SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணிறைந்த உரு கொண்டாய்

2017-02-06@ 15:21:13

பன்னிரண்டு கரங்களோடு போர்த் தளபதி கோலத்தில், தம்பதி சமேதராகவும் முருகனை தென்சேரிகிரி தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் பல்லடம் உடுமலைப்பேட்டை பாதையில் உள்ளது. பிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த  ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள இத்தலத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது. பக்தர்கள் கனவில் வந்து தன் ஆலயத்திலுள்ள கண்ணாடிப் பெட்டியில் ஏதேனும் பொருளை  வைக்கச் சொல்லி உத்தரவிடும் முருகனை காங்கேயத்தில் தரிசிக்கலாம். அந்தப் பொருள் சம்பந்தமாகவே அவ்வருட நிகழ்வுகள் நடப்பது அற்புதம்.

கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில், வழக்கத்துக்கு மாறாக, இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது ஆரோகணித்திருக்கிறார் முருகன். கையில் கரும்பேந்திய கந்தனை திருச்சிக்கு அருகே உள்ள செட்டிக்குளத்தில் காணலாம். குமரி, தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள குமார கோயிலில் வள்ளியுடன் முருகன் கருவறையில் வீற்றிருக்கிறார். மாமல்லபுரம்கல்பாக்கம் பாதையில், திருப்போரூரில் பனைமரத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக முருகனை தரிசிக்கலாம். சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரம் இத்தலத்தில் முருகனுக்குச் சமமாக போற்றப்படுகிறது.

தென்காசி, திருமலைக்கேணி குமாரசுவாமி ஆலயத்தில் வஜ்ராயுதம் ஏந்திய முருகனை 645 படிக்கட்டுகள் கொண்ட மலையில் ஏறி தரிசிக்கலாம். திருச்சியிலிருந்து 26 கி.மீ தொலைவிலுள்ள விராலி மலையில் ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்கிறார். அருணகிரிநாதருக்கு அருளிய முருகனை திருச்சி, வயலூரில் காணலாம். திருவாரூரிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள எண்கண் தலத்தில், எட்டுக்குடி மற்றும் சிக்கல் தலங்களில் உள்ள அதே தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் சோமாஸ்கந்த அமைப்பில் குமரக்கோட்டம் ஆலயத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, திகடச் சக்கர எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம். நாகை, தில்லையாடிக் கருகில் உள்ள திருவிடைக்கழி தலத்தில் குஹ சண்டிகேஸ்வரரோடு அருள்கிறார் முருகப்பெருமான். இது அபூர்வமான அமைப்பு. கோவைக்கு அருகில் உள்ள அநுவாவியில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் சென்ற அனுமனின் தாகத்தை தீர்த்த அழகு முருகனை தரிசிக்கலாம்.

கோவை கிணத்துக்கடவு எனும் கனககிரியில் உள்ள பொன்மலையில் தரிசனம் தரும் முருகனை, பார்வை இழந்த அடியவர் ஒருவர் விழிக்குத்துணை உன் மென் மலர்ப்பாதங்கள் என திடமாக நம்ப, அதிசயமாக அந்த அடியவர்க்கு பார்வையை மீட்டுத் தந்தவர் இந்த முருகன். கல்லால் செதுக்கப்பட்ட வேலை தன் கரத்தில் ஏந்தி செங்கோடன், செங்கோட்டையன் எனும் திருப்பெயர்களில் முருகப்பெருமான் சேலத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள திருச்செங்கோடு
தலத்தில் காட்சி தருகிறார்.

சென்னை பாரிமுனையில் கந்த கோட்டத்தில் செல்வமுத்துக்குமார சுவாமியாக தரிசனம் தரும் முருகன், வள்ளலாரால் வழிபடப்பட்டவர். திருநெல்வேலியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது இலஞ்சி. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தானே மும்மூர்த்திகளாக செயல்படுவதை உணர்த்திய முருகனை வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் தரிசிக்கலாம். தென்காசிக்கு 6 கிமீ தொலைவில் உள்ள ஆய்க்குடியில் மழலைவரம் வேண்டுவோர்க்கு படிப்பாயசம் பிரார்த்தனை மூலம் அருளும் குழந்தை வடிவ குமரனை கண்குளிர காணலாம். சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரத்தில் சிங்காரவேலவனாக மயில் மீதமர்ந்த முருகனை தனித்தனியே யானைகள் மீது அமர்ந்த தேவியருடன் தரிசிக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-01-2019

  17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்