SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருமாள் திருவடி சூடி பேரின்பம் பெறுவோம்!

2017-02-10@ 10:08:18

சாதாரண மனிதர்களின் கால்கள் என்று கூறப்படுவது, மகான்களுக்கும், இறைவனுக்கும் குறிப்பிடும்போது திருவடி என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் தவறு  செய்துவிட்டால் வெறுமனே மன்னிப்பு என்று கேளாமல், காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினால் உடனேயே மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ  கிடைக்கும். ஆனால், இறைவன் திருவடியில் சரணாகதி ஆகி, தவறுக்கு மனமுருகி மன்னிக்க வேண்டினால், சாதாரண மக்களே மனம் இரங்கும்போது, மகேசன்  மனம் இரங்காது கைவிடுவானோ?

பகவான் வாமன அவதாரம் எடுத்து, பலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு, இரண்டடியில் அனைத்தையும் அளந்து விட்டு மூன்றாவது அடிக்கு, தன்  திருவடியை பலியின் சிரசில் வைக்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் பகவான் எவரையேனும் சம்ஹாரம் செய்வார். ஆனால், வாமன அவதாரத்தில் சம்ஹாரம்  செய்யாததன் காரணம் - பிரஹலாதனுடைய தந்தை இரண்ய கசிபுவை வதம் செய்த பின், இனி பிரஹலாதனுடைய வம்சத்தில் எவரையும் சம்ஹாரம் செய்ய  மாட்டேன் என்று பகவான் பிரஹலாதனிடம் உறுதி அளிக்கிறார்.

ஆகவே பலியின் சிரசில் தன் திருவடியை அழுத்தி, பாதாள லோகத்தின் அதிபதி ஆக்கினார். பிரஹலாதனுடைய பக்தியின் தாக்கம், பேரன் மஹாபலி சக்ரவர்த்தி  வரை வந்து, பகவான் திருவடி சம்பந்தப் பேற்றினை அடைந்தான் மஹாபலி. ராமாவதாரத்தில் சாபம் நீங்கி, கல்லாயிருந்த அகலிகை அழகு மங்கையானது,  ஸ்ரீராமனின் திருவடி கடாட்சம்.

எமன் துரத்தி வந்து, பாசக்கயிற்றை மாட்டியதும், மார்க்கண்டேயர் உடன் சிவபெருமானது திருவடியை கட்டிப் பிடித்து, எமன் பிடியிலிருந்து தப்பித்து என்றும்  பதினாறாய் சிரஞ்சீவியானார். கண்ணபிரான் யசோதையிடம் வளர்கையில், யசோதை கண்ணனைக் குளிப்பாட்டுகிறாள். அப்போது கண்ணன் யசோதையின்  கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான். ரிஷிமுனி ஒருவர் இக்காட்சியை கண்டு யசோதையிடம் கூறுகிறார்.

‘தாயே யசோதா, இவ்வுலகோர் அனைவருமே கண்ணன் திருவடி பற்ற வேண்டும் என்று தவம் இருக்கின்றனர். ஆனால், அந்த கண்ணனோ, உன் திருவடி பற்றி  நிற்கிறான். உன் பெருமைதான் என்னே! நீ செய்த அரும்பாக்யம் ஒப்பற்றது தாயே’ என்று நெகிழ்கிறார். திருப்பாணாழ்வார் தாழ்குலத்தவராதலால் காவிரிக்  கரையில் நின்றபடி அரங்கனின் திருக்கோயில் கோபுரத்தையே அரங்கனாக பாவித்து சேவித்து வந்தார்.

அரங்கனுக்கு அர்ச்சனை செய்யும் லோக சாரங்கர் எனும் வைணவ அடியாரிடம், அவர் தோளில் திருப்பாணாழ்வாரை சுமந்து சந்நதிக்கு கொண்டு வரும்படி  ஆணையிட்டார் திருவரங்கன். அரங்கன் முன் கொண்டு வரப்பட்ட திருப்பாணாழ்வார் முதன் முதலாக திருவரங்கனின் திருவடி தொடங்கி திருமேனி கண்டு,  திருமுகம் கண்டு, ஆதிசேஷனைக் கண்டு மெய்யுருகிப் போனார். அப்போது பத்து பாசுரங்கள் பாடி அரங்கனைத் தொழுதார். தொழுது முடிந்ததும் திருப்பாணாழ்வார்  ஜோதி ரூபமாக திருவரங்கனின் திருவடியில் ஐக்கியமானார்.

சீதையை ராவணன் கடத்திய போது வழியில் சீதை தன் நகை களைக் கீழே எறிந்தாள். சீதையை தேடி வந்த லட்சுமணன் அந்நகைகளைக் கண்டு, அவற்றில்  இருந்த மெட்டியை சீதையினுடையது என்று அடையாளம் காட்டினார். அவள் காதிலும், கழுத்திலும் அணிந்திருந்த நகைகளைப் பற்றி தமக்கு தெரியாது என்றும்  உரைத்தார். ஸ்ரீராமன், ‘மெட்டியை அடையாளம் கண்ட உனக்கு, மற்ற நகைகளைப் பற்றி தெரியாது என்றால் வியப்பாக இருக்கிறது’ என்றார்.

அதற்கு லட்சுமணன், ‘‘அண்ணா, அண்ணியின் திருவடிகளை மட்டுமே நான் தரிசித்திருக்கிறேன். எனவே தான் மெட்டியை அடையாளம் காணமுடிந்தது’’  என்று அடக்கத்துடன் பதிலளித்தார். திருக்கோயில்களில் பெருமாளின் வீதி ஊர்வலத்தின்போது, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். கருடன் தன்  கரங்களால் பெருமாளின் திருவடிகளை தாங்கியபடி இருப்பார். எனவே கருடனுக்கு ‘பெரிய திருவடி’ என்றும் பெயருண்டு.

ஸ்ரீராம-லட்சுமணரைத் தன் தோளில் சுமந்து அவர்களின் திருவடிகளை தன் கரங்களால் தாங்கிய அனுமனை ‘சிறிய திருவடி’ என்பர். அனுமன் இலங்கை  சென்று சீதாதேவியை தேடும்போது மிகச் சிறிய உருவமெடுத்துக்கொண்டார். ஆதலாலும் அவர் சிறிய திருவடி என்று சிறப்பு பெயர் பெற்றார். வைணவ  சம்பிரதாயங்களை கடைபிடிப்போர் நெற்றியில் சாற்றிக் கொள்ளும் திருமண் எனும் திருநாமம் இறைவனின் திருவடியைக் குறிப்பதாகும்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடி அருகே ஏன் அமர்ந்திருக்கிறாள் மஹாலட்சுமி? ஜீவன்கள் முக்தி அடைந்ததும் எம்பெருமான்  நாராயணனின் திருவகளை சேர்கின்றன. அப்படி சேர்ந்த ஜீவன்களின் சிறு சிறு பாவங்களை களைந்து தூய ஆத்மாவாக இறைவனை அடையச் செய்பவள்,  கருணையே வடிவான மஹாலக்ஷ்மி! ஆகவேதான் திருவடி அருகே இருக்கிறாள்.

நாம் வைணவத் திருக்கோயில் சென்றோமானால் கர்ப்பக்ரகத்தில் அருள்புரியும் பெருமாளை கண்ணாற கண்டு சேவிக்கிறோம். வடமாநிலங்களில் பக்தர்கள்  கர்ப்பக்ரகத்தினுள்ளேயேச் சென்று இறைவனை தொட்டும், அவன் திருவடியை ஸ்பரிசித்தும் வணங்குவர். தென் மாநிலங்களில் அப்படிப்பட்ட சம்பிரதாயம்  இல்லை. கர்ப்பக்கிரகத்திலிருந்து சற்று தள்ளி நின்றுதான் சேவிக்க வேண்டும்.

ஆகவே இறைவனின் நேரடி ஸ்பரிசம் நமக்குக் கிட்டுவதில்லை. இதற்காகவே இறைவனின் திருவடியாக வெள்ளியாலான உலோக தொப்பி மாதிரி உள்ள  சடாரியை கர்ப்பகிரகத்திலிருந்து எடுத்து வந்து பக்தர்களின் சிரசில் வைப்பார்கள் சடாரி என்பது இறைவனின் திருவடியாக சொல்லப்படுகிறது. எனவே  ஒவ்வொருவருக்கும் சடாரி வைக்கும்போதும் சாட்சாத் பெருமாளின் திருவடியை நாம் நம் சிரசில் தாங்கிக்கொள்வதற்கு இது ஒப்பாகும்.

சடாரி என்பது இறைவனின் திருவடி. ஸ்ரீநம்மாழ்வார் எனும் சடகோபர் தான் எம்பெருமான் நாராயணனின் திருவடியாய் இருக்க விரும்பினார். ஆகவே சடாரியை  ‘சடகோபம்’ என்றும் கூறுவர். இது, எம்பெருமான் நாராயணன், நம்மாழ்வாருக்கு கொடுத்த கௌரவம்! நம்மாழ்வார் ஸ்வாமி, பற்பல வருடங்களுக்குப் பிறகு  தோன்றப்போகும் ஸ்ரீராமானுஜருக்கு தன் திருவடி கௌரவம் அளித்தார். அதனாலேயே நம்மாழ்வார் ஸ்வாமி சந்நதிகளில் சாற்றும் சடாரிக்கு ‘ராமானுஜம்’ என்று  பெயர்.

ஸ்ரீராமானுஜர் தன் திருவடியாக அவரது சீடர் ஸ்ரீமுதலியாண்டான் ஸ்வாமிகளுக்கு கௌரவித்தார். ஆகவே ஸ்ரீராமானுஜர் சந்நதியில் சாற்றப்படும் சடாரிக்கு  ‘முதலியாண்டான்’ என்று பெயர். ஸ்ரீராமானுஜரின் மறு அவதாரமான ஸ்ரீமணவாள மாமுனி ஸ்வாமிகள், தன் திருவடியை தன் பெயரிட்டு அழைக்க விருப்பம்  கொள்ளவில்லை. ஸ்ரீமணவாள மாமுனியின் பாதுகை போலவே ‘சடாரி’ அமைத்து அதனை ‘‘பொன்னடியாம் செங்கமலம்’’ என்றழைத்தார்.

பொதுவாக வைணவ ஆலயங்களில் மட்டுமே ‘சடாரி’ சாற்றுவார்கள். ஆனால் காஞ்சி, காளஹஸ்தி, சுருட்டப்பள்ளி ஆகிய சிவாலயங்களிலும் பக்தர்களுக்கு  சடாரி சாற்றப்படுகிறது. ‘‘சடாரி’’ என்று மேற்கூறப்பட்ட பகவானின் அல்லது ஆச்சார்ய பெருமக்களின் திருவடிதனை நாம் சிரசில் ஏற்பதால் நம் துர்குணங்கள்  விலகி, நேர்மறை சிந்தனைகள் பெருகி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

- கே.அம்புஜவல்லி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்