SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிழைத்துப்போக ஒரு வழியினைச் சொல்லி அருள்வாயாக!

2017-02-22@ 15:47:52

திருமுறைக் கதைகள்

ஒரு செல்வந்தன் தன் செல்வத்தைக் கொண்டு ஒரு வீடு  கட்டிக் கொண்டான். அது பல வசதிகளைக் கொண்டு, யாவரும் வியந்து  பாராட்டும்படி விளங்கியது.  ஒரு நல்ல நாளில் வீடுகுடியேறி வாழத் தொடங்கினார். அவர் நல்ல ஆபரணங்களையும், உடையையும் தரித்து, தன் வீட்டுப் பெருமைகளைப் பேசிக்கொண்டு,  நாட்களைக் கடத்தி வந்தார். அவருடைய உடலும் மிக கம்பீரமாகி, யாவரையும் கவர்ந்தது .
    
வருடங்கள் உருண்டோட, அவர் உடல் மெலிந்து ,தலைமுடி வெகுவாக நரைத்து, நோயும் பீடித்தது. வைத்தியர் வந்து பார்க்கும்படியாயிற்று. மருத்துவரின்  முயற்சிகளையும் மீறி நோய் அதிகரிக்க, செல்வந்தரின் உயிரும் பிரிந்தது. சிங்காரமான வாயிலுடன் அழகான வீட்டைக்கட்டினாலும், அதில் பல வருடங்கள்  அவரால் வசிக்க முடியவில்லை!

அவர் போனாலும் , ஊர் மக்கள் யாவரும் அவரது சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ‘அவர் வாழ்ந்த காலத்தில் யாவரும் கண்ணாரக் காணும்படியாக  நடந்தார், உடுத்தார், நரைத்தார்…’ இப்பொழுது அந்தச் செல்வந்தர், பிறர் சொற்களில் வாழ்கிறார்! பழைய நிகழ்ச்சிகள், வெறும் நினைவில் மட்டும் தங்கி, இறந்த  காலத்துச் செய்திகளாகி, இப்பொழுது வெறும் சொற்களாக மாறிவிட்டன.

சரி, அந்தச் சொற்களாவது நிலைத்து நிற்கிறதா? அதுவும் இல்லை. அவர் இறந்த சில நாட்களுக்கு அவரைப் பற்றிச் சிலர்  சொல்லிக் கொண்டிருந்தார்கள்:  “அடடா! எவ்வளவு  உயர்ந்த மாளிகை கட்டினார். அந்த அலங்காரமான வாசலைத்தான் எத்தனை ஆசையோடு அமைத்தார்! அதற்கு எத்தனை பணம்  செலவழிந்ததோ! இப்பொழுது அநுபவிக்க அவர் இல்லையே!”

மேலும் சிலகாலம் கழிந்தது. அவருடைய நினைப்பும் மக்கள் மனத்திலிருந்து  சிறிது சிறிதாக மறைந்து, அவரைப் பற்றிப் பேசுவதும் அறவே நின்றுவிட்டது.  அடுத்ததாக  இறந்த  இன்னொருவரைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டனர். இப்படி அவர் கழிய, அவரைப் பற்றிய செய்திகள் வெற்றுச் சொல்லாய்க் கழிகின்றன.  உலக மக்கள் எல்லோருடைய வாழ்விலும் இதே நிலைதான், இதுதான் வாழ்க்கை! சுந்தர மூர்த்தி நாயனார் இதையே ஒரு பாட்டில் சொல்கிறார்:

“நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்றது…”


“இதனை நான் அறிந்தேன்  உலக வாழ்க்கைச் செய்திகளெல்லாம் இறந்த காலத்தில் சொல்லும்படியாக அமைகின்றனவே தவிர, எதுவும் நிலையாகச் சொல்லும்படி  இருப்பதில்லை. இறந்த காலத்தில் சொல்லப்படுவதும் நிற்கிறதா என்றால் அதுவும் கழிந்துவிடுகிறது.’’ சுந்தர மூர்த்தி நாயனார் யோசனை செய்கிறார்:

“உலக வாழ்வின் நிலையாமையை தெரிந்து கொண்டபோது , நிலைத்த விலாசத்தோடு நிலையாக வாழ்கிறவன் யார் என்று ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள  வேண்டும். சிலகாலம் ஓரிடத்தில் வாழ்ந்து மறைகிறவர்கள் மக்கள். அவர்கள் மலத்தோடு சம்பந்தம் உடையவர்களாதலின் மீண்டும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள்.  அப்படியின்றி நீடு உறையும் நின்மலம் ஒருவன் இருக்கின்றான். அந்த நின்மலனை யாவரும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவனுக்குப் பல அடையாளங்கள்  இருக்கின்றன. அவன் தன் தலையிலே அறிவுக்கு அடையாளமான வெண் மதியைச் சூடியிருக்கிறான்.

அதனால் அவன் எப்போதும் ஞானம் நிறைந்தவன் என்பது விளங்குகிறது. அந்த மதி, உலகத்து மதிபோல் குறைவதும், வளர்வதும் இன்றி அப்படியே  இளம்பிறையாக இருக்கிறது. அவன் பல வீடுகளில், முகவரிகளில் நெடுங்காலமாக வாழ்கின்றான். கைலாசம் மட்டுமன்று, மதுரை, சிதம்பரம் போன்று பல  முகவரிகளில் மாத்திரமும் அன்று, அவன் பல்லாயிரக்கணக்கான இடங்களில் ஒரே சமயத்தில் உறைகின்றான்.  இருந்தாலும் நான் நெல்வாயில்  அரத்துறை  என்ற இறைவன் மாளிகைக்குச் செல்லப் போகிறேன்.’’

அதன்படி நெல்வாயில் அரத்துறை என்ற இறைவன் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்  சுந்தரர். ‘நெல்வாயில் அறத்துறையில் நீடு உறைகின்ற நிலா வெண்மதி  சூடிய நின் மலன் ஒருவன்’ இருக்கின்றான் என்பதையும் நன்கு அறிந்தார். அந்த முகவரியை சுந்தரர் தெரிந்துகொண்டாயிற்று. இப்போது அந்த இடம் எத்தகையது  என்று பார்க்க விரும்பினார். “ஆஹா! எவ்வளவு அழகான இடம்! நெல்வாயில் தலத்தில் இருக்கும் அரத்துறை எனும் கோயிலைக் கண்டேன்.

‘ஊருக்கு அழகு சேர்க்கும் வெள்ளாறும் ஓடுகிறதே! எத்தனை இயற்கையாக அந்த வெள்ளாற்றின் கரையின் மேல் நெல் வாயில் அரத்துறை அமைந்திருக்கிறது!  இந்த வெள்ளாறு இங்கேயே மறைந்துவிடவில்லையே! அது மலையிலே பிறந்து, இடையிலே பல காடுகளையெல்லாம் கடந்து,  நெல்வாயிலைத் தாண்டிச்  செல்கின்றதே!’’ என்று வியந்து மகிழ்கிறார். ஆற்றில் கை வைத்தவுடன் ஏதோ ஒன்று கையில் அகப்படுகிறது சுந்தரருக்கு.

“ஓஹோ! இந்த ஆறு மலையிலிருந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக மலையிலே வளர்கின்ற பல பொருட்களை அடித்து வருகின்றதோ! பல மணிகள்,  வைரங்கள் நிறைந்திருந்தாலும், கல்லுக்கு இடையிலே வளர்ந்திருக்கின்ற அகிலையும் அரித்துக் கொண்டு நிலா என்கிற இந்த வெள்ளாறு பாய்வது மனதிற்கு   மணம் தருகின்றதே!’’ ஆற்றில் வரும் பொருட்களைப் பார்த்து அசந்து விட்டார் சுந்தரமூர்த்தி நாயனார்.

‘கல்வாய் அகிலும் கதிர் மாமணியும் கலந்து உந்தி’ அத்தகைய நிலாவின் கரையின் மேல், நெல்வாயில் அரர்த்துறையிலே நெடுங்காலமாக உறைகின்ற  நின்மலனாகிய நிலா வெண் மதி சூடியைப் பார்த்துச் சுந்தரர் பேசுகிறார்.பிறை சூடியைப் பார்த்துப் பேசுவதிலே எப்பொழுதும் விருப்பம் உள்ளவர்தானே!  உடனே  அவனிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறார்:

“ உலகத்தில்  வீணே  யார் யாரையோ போய் கண்டேன். அவர்களுடைய செய்தியைக் கேட்டேன். அவர்களெல்லாம் வாழ்ந்தார்கள், மறைந்தார்கள் என்றுதான்  கேட்கிறேனே தவிர, வாழ்ந்து நிலையாக உறைகிறார்கள் என்று கேட்டதில்லை. நிலையாக உறையும் நின்மலன் நீ  என்று நான் பூரணமாக அறிந்தேன். இதோ  உன்னிடம் இப்பொழுது நான் வந்துவிட்டேன். உன்பால் ஒரு சிறிய விண்ணப்பம் செய்துகொள்ளப் போகிறேன்.

அடியேன் உன்னைத் தொடர்ந்தேன். நான் மற்றவர்களைப் போல வாழ்ந்து இறந்துபடாதவாறு உய்வதற்குரிய வழியை நீ சொல்ல வேண்டும்.’’ இறைவன்  ஒருவன்தான் நிலையாக இருப்பவன் என்பது முதலில் அவ்வளவு சிறப்பாகத் தெரியாது. உலகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையில்லாதது என்பது  முதலிலேயே தெரியும் .அதன் பிறகே இறைவனைத் தொடரும் முயற்சி எழும். அவனைத் தொடர்ந்து உய்ய வேண்டும்  என்ற ஆர்வமும் உண்டாகும்.

‘கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
கலந்துந்தி வருந்நி வவின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன்உய்யப் போவதொர்
சூழல்சொல்லே’


(திருநெல்வாயில் என்பது நடுநாட்டில் உள்ள தலம்) பொருள்: மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியையுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித்  தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினை யுடைய வெள்ளிய  பிறையைச் சூடிய மாசற்றவனே, உலகியலில் நின்றோர் அனைவரும், ` நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார், இல்லற நெறியிலே ஒழுகினார், நன்றாக  உண்டார், உடுத்தார், மூப்படைந்தார், இறந்தார்’ என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை  அடைந்தேன்;

ஆதலின், அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள். இது ஏழாம் திருமுறையில் மூன்றாம் திருப்பதிகமான  திருநெல்வாயில் அகத்துறையில் உள்ள முதற்பாடல். (குறிப்பு: நானிலம் - உலகம் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப்  பிரித்துச் சொல்வது தமிழ் மரபு. பாலை என்ற ஒன்று இருந்தாலும் அது இயற்கையான நிலப்பகுதியன்று. சில காலத்தில் சில இடங்களில் பாலைத் தன்மை  உண்டாகும்.)

-உமா பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

 • RainInChennai227

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்