SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

2017-02-09@ 14:26:48

(வள்ளலார் ராமலிங்கப் பெருமானாரின் வாழ்க்கையிலிருந்து சில அற்புத சம்பவங்கள்)

சோதிக்க வந்தவர் சீடரானார் பல மொழிகளில் பாண்டித்யம் பெற்றவரும் கவித்திறன் வாய்ந்தவருமான தொழுவூர் வேலாயுத முதலியார் என்பவர் வள்ளலாரின் பாக்களைக் கண்ணுற்று வியந்தார். வள்ளலாரின் அறிவாற்றலைச் சோதிக்க எண்ணிப் பனை ஏடுகள் சிலவற்றில் சொந்தமாகச் சில பாடல்களை எழுதி அந்த ஓலைகள் பழைய ஏடுகளாகத் தோன்றுமாறு அவற்றைப் பக்குவம் செய்து வள்ளலாரிடம் வந்து அவரை வணங்கினார்.

தான் கொண்டு வந்த அந்தப் பாக்களை வள்ளலாரிடம் தந்து அவரை வணங்கி, ‘இவை சங்க காலத்துப் பாடல்கள் அருமையாகக் கிடைத்தவை’ என்று கூறினார். பாடல்கள் எழுதிய சுவடிகளைக் கண்ணுற்றவுடனே ‘இவை சங்க காலத்துப் பாடல்களல்ல, யாரோ ஒரு கற்றுக்குட்டி பாடியது. சங்க காலத்துப் பாக்களாய் இருந்தால் இவ்வளவு பிழைகள் இராது’ என்றார் வள்ளலார். வேலாயுதனார் வள்ளலாரது அறிவாற்றலைக் கண்டு திகைத்தார். வணங்கினார். தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

வேலாயுதனாரது புலமையை மெச்சி அவருக்கு ‘உபய கலாநிதிப் பெரும்புலவர்’ என்று பட்டம் கொடுத்தார். வேலாயுதனாரும் அன்று தொடங்கி வள்ளலாரின் மாணவரானார். வள்ளலாரைச் சோதித்த தொழுவூர் வேலாயுத முதலியார் சாதாரணமானவரல்ல. ஒரு வெண்பாவைக் கொண்டே பத்து வெண்பாக்களை ஆக்கும் தசபங்கியும், ஒரு வெண்பாவைக் கொண்டே நூறு வெண்பாக்களை ஆக்கும் சதபங்கியும் பாடும் ஆற்றல் பெற்றவர். அதனாற்றான் அவரது புலமையை வள்ளலார் மெச்சி அவருக்குப் பட்டமும் அளித்து அவரை மகிழ்வித்தார். தொழுவூர் வேலாயுத முதலியார் 1949ம் ஆண்டில் வள்ளலாரின் மாணவரானார்.

மனிதனுக்குள் மிருகம்! திருவொற்றியூருக்குச் செல்லும் போதெல்லாம் வள்ளலார் வழக்கமாகத் தேரடித் தெரு வழியாகச் செல்வார். ஒருமுறை நெல்லிக்காய் பண்டாரம் சந்து வழியாய் வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்தத் தெருவில் சந்நியாசி ஒருவர் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு போவோர், வருவோரையெல்லாம் கையைக் காட்டிக் காட்டி ‘நாய் போகிறது, நரி போகிறது, சிங்கம் போகிறது’ என்றெல்லாம் கேலி சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர்கள் மனித உருவிலே நடமாடிக் கொண்டிருக்கும் மிருகங்கள் என்பதை மறைமுகமாகச் சொன்னார் அந்த சந்நியாசி. அதேசமயம், அந்த வழியாய் வள்ளலார் வருவதைப் பார்த்த அவர், ஓர் உத்தம மனிதர் வருகின்றார் என்று கூறித் தன் கையால் அந்தரங்க அங்கத்தை மறைத்துக் கொண்டார். வள்ளலார் அவரிடம் ஏதோ கூறினார். அந்தச் சந்நியாசியை அன்றைக்குப் பிறகு அங்கே காணவில்லை. பிறகு விசாரித்ததில் அவர் வேலூர் சென்று அங்கே மடம் ஒன்று நிறுவி அந்த மடத்திலேயே சமாதி ஆனதாகச் சொன்னார்கள்.

அந்த சந்நியாசியின் பெயர் பாலகிருஷ்ணன் என்றும், திருஞானசம்பந்தர் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ஞானசம்பந்தர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற பாடலின் முதலெழுத்தையும் தன் பெயரிலுள்ள முதலெழுத்தையும் இணைத்து ‘‘தோபா’’ சாமிகள் என்று பெயர் சூட்டிக் கொண்டு வாழ்ந்து மறைந்து விட்டதாகச் செய்தி.

ஏட்டாலும் கேட்கமாட்டேன் எவரிடமும்! கந்தசாமி முதலியார் என்பவர் இராமலிங்கரை அணுகித் தன் வறுமை நிலையை விளக்கினார். செல்வந்தர் யாருக்கேனும் ஒரு கடிதம் கொடுத்தால் அக்கடிதத்தைக் காட்டித் தேவையான பொருள் பெற்று நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் இராமலிங்கரிடம் ஒரு கடிதம் கேட்டார். ஏட்டால் கூட எவரிடமும் கேட்க மாட்டேன், எது வேண்டுமானாலும் இறைவனிடம்தான் கேட்பேன் என்று பொருள்படும்படி ஒரு பாட்டு எழுதிக் கொடுத்து விட்டார் அடிகளார்.

ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான்
சிரித்து என்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடங்கேளேன் என்
ஆணைபுறம் விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும்
சொல்லி நிறுத்துவனே.


வாதநோய் நீக்கிய வித்தகன்
வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர் பல ஆண்டுகளாக வாத நோயால் அவதிப்பட்டு வந்தார். ஒருநாள் இராமலிங்கரை அணுகி தன் குறையை நீக்குமாறு வேண்டினார். இராமலிங்கரும் மனமிரங்கி அவருக்கு திருநீறு அளித்து அவரை குணமாக்கினார். மகிழ்ந்த கண்ணாடி சுப்பராய முதலியார் இராமலிங்கர் மீது துதிப் பாடல் இயற்றிப் போற்றினார்.

அகத்தியனோ வான்மீகியோ
ஆதிசேடன் தானோ
மகத்துவமாம் சம்பந்தமாலோ - சகத்திலகுஞ்
சச்சிதானந்தத்தின் தண்ணளியோ என்
என்பேன்
மெச்சுமதி ராமலிங்கவேள்.


திருவலிதாயம் தற்போது பாடி என வழங்கும் திருவலிதாயம் சிவன் கோயிலுக்கு இராமலிங்கர் ஒருமுறை சென்றிருந்தபோது அந்தச் சிவலிங்கத்திற்கு கிழிந்து போன கந்தல் துணி ஒன்று சாத்தப்பட்டிருந்தது. இதைக் கண்ட இராமலிங்கர் மனம் பொறாது கந்தை சாத்தப்பட்டிருந்ததைப் பத்து பாக்களில் குறிப்பிட்டுள்ளார். படிப்போர் நெஞ்சமே கரையக்கூடிய அளவில் அப்பாட்டுக்கள் அமைந்துள்ளன.

கோயிலுக்குச் சென்று வழிபடுவோர் சாமி சிலைக்குச் சாத்தியிருக்கும் துணியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். பொதுவாக அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால் இராமலிங்கர் கண்களுக்கோ அந்தக் கிழிந்த துணியைப் பூசகர் உடுத்தியதாகத் தோன்றவில்லை. இறைவனே உடுத்திக் கொண்டிருப்பதாகக் கண்டார். அவர் மனதில் கருணை வழிந்தது.

இறைவா நீ உடுத்திக் கொண்ட கந்தையை நீக்கித் துணிந்து வேறொன்றை மாற்றுவார் இல்லையா? நீயே கந்தலைச் சுற்றிக் கொண்டிருந்தால் எனக்கு என்னத் தரப் போகிறாய்? கந்தையைச் சுற்றிக் கொண்டு. ஐயோ, பரதேசி போல் இருந்தாயே! பழங்கந்தையை உடுத்திக் கொண்டுள்ளாயே, நீ யாருமற்ற அநாதையா? இந்தக் கந்தையை நீக்கித் துணிந்து ஒன்று உடுத்துவார் யாரும் இல்லையா?’ என்றும், ‘நீ கந்தையைச் சுற்றிக் கொண்டுள்ளதைக் காண என் நெஞ்சம் கரைகின்றதே’ என்றும் உள்ளம் உருகி உருகிப் பாடினார்.

சென்னையா வேண்டாம் இராமலிங்கர் பல நாட்கள் கோயிலிலேயே தங்கி விடுவதும், சில நாட்கள் வீட்டிற்கு வருவதுமாக இருந்தார். அவருடைய நெஞ்சிலே இரக்கம் வளர்ந்து கொண்டே வந்தது. தன்னால் யாருடைய மனமும் புண்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம். ‘அருந்தலிலே சுக உணாக் கொள்வதிலே’ அருவெறுப்பு கொண்டிருந்த இராமலிங்கர் தன்னைப் பெற்றெடுத்த தாயாரின் முகம் வாடி விடுமே என்று அஞ்சிச் சில வேளைகளில் ‘‘பெற்ற தாய் முகவாட்டம் பார்ப்பதற்கஞ்சி பேருணவுண்டனன்’’ என்று ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் உற்றவர் நேயர் அன்புடையோர் யாரும் வாட்டம் அடையக் கூடாதே எனவும் சிலநாள் உணவு கொண்டார். இவையன்றி நல்ல உணவு கொள்ள என் மனம் நடுங்கியதே என இறைவனிடமே விண்ணப்பிக்கின்றார்:

உற்ற தாரணியில் எனக்கு உலக உணர்ச்சி
உற்ற நாள் முதல் ஒரு சில நாள்
பெற்ற தாய் முகவாட்டம் பார்ப்பதற்கஞ்சிப்
பேருணவுண்டனன் சில நாள்
உற்றவர் நேயர் அன்புளர் வாட்டம்
உறுவதற்கஞ்சினேன் உண்டேன்
மற்றிவையலால் சுக உணாக்கொள மனம்
நடுங்கியது நீ அறிவாய். (3440)


வேண்டாம் சென்னை! குளத்தின் நீரிலேயே தாமரை இருந்தாலும் தன்னிடம் நீர் ஒட்டாது இருப்பதுபோல் திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் தன் தாய் தமையன் முதலானாரோடு இராமலிங்கர் இருந்தாலும் அவரது இறைபக்தியும், கருணை உணர்வும், ஒழுக்கமும், சாதனையும் குடும்ப உறவுகள், பாசம் இவற்றையும் மீறி வளர்ந்து கொண்டுதான் இருந்தன. செல்வம் மிகுந்த சென்னையின் ஆடம்பர வாழ்க்கை இராமலிங்கருக்குப் பிடிக்கவில்லை. பல நேரங்களில் சென்னையை விட்டுப் போய் கிராமப்புறங்களிலே தங்கி விடுவார்.

சென்னை ஆன்மிக வளர்ச்சிக்குத் துணை செய்யாது என்றும் வேடிக்கை வினோதங்களில் மனதைத் திருப்பக் கூடியது என்றும் கருதினார். இந்நிலையில் இயற்கை அவருக்குத் துணை செய்வது போல அவரது தாயார் சின்னம்மையார் காலமானார். அண்ணன் பரசுராமப் பிள்ளையும் நோய்வாய்ப்பட்டார். பரசுராமப் பிள்ளை சிதம்பரம் சென்று அங்கேயே தங்கித் தமது இறுதி நாட்களைக் கழிக்க விரும்பினார். இராமலிங்கர் தம் தமையனாரை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம், புதுச்சேரி மார்க்கமாகச் சிதம்பரம் சென்றடைந்தார்.

சென்னையை விட்டு வெளியேறிய சமயம் இராமலிங்கர் வெள்ளைத் துணியால் முக்காடிட்டு உடம்பை மறைத்துக் கொண்டார். தாயாரின் மறைவிற்குப் பின்னர்தான் அவ்வாறு அவர் முக்காடிட்டுக் கொண்டார் என்பதற்கு அவர் பாடலே ஆதாரம்.

அருளுருக் கொண்ட ஒரு வடிவு சிவயோகி
வடிவான நின்னரிய முடிமேல் அங்கே
வளர்ந்த சிகை மூன்று பிரிவுள்ளே நின்னரியதாய்
சின்னம்மைதான் அருள் சிவனடிச் சேர்ந்த பின்னர்
ஒரு சிகை கொண்டு அரிய வெண்துகில்
மேற்கொளிஈ அருட்பாதம் ஏற்கும்
நன்கிருபாதரட்சைதனை அங்ஙனமகற்றி ஆளும்
இருளறு வளாகாமது சித்தியெனும் ஓரிடத்து கற்பூர தீபம் ஏற்றி ஆராதித்து
ஆனந்த மேலிட்டு இனிய கூத்தாடி நின்று
பருவுடல் மறைத்து வெளியான அரசே வருக
வருக நல்லரிய
சித்திவண்மையருள் திருவருட்பிரகாச
வள்ளலே வருக என் மணி வருக வருகவே


செல்வம் மிகுந்த சென்னையில் இருந்தால் தன் உள்ளம் சிறுகுறுமோ என அஞ்சிப் பலகாலம் சென்னையை விட்டு நீங்கிச் சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களிலே தங்கியிருக்கிறார்.

தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால்
சிறுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே
நண்ணினேன்
ஊர்ப் புறம் அடுத்த காட்டிலே பருக்கைக்
கல்லிலே புன்செய்க்
களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை
நீ அறிந்தது தானே. (3467)


அடிகளார் சென்னை வாழ்வை நீப்பாராகி, ஒருநாள் சென்னையை விட்டுப் புறப்பட்டுச் சிதம்பர சுவாமிகள், சடைச் சுவாமிகள், வீராசாமி நாயக்கர், தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய அன்பர்களுடன் வண்டிப் பாதையாகப் புறப்பட்டு பாண்டி சென்றார். புதுவையில் விஸ்வநாதய்யர் முதலிய அன்பர்கள் வேண்டுதலினால் சிலநாள் தங்கியிருந்து பின்னர் புறப்பட்டு சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய தலங்களுக்குச் சென்று சிதம்பரம் வந்தடைந்தார்.

ஏன் திருநீறு அளிக்கவில்லை? இராமலிங்கர் சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவரும் வந்திருந்தார். சுந்தர சுவாமிகள் நன்கு கற்றவர். நல்ல புலமைமிக்கவர். சிறந்த சிவபக்தர். அவரைக் காண விரும்பிய இராமலிங்கர் எப்போது வந்து அவரைச் சந்திக்கலாம் என்று கேட்டு வரும்படி ஒருவரை சுந்தர சுவாமிகளிடம் அனுப்பினார். அவர் சென்று கேட்டவுடன் இராமலிங்கர் என்னை வந்து சந்திப்பதா என்று பதறிய சுந்தர சுவாமிகள் நான் வந்து அவரைச் சந்திக்கிறேன் என்று சொல்லி உடனே வந்து இராமலிங்கரைச் சந்தித்தார். இருவரும் ஏதோ ஒரு பொருள் பற்றிப் பேசத் தொடங்கி அது விவாதமாக மாறி மூன்று நாட்கள் விவாதம் தொடர்ந்தது.

முடிவில் இராமலிங்கருக்கே வெற்றி. சுந்தர சுவாமிகள் மனம் உடைந்து போனார். உடனே இராமலிங்கர் அவரது வருத்தம் காணச் சகியாதவராய் அவர் எந்தப் பொருளில் தோற்றுப் போனாரோ அதனைத் தாம் எடுத்துக் கொண்டு வாதாடினார்கள். அப்போதும் இராமலிங்கரே வென்றார். தாங்கள் இவ்வாறு வாதிட்டிருந்தால் வென்றிருக்கலாம் என்றார். சுந்தர சுவாமிகள் மனம் சமாதானம் அடைந்தது.

இருவருடைய மூன்று நாட்கள் வாதத்தையும் பல அன்பர்கள் உடன் இருந்து கேட்டு மகிழ்ந்தனர். வாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுந்தர சுவாமிகள் இராமலிங்கருக்கு நேர் எதிரில் உட்காராமல் சற்று தள்ளி ஒரு பக்கமாக அமர்ந்தே வாதம் செய்ததைக் கண்ட அங்கிருந்தோர் சுந்தர சுவாமிகளை ‘ஏன் இவ்வாறு ஓர் ஓரமாக அமர்ந்திருந்தீர்கள்’ என்று வினவினர்.

இராமலிங்கர் எதிரில் அமர்ந்து வாதம் செய்தால் நமது பலத்தை அவர் இழுத்து விடுவார். அதனால்தான் நேர் எதிரில் உட்காரவில்லை என்று சுந்தர சுவாமிகள் விளக்கம் அளித்தார். முடிவில் சுந்தர சுவாமிகள் இராமலிங்கரிடம் திருநீறு கேட்டார். இராமலிங்கர் திருநீறு அளிக்கவில்லை. உடனே சுந்தர சுவாமிகள் தனது மடியிலிருந்து சிறிதளவு திருநீறு எடுத்து இராமலிங்கரின் நெற்றியில் இட்டு மீதத்தை அவர் அணிந்து கொண்டார்.

இராமலிங்கர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகட்கு ஏன் திருநீறு அளிக்கவில்லை என அங்கிருந்தவர்கட்கும் மற்றவர்க்கும் ஓர் ஐயம் தோன்றியது. இராமலிங்கர் வெள்ளை வேட்டி அணிபவர். சுந்தர சுவாமிகள் காவி அணிந்த துறவி. வெள்ளை வேட்டிக்காரர் காவி அணிந்தோர்க்குத் திருநீறு தருதல் கூடாது என்பது உலக நியதி. அதனால் தான் இராமலிங்கர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகட்குத் திருநீறு அளிக்கவில்லை.

கல்பட்டு ஐயா அவர்கள் சீடராகிறார் திருநறுங்குன்றத்தில் இராமலிங்க மூர்த்திகள் என்ற சுவாமிகள், தானே வந்து குருநாதன் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று விரும்பி னார். நம் பெருமானார் திருநறுங்குன்றம் சென்றார். வள்ளலாரைக் கண்டவுடன் இராமலிங்க மூர்த்தி சுவாமிகள், தன்னுடனிருந்த சீடனை நோக்கி ‘இவையெல்லாம் இனி உன்னுடையதே. நான் என் குருநாதருடன் செல்கிறேன்,’ என்று கூறி வள்ளலாருடன் புறப்பட்டு விட்டார். அவருடனேயே தங்கியிருந்த அவரைக் கல்பட்டு ஐயா என்று எல்லோரும் அழைத்தனர்.

அவர் கேட்டுக் கொண்டபடியே சட்சு தீட்சை அளித்து நம் பெருமானார் அவரை ஆட்கொண்டார். ‘சிவஞான விருப்பினராகிய க. இராமலிங்க மூர்த்திகள்’ என்று அடிகளார் இவரைக் குறிப்பிடுவார். வள்ளலார் பிரசங்கம் நிகழ்த்தும்போது கல்பட்டு ஐயா அவர்களும் அதைக் கேட்டுப் பயனடைவார். கல்பட்டு ஐயா அவர்கள் சமாதி வடலூரில் தருமச்சாலை அருகே உள்ளது.

முதல் திருக்குறள் வகுப்பு அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கினைச் சொல்லுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றினை மட்டும் எடுத்துக் கொண்டு குறட்பாக்களை இயற்றினார். வீடுபேறு என்ற மோட்சத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையோ, என்னவோ! அக்காலத்தில் திருக்குறளை மன்னர் முதல் அனைவரும் போற்றினர். உதாரணமாக அநபாயச் சோழன் என்ற மன்னன் தனக்கு மந்திரியாக வருபவர் இந்த மூன்று வினாக்களுக்கும் சரியான விடை அனுப்ப வேண்டும் என்று பறையறைந்தான்.

பூமியை விடப் பெரியது எது?
கடலை விடப் பெரியது எது?
மலையை விடப் பெரியது எது?
இந்த மூன்று வினாக்கட்கும் குன்றத்தூரில் அப்போது வாழ்ந்து வந்த சேக்கிழார் பெருமான் மூன்று திருக்குறளை பதிலாக அனுப்பினார்.

1. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

2. பயன் தூக்கார் செய்த உதவி நயன்
தூக்கின் நன்மை கடலிற் பெரிது.

3. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையின் மாணப் பெரிது.

இக்குறட்பாக்களைக் கண்ட மன்னன் மகிழ்ந்து சேக்கிழாரை மந்திரியாக்கினான். அவரே பின்னாளில் பெரிய புராணம் இயற்றியவர். அக்காலத்தில் திருக்குறளின் அவசியத்தை மக்கள் உணர்ந்திருந்தார்கள். உலக வாழ்க்கை செவ்வனே அமைய திருக்குறள் அறிவு அவசியம் என்று வள்ளலாரும் கருதினர். தனது தலை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு திருக்குறள் வகுப்பு நடத்தச் சொன்னார். அவரும் அவ்வாறே திருக்குறள் பாடம் சொல்ல ஆரம்பித்தார். மூன்று மாதங்கள் ஆகியும் முதல் அதிகாரமே முற்றுப் பெறாதது கண்ட சிலர் வெகுண்டு வள்ளலாரிடம் முறையிட்டார்கள். உடனே வள்ளலாரும் அந்த ‘‘மூடமுண்ட வித்வானைக் கூப்பிடுங்கள்’’ என்றாராம்.

தொழுவூர் வேலாயுதனாரை மூடம் முண்டம் என்று வள்ளலார் திட்டி விட்டார் என்று அகம் மிக மகிழ்ந்து போயினர். ஆனால் வேலாயுதனாரோ துளிகூட வருத்தம் இன்றி வள்ளலாரைக் காண வந்தார். வள்ளலார் உங்களைத் திட்டினாரே உங்களுக்கு வருத்தம் இல்லையா என்று கேட்டனர். சிரித்துக் கொண்டே ‘வள்ளலார் ஒருவரைத் திட்டுவாரா என்ன?’ என வேலாயுதனார் கேட்டார்.

‘உங்கள் அனைவருடைய மூடத்தை உண்ட வித்வான் என்று என்னை பாராட்டினார்’ என்றாராம். வள்ளலார் அவரை அழைத்துச் ‘சற்றே துரிதமாக வகுப்பை நடத்துங்கள்’ என்றாராம். தமிழகத்திலேயே முதன் முதல் திருக்குறள் வகுப்பு நடத்திய பெருமை வள்ளலார் ஒருவருக்கே உண்டு.

- மு. பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘வள்ளலார் வாழ்கிறார்’ என்ற புத்தகத்திலிருந்து.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்