SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூன்று கோணங்களில் முருகன் தரிசனம்!

2017-02-06@ 15:11:52

குன்றத்தூர்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பார்கள். இதற்கேற்ப குன்றுகள் நிறைந்த குன்றத்தூரில் சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயர் தாங்கி முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களைக் காத்தருள்கிறார். திருக்கூவம் என்ற இடத்தில் தாரகன் என்ற அரக்கனுடன் போர் புரிந்து அவனை அழித்துவிட்டு தேவர்களுக்குக் காட்சி கொடுப்பதற்காக வள்ளி-தெய்வானையோடு முருகப்பெருமான் திருத்தணிகைக்குப் புறப்பட்டார்.

அவ்வாறு செல்லும் வழியில் ஒரு முகூர்த்தகாலம் இந்த மலையில் தங்கினார். திருத்தணிகைக்கு முன்னால் குன்றத்தூரில் கால் பதித்து காட்சி கொடுத்த காரணத்தினால் இத்தலம் ‘ஆதி தலம்’ என்றும், வடக்கு திசை நோக்கி நின்று காட்சி கொடுத்ததால் ‘தென்தணிகை’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. மலைக்கோயிலின் அடிவாரத்தில் பதினாறு கால் மண்டபம் அமைந்துள்ளது.

மலைப்பாதையில் வலதுபுறம் அமைந்துள்ள வலஞ்சுழி விநாயகரை முதலில் வழிபட்டுவிட்டுப் பிறகு மலையேற வேண்டும். சுலபமாக ஏறும் வகையில் அமைந்துள்ள 84 படிக்கட்டுகளைக் கடந்தால் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தைக் காணலாம். ராஜகோபுரத்தை அடுத்து உள்ளே பலிபீடமும், கொடிமரமும் முருகப்பெருமானின் வாகனமான மயிலும் அமைந்துள்ளன.

வலதுபுறத்தில் வில்வ விநாயகர் சந்நதி. இடதுபுறத்தில் பைரவர், நவகிரக சந்நதிகள். மகாமண்டபத்தில் வரசித்தி விநாயகர் மற்றும் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் தனித்தனியே சந்நதி கொண்டிருக்கிறார்கள். கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் அருள் மழை பொழிகிறார். கருவறையில் முருகப்பெருமானை நோக்கியபடி நிற்கிறது அழகிய மயில். இந்தக் கருவறை வித்தியாசமானது.

இங்கே முருகப்பெருமான் வள்ளி தெய்வானையோடு காட்சி அளித்தாலும் மூவரையும் ஒரே சமயத்தில் முழுமையாக தரிசிக்க இயலாது. நேருக்கு நேராக முருகனை மட்டும் தரிசிக்க இயலும். ஒரு பக்கத்திலிருந்து தெய்வானையையும் முருகனையும், மறுபக்கத்திலிருந்து வள்ளியையும், முருகனையும் தரிசிக்கும் வகையில் அமைந்துள்ள கருவறை இது!

வெளிப்பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் அரசமரம் உள்ளது. இங்கு வேண்டுதல் செய்து கல்லைத் துணியில் கட்டிவிட்டு பின்னர் தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின்னர் கட்டிய கல்லை அவிழ்த்து, இறைவனை வணங்கி கோயிலுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் பக்தர்கள். வெளிப்பிராகாரத்தில் தெற்கு திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும், வடக்குதிசை நோக்கி விஷ்ணுதுர்க்கையும் அருள்பாலிக்கிறார்கள்.

மலைக்குப் பின்னால் அமைந்துள்ள சரவணப்பொய்கையே இத்தலத்தின் தீர்த்தம் ஆகும். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது. கடுமையான கோடைகாலத்திலும் சரவணப்பொய்கையும், தீர்த்தக்கிணறும் வற்றிப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வில்வ மரமாகும். ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், தைக்கிருத்திகை, தமிழ்ப்புத்தாண்டு, பங்குனி உத்திரம், சித்திரை சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, ஸ்வாமி திருக்கல்யாணம், திருக்கார்த்திகை தீபம் என்று பல விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாகக்கொண்டாடப்படுகின்றன.

மஹா கந்தசஷ்டி விழாவின் போது ஆறு நாட்களும் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், ஏழாவது நாளன்று ஸ்வாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. திருக்கார்த்திகை தீபத்தன்று இத்திருக்கோயிலின் அருகில் இருக்கும் குன்றின் மீது உள்ள தீபத்தூணில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இக்குன்றிற்கு அருகில் இடும்பன் திருக்கோயில் அமைந்துள்ளது.

அருணகிரிநாதர் இந்த குன்றத்தூர் முருகன் மீது  ‘அழகெறிந்த சந்தர முகவடங்க லந்த அமுத புஞ் இன்சொல் மொழியாலே’ என்றும், ‘நேசா சாரா டம்பர மட்டைகள் பேசா தேயே சங்கள மட்டைகள்’ என்றும், ‘கடினதட கும்ப நேரன வளருமிரு கொங்கை மேல் வழி’ என்றும் தொடங்கும் மூன்று பாமாலைகளைச் சூட்டியுள்ளார். வேல்மாறல் மந்திரத்தை இந்த திருத்தலத்தில் ஓதினால் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

முன்பொரு காலத்தில் இந்த பகுதி காடாக இருந்ததாகவும், பசு ஒன்று ஒரு புதரின் மீது தினமும் பாலைப் பொழிந்ததாகவும், பசுவின் உரிமையாளர் பசு பால் பொழிந்த இடத்தினைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கிருந்து காசி விஸ்வநாதர் வெளிப்பட்டதாகவும், அவரை பின்னர் குன்றத்தூர் மலை மீது பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. காலை 6.00 முதல் 1.00 மணி வரையிலும், மாலை 3.30 முதல் இரவு 8.30 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

விசேஷ நாட்களில் அதிகாலை 5.00 முதல் இரவு 10.00 மணி வரை நடை திறந்திருக்கும். சென்னை தாம்பரத்திற்கும் பூவிருந்தவல்லிக்கும் இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. பிராட்வேயிலிருந்தும், திருப்போரூரிலிருந்தும் குன்றத்தூருக்கு நேரடிப் பேருந்துகள் உள்ளன. அடிவாரத்திலிருந்து மலைப்பாதை வழியாக வாகனங்கள் மூலமும் கோயிலை அடையலாம்.

இத்தலத்தை அடுத்துள்ள மேலும் சில கோயில்கள்: குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்தில் அருள்மிகு திருஊரகப்பெருமாள் கோயிலும், அருகில் கந்தழீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் சேக்கிழார் பெருமானால் உருவாக்கப்பட்ட திருநாகேஸ்வரத் திருக்கோயில் அமைந்துள்ளது. குன்றத்தூரைச் சுற்றி மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம், கோவூர் சுந்தரேஸ் வரர் திருக்கோயில், திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில் ஆகியனவும் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்தக் கோயில்கள் அனைத்தையும் தரிசிக்கலாம்.

- ஆர்.வி.பதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

 • YamagataEarthQuake18

  வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

 • RaptorsShootingToronto

  கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்