SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமுருகனின் சீரடியார்கள்

2017-02-06@ 15:19:42

அகஸ்தியர்

முருகன் தனது பக்தர்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவர். அகஸ்தியர் முதல் சாதாரண மனிதர்வரை தன்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் அளவற்ற அருளை பொழிந்தவர். முதலாம் சங்கத் தலைவரான அகஸ்தியர் முருகனின் சிஷ்யர் ஆவார். வடக்கில் இருந்து தெற்குப் பகுதிக்கு வந்த அந்த முனிவருக்கு முருகனே தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தாராம். (அருணகிரிநாதர் , சேவல் விருத்தம் , ll,14,16). முருகனே அகஸ்தியருக்கு ஆசிரியராகவும், உபதேசம் செய்தவராகவும் இருந்துள்ளார் (தொட்டிகலை சுப்ரமணிய முனிவர்  தணிகை திருவிருத்தம்).

நக்கீரர்

நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் கார்க்கிமுகி என்ற பூதத்தினால் சிறை வைக்கப்பட்டு உண்ணப்பட இருந்த நிலையில், முருகனைப் போற்றும் நக்கீரர் திருமுருகாற்றுப் படையை பாட, முருகன் உடனே அங்கு வந்து அந்த பூதத்தைக் கொன்று அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தார். ஆறுமுகனின் அருள் இல்லை என்றால் அவர்கள் அனைவருமே அந்த பூதத்தினால் கொல்லப்பட்டு இருப்பார்கள்.

சிகண்டி

உண்மையான ஒரு பக்தருக்கு கடவுள் எந்த வகையிலாவது வந்து உதவி புரிவார். சிகண்டி எனும் முனிவர் கதிர்காமத்தில் இருந்தபோது ஒரு மதம் பிடித்த யானை அவரைக் கொல்ல வந்தது. ஆனால், கொஞ்சமும் பயம் அற்ற அந்த முருக பக்தர் வெற்றிலைக் காம்பை கிள்ளி அதன் மீது போட்டார். உடனே அந்த வெற்றிலைக் காம்பு முருகனின் வேலாக மாறி அந்த மதம் பிடித்த யானையைக் கொன்றது. முருகன் மீதான நம்பிக்கையும், பக்தியும் அந்த முனிவரின் உயிரைக் காப்பாற்றியது.

அருணகிரிநாதர்

முருகப் பெருமான் தீயவர்களுக்கும் அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகளை தருகிறார். பல தீய பழக்கங்களுக்கும் அடிமையான அருணகிரிநாதர் தனது தவற்றை உணர்ந்து கொண்டப் பின் ஆலய கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால், அவரைக் காப்பாற்றிய முருகன், அவருக்கு திருநீறையும், ஜெப மாலையும் தந்தார் (திருப்புகழ் v. 106). அதன்பின் அருணகிரி முருகனின் அனைத்து தலங்களுக்கும் விஜயம் செய்து அவரை துதித்து திருப்புகழ் மற்றும் பல பாடல்களைப் பாடினார். அதற்கு முன்னால் அவருக்கு தனது புனித பாதங்களை முருகப் பெருமான் ஸ்வாமிமலை ஆலயத்தில் காட்டினார் (திருப்புகழ் v. 199).

காளிதேவியின் பக்தரான திருவண்ணாமலையின் அரசன் ஒருமுறை அருணகிரிநாதரிடம், அனைவர் முன்னிலையிலும் முருகனைக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட முருகன் அனைவர் முன்னிலையிலும் அங்கு தோன்றி அருணகிரிநாதருக்கு கொடுக்கப்பட்டு இருந்த மரண தண்டனையில் இருந்து அவரைக் காப்பாற்றினர். இன்னொருமுறை வில்லிபுத்தூரார் என்ற வைஷ்ணவருக்கும், அருணகிரிநாதருக்கும் நடைபெற்ற பாடல் போட்டியில் அருணகிரிநாதர் பாடிய கந்தரந்தாதி என்ற பாடலுக்கு வில்லிபூத்தூரரால் விளக்கம் தர முடியவில்லை. அதனால் தோல்வியுற்ற வில்லிபுத்தூரார் தமது காதுகளைக் கிழித்துக் கொள்ள முயன்றபோது அருணகிரிநாதர் அவரை தடுத்து அந்த துன்பத்தை ஏற்றுக் கொண்டவில்லிபுத்தூராரை முருகனின் அருளினால் காப்பாற்றினார்.

அது போல இன்னொருமுறை திருவண்ணாமலை மன்னன் அருணகிரிநாதரிடம் தேவர்களின் இருப்பிடத்தில் இருந்து ஒரு மலரைக் கொண்டு வருமாறுக் கூற அதைக் கொண்டு வர சென்ற அருணகிரிநாதர் தன்னை ஒரு கிளிப் பறவையாக மாற்றிக் கொண்டு பறந்து சென்றதும், அவர் திரும்பி வருவதற்கு முன்னரே அந்த மன்னன் அருணகிரிநாதரின் உடலை எரித்து விட்டான். ஆகவே அதுமுதல் அருணகிரிநாதர் பார்வதியின் கையில் நிரந்தரமாக கிளிப் பறவை உருவில் தங்க வேண்டி இருந்தது. அருணகிரிநாதரின் அற்புதமான கருத்துக்களைக் கொண்ட முருகன் மீதான பாடல்கள் காலத்துக்கும் அழியாமல் நிற்பவை.

காசியப்ப சிவாச்சாரியார்


இவர் தமிழில் கந்தபுராணத்தை இயற்றியவர். இதில் உள்ள முதல் வரிகளை தமது பக்தர்களுக்காக கந்தனே இயற்றினார். சிவாச்சாரியார் இதை இயற்றி வெளியிட்டபோது ஒரு புலவர் எழுந்து அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, முருகனே அங்கு தோன்றி அந்த எதிர்ப்பை வலிவிழக்கச் செய்தார். வேலவின் மீது அபார பக்தி கொண்ட சிவாச்சாரியார் இன்றும் மக்களிடையே பிரபலமாகவே இருக்கின்றார்.

குமரகுருபரர்


இவர் ஐந்து வயதானவரை ஊமையாக இருந்தார். ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவரை திருச்செந்தூருக்கு அழைத்துச் சென்று ஆறுமுகனை வேண்டினார்கள். அதன் பின் அவருக்கு பேச்சு வந்துவிட்டது. அதன் பின் பல ஆலயங்களுக்கும் விஜயம் செய்த அவர் முருகன் மீது கந்தர்கலி வெண்பா மற்றும் வேறு பல பாடல்களைப் பாடி உள்ளார். அவர் வாரணாசியில் சைவ மடத்தை நிறுவி சைவ சித்தாந்தத்தைப் பரப்பியவர். அவரைப் பொறுத்தவரை முருகனை அவர் குழந்தையாகவே பார்த்தவர். முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ் என்ற பாடலை இயற்றினார்.

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள்

திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் முருகன் மீதான பல பாடல்களை இயற்றி உள்ளார். அவர் முருகனை ஒரு தாயுள்ளம் படைத்தவராகவும், ஒரு தாயார் எப்படி தமது குழந்தைகளுக்கு அன்பைக் காட்டி வளர்க்கின்றார் என்பதைக் எடுத்துக் கூறி முருகன் மீதான பாடலை பாடி உள்ளார் (திருப்போரூர் சன்னிதி முறை ). மதுரை தமிழ் சங்கத்தில் இருந்த புலவர் ஒருவரின் வம்சாவளியிரான திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள், திருப்போரூரை கண்டு பிடித்து அதை சீர்படுத்தியவர். முன்னர் உண்மையில் அந்த இடம் பனைமரங்கள் அடர்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்கு ஒரு மண் புற்றில் முருகன் ஸ்வயம்புவாக எழுந்தருளி இருந்தார். திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் அந்த புற்றில் இருந்த முருகனின் சிலையைக் கண்டுபிடித்து எடுத்து, அங்கு ஆலயத்தை அமைத்து அதில் முருகனின் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

வள்ளலார்

இந்த வடலூர் துறவி சமரச சன்மார்கத்தை போதித்தவர். ஞான தேசிகன் என்ற உருவில் வந்த முருகன் இவருக்கு அருள் புரிந்தார். அவர் இயற்றிய திருவருட்பா (ஐந்தாம் திருமுறை, தேவமணிமலை) ஆறுமுகன் மீது அவர் கொண்டு இருந்த பக்தியை எடுத்துக் காட்டி, அவர் பாதத்தில் சரண் அடைந்தால் அடுத்தடுத்த ஜென்மங்களில் நல்லவை நடக்கும் என்பதையும் எடுத்துரைக்கின்றது.

தேவராஜா ஸ்வாமிகள்


முருகன் பக்தி இயக்கத்திற்கு பெருமை சேர்த்தவர்களில் கந்தர் ஷஷ்டி கவசத்தை இயற்றிய தேவராஜா ஸ்வாமிகளும் ஒருவர். ஸ்கந்தனின் அருளினால் அவருடைய பிரச்னை தீர்ந்தது. அதை அழகான செய்யுள் போன்றக் கவிதையில் அவர் பாடி உள்ளார். உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தோன்றும் நோய்களின் அடிப்படைக் காரணங்களையும், மனத் துயர்களின் காரணங்களையும் கூறி, அந்த நோய் மற்றும் துன்பங்கள் அனைத்தையும் எப்படி முருகனின் வேல் நிவர்த்திக்கின்றது என்பதை அதில் பாடலாகப் பாடி உள்ளார். அது மட்டும் அல்லாமல் முருகன் எந்தெந்தப் பெயர்களில் வழிபடப்படுகிறார் என்பதையும் கூறி உள்ளார்.

வள்ளிமலை ஸ்வாமிகள்

மைசூர் மகராஜரின் சமையல்காரராக இருந்த அர்த்தநாரி என்ற இவர் கடுமையான வயிற்று வலியினால் அவதிப்பட்டு பழனி ஆண்டவரிடம் சரண் அடைந்து குணம் அடைந்தார். அதன் பின்னர் அவர் திருவண்ணாமலையில் இருந்த சேஷாத்ரி ஸ்வாமிகளிடம் சிஷ்யராகி, அவர் அறிவுறுத்தியபடி வள்ளி மலைக்குச் சென்றார். அங்கு சென்று முருகன் வழிபாட்டு மரபை போதித்தார். அவர் திருப்புகழ் எனும் பாடலைப் பாடி உள்ளார். அவர் எப்போது முருகனை துதித்தாலும், முருகன் அவருக்கு மயிலாக வந்து காட்சி தந்தாராம் (பத்மநாபன்)

பாம்பன் ஸ்வாமிகள்


சட்டப்பன் மற்றும் செங்கமலம் என்ற பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் அப்பாவு. அவரை குமாரகுருதாசன் அல்லது பாம்பன் ஸ்வாமிகள் என்றும் அழைப்பார்கள். அவர் முருகனின் பெரும் பக்தர். 1923 ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இடது கணுக்கால் முட்டியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், அவரது முறிந்து விட்ட கணுக்காலை மருத்துவத்தினால் நிவாரணம் செய்ய இயலாது என மருத்துவர்கள் கை விட்டு விட்டார்கள். ஆனால், அவர் மனதை தளர விடவில்லை. அவர் தனது பந்தத்தை துறந்து முருக பக்தரானார்.

முருகனிடம் தனது நோயை நிவர்த்திக்குமாறு வேண்டிக் கொண்டார். மருத்துவ மனையில் இருந்தபோது அவரது இடது கணுக்கால் முட்டியை அங்கு வந்த இரண்டு மயில்கள் வருடிக் கொடுத்தன. அவ்வளவுதான் அவருடைய கால் வலி உடனே நின்றது. அதைத் தவிர முருகன் ஒரு குழந்தையின் உருவில் வந்து தனது வேலினால் அவரது முறிந்து போன காலை தடவி விடுவது போல உணர்ந்தார். அதன் பின் அவர் கால் நல்ல நிலைக்கு வந்துவிட்டது. அவர் பாடிய ஷண்முகக் கவசத்தை பக்தியோடு பாடினால் பல நோய்கள் விலகும், மன பயமும் ஒழியும் என்பது நம்பிக்கை. ஒருமுறை அவருக்கு முருகனே நேரில் காட்சி தந்தார். முருகன் மீது பல பாடல்களை அவர் இயற்றி உள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்