள் பெறுவதால் ஜாதி என்ற விஷயம் உடைந்து போயிற்று. இந்த யுகத்தில் எந்த ஜாதி என்று விசாரித்து அந்த குணங்களை  கொண்டிருக்கிறானா என்று பரிட்சித்துப் பார்ப்பது தேவையற்றது. வீணானது. ஜாதியால் ஏற்படுகின்ற குணங்களும், அதனால் ஏற்படுகின்ற கௌரவங்களும்  எப்பொழுதோ குலைந்து போய்விட்டன. அவற்றைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்த லாபமும் இல்லை.’’

உயர்ந்த க்ஷத்திரிய குலத்தில் பிறந்துவிட்டு ஜாதியால் எந்த லாபமும் இல்லை என்று சொல்கிற தருமபுத்திரரை அந்தப் பாம்பு ஆச்சரியத்துடன் பார்த்தது.  ‘‘தெளிவாகப் பேசுகிறீர். உம்மோடு பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்’’ என்று சொல்லியது.

(பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மகாபாரதத்தில் எழுதப்பட்ட இந்தப் பகுதி மிகுந்த ஆச்சரியத்தை தருகிறது. இதைப்பற்றி அறிவு ஏதும் இல்லாமல்  தன் ஜாதியைப் பற்றி உயர்வாகப் பேசுவதும் அல்லது தன் ஜாதி இழிவானது என்று நினைத்து புலம்புவதும் அபத்தமானது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.  குணம்தான் ஜாதி. ஒழுக்கம்தான் அடிப்படை என்பதை வெகுநாள் முன்ேப வேத விஷயமாகச் சொல்லப்பட்டுவிட்டது.)

‘‘வேத விஷயங்களில் ஈடுபட்டு அந்த கர்மாக்களை ஒழுங்காகச் செய்தவன் சொர்க்கம் அடைகிறான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ஏ, சர்பமே, இதைத் தவிர  வேறு ஏதேனும் வழி உண்டா?’’ என்று யுதிஷ்ட்டர் கேட்க, அந்த மலைப்பாம்பு நெளிந்தது. திரும்ப கூர்மையாக தருமபுத்திரரை பார்த்தது. ‘‘தன்னிடம்  இருப்பதை கூசாமல் வாரி, வழங்கியும், இனியவை கூறியும், உண்மையை பேசியும், அஹிம்சையில் பற்றுதலுமுள்ள மனிதன் வெகு எளிதாகச் சொர்க்கத்தை  அடைகிறான். அவருக்கு ஒப்பானவர், அவரைவிட மிக்கானவர் எங்கும் இல்லை’’ என்று திடமாகச் சொல்லியது.

ஆனால், யுதிஷ்டிரர் விடவில்ைல. ‘‘சர்பமே, வாரி வழங்குவது என்பதைச் சொன்னாய். தானத்தை காட்டிலும் சத்தியமா, சத்தியத்தை காட்டிலும் தானமா, எது  பெரியது என்று நீ சொல்ல வேண்டும். அஹிம்சை, இன்சொல் இவை இரண்டில் எது பெரியது என்று நீ சொல்ல வேண்டும்.’’

‘‘இது அந்தந்த நேரத்திற்கு ஒப்பானது. தானம், சத்தியம், அஹிம்சை, இன்சொல் இவையெல்லாம் சில சமயத்தில உயர்வாகவும், சிலசமயம் தாழ்வாகவும்  போகும். சிலசமயம் தானத்தைவிட சத்தியமே முக்கியம். சிலசமயம் இன்சொல்லைவிட அஹிம்சை முக்கியம். அந்த நேரத்தைப் பொறுத்துதான் இந்த காரியங்கள்  சிறந்து விளங்கும். ஆனால், இவை எதுவுமே தவறானவை அல்ல. உயர்வை தரக்கூடியதுதான்’’ என்று அந்த மலைப்பாம்பு பேசியது.

தருமபுத்திரர் வியந்து போனார். ‘‘ஹேசர்பமே, சரீரத்தை விட்ட வனுக்கு சொர்க்கத்தில் உண்டான கதி என்ன என்பதை எனக்குச் சொல்?’’ ‘‘உயிரை  விடும்போது தேகம் பற்றிய நினைப்போடு இருந்தவன் மறுபடியும் மனிதனாகப் பிறக்கிறான். அதில் காம, குரூரங்கள் செய்தவன் பூமியில் விலங்காகப்  பிறக்கிறான். அஹிம்சை, தர்மம், தானம் இவற்றை கைக் கொண்டவன் தன்னுடைய உயிரை பிரம்மத்தில் கலக்க அந்த நேரம் முயற்சி செய்கிறான்.’’

‘‘சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் இவற்றை அறியப்படும் சமயத்தில் அறிகின்ற ஜீவனுக்கும் அறியப்படுகின்ற அந்த விஷயங்களுக்கும் இடையே உள்ள  தொடர்பை எனக்கு தெரிவிப்பாயாக’’ என்று கேட்டார் தருமர். நகுஷன் என்ற அந்த அரசன் தத்துவத்தில் மிகச் சிறந்த ஆசைகொண்டு பல பிரம்ம ரிஷிகளை  ஒன்று சேர்த்து விவாதிக்கின்றவனாகவும், அவர்களை வாதத்தில் ஜெயிக்கின்றவனாகவும் இருந்தான்.

அந்தப் பெருமையால் ஏற்பட்ட கர்வத்தால் பாம்பாக பிறந்தான். அவர்களை அவமரியாதை செய்ததால் ஊருகின்ற பிராணியாகப் பிறந்தான். அகத்தியரை எட்டி  உதைத்ததால், சர்ப சர்ப என்று அவரை விரட்டியதால், வேகம் வேகம் என்று அவரைச் சொன்னதால் சர்பமாகப் பிறந்தான். ஆனாலும், தத்துவங்கள் கூர்மையான  புத்தியுடையவரால் பேசப்படுகிறபோது அந்த நகுஷன் என்கிற பாம்பு பீமனை தளரவிட்டு தருமபுத்திரரை கவனிக்கத் தொடங்கியது.

பாலகுமாரன்

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்