SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விதியை விரட்டியடிக்கும் கயிலைநாதன்

2017-03-20@ 09:57:10

பிரம்மதேசம்

பிரம்ம தேசம் எனும் இந்த சிவத்தலம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டது. இது ஆதி கயிலாயங்களில் முதன்மையானதாகவும், தென்மாவட்ட நவகிரக தலங்களில் சூரியன் தலமாகவும்,  பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும், கடனா நதிக்கரையில் தட்சிண கங்கை என்றும் போற்றப்படுகின்றது. தட்சன் யாகம் நடத்தி வரும் வேளையில் சிவபெருமானுக்கு அழைப்பு இல்லை.  இதனால் சக்திக்கும் சிவனுக்கும் இடையே மன முறிவு ஏற்படுகிறது. சிவனை தவிர்த்து பிரமாண்டமாக யாகம் நடத்துகிறார், தட்சன். பிரம்மன் அந்த யாகத்தில் கலந்து கொண்டார். இதனால் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானார். தென்னகத்தில் கடனா நதி தீரத்தில் அத்ரி மலையில் ஆசிரமம் அமைத்து தனது தர்மபத்தினி அனுசுயா தேவியுடன் தவ வாழ்வு வாழ்ந்தார் அத்ரி மாமுனிவர்.

தனது சிஷ்யர் கோரக்கருக்காக தட்சிண கங்கை என்கிற நீருற்றை உருவாக்கினார். இதுவே கடனா நதி என விரிந்தோடுகின்றது. தாமிரபரணியோடும் கலக்கின்றது. எனவே, நதியை உருவாக்கிய மாமுனிவரிடம் இது பற்றிக் கேட்போம் என பிரம்மனை பணிந்தார், அத்ரிமகரிஷி. “பிரம்மனே, சிவபெருமான் என்னிடம் தான் சிவசைலம், திருவாலீஸ்வரம், அயனீஸ்வரம் போன்ற பகுதியில் லிங்கமாக காட்சி தந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஆகவே சிவசைலநாதரையும், திருவாலீஸ்வரரையும் வணங்கி விட்டு,  தட்சிண கங்கையாம் கடனா நதிக்கரையில் அயனீஸ்வரம் எனும் புண்ணிய தலத்திலுள்ள இலந்தையடிநாதரை வணங்கி நின்றால் சிவபெருமானுக்கு உமது மீதுள்ள கோபம் தணியும்’’என்று கூறினார். உடனேயே, பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து சிவனை வணங்கினார்.

அந்தச் சமயத்தில் சிவனின் கோபமும் தணிந்தது. பெரும் பேறு பெற்றார். பிரம்மன் வந்து வணங்கிய சிவபெருமான் வாழும் இவ்வூர் பிரம்மதேசம் என்றழைக்கப்பட்டது. அகத்திய பெருமானின் சீடரான உரோமச மகரிஷி பிரம்மாவின் பேரன். இவரும் இங்கு வந்து இலந்தையடி நாதரை வணங்கியுள்ளார். இவர் ஆதி கைலாயங்களான ஒன்பது கைலாயங்களை  வணங்கியுள்ளார். அதனுடைய தலைமைப் பீடமாக பிரம்மதேசம் போற்றப்படுகின்றது. அரியநாயகிபுரம், சிந்து பூந்துறை, கீழநத்தம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, சேர்ந்த பூ மங்கலம், கங்கை கொண்டான் போன்ற ஊர்கள் ஆதிகைலாய வரிசையிலுள்ள ஆலயங்களே ஆகும். திருவாலீஸ்வரத்தில், திருவாலிநாதர் சுவாமி கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன்  இவ்வூரை நான்மறைகள் ஓதிய அந்தணர்களுக்கு மானியமாக வழங்கினார்.

ஆகவே இவ்வூர் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இங்கு நாலாயிரம் படை வீரர்கள் பணியாற்றியதாகவும். அவர்கள் வணங்கிய காளி, நாலாயிரத்து அம்மன் எனப் பெயர் பெற்று இவ்வூர் மக்களின் முக்கிய தெய்வமாக திகழ்கிறாள். பிரமிக்க வைக்கக் கூடிய இந்த ஆலயத்தினை பல்வேறு காலகட்டங்களில் சேரர், சோழர் பாண்டியர், நாயக்க மன்னர்கள் கட்டியுள்ளார்கள். கோயிலுக்கும் முன் உள்ள தெப்பக்குளம் பிரமாண்டமாக  காட்சியளிக்கிறது . அடுத்து ராஜகோபுர வாயிலைக் கடக்கிறோம். பிரமாண்டமான அந்தக் கதவு நம்மை பிரமிக்கச் செய்கிறது. ஒரு காலத்தில் இக்கோயில் அரசனின் பாதுகாப்பு அரணாக விளங்கியுள்ளது என்பதற்கான சாட்சியை தற்போதும் காணமுடிகிறது. கோயிலை வாயில் கதவை அடைத்து விட்டால் யானை படைகள் கூட கதவை உடைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு கவசமாக இரும்பு குமிழ் பதித்து அமைத்திருக்கிறார்கள்.   

முன் கோபுர வாயிலை தாண்டி அடுத்த மண்டபம் செல்கிறோம். அவற்றின்  மேற்கூரை அமைப்பு மரத்தால் செய்யப்பட்டது. தென்புறம் சமயக்குரவர் நால்வரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். தொடர்ந்து பிரமாண்டமான, பலி பீடத்தினை கடக்கிறோம். எழுந்த நிலையில் ஓடத் துடிக்கும் நந்தி நம்மை பிரமிக்கச் செய்கிறது. கூரையில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட வளையத்துடன் மணி காணப்படுகிறது. கருவறைக்குள் கைலாசநாதர் அருள்பாலிக்கிறார். ஆதி கைலாசம் என்று அழைக்கப்படும் இவ்விடத்தில் மனதாற நின்று இறைவனை தரிசிக்கிறோம். எப்போதும் இல்லாத பேரானந்தம் நமக்குக் கிடைக்கிறது. கோயிலைச் சுற்றி வருகிறோம். வெளி மதிலின் உட்புறம் படைவீரர்கள் சுற்றி நின்று, நடந்து நடந்து கண்காணிக்கும் படியான அழகான மண்டபம் காணப்படுகிறது. கோயிலின் வெளிப் பிராகாரத்தின் பின் புறத்தில் ஒரிடத்தில் நின்று பார்த்தால் கோயிலின் ராஜகோபுரமும், விமானங்களும் நமக்கு ஒருசேர தரிசனம் தருகிறது.

ஆச்சரியத்துடனே ஆத்ம தட்சிணாமூர்த்தியை வணங்கிக் கொண்டே சுற்றி வருகிறோம்.  ஒரே கல்லினாலான புனுகு சபாபதி நடராஜர் மண்டபத்தில் நிற்கிறோம். எங்குமில்லாத அதிசயமாய் ஓம் என்ற பிரணவாகாரத்துடன் அவர் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பாகும். முன் மண்டபத்தின் வடக்கே திருவாதிரை மண்டபம் அழகு மிக்கதாகும். இதிலுள்ள பல சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது.  கிஷ்கிந்தா காண்டத்தில் ராமன் மறைந்திருந்து வாலியைத் தாக்கும் சிற்பங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாலி சிற்பமுள்ள இடத்தில் இருந்து பார்த்தால் ராமர் சிற்பம் இருக்கும் இடம் தெரியாது. ஆனால், ராமர் இருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் வாலி இருக்குமிடம் தெரியும். இந்த அமைப்புக்காக எந்தவொரு தூணையும் மாற்றி அமைக்கவில்லை.

அப்படியிருக்கும்போது இது எப்படி சாத்தியமானது என்பது புரியாத புதிராகவே உள்ளது. அம்மன் சந்நதிக்கு போகும் வழியிலுள்ள சோமவார மண்டபத்தில் கூர்ம பீடம் உள்ளது. இங்குதான் திருமணம் போன்ற விசேஷங்கள் நடைபெறுகிறது. மத்தியில் கீழ்பக்கமுள்ள பிட்சாடனர் சபை மிகச் சிறந்த கலை பொக்கிஷம். இங்கு நின்ற நிலையிலுள்ள சிவபெருமான் ஏழு அடியில் ஒரே கல்லில் சிலை வடிவில் அருள்பாலிப்பது சிறப்பானதாகும். 250 கிலோ எடை கொண்ட இந்தச் சிலை ஒரே காலில் நிற்கும் அபூர்வம் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாகும். பெரியநாயகி அம்மன் அருள்தரும் அன்னையாக குழந்தை வரம் தரும் தீர்க்க சுமங்கலியாக காட்சி தருகிறார்.  கோயிலின் உட் பிராகாரத்தில் நாலாயிரத்தம்மன் உற்சவர் அருள்பாலிக்கிறார்.

சுவாமி அம்பாள் கோயில்களுக்குள் தனித்தனி மடப்பள்ளியும் பிராகாரத்தில் மூன்று கிணறுகள் இருப்பதும் இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். சரஸ்வதிக்கு தனிச் சந்நதி உள்ளது. கோயிலில் மூலவர் கைலாசநாதருக்கும் மட்டுமல்லாமல் காசி விஸ்வநாதர், அண்ணா மலையார், சொக்கநாதர், இலந்தையடிநாதர் ஆகியோருக்கும் விமானத்துடன் கோயில் இருப்பது மற்றொரு  சிறப்பு அம்சமாகும். இக்கோயிலின் தலவிருட்சம் இலந்தை மரமாகும். இங்குள்ள இலந்தையடி நாதரை  வணங்கி நின்றால் விதி வழியால் ஏற்படுகின்ற துன்பம் தீருமென்கிறது தலபுராணம். இக்கோயிலின் ராஜகோபுரம் சற்று சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதுபோன்ற கோபுரங்கள் உருவாக்குவது கடினம். ஆனால், பேணிப் பாதுகாப்பது அவசியம்.

எனவே, இக்கோயிலில் விரைவில் திருப்பணி நடத்த வேண்டு மென்பதும்  பக்தர்களின் கோரிக்கையாகும். திருப்பணியை வேண்டி வருகிற 25.03.20017 சனிக்கிழமை சத்குரு ஸ்ரீகஜானன் மகராஜ் பக்தர்கள் பேரவை சார்பில் லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபட உள்ளனர். 1008 செவ்விளநீரால் சுவாமி அம்பாள் மற்றும் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான தாமரை, செண்பகம், மனோரஞ்சித மலர்களால் மட்டுமே அலங்காரம் செய்ய உள்ளனர். சிறப்பு பூஜையில் ஈடுபட விரும்புவர்கள் தொடர்புக்கு  9442894094, 8148681247 என்கிற எண்களை தொடர்பு கொள்ளலாம். இக்கோயில் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

முத்தாலங்குறிச்சி காமராசு

படங்கள்: சுடலைமணிசெல்வன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

 • 20-01-2018

  20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்