SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகனின் சந்தனம், பூரண குணம்!

2017-02-06@ 15:08:31

பழனி

பழநி மலையைப் பற்றி நாடியில் ஒரு பாடல்:
கிரிய பாபாவுடனே கோரக்க குடமுனி காளங்கி புலியாருடனே அமரனாம் அருணகிரி பாம்பாட்டி குடம்பை சிவ(வாக்ய) மூல(திருமூலர்) வென நிற்போர் கொண்டாடும் பழநி.

பெருமை மிகுந்த பல கோயில்களில் அறுபடைவீடு மிகவும் பிரசித்தி பெற்றது. அவற்றுள் முருகப் பெருமானுக்கும் சித்தர் பெருமக்களுக்கும் பிரியமானது, பழநி. திருவாவினன்குடி என்ற பழநி அடிவாரக் கோயிலில் வீற்றிருப்பவர் குழந்தை வேலாயுதசுவாமி. தேவர்கள் தவறு செய்தால் தண்டிக்கப்படும் இடம், இந்த திரு ஆவினன் குடி என்கிறார் நக்கீரர். சரவணப் பொய்கைக் கரையில் உள்ள தெய்வத்தை காமதேனு மாதாவும் தனலட்சுமியும் அக்கினி போன்ற தேவர்களும் பூஜித்து வருகின்றனர்.

சனி பகவானை திருநள்ளாரில் தொழுத பலன் இங்குள்ள சனிபகவானை தொழுதால் கிடைக்கும் என்கிறார் அகத்தியர், தன் நாடி பாடல்களில். பழநிமலை மேல் வீற்றிருப்பவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி. கலி பகவானை விரட்ட, கையில் தர்மக்கோல் தாங்கியிருக்கிறார். கௌபீனம் என்னும் கோவணத்துடன், சந்யாசி கோலம் கொண்டு நவபாஷாணத்தால் ஆன மேனியுடன் அருள் பாலிக்கிறார்.

இடும்பன் என்ற அசுரன் சுமந்து வந்த சக்திகிரியில், ஞானப்பழம் கிடைக்காத மனச்சுமையை முருகன் இறக்கி வைத்த இடம்தான் பழநிமலை எனப்படுகிறது. எனவே இடும்பனுக்கு முருகன் முதல் பூஜையை தந்தருளினார். இடும்பனைத் தொழுத பின்தான் முருகனை தரிசிக்கவேண்டும். இது இத்தல மரபு. இடும்பனைத் தொழுதால் சகலவிதமான பித்ரு தோஷமும் விலகும், முன்னோர்கள் ஆத்மா நற்கதி அடையும் என்கிறார் போகர், தனது போக நாதநாடியில்.

திருமுருகன் நின்ற இடத்தில், ஒரு மூர்த்தியை நிறுவ எண்ணங்கொண்ட அகத்தியர், சீன நாட்டைச் சேர்ந்த காளிங்கநாதர் மற்றும் புலிப்பாணி சித்தரை அழைத்து வந்து, போகரிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். நவரத்தினங்களை ஒன்றாக்கி நவகிரகங்களை ஒரே உருவில் செய்தால் என்ன சக்தி கிட்டுமோ அதைவிட சக்தி கூட்டி, அழகில் திருமகளைப்போல ஸ்ரீ தண்டாயுதபாணியை, ஒரு தைப்பூச நந்நாளில் ஆரம்பித்து 16 ஆண்டுகள் சிரமப்பட்டு நவபாஷாண மூலவரை நிறைவாகச் செய்தார். தனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லையே என்ற முருகனின் ஏக்கம் தீர்ந்த இடத்தில், அந்த நவபாஷாண சிற்பத்தை நிர்மாணித்தார்.

இவ்வாறு சிலையை உருவாக்குவதற்காக, பற்பல மலைகளிலிருந்தும் கடல்களிலிருந்தும் நவ பாஷாணங்களைக் கொணர்ந்தனர். புலிப்பாணியும் காளிங்கநாதரும் வான்வெளியில் பறந்து பல பாஷாணங்களையும் மூலிகைகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். போகரும் பல அரிய மூலிகைகளை சேகரித்து நவபாஷாணத்தைக் கட்டி எஃகைவிட வலிமையுடைய மெழுகாகச் செய்து, தண்டாயுதபாணி சிற்பத்தை உருவாக்கினார்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை அன்று முருகப்பெருமான், கனிக்காக கோபித்து நின்ற அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஜோதி ஸ்வரூபமாய் காட்சி தந்தார் முருகன். காளங்கிநாதர், போகர், பாபாஜி, புலிப்பாணி ஆகியோர் இன்றும் கார்த்திகை ஜோதி அன்று குகையிலிருந்து வெளிப்பட்டு பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து முருகனை வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி சுவாமியின் அடியில் உள்ள சுரங்கப்பாதை போகர் குகை வரைக்கும் நீண்டு பின் மலையுள் செல்கிறது.

போகரும் கோரக்கரும் புலிப்பாணியும் தங்கம் செய்யும் வித்தை கற்றவர்கள். காளங்கிநாதரும் பாபாஜியும் நவரத்ன வித்தை தெரிந்தவர்கள். எனவே ஏராளமான பொக்கிஷத்தைக் கூட்டி சுரங்கத்தில் வைத்துள்ளனர். நாடியில் மட்டுமல்லாது, தெய்வப் பிரசன்னம் பார்த்தும் இந்த உண்மையை சில ஜோதிட வல்லுநர்கள் கண்டிருக்கிறார்கள். பற்பல மரகதலிங்கங்களைத் தயாரித்த போகர் அவற்றை குகையுள் வைத்து பூஜித்தார்.

அவற்றில் ஒன்றுதான் இன்று நாம் பழநியில் காண்பது. அகத்தியர், நக்கீரர், பாம்பாட்டி சித்தர், கோரக்கர், சிவவாக்கியர், திருமூலர் என பற்பல சித்தர்கள் நித்யவாசம் செய்யும் தலம் பழநி. பழநி முருகனை தரிசித்தால், ‘‘வற்றாத செல்வமும், இன்பமும், தடையிலா வெற்றியும், ஒரு பிணி இல்லா வாழ்வும் சேரும்’’ என்கிறார் சிவவாக்கியர்.

நவபாஷாண மூர்த்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தின் ஒவ்வொரு துளியிலும் மருத்துவகுணம் உண்டு. ‘‘குஷ்டரோகம், புற்றுநோய், மலட்டுத்தன்மை, இதயபீடை, சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பீடை போன்றவை பழநி முருகனுக்கு சாத்திய சந்தனத்தை, மிளகு அளவு எடுத்து காலை சூரியோதயத்திற்கு முன் வெறும் வயிற்றில் (அப்போது நீர் கூட அருந்தியிருக்கக் கூடாது) உண்டால், மூன்று மண்டலத்தில் முழுபலன் கிட்டும். அதாவது நோய் பூரணமாய் குணமடையும். இது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட. ‘மேனியிற்பட்ட பொருள் யாவுமே அருமருந்து - வினை நோயுமறுபடுமே’என்கிறார் அகஸ்தியர்.

 -  கே.சுப்பிரமணியன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்