SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஷ்டங்கள் போக்கும் கதித்தமலையான்

2017-02-06@ 15:09:26

ஊத்துக்குளி

மூலவர், வெற்றி வேலாயுதனாகக் கோயில் கொண்டருளும் தலம் கதித்தமலை. முருகன் உண்டாக்கிய தீர்த்தம் மலைமீது உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஊத்துக்குளியில் இத்தலம் உள்ளது. முருகன் குடிகொண்டுள்ள தலங்களையெல்லாம் தரிசிக்கச் சென்றார் அகத்தியர். அவருடன் நாரதர் மற்றும் பல தேவர்களும் உடன் வந்தனர். பூஜைக்குரிய நேரம் வந்ததும் அகத்தியர் ஓரிடத்தில் முருகனுக்கு பூஜை நைவேத்தியம் செய்ய நீரின்றி தவித்தார். அவருக்கு தாகமும் ஏற்பட்டது.

இதனால் முருகப்பெருமானை வேண்ட, முருகன் அங்கு தோன்றினார். தம் வேலை தரையில் குத்தி ஒரு ஊற்று ஏற்படுத்தினார். நீர் பெருக்கெடுத்து ஓடியது. அகத்தியரும் மகிழ்ச்சியுடன் பூஜைகளை முடித்துவிட்டுத் தன் தாகத்தையும் தீர்த்துக்கொண்டார். முருகனால் அன்று ஏற்படுத்தப் பட்ட ஊற்று வற்றாமல் இன்றுவரை நீரை வழங்கிக் கொண்டிருக்கிறது. குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் ‘ஊத்துக்குளி’ என அப்பகுதி அழைக்கப்பட்டது. இந்த அற்புதத்தை நிகழ்த்திய முருகனுக்கு கோயிலும் கட்டப்பட்டது.

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பதற்கேற்ப இத்தலத்திலும் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுத சுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். என்ன காரணம்?

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முந்தைய நிலை என்பதால், இவர்களுக்கு தனிச்சந்நதி தரப்பட்டுள்ளது.

மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகும். இவை ஆசை, செயல், அறிவு என்னும் மூன்று சக்திகளை குறிக்கின்றன. இவை மூன்றும் பரப்பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளன. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும்.

ஞானசக்திதான் இம்மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது. குன்றின் மீது ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி நிற்கிறது. கோயிலுக்குச் செல்ல அகலமான படிக்கட்டுகள் உள்ளன. ராஜகோபுரத்தின் முன்னால் தீப ஸ்தம்பம் உள்ளது. பிராகாரமும் இருக்கிறது. முருகனின் கண தலைவரான இடும்பனுக்கு தனிச்சந்நதி உள்ளது.

முருகன் கோயிலுக்குக் கீழே தென்கிழக்கு பக்கமுள்ள பாம்பு புற்றுக்கு தனிக் கோயில் உள்ளது. இது மயூரகிரி சித்தரின் சமாதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு செய்யப்படு கிறது. பக்தர்கள் இந்த புற்றை ‘சுப்பராயர்’ என அழைக்கிறார்கள்.

வள்ளி-தெய்வானை சந்நதிக்கு செல்லும் வழியில் பாலை மரத்தின் அடியில் காவல் தெய்வமான சுக்குமலையான் சந்நதி உள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சுக்கு மலையானை வழிபடுகிறார்கள். தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக்கள் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. திருமணத் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்து புது வாழ்வு பெறுகின்றனர். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பாலால் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

- செம்பியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்