SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முருகனின் பாதங்களுக்கே முதல் பூஜை

2017-02-06@ 15:07:01

கிணத்துக்கடவு

கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது. கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார்.

ஒருமுறை பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், “பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், புரவி பாளையத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று. “ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே” என்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அங்கே வந்து என்னை தரிசிக்கவும்,’ எனக் கூறி  மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதங்கள் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.

மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவரை பிரதிஷ்டை செய்து சந்நதி அமைக்க வேண்டும் என்று கூற, அதன் படியே சந்நதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் “வேலாயுத சுவாமி” என அழைக்கப்பட்டார். கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது.

மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள்தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி சுனை (தீர்த்தம்) உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது.

திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 700 ஆண்டுகளுக்கு முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, “கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறேன்” என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, “திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள  குறிப்பிட்ட மூலிகையை வைத்து கட்டினால் குணமாகிவிடும்” என்று கூறி மறைந்தார். திவானும் இத்தலத்திற்கு வர, அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட, புண் இரண்டே நாட்களில் குணமாகி விட்டது.

இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக ஆலய செப்பேடு கூறுகிறது. கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார். ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பிரதான சந்நதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் உள்ள தீபமங்கள ஜோதியின் வெளிச்சத்தில் வேலாயுத சுவாமியின் அழகிய திருமுடியையும், திருவதனத்தையும், திருவடியையும் காண “நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே” என்று மனமுருகி பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

ஞானப்பழத்திற்காக பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முத்துக்குமாரசுவாமி, இந்த பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் முருகன் பாதங்கள் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர். எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. மகத்துவ மூலிகைகள் நிறைந்த மலை இது.

தைப்பூசம், கார்த்திகை, கந்தசஷ்டி, பங்குனிஉத்திரம் போன்ற திருவிழாக்கள் இத்தலத்தில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல முருகன் திருவருட்பாலிக்கிறார். கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 13வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.

- விஜயகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்